Published:Updated:

மிஸ்டர் கழுகு: “தூக்கி அடிச்சுருவேன்...” - மிரட்டும் ஆளும் புள்ளி!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

என் காதுக்கும் அந்தத் தகவல் வந்தது... ஆந்திர எல்லையோர மாவட்டத்தின் ஆளுங்கட்சி ‘மன்னர்’ பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிக்கு, அடுத்த வாரம் அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லவிருக்கிறார்கள்.

சுடச்சுட தயாராகியிருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓட்டிய கழுகார், “ராணுவக் கட்டுப்பாட்டோடு இயங்கும் இயக்கம் என்று ஒருகாலத்தில் சொல்லிக்கொண்டவர்களின் கட்சியா இது? காலத்தின் கோலம்...” என்றபடி உரையாடலைத் தொடங்கினார்...

‘‘இந்தப் பிரச்னை மட்டுமல்ல... ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அவரது வீட்டை அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கில், நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டதை நவம்பர் 24-ம் தேதி ரத்து செய்திருக்கிறது நீதிமன்றம். வரும் டிசம்பர் 1-ம் தேதி அந்தக் கட்சியின் செயற்குழு நடக்கிறது, அதில் என்னென்ன பிரச்னைகள் வெடிக்குமோ என்று தெரியவில்லை. மொத்தத்தில் இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கிறது ராணுவ இயக்கம்!”

“என்ன நடக்கிறது என்று பார்ப்போம்... அது சரி, கொங்கு மண்டலம் களைகட்டிவிட்டதே?’’

‘‘ஆமாம். கடந்த வாரம் கோவை மற்றும் திருப்பூரில் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுவாக முதல்வரின் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் பிரமாண்டம் இல்லாமல் நடைபெற்றுவரும் நிலையில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வரின் நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்தது, பிற அமைச்சர்களுக்கும் ‘கமிட்மென்ட்’டை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் அரசு விழாக்கள் நடக்கவிருக்கும் நிலையில், அதை நடத்தவேண்டிய அமைச்சர்கள் கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் இதைவிட பிரமாண்டம் காட்ட தயாராகிவருகிறார்கள்.”

‘‘அரசு விழா என்றதும்தான் நினைவுக்கு வருகிறது... மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்கள் மொத்தமும், முதல்வர் அலுவலகத்திலிருந்தே டிசைன் செய்யப்படுகின்றனவாமே?”

மிஸ்டர் கழுகு: “தூக்கி அடிச்சுருவேன்...” - மிரட்டும் ஆளும் புள்ளி!

“ம்ம்... விழா பற்றிய மொத்த விவரங்களையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டுமாம். அதைவைத்து எந்த ஊரில், என்ன செய்தால் எடுபடும் என்று முதல்வர் அலுவலக அதிகாரிகளே நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார்கள். அந்த வகையில்தான் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் சில தொழில் நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதேபோல் சேலத்தில் என்ன செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சியில் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முதல்வர் அலுவலக அதிகாரிகளே முடிவு செய்துவிடுகிறார்கள்’’ என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டியபடியே, “டீ பார்ட்டியைப் புறக்கணித்த சேதி தெரியுமா?” என்றோம்.

‘‘அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்... நவம்பர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டார்கள். பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர், அமைச்சர்கள், அதிகாரிகள் நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் எடப்பாடியையும் பன்னீரையும் மேடைக்கே அழைக்கவில்லையாம். அதனால் நீதிபதி, ஆளுநர், முதல்வர் அனைவரும் மேடையிலிருந்து இறங்கும்போது எடப்பாடியும் பன்னீரும் மேடைப் படியிலேறி, பூங்கொத்து கொடுத்திருக்கிறார்கள். அப்போது இருவரிடமும் பாதுகாப்பு அதிகாரிகள் ஏக கெடுபிடியைக் காட்டவே... கடுப்புடன் இறங்கிவிட்டார்கள். இதனால், ஆளுநர் கொடுத்த டீ பார்ட்டியில் இருவரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்கள்.’’

