அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கவுன்சிலர் சீட்.. டீல் பேசும் மா.செ-க்கள் - அறிவாலயத்தில் வெடிக்கப்போகும் பஞ்சாயத்து!

அண்ணா அறிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணா அறிவாலயம்

ஆட்சிகள் மாறினாலும் கமிஷன் காட்சிகள் மாறாது. அது சரி, தி.மு.க-வுக்குள் புகைச்சல் சத்தம் கேட்கிறதே

‘மாநாடு’ படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனிடம், எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சியை மொபைலில் பார்த்துக்கொண்டிருந்தபோது என்ட்ரி கொடுத்த கழுகார், “இதே சூழல்தான் அ.தி.மு.க-விலும் நிலவுகிறது. கோர்ட்... கேஸ்... ரிப்பீட்டு...” என்று கலாய்த்தபடியே உரையாடலைத் தொடங்கினார்...

“ஒருவழியாக அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், சர்ச்சைகள் ஓயாதுபோலிருக்கிறது. தேர்தல் விருப்ப மனு பெறச் சென்ற ஓமப்பொடி பிரசாத் சிங், ராஜேஷ் ஆகியோர் தலைமைக் கழகத்திலேயே கட்சியினர் சிலரால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓமப்பொடி பிரசாத் அளித்த புகாரில், 15 பேர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவந்த எடப்பாடியின் கார்மீது செருப்பு வீசப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், ‘வாக்காளர் பட்டியலை வெளியிடாமல் தேர்தல் நடத்துவது தவறு. கட்சியின் நீண்டகாலத் தொண்டரான எனக்கு விருப்ப மனு அளிக்கவில்லை’ என்று ஜெயச்சந்திரன் என்பவர் தொடர்ந்திருக்கும் வழக்கில், டிசம்பர் 7-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம். அன்றைய தினம் வரப்போகும் உத்தரவையொட்டி காட்சிகள் மாறலாம். ஆக மொத்தம் இப்போதைக்குத் தீராது பஞ்சாயத்து.”

மிஸ்டர் கழுகு: கவுன்சிலர் சீட்.. டீல் பேசும் மா.செ-க்கள் - அறிவாலயத்தில் வெடிக்கப்போகும் பஞ்சாயத்து!

“தமிழக அரசின் டெண்டர் ஒன்றிலும் ஏதோ பஞ்சாயத்து என்கிறார்களே?”

“உண்மைதான். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கவிருக்கும் 20 பொருள்கள் அடங்கிய பரிசுப்பை டெண்டரில் நடந்துள்ள கமிஷன் பஞ்சாயத்துதான் கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுகாதாரத்துறையில் டெண்டர்களை அள்ளி, வருமான வரித்துறையினரின் ரெய்டில் சிக்கிய திருப்பூர் நிறுவனமே தற்போது இந்த டெண்டரை எடுக்க ஆளும் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ‘ஒரு பை 420 ரூபாய்’ என்று விலையை கோட் செய்தது. இதில் 40 ரூபாய் கமிஷன் பேசப்பட்டதாம். அதேசமயம், திருப்பூர் நிறுவனம் டெண்டரில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், வேறொரு நிறுவனத்தின் பெயரில்தான் விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழகத்தில் பிரபலமான மசாலா நிறுவனம் ஒன்று டெண்டரை முடிக்கும் இறுதி நேரத்தில் இதே பொருள்களை வழங்க 368 ரூபாய்க்கு கோட் செய்தது. ஆனால், ஏற்கெனவே ‘டீல்’ முடிந்துவிட்டதால், மசாலா நிறுவனத்தினரிடம் பேசவேண்டிய விதத்தில் பேசி வெளியேற்றிவிட்டு, மீண்டும் திருப்பூர் பார்ட்டியிடமே 368 ரூபாய்க்கும் குறைவாக கோட் செய்யச் சொல்லி டெண்டரை முடித்துள்ளனர்.”

“விலைக் குறைப்பு என்பதால் கமிஷனை வேண்டாம் என்று சொல்லியிருப்பார்களோ!”

