சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: சீனியர்கள் மீது வில்லங்க குற்றச்சாட்டு! - குழிபறிக்கிறதா அண்ணாமலைக் கூட்டம்?

கேசவ விநாயகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேசவ விநாயகம்

அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என அடைமொழியிட்டு அழைத்திருப்பதுதான் விசேஷமே...

“ஜெயலலிதா நினைவிடத்தில் எந்த நேரத்தில் சசிகலா சபதம் செய்தாரோ, அன்று முதல் அந்த இடமே சபதம், தர்மயுத்தம், உறுதிமொழி எடுக்கும் இடமாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டு எடப்பாடி, ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா என நால்வரும் தனித்தனியே அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல், நான்கு பேரும் நான்குவிதமாக உறுதிமொழி எடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். ‘துரோகிகளைத் தூள் தூள் ஆக்குவோம்’, `ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்குவோம்’, ‘அ.தி.மு.க-வை அ.ம.மு.க எனும் ஜனநாயக ஆயுதம்கொண்டு மீட்டெடுத்தே தீருவோம்’, ‘உண்மைத் தொண்டர்களின் உயர்வுக்காக ஒன்றிணைவோம்’ என்பதுதான் அவர்கள் எடுத்த உறுதிமொழி” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: சீனியர்கள் மீது வில்லங்க குற்றச்சாட்டு! - குழிபறிக்கிறதா அண்ணாமலைக் கூட்டம்?

“ ‘குட்டியம்மா’ தீபாவை விட்டுவிட்டீரே?”

“ம்க்கும்... அவருக்கு அந்த நான்கு பேரே பரவாயில்லை... ‘இன்னும் 100 நாளில் அ.தி.மு.க என்ற கட்சியே இருக்காது’ என்று சொல்லியிருக்கிறார் தீபா. ஆறுமுகசாமி ஆணையத்தால் ஜெயலலிதாவின் நினைவுநாள் எது என்பதிலேயே சர்ச்சை ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், `ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்றும் கேட்டிருக்கிறார்...”

“ஜெ. நினைவிடத்தில் இ.பி.எஸ்-ஸைவிட ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் அதிக கூட்டம் என்கிறார்களே... அப்படியா?”

மிஸ்டர் கழுகு: சீனியர்கள் மீது வில்லங்க குற்றச்சாட்டு! - குழிபறிக்கிறதா அண்ணாமலைக் கூட்டம்?

“உண்மைதான். ஓ.பி.எஸ் கூட்டிய கூட்டத்துடன் ஒப்பிடுகையில், பெரிய அளவில் கூட்டமோ, ஆரவாரமோ இன்றி வந்துவிட்டுச் சென்றிருக்கிறார் இ.பி.எஸ். இத்தனைக்கும் அவர்தான் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதலில் சென்று அஞ்சலி செலுத்தினார். ‘ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் நடக்கும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் செல்ல வேண்டியிருந்ததாலேயே ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சியில் பெரிதாக அவர் ஆர்வம் காட்டவில்லை’ என்கிறது அவரது தரப்பு. ‘புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவரும், தங்கள் தரப்பிலிருந்து குறைந்தது 100 பேரையாவது அழைத்து வர வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு உத்தரவிட்டிருந்தது. அதனால்தான் அவர் செல்லும்போது அவ்வளவு கூட்டம்’ என்கிறார்கள். பிறகு, தினகரன் திறந்த ஜீப்பில் சிரித்த முகத்துடன் கையசைத்தபடி வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல... பின்னாடியே சசிகலா நடந்து சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்.”

“ஜி20 மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஓ.பி.எஸ்-ஸை விட்டுவிட்டு, இ.பி.எஸ்-ஸை மட்டும் அழைத்திருக்கிறதே மத்திய அரசு?”