‘‘கல்லூரியைக் காப்பாற்றுவதற்காக ஆளும் புள்ளி ஒருவர் செய்யும் அட்ராசிட்டி தெரியுமா?’’

“என் காதுக்கும் அந்தத் தகவல் வந்தது... ஆந்திர எல்லையோர மாவட்டத்தின் ஆளுங்கட்சி ‘மன்னர்’ பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிக்கு, அடுத்த வாரம் அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லவிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியின் அனுமதியே எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய ஆளும் தரப்பை சரிக்கட்டி வாங்கியதுதானாம். தற்போதும் கல்லூரியில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், மாவட்டத் தலைநகரிலுள்ள அரசு மருத்துவமனை உயரதிகாரியிடம் அரசு உபகரணங்களை இரவலாகக் கேட்டிருக்கிறார். அதற்கு மருத்துவமனை உயரதிகாரி, ‘மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் கருவிகளை எப்படித் தர முடியும்?’ என மறுக்கவே... ‘உன்னை இந்த சீட்டுல இருந்து தூக்கி அடிச்சுருவேன். நீ எங்க போய் புகார் கொடுத்தாலும் ஒண்ணும் நடக்காது’ என்று மிரட்டிவருகிறாராம்!’’

‘‘அதே மாவட்டத்தில் மற்றொரு தி.மு.க பிரமுகரின் அடாவடியும் தூள்பறக்கிறதாமே?’’

‘‘ஆமாம். ‘ரெடிமிக்ஸ்’ தொழிற்சாலையை நடத்திவரும் பெருமாள் பெயர்கொண்ட அந்த தி.மு.க பிரமுகர், தனது மாவட்டத்துக்குள் நடக்கும் அரசுக் கட்டடப் பணிகளுக்கு தனது நிறுவனத்திடமிருந்துதான் ‘ரெடிமிக்ஸ்’ வாங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறாராம். பாதிப்படைந்த கட்டட நிறுவனங்களும், பிற ‘ரெடிமிக்ஸ்’ தொழிற்சாலைத் தரப்பினரும் முதல்வர் அலுவலகத்துக்குப் புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். விரைவில் நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.’’

“இம்முறை சிரிக்காமல் கேட்டுக்கொண்டேன்... சரியா?’’

‘‘அன்பான அமைச்சர் ஒருவர் நடத்தும் பரிவர்த்தனைகள் பழைய ஜெய்சங்கர் படங்களையே மிஞ்சிவிடுகின்றனவாம். சென்னை ஷெனாய் நகரில் ஒரு காரை நிறுத்திவிட்டு, பார்ட்டிகளிடம் அதில் பெட்டியைக் கொடுக்கச் சொல்கிறார்களாம். இரண்டொரு நாளில் பார்ட்டிகளுக்குத் தேவையானவற்றை அடையாறில் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு காரிலிருந்து பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்களாம். ஒரு முறை பயன்படுத்திய காரை அடுத்த ஒரு மாதத்துக்கு மீண்டும் பயன்படுத்துவதில்லையாம். அதேபோல ஏரியாக்களையும் மாற்றிவிடுகிறார்கள். சிசிடிவி கேமராவிலிருந்து தப்பிக்க டிரைவர் முகத்தை மறைத்து தொப்பி அணிந்திருக்கிறாராம்!’’

மிஸ்டர் கழுகு: “தூக்கி அடிச்சுருவேன்...” - மிரட்டும் ஆளும் புள்ளி!

‘‘உளவுத்துறை அதிகாரியை அதிரடியாக மாற்றியிருக்கிறதே மத்திய அரசு?’’