“ம்ம்க்கும்... கமிஷனுக்காகத்தானே டெண்டரையே நடத்துகிறார்கள். பொருள்களின் தரத்தில் கைவைக்க வாய்ப்பு இருக்கிறது. விவகாரம் இன்னும் முடியவில்லை கேளும். சமீபத்தில் தமிழக ரேஷன் கடைகளுக்குப் பருப்பு சப்ளை செய்வதற்காக டெண்டர் அறிவிக்கப்பட்டபோதும், இதே திருப்பூர் நிறுவனம்தான் பினாமி நிறுவனத்தின் பெயரில் கிலோ 99 ரூபாய்க்கு விலையை கோட் செய்தது. ஆனால், மத்திய அரசுக்குப் பொருள்களை சப்ளை செய்யும் வட இந்திய நிறுவனம் ஒன்று, இதைவிடக் குறைந்த விலையை கோட் செய்திருக்கிறது. மசாலா நிறுவனத்திடம் பேசி சமாளித்ததுபோலவே, அந்த நிறுவனத்திடமும் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனம் ‘டெண்டரை எங்களுக்கு ஒதுக்காவிட்டால், கோர்ட்டுக்குச் செல்வோம்’ என்று எகிறவே... பருப்பு டெண்டரையே கேன்சல் செய்துவிட்டார்கள்!”

மிஸ்டர் கழுகு: கவுன்சிலர் சீட்.. டீல் பேசும் மா.செ-க்கள் - அறிவாலயத்தில் வெடிக்கப்போகும் பஞ்சாயத்து!

“ஆட்சிகள் மாறினாலும் கமிஷன் காட்சிகள் மாறாது. அது சரி, தி.மு.க-வுக்குள் புகைச்சல் சத்தம் கேட்கிறதே?”

“எல்லாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் புகைச்சல்தான். பொதுவாக சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கவுன்சிலர் சீட்டைப் பெரும்பாலும் வட்டச் செயலாளர்களுக்குத்தான் கொடுப்பார்கள். இந்த முறையும் அப்படித்தான் வட்டச் செயலாளர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர்களோ மொத்தமாக ‘கோட்டா’வை கையிலெடுத்துக் கொண்டார்களாம். கட்சியில் புதிதாகச் சேர்ந்தவர்கள், எம்.எல்.ஏ சீட் பெற்று தோற்றவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், பகுதிச் செயலாளர்கள் ஆகியோருக்கு சீட் கொடுக்க ‘வெயிட்டாக’ பேசிவருகிறார்களாம். இது வட்டச் செயலாளர்களை கடும் அதிருப்தியடையவைத்துள்ளது. இதையடுத்து, ‘கட்சி நிகழ்ச்சிக்கு செலவு செய்ய மட்டும் நாங்க வேணுமா?’ என்ற கொந்தளிப்புடன் அறிவாலயக் கதவுகளை சத்தமாகத் தட்ட ஆரம்பித்துள்ளன வட்டங்கள்!”

“தி.மு.க கூட்டணியிலும் சீட் பங்கீடு தொடர்பாக முணுமுணுப்பு எழுந்துள்ளதே?”

“ஆமாம். நாகப்பட்டினம் நகராட்சியில் 32 வார்டுகள் உள்ளன. அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் ஆறு வார்டு கவுன்சிலர் சீட்களைக் கேட்கிறார். ஆனால், மாவட்ட தி.மு.க தரப்போ ‘ஒண்ணு ரெண்டு தர்றதே பெரிய விஷயம்’ என்று உதாசீனப்படுத்துகிறதாம். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இதே ரேஞ்சுக்குத்தான் கூட்டணிக் கட்சியினரை மதிக்காமல் தமிழகம் முழுவதும் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் முரண்டுபிடித்தார்கள். இப்போதும் அதேநிலைதான் தொடர்கிறது. விரைவில் அறிவாலயத்தில் பிரச்னை வெடிக்கலாம்” என்ற கழுகாருக்கு எள்ளு கருப்பட்டி உருண்டையுடன் சூடாக டீயும் அளித்தோம். ரசித்து சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்...