“ ‘அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என அடைமொழியிட்டு அழைத்திருப்பதுதான் விசேஷமே... இதுவரை, அந்த அங்கீகாரத்தை எடப்பாடிக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து யாரும் வழங்கியதில்லை. அவ்வளவு ஏன், அ.தி.மு.க தலைமை குறித்தான விவகாரத்தில் பா.ஜ.க வெளிப்படையாக எதையும் பேசியதுகூட இல்லை. ‘எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நல்லது’ என்பதைத்தான், மறைமுகமாக எடப்பாடிக்குச் சொல்லிவந்தனர். ‘எல்லோரையும் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று டெல்லியிலிருந்து வந்த தூதுவர்கள் எச்சரிக்கும் தொனியில் சொல்லிப் பார்த்துக்கூட, அதை ஏற்காதவர் எடப்பாடி. இப்போது, ‘ஒற்றைத் தலைமை’க்கான அங்கீகாரத்தை பா.ஜ.க மறைமுகமாக வழங்கியிருப்பது பன்னீர் தரப்புக்கு மட்டுமல்ல, எடப்பாடிக்கு எதிராகக் கம்பு சுற்றிய மயிலாப்பூர் பிரமுகருக்கும் ஏக ‘ஷாக்’ என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சீனியர்கள் மீது வில்லங்க குற்றச்சாட்டு! - குழிபறிக்கிறதா அண்ணாமலைக் கூட்டம்?

“இந்த சந்தோஷத்தில்தான் `அம்மா இறந்த இந்நன்னாளில்’ என்று உறுதிமொழி எடுத்தாரா எடப்பாடி?”

“நக்கல்தான் உமக்கு. அதேநேரத்தில் ஓ.பி.எஸ்-ஸின் முகம் வாட்டமாகக் காணப்பட்டதை கவனித்தீரா... ஜெயலலிதாவை நினைத்துத்தான் அவரின் முகம் வாடியதாக நினைக்க வேண்டாம். கடைசிவரையில், மயிலாப்பூர்க்காரர் தனக்கு ஆதரவாக ஏதாவது செய்து தருவார் என பன்னீர் காத்திருந்தாராம். ஆனால், அப்படி எதுவுமே நடக்காததால் டோட்டல் அப்செட். ‘சசிகலா தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தார் மோடி. பின்னாளில் சசி சிறைக்குப் போகவில்லையா... அதே மாதிரி எடப்பாடிக்கும் டெல்லி ஆப்பு வைக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் எடப்பாடியை அங்கீகரிக்கவில்லையே... நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்’ என பன்னீருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள் சில பா.ஜ.க பிரமுகர்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத்தான் மலைபோல நம்பியிருக்கிறார் பன்னீர். எதுவுமே சரிப்பட்டு வரவில்லையென்றால், ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனத்தை முடித்துவிட்டு, புதுக்கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடவும் முடிவுசெய்திருக்கிறாராம் பன்னீர்” என்ற கழுகாருக்கு இஞ்சி மிட்டாய் கொடுத்தோம். அதன் காட்டமான சுவையை ருசித்தவர், சட்டென பா.ஜ.க செய்திக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: சீனியர்கள் மீது வில்லங்க குற்றச்சாட்டு! - குழிபறிக்கிறதா அண்ணாமலைக் கூட்டம்?

“தமிழக பா.ஜ.க-வில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அது போர் மேகமா, சூழ்ச்சி மேகமா என்று புரியாமல் தவிக்கிறார்கள் சீனியர்கள். விஷயம் இதுதான். கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தைக் குறிவைத்து, அவதூறு கிளப்புவதில் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான கூட்டம் ஒன்று தீவிரமாகியிருக்கிறதாம். ஒரு பெண்ணுடன் கேசவ விநாயகம் நெருக்கமாக நிற்கும் புகைப்படத்தைப் போட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியிருக்கிறது அந்தக் கூட்டம். ‘புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தார். தனக்குச் சால்வை அணிவிக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்து, அவருக்குச் சால்வை அணிவித்தார் கேசவ விநாயகம். ஆனால், அதைத் திரித்து அவதூறு பரப்புகிறார்கள்’ என்று பொங்குகிறது கமலாலய சீனியர் வட்டாரம். அண்ணாமலைக்கு வலதுகரமாக வலம்வரும் ஒருவர்தான் இத்தனை தகிடுதத்தங்களையும் கேசவ விநாயகத்துக்கு எதிராகச் செய்கிறாராம்.”

