
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்து 15 நாள்களுக்கு மேலாகியும் மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்கவிடாமல் தடுக்கிறாராம் சோழ அரசன் பெயரைக் கொண்ட நபர்.
“தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள்ளே புலம்பிக்கொள்கிறார்களே தவிர, தலைமையிடம் உள்ளதை உள்ளபடிச் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகாரிடம் “மா.செ-க்கள் கூட்டத்திலிருந்து நேரடியாக இங்கேதான் வருகிறீர்போல” என்றபடி உரையாடலைத் தொடங்கினோம்.
‘‘ஆமாம். உட்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு நடந்த முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இல்லையா... அதனால்தான் காலையிலேயே அங்கு சென்றுவிட்டேன். கூட்டம் இரண்டு மணி நேரம் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது, ஏற்கெனவே இருக்கிற பூத் கமிட்டியை வலுப்படுத்தி, அதற்கும் தனியாக நிர்வாகிகள் போடுவது, பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டுவிழாவைச் சிறப்பாக நடத்துவது ஆகியவை குறித்துத்தான் அதிகம் பேசப்பட்டது. கூடவே, வடசென்னையில் கூட்டணிக் கட்சிகளை அழைத்து மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துவது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் அவரவர் மாவட்ட நிலவரத்தைச் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், யாரும் எந்தப் பிரச்னையும் இருப்பதாகச் சொல்லவில்லையாம். ‘எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்குது’ என்றே அளந்துவிட்டிருக்கிறார்கள். ‘இருக்கும் பிரச்னைகளைப் பேசாமல், வெறுமனே இப்படிப் புகழ்ந்து பேசினால் கள நிலவரம் தலைமைக்கு எப்படித் தெரியும்... மா.செ-க்கள்தான் அப்படி என்றால், உண்மையிலேயே எந்த மாவட்டத்திலும் பிரச்னையே இல்லையா எனத் தலைமையும் கேட்கவில்லையே... இப்படியே போனால் கட்சிக்கு நல்லதல்ல’ என்று சில மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள் புலம்பியதாகச் சொல்கிறார்கள்.”

“தி.மு.க-வினர் போதைப்பொருளைக் கடத்தியதாக பா.ஜ.க கிளப்பிய குற்றச்சாட்டு பூமராங் ஆகியிருக்கிறதே?”
“நடந்தது இதுதான்... ராமேஸ்வரம் அருகே வேதாளையில் கடலோர காவல்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரில் 30 தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பவுடரை பறிமுதல் செய்திருக்கிறார்கள். கடத்தலில் ஈடுபட்டு, கைதானது தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால், பா.ஜ.க-வினர் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துவிட்டார்கள். ‘பறிமுதலான பொருள் கோகைன் என்ற போதைப்பொருளாம்... அதன் மதிப்பு ரூ.360 கோடிக்கும் மேலாம்...’ என வழக்கம்போல அவர்கள் கிளப்பிவிட, அண்ணாமலையும் அதை வழிமொழிந்து ட்வீட் போட்டார். ஆனால், அந்த கேன்களில் இருந்தது போதைப்பொருளோ, வெடிமருந்தோ அல்ல... சாதாரண உரம்தான் என்று உறுதிசெய்திருக்கிறது கடலோர காவல்படை. எந்தப் பொருளாக இருந்தாலும், அதைச் சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்துவது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிடிபட்டது என்னவென்றே தெரியாமல், இஷ்டத்துக்கு வதந்தியைப் பரப்பி, தேவையில்லாத சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். அண்ணாமலைக்காவது இது வாடிக்கைதான். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும் இதை உண்மை என்று நம்பி அறிக்கைவிட்டு மாட்டியிருக்கிறார்.”
“இதையொட்டி சமூக வலைதளத்தில் தி.மு.க., பா.ஜ.க-வினர் இடையே நடந்த மோதலைக் கவனித்தீரா?”