‘‘மத்திய உளவுத்துறையின் தமிழகப் பிரிவின் தலைவராக இருந்த ராஜனை மாற்றிவிட்டு, அந்த இடத்துக்கு ரவிச்சந்திரனை நியமித்திருக்கிறது மத்திய அரசு. இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். மாற்றத்துக்குக் காரணத்தை விசாரித்தால், ‘ராஜன் ஏற்கெனவே குஜராத்தில் பணிபுரிந்தபோது மோடி, அமித் ஷா ஆகியோரின் குட் புக்கில் இருந்தவர். தற்போது ஐ.பி தலைவராக இருக்கும் அரவிந்த் குமாரின் பதவிக்காலம் 2022 ஜூன் மாதம் முடிகிறது. அந்த இடத்தில் ராஜனை உட்காரவைக்கவே, அவரை டெல்லி ஐ.பி-யின் தலைமையகத்தில் பணியமர்த்தியிருக்கிறார்கள்’’ என்ற கழுகாருக்கு சூடாக வெங்காய பஜ்ஜியைக் கொடுத்தோம். ரசித்துச் சாப்பிட்டவர் அடுத்த செய்திக்குத் தாவினார்...

‘‘சர்ச்சையில் சிக்குவதே அந்த அமைச்சருக்கு வாடிக்கையாகிவிட்டது... தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக, அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மணல் எடுத்துவர ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள தோப்புவிளையிலிருந்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து, கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் கொட்டி, அமைச்சரின் உதவியாளர் பல லட்சங்களைச் சுருட்டிவிட்டாராம். விவகாரம் இப்போது தலைமைச் செயலகம் வரை வந்திருக்கிறது’’ என்ற கழுகார் “மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? நெருக்கும் ஆளுங்கட்சியினர்! என்று கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம் இல்லையா... நவம்பர் 25-ம் தேதி இன்னசென்ட் திவ்யாவை மாற்றிவிட்டு, நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த அம்ரித்தை நீலகிரி ஆட்சியராக நியமித்திருக்கிறது தமிழக அரசு. இதுவும் சர்ச்சையாகலாம்... வாட்ச் செய்யவும்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

******

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கற்றல்துறையின் நந்தவன அதிகாரிக்கும், துறையின் உச்ச அதிகாரிக்கும் பனிப்போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. துறை சார்ந்த முக்கிய விஷயங்களை, முதல்வர் அலுவலகத்தின் மூத்த அதிகாரியோடு மட்டுமே கலந்து பேசி முடிவெடுக்கும் நந்தவன அதிகாரி, உச்ச அதிகாரியை மதிப்பதே இல்லையாம். ‘வெறும் கையெழுத்து போட மட்டும்தானா நான்?’ என்று சக அதிகாரிகளிடம் புலம்புகிறார் துறையின் உச்ச அதிகாரி!

* சென்னையின் ஷாப்பிங் ஏரியாவின் ஐ.பி.எஸ் அதிகாரியும், பெண் ஒருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று காக்கிகள் சிலர் வசம் உள்ளது. அது எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தகவல் கசிவதால், பதற்றத்தில் இருக்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி!

கடிதம் ஏற்படுத்திய கலகம்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பதவியிலிருந்து மருத்துவர் அனுரத்னா நீக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், அதே சுகாதாரத்துறையிலிருந்து அடுத்த சர்ச்சை வெடித்திருக்கிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் முதுநிலை நேர்முக உதவியாளர் அ.தியாகு, சமீபத்தில் மருத்துவர் பணியிட மாற்றங்களுக்காக மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குப் பரிந்துரை செய்து எழுதியுள்ள கடிதம்தான் சர்ச்சையின் மையப்புள்ளி. ‘திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலரை பணியிடமாற்றம் செய்துவிட்டு, அந்தப் பணியிடத்தில் வேறொருவரை பணியமர்த்தக் கோருகிறது’ என்கிறது அந்தக் கடிதம். “துறைரீதியாக நடக்கவேண்டிய வேலையை அமைச்சரின் உதவியாளர் எப்படிச் செய்யலாம்?” என்று பொங்குகிறார்கள் மருத்துவர்கள்.