“கேசவ விநாயகத்தை ஏன் குறிவைக்கிறார்கள்?”

மிஸ்டர் கழுகு: சீனியர்கள் மீது வில்லங்க குற்றச்சாட்டு! - குழிபறிக்கிறதா அண்ணாமலைக் கூட்டம்?

“பா.ஜ.க கட்சி விதிப்படி, நிர்வாகிகள் நியமனம், நீக்கங்களில் அமைப்பு பொதுச்செயலாளரின் ஒப்புதல் அவசியம். சொல்லப்போனால் அந்தப் பதவியே நேரடியாக ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் வருவது. அவர் நினைத்தால், மாநிலத் தலைவரை ஓரங்கட்டிவிட்டு, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வேறொருவரைத் தலைமை ஏற்கும்படி உத்தரவிடலாம். 2017-ல் அமைப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பில் மோகன் ராஜுலு இருந்தபோது, மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் அப்போதைய மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை திண்டாட விட்டார். ‘தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை’யை வானதி சீனிவாசனைவைத்து முன்னெடுக்கச் சொன்னதுகூட இந்தக் கணக்கில்தான். அதுபோல, தன் அதிகாரத்துக்கு கேசவ விநாயகத்தால் எதிர்காலத்தில் ஆபத்து வரலாம் என்ற சந்தேகத்தாலேயே, முந்திக்கொள்ளப் பார்க்கிறாராம் அண்ணாமலை” என்ற கழுகார்...

“சமீபத்தில், அண்ணாமலை செய்த சில நியமனங்களை, கேசவ விநாயகம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடுப்பில்தான், கேசவ விநாயகத்தை அவமானப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது அந்தக் கூட்டம். சீனியர்கள்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாகச் சில வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாகவும் சிலர் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். கடுப்பான சீனியர்கள், ‘தான் மட்டும்தான் கட்சி என்று நினைப்பதுகூடப் பரவாயில்லை... அதற்காக, சொந்தக் கட்சியினரையே இழிவுபடுத்தி, கமலாலயத்துக்குள்ளேயே குழிபறிக்கும் வேலையில் அண்ணாமலைத் தரப்பு இறங்கியிருக்கிறது’ என்று நாக்பூர் ரூட்டில் டெல்லி வரைக்கும் புகார் செய்திருக்கிறார்களாம். அதிரடிகள் அரங்கேறக்கூடும் என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சமீபத்தில் துணிவானவரைச் சந்தித்த ‘விஜய’ பிரமுகர், ‘அண்ணே டெல்லியிடம் என் விவகாரம் தொடர்பாகவும் பேசிச் சரிசெய்து தாருங்கள்’ என மன்றாடியிருக்கிறார். ‘நீதான் தனி ரூட்ல டெல்லி போறியே... நீயே சரி பண்ணிக்க’ என முகத்தில் அடித்ததுபோலச் சொல்லிவிட்டாராம் துணிவானவர்.

*  தென்பகுதி கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்டப் பிரமுகர், சில நாள்களாகப் பதுங்கிக் கிடக்கிறார். அவருக்கு நெருக்கமான சிலரை, விவகாரமான வழக்கில் கைதுசெய்திருக்கிறது தமிழக காவல்துறை. விவகாரம் டெல்லி வரை போய்விட்டதால், தானும் குறிவைக்கப்படலாம் என்கிற அச்சத்தில் பதுங்கிவிட்டாராம்.