Published:Updated:

மிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்!

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

`ரஜினியுடன் கூட்டணி என்றால், முதல்வர் வேட்பாளர் யார்... எடப்பாடியா, ரஜினியா?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

‘விஷ்ஷ்க்க்க்’ என்ற சத்தம். புயலென என்ட்ரி கொடுத்தார் கழுகார். ``புயல்கள் தமிழகத்தைப் புரட்டுவது போதாதென்று, ரஜினியும் ஆக்‌ஷனில் இறங்கிவிட்டாரே...” என்றோம். ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான அட்டைப்படக் கட்டுரையில் பார்வையை ஓடவிட்ட கழுகார், ``ரஜினி அரசியலுக்கு வருவது அவரது உரிமை. அதேசமயம் அவருடன் களமிறங்கியவரின் பா.ஜ.க பின்னணிதான் ஆச்சர்யமூட்டுகிறது. ரஜினியின் ஆக்‌ஷன், வரும் நாள்களில் அடுத்தடுத்து என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது போகப் போகத்தான் தெரியவரும். அதேசமயம், மற்ற கட்சிகளுக்கு எப்படியோ... இப்போதைக்குக் கூட்டணிக் கட்சிகளைக் கூடுதலாக அரவணைத்துச் செல்ல வேண்டிய நெருக்கடி தி.மு.க-வுக்குத்தான் அதிகரித்திருக்கிறது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கடந்த நவம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனையில், கூட்டணி குறித்து காரசாரமாக விவாதித்திருக்கிறார்கள். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ‘தமிழகத்தில் காங்கிரஸ் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதிலேயே கே.எஸ்.அழகிரி குறியாக இருக்கிறார். குஷ்பு, ராயபுரம் மனோ உள்ளிட்டவர்கள் கட்சியைவிட்டுச் செல்வதற்குக் காரணமே நமது கட்சியின் நடவடிக்கை சரியில்லாததுதான்’ என்று ஏகத்துக்கும் எகிறிவிட்டாராம். ஒருகட்டத்தில் இதை ரசிக்காத ராகுல் காந்தி, ‘மிஸ்டர் திருநாவுக்கரசர், நெகட்டிவ் கருத்துகளையே சொல்லாதீர்கள்... பாசிட்டிவ்வாக என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்’ என்று கடுகடுத்ததும், திருநாவுக்கரசர் அமைதியாகிவிட்டாராம்.”

“ம்ம்ம்...”

மிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்!

“அதன் பிறகு ப.சிதம்பரம், ‘சீட் பேச்சுவார்த்தையில் தி.மு.க-விடம் டெல்லி மேலிடம் பேசினால் மட்டுமே கூடுதல் இடங்களைப் பெற முடியும். தமிழகத்தில் தேர்தல் செலவு அதிகம். மத்தியக்குழுவிலிருந்து பணத்தை வழங்க வேண்டும்’ என்று ராகுல் காந்தியிடம் நாசுக்காகச் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் நிர்வாகிகள் சிலர், ‘அப்புச்சிகிட்ட இல்லாத பணமா... அவருக்கு செலவு வந்துடக் கூடாதுனு எவ்வளவு உஷாரா இருக்கார் பாருங்க’ என்று தங்களுக்குள் கமென்ட் அடித்திருக்கிறார்கள். இறுதியாகப் பேசிய ராகுல் காந்தி, ‘விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் நமது கூட்டங்களில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து, நவம்பர் 2-ம் தேதி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவும், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து ராகுலின் வருகை குறித்துப் பேசியிருக்கின்றனர். அப்போது, ‘சீட் பங்கீடு குறித்தெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை அந்த மாநில தி.மு.க நிர்வாகிகளுடன் அட்ஜஸ்ட் செய்து போகச் சொல்லுங்கள்’ என்றாராம் ஸ்டாலின். ‘நாம கேட்க வந்தது வேற... இப்போ நம்மைப் பஞ்சாயத்துப் பேசச் சொல்றாரே...’ என்று தலையாட்டிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள் கதர் சட்டை பார்ட்டிகள்.”

மிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்!

“சரி, மு.க.அழகிரி வேகமெடுக்கிறாராமே..?”

“ஆமாம். டிசம்பர் 24-ம் தேதி தன் ஆதரவாளர்களுடன் கூட்டம்போடத் தயாராகிவிட்டது அழகிரி தரப்பு. தன்னைவிட்டுப் பிரிந்து சென்று தி.மு.க-வில் பொறுப்புவகிக்கும் பி.மூர்த்தி, கோ.தளபதி போன்றவர்களிடம் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறாராம். நவம்பர் 30-ம் தேதி, மதுரை மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அழகிரி நேரில் சென்றது, தூங்கா நகர அரசியலை விழித்தெழச் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம், ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும், முதல் ஆளாக ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்று, அவர் தேர்தலில் வெற்றிபெற போனில் வாழ்த்தும் தெரிவித்தாராம் அழகிரி. அநேகமாக, அடுத்த வாரம் ‘கலைஞர்’ பெயரில் கட்சியைத் தொடங்கி, ரஜினியுடன் இணைந்து சலசலப்பை அவர் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் யூகித்த அறிவாலயம் தரப்பும், அழகிரியின் அடுத்தடுத்த மூவ்களை கண்கொத்திப் பாம்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறது.”

“சரிதான்... ‘வாய்ப்பிருந்தால் ரஜினியுடன் கூட்டணிக்குத் தயார்’ என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியிருக்கிறாரே..?”

“அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்படும் செக் இது. இதன் மூலம் கட்சியில் தனது டிமாண்டை அதிகரித்திருக்கிறார். தவிர, `ரஜினியுடன் கூட்டணி என்றால், முதல்வர் வேட்பாளர் யார்... எடப்பாடியா, ரஜினியா?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. `ரஜினியுடன் அ.தி.மு.க கூட்டணிக்குத் தயார்’ என்று பன்னீர் கூறியிருப்பது, ‘தன் தலைமையில் அ.தி.மு.க-வை நகர்த்திக்கொண்டு ரஜினியுடன் கூட்டணிக்குச் சென்றுவிடுவாரோ?’ என்கிற பக் பக் பகீர் சந்தேகத்தையும் எடப்பாடி தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கிறதாம். எடப்பாடியிடம் துணை முதல்வராக இருந்த பன்னீருக்கு, ரஜினியிடம் துணை முதல்வராக இருப்பதில் எந்தச் சங்கடமும் இல்லை. ஆனால், எடப்பாடியின் கணக்கு அப்படியல்ல... பன்னீரின் திட்டத்தை முன்கூட்டியே உணர்ந்துதான், தி.மு.க-வைத் தாக்க ஆரம்பித்துவிட்டார் அவர் என்கிறார்கள்.”

“தி.மு.க-வை கார்ப்பரேட் கம்பெனி, ஊழல் கட்சி என்று தாக்கியதைச் சொல்கிறீர்களா?”

மிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்!

“ஆமாம். ‘தி.மு.க-வுக்கு நான் மட்டுமே சரியான போட்டியாளர்’ என்பதை நிறுவிவிட முயல்கிறார் எடப்பாடி. ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியான டிசம்பர் 3-ம் தேதி, சேலத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகளில் இருந்தார் முதல்வர். நண்பகல் 12:13-க்கு ரஜினியின் ட்வீட் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, ரஜினியின் அரசியல் பிரவேசத் தகவல் எடப்பாடிக்குச் சென்றுவிட்டதாம். ஆனாலும், எதுவும் தெரியாதவர்போல, தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்கிப் பேட்டியளித்தார். இதற்கு உடனடியாக, ஆ.ராசாவை வைத்து பதிலடி கொடுத்தது அறிவாலயம். ஒருவர்மீது மற்றொருவர் சேற்றை வாரிப் பூசினாலும், தமிழக அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் தீர்க்கமாக இருக்கின்றன” என்ற கழுகாருக்குச் சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“தென் தமிழக மாவட்டம் ஒன்றில், கூட்டுறவு நூற்பாலையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றும் கொடைவள்ளல் பிரமுகர் ஒருவர்மீது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது. இதனால், பதவி உயர்வு பெற முடியாமல் தவித்துவந்தவர், கோட்டையில் உச்ச தரப்பு அதிகாரிகளைச் சந்தித்தாராம். பசையாகப் பேசி முடிக்கவும், கொடைவள்ளல் மீதிருந்த புகார்களைக் கைவிட கோட்டையில் முடிவெடுக்கப்பட்டதாம். இந்த டீலிங் எதுவும் தெரியாத துறையின் அமைச்சர், `கொடைவள்ளல் பிரமுகர் மீது புகார் இருப்பதால், அவரைப் பதவியிறக்கம் செய்யலாம்’ என்று நோட் போட்டிருக்கிறார். உடனே, முதல்வர் அலுவலக உயரதிகாரி ஒருவர், ‘நாங்க அவரை விடுவிக்க முயற்சி செய்யுறோம், நீங்க இப்படி நோட் போடலாமா?’ என்று கேட்டிருக்கிறார். கொதித்துப்போன அமைச்சர், ‘நீங்க கண்டபடி பேசி முடிச்சுப்பீங்க. இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்று சீறிவிட்டாராம். இந்தநிலையில், ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்தால் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் அந்தக் கொடைவள்ளல் பிரமுகர், துறையின் முக்கியப் பதவி ஒன்றுக்கு குறிவைத்துக் காய்நகர்த்துகிறாராம்.”

மிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்!

“ம்ம்... சசிகலா விஷயத்தில் அப்டேட் ஏதும்..?”

“தினகரன், திவாகரன் தவிர்த்து மற்ற மன்னார்குடி உறவுகளெல்லாம் பெங்களூருவில் குவிந்திருக்கிறார்கள். ரஜினியின் அதிரடி அறிவிப்பு போன்று, சசிகலா விடுதலை அறிவிப்பும் அதிரடியாக வெளியாகும் என்று காத்திருக்கிறார்கள். டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதற்குள் சசிகலா விடுதலையானால், அவரை நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு அழைத்துவரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேசமயம், இவையெல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசுப் பணிக்கு தாவிவிட முயற்சிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வம்பே வேண்டாம் என்று நினைக்கும் சிலரோ, டம்மியான போஸ்ட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட தீர்மானித்திருக்கிறார்கள். சமீபத்தில், சென்னை கிழக்குப் பகுதியில் கோலோச்சும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் மத்திய அரசுப் பணிக்குச் செல்ல காய்நகர்த்தியிருந்தாராம். ஆனால், டெல்லியிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் ஏதும் வராததால் மனிதர் ஏக அப்செட். டி.ஜி.பி-க்கள் திரிபாதி - ராஜேஷ் தாஸ் இடையிலான பனிப்போரால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் லிஸ்ட்டும் ஒருவழியாக மீண்டும் தயாராகியிருக்கிறது. அறிவிப்பு எந்நேரமும் வரலாம்” என்றபடி ஜூட் விட்டார் கழுகார்.