அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: போட்டுக்கொடுத்த மேயர்கள்... பந்தாடப்படவிருக்கும் ஆணையர்கள்!

சபரீசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சபரீசன்

தேர்தல் வருகிறதே கெத்து காட்டலாம் என்று போதைப்பொருள்களுக்கு எதிராகவும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

fsaaa“ஒருவழியாக உதயநிதியை அமைச்சராக்கிவிட்டார்கள்” என்றபடி வந்த கழுகார் கருப்பட்டி காபியை ருசித்தபடியே, அச்சுக்குத் தயாராக இருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “அமைச்சரவை மாற்றம் தொடர்பாக என்னிடமும் சில செய்திகள் இருக்கின்றன. சொல்கிறேன் கேளும்” என்றபடி கச்சேரியை ஆரம்பித்தார்...

“உதயநிதி அமைச்சராக்கப்பட்டதை வரவேற்றவர்களில் பலருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது தமிழக அமைச்சரவையின் புதிய சீனியாரிட்டி பட்டியல். அதிலும், பட்டியலில் 27-வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் பி.டி.ஆருக்குக் கூடுதல் வருத்தம் என்கிறார்கள். ‘ஜெயலலிதா, ஜூனியரான ஓ.பி.எஸ்-ஸுக்கு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் இரண்டாவது இடம் கொடுத்து தன் அருகிலேயே அமரவைத்தார். ஏன்... கலைஞரேகூட நிதியமைச்சராக இருந்த அன்பழகனை தனக்கு அடுத்த இடத்தில்தான் வைத்திருந்தார். ஆனால், இவர்கள் என்னை எந்த முக்கியத்துவமும் இல்லாமல் பத்தோடு ஒன்றாகப் பின்வரிசையில் நிறுத்திவிட்டார்களே...’ என்று தன் அதிருப்தியை நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஆளுநர் மாளிகையில் குரூப் போட்டோ எடுத்தபோது அவர் முகத்தில் அருளே இல்லையாம்.”

“உள்ளுக்குள் நிறைய பேருக்கு கோபம் இருக்கிறது. ‘உள்ள அழுகுறேன்... வெளிய சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்’ என்று சமாளிக்கிறார்கள். இவர் வழக்கம்போல வெளிக்காட்டிவிட்டார்போல...”

“ஆமாம்... இன்னொரு கதையைக் கேளும். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறைக்கு மாற்றப்படும் தகவல், ஒரு வாரத்துக்கு முன்பாகவே அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதர் எந்திரனாக மாறி, மூன்றே நாள்களில் எக்கச்சக்க ஃபைல்களில் கையெழுத்து போட்டுத்தள்ளிவிட்டாராம். இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இரட்டைச் சதம் அடித்திருக்கலாம் என்று கேலி செய்கிறார்கள் துறை அதிகாரிகள். ‘சட்டமன்றத்தில் நாம் அறிவித்த திட்டங்களில் ஒன்றைக்கூட இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. மேலிடம் கேள்வி கேட்டால் எப்படிச் சமாளிப்பது?’ என்று அதிகாரிகள் கேட்டதே இந்த வேகத்துக்குக் காரணமாம்.”

மதிவேந்தன்
மதிவேந்தன்

“உதயநிதிகூட மூன்று கையெழுத்துதானே போட்டார்..?”

“ஓவர் குசும்பு உமக்கு... சிறிய துறையான சுற்றுலாத்துறையையே கவனிக்க முடியாமல் திணறியவர் மதிவேந்தன். அதோடு ஒப்பிட்டால், வனத்துறையில் வேலை அதிகம். காடு அழிப்பு, ஆக்கிரமிப்பு, வனவிலங்குகள் வேட்டை, கேரள அரசு தன்னிச்சையாகச் செய்துவரும் டிஜிட்டல் ரீ-சர்வே என்று சவாலான பிரச்னைகளும் இங்கே அதிகம். ‘மூன்று மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் வனத்தையும், அது சார்ந்த வளத்தையும் கட்டுப்படுத்தும் துறையை எப்படிச் சமாளிக்கப்போகிறாரோ தெரியவில்லை...’ என்று இப்போதே அவருடைய ஆட்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.”