“பார்த்தேன்... பார்த்தேன்... `#போதைப்பொருள்_திமுக’ என்பதை பா.ஜ.க ஐடி விங் சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆக்க, ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து #GetOutRavi என்று தி.மு.க ஐடி விங் சார்பில் களமாடினார்கள். ‘சமூக வலைதளத்தின் மூலமாகப் பிரசாரத்தைத் தொடங்குங்கள்’ என இரு கட்சிகளின் தலைமையும் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்போல அதன் தொண்டர்கள்.”
“ஆனாலும், பா.ஜ.க-வினர் கூச்சமே இல்லாமல் இப்படி வதந்திகளைப் பரப்புகிறார்களே...”
“இதையும் கேளும்... சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு, பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறார் அண்ணாமலை. மத்திய அரசின் பாதுகாப்பு ஏஜென்சி, மாநில அரசுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்தப் புகாரைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார் அண்ணாமலை. இதுவரை அவர் சொன்ன எந்தப் புகாருக்கும் ஆதாரத்தை வெளியிட்டதில்லை. இந்த விவகாரத்திலும் தங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சொன்னாரே தவிர அதைக் கடைசிவரை வெளியிடவில்லை. ‘மத்திய அரசிடமிருந்து அப்படி எந்த ஒரு தகவலும் வரவில்லை’ என்று தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி விளக்கம் அளித்தார்.
“சரி... உண்மையில், பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் என்னதான் நடந்தது?”
“பிரதமர் போன்ற வி.வி.ஐ.பி-க்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பு அளிப்பதே வழக்கம். அதன் அடிப்படையில், தமிழகத்துக்கு பிரதமர் வந்தபோது, பிரதமருக்கான எஸ்.பி.ஜி-யும், தமிழ்நாடு காவல்துறையும் இணைந்துதான் பாதுகாப்பு அளித்திருக்கின்றன. பாதுகாப்பு முன்னேற்பாடுகளின்போது சில கருவிகள் சரியாகச் செயல்படவில்லைபோல... எனவே, விரைந்து அவற்றை மாற்றியிருக்கிறார்கள். எச்சரிக்கை நடவடிக்கையாக, ‘இதேபோல மற்ற மாவட்டங்களில் இருக்கும் கருவிகளில் ஏதும் பழுது இருந்தால் உடனடியாக மாற்ற வேண்டும்’ என உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அனைத்து மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். விஷயம் இவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டுதான் இப்படியொரு புகாரை ஆளுநரிடம் அளித்திருக்கிறார் அண்ணாமலை. ஆனால், பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்த தகவல் எதுவும் அந்தக் கடிதத்தில் இல்லையாம்.”
“ஓஹோ...”
“அதுமட்டுமல்ல... சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை இடிக்க தி.மு.க அரசு முயல்வதாகச் சிலர் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பினார்கள். கடைசியில், ‘நாங்கள்தான் பராமரிப்புப் பணிகளைச் செய்கிறோம்’ என அந்தக் கோயில் நிர்வாகமே விளக்கம் அளித்திருக்கிறது. இப்படித் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு குறித்து வதந்திகளைப் பரப்பி அரசியல் செய்ய நினைப்பதையும் பா.ஜ.க-விலேயே சிலர் ரசிக்கவில்லையாம். மேலும், தமிழக பா.ஜ.க தலைமை முன்னெடுக்கும் எல்லா விஷயங்களுமே தொடர்ந்து புஸ்ஸாகிக்கொண்டிருக்கின்றன. ‘உருப்படியாக ஏதாவது செய்யப் பாருங்கள்’ என்று சமீபத்தில் கடுகடுத்ததாம் டெல்லி” என்ற கழுகாரின் சூட்டைக் குறைக்க இளநீர் பாயசம் கொடுத்தோம். அதை ருசித்தபடி அடுத்த செய்திகளுக்குத் தாவினார்.

‘‘அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 21-ல் நடக்கும் என்றார்கள்... பிறகு 30-ல் முடியும் என்றார்கள்... இப்போது டிச. 6-ம் தேதிக்குத் தள்ளிப்போயிருக்கிறது. இந்த இழுவை போதாதென்று, இந்த வழக்கை டிச. 11-ம் தேதி விசாரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. வழக்கின் இறுதிக்கட்டம் தனக்குச் சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்ததாலேயே, வழக்கை எவ்வளவு நாள் தள்ளிப்போட முடியுமோ அவ்வளவு தள்ளிப்போட முயல்கிறதாம் ஓ.பி.எஸ் தரப்பு. அதற்கு ஓரளவு பலன் கிடைத்தாலும், டிச. 6-ம் தேதியோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்கிறார்கள் சட்டப்புள்ளிகள். எது எப்படியிருந்தாலும், தொடர்ந்து டெல்லியின் பிடிக்குள் அ.தி.மு.க இருக்கும்படிதான் முடிவு வரும் என்பதைக் கணித்திருப்பதால் எடப்பாடியும் தீர்ப்பை அடுத்து செய்யவேண்டிய பணிகளில் தீவிரம் காட்டிவருகிறாராம்” என்ற கழுகார்...
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்து 15 நாள்களுக்கு மேலாகியும் மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்கவிடாமல் தடுக்கிறாராம் சோழ அரசன் பெயரைக் கொண்ட நபர். இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயில் மட்டும் இரண்டு கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். எம்.சாண்ட், ஜல்லி ஏற்றிக்கொண்டு குவாரிகளிலிருந்து செல்லும் லாரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 300 ரூபாய் கேட்கிறாராம் அந்தப் புள்ளி. அப்படிக் கொடுக்காத கல்குவாரிகளுக்கு, கனிம வளத்துறையில் தனக்கு இருக்கும் பவரைப் பயன்படுத்தி நடை சீட் கொடுக்கவிடாமல் தடுக்கிறாராம் அந்த நபர். தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலும் இப்படி வசூலிக்கச் சொல்லி ஒரு குழுவையே நியமித்திருக்கிறார் அவர் என்கிறார்கள். அரசே அனுமதி கொடுத்த பிறகும், கல்குவாரிகளைச் செயல்படவிடாமல் தடுப்பது நிர்வாகரீதியில் பிரச்னையை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எடுத்துச் சொல்லியும், ‘கமிஷன் இல்லை என்றால் எதுவும் நடக்காது’ எனக் கறார் காட்டுகிறாராம் அவர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.