“தேர்தல் செய்திகள் இன்னும் இருக்கின்றன... சென்னை, ஆவடி மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு என்று இறுதி செய்யப்பட்டுவிட்டன என்கிறார்கள். அநேகமாக இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தமிழகத்தின் மொத்த மாநகராட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு குறித்த பட்டியல் வெளியாகலாம். அதேபோல் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலா அல்லது நேரடித் தேர்தலா என்பதும் இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டுவிடுமாம். உள்ளாட்சித் தேர்தலை முடித்த கையோடு சூட்டோடு சூடாக கூட்டுறவு சங்கங்களைக் கலைத்து, அதற்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்கிறது அறிவாலயப் பட்சி. இதை எதிர்த்து யாரேனும் நீதிமன்றம் சென்றால், அதையும் எதிர்கொள்ள இப்போதே தி.மு.க-வின் சட்டப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.”

“ஷூட்டிங் சூடுபிடித்துவிட்டதாமே!”

“நீர் எதைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. ஒரு படத்தின் வேலைகள் முடிந்த நிலையில், அடுத்த பட ஷூட்டிங்குக்கான பணிகள் தீவிரமாகியிருக்கின்றன. அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங் முடித்துவிட்டு வாரிசு வந்தவுடன் அவருக்கு எந்தத் துறையை ஒதுக்கலாம் என்கிற விவாதம் இப்போதே சித்தரஞ்சன் சாலையில் களைகட்டத் தொடங்கிவிட்டது. அமைச்சர் நேருவின் கையிலிருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, பெரியகருப்பனிடம் இருக்கும் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள்துறை, மெய்யநாதனிடம் இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை ஆகியவற்றில் ஒன்றுக்கு மகுடம் சூட்டலாமா என்று பரிசீலித்துவருகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் தரப்போ, ‘இதெல்லாம் நெஞ்சுக்கு நீதியா?’ என்று தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் முணுமுணுக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: கவுன்சிலர் சீட்.. டீல் பேசும் மா.செ-க்கள் - அறிவாலயத்தில் வெடிக்கப்போகும் பஞ்சாயத்து!

“பா.ம.க தரப்பிலும் வாரிசை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டார்கள்போல!”

“ஜோக் அடிக்கிறீர்களா என்று உம்மிடம் கேட்டால் பா.ம.க-வினர் கோபித்துக்கொள்வார்கள். ஆசைப்படுவதற்கு அனைவருக்குமே உரிமை இருக்கிறதுதானே... பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘திண்ணைப் பிரசாரம், 60 தொகுதிகளில் வெற்றி’ ஆகியவற்றை மையப்படுத்தி 200 நாள் பயணத்திட்டம் ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறார். அதாவது நாள் ஒன்றுக்கு ஆறு ஊர்களுக்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து, குறைகளைக் கேட்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இந்தப் பயணத்தில் தலைமையின் காருடன் சேர்த்து அதிகபட்சமாக மூன்று கார்கள் மட்டுமே வர வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று குறை கேட்பது, அங்கேயே உணவருந்தி, முடிந்தால் திண்ணையில் தங்கி மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பது ராமதாஸின் திட்டம்” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* கடந்த ஆட்சியில் பெண் ஒருவரிடம் ஆடியோவில் பேசி ஏகத்துக்கும் சர்ச்சையில் சிக்கிய மாஜி அமைச்சருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்று பிரச்னையைக் கிளப்பிய அதே பெண்மணி, சமீபத்தில் ஆளும் தரப்பைச் சந்தித்து புகார் அளித்திருக்கிறாராம்!

* மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரை இடம் மாற்றம் செய்ய பட்டியல் தயாராகிவருகிறது. காவிக் கட்சித் தலைவருக்குத் தகவல்களைக் கசியவிடுகிறார்கள் என்று வந்த தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை!

* தலைநகரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும், எம்.எல்.ஏ ஒருவருக்கும் பனிப்போர் முற்றிவருகிறது. “சாதாரண நிர்வாகியாக இருந்தபோது என் பேச்சைக் கேட்டவர், எம்.எல்.ஏ ஆனவுடன் எதையும் கேட்பதில்லை. நான் சொல்வதற்கு எதிர்மாறாகச் செய்கிறார்” என்று புலம்புகிறார் அமைச்சர்.