“அதையெல்லாம் அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள் என்று நினைத்துவிட்டார்கள்போல... உதயநிதி பதவியேற்புக்கு, டி.ஆர்.பாலு வரவில்லையே ஏனாம்?”

“ டி.ஆர்.பாலு தன் மகனுக்கு அமைச்சரவையில் எப்படியாவது இடம் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். ஆனால், ‘அமைச்சரவையில் ஓர் இடம்தான் மீதமிருக்கிறது. இப்போதைக்கு யாரையும் வெளியேற்ற முடியாது’ எனக் கைவிரித்துவிட்டதாம் கட்சித் தலைமை. அதிருப்தியடைந்த அவர், உதயநிதியின் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை என்கிறார்கள். ‘பொருளாளர் என்ற முறையில் பாலு விழாவில் கலந்திருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தைக் காரணம் காட்டி அவர் வரவில்லை. தன் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருந்தால், இதே பதிலைச் சொல்லியிருப்பாரா அவர்?” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

மிஸ்டர் கழுகு: போட்டுக்கொடுத்த மேயர்கள்... பந்தாடப்படவிருக்கும் ஆணையர்கள்!

“ஓஹோ... ‘மாப்பிள்ளை’யை மேயர்களெல்லாம் சந்தித்திருக்கிறார்களே... என்ன விசேஷம்?”

“ஏற்கெனவே தி.மு.க எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்தார் இல்லையா... அதன் தொடர்ச்சிதான் இது. இந்தச் சந்திப்பின்போது மேயர்கள் சிலர், மாவட்டச் செயலாளர்கள் குறித்துப் புகார் சொல்ல முனைந்திருக்கிறார்கள். இடைமறித்த மாப்பிள்ளை, ‘நிர்வாகப் பிரச்னையை மட்டும் சொல்லுங்கள்’ என்று தடுத்திருக்கிறார். பெரும்பாலான மேயர்கள், ‘அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சியவர்களே தற்போதும் ஆணையர்களாக இருக்கிறார்கள். நாங்கள் சொல்லும் எதையும் அவர்கள் செய்வதில்லை. வேலை பார்ப்பதே சிரமமாக இருக்கிறது. அவர்களை மாற்றிக்கொடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்டுக்கொண்டவர் கோவை, மதுரை மேயர்களை மட்டும் தனியாக அழைத்துப் பேசினாராம். இவர்கள்மீது சொந்தக் கட்சியினரே சொன்ன புகார்களைத் தாண்டி, உளவுத்துறை ரிப்போர்ட்டும் நெகட்டிவாக வந்ததாலேயே இந்த ‘சிறப்பு கவனிப்பு’ என்கிறார்கள். இந்தச் சந்திப்பின் சாரம், ரிப்போர்ட்டாக முதல்வரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. விரைவில் மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். கட்சியிலும் இல்லை... ஆட்சிப் பொறுப்பிலும் இல்லை... எந்த அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்களோ... அவர்களுக்குத்தான் வெளிச்சம்!”

மிஸ்டர் கழுகு: போட்டுக்கொடுத்த மேயர்கள்... பந்தாடப்படவிருக்கும் ஆணையர்கள்!

“இன்னொரு பக்கம் ‘விஜய் மக்கள் இயக்க’ நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியிருக்கிறாரே...”

“இப்போது மாநகரம், நகர அளவில் மட்டும் இருக்கும் இயக்கக் கட்டமைப்பை, ஒன்றியம், பேரூராட்சிகள் வரை விரிவுபடுத்தச் சொல்லியிருக்கிறாராம் விஜய். நிர்வாகிகள் நியமனத்தில், மூன்றில் ஒரு பங்கைப் பெண்களுக்கு ஒதுக்கவும் உத்தரவிட்டிருக்கிறாராம். ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, கிராமம்தோறும் கிளை திறக்க வேண்டும். பூத் கமிட்டிக்குத் தேவையான உறுப்பினர்களைத் திரட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்’ என்கிறார்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள். கடந்த நவம்பர் 20-ம் தேதிதான் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அடுத்ததாக, இப்போது டிசம்பர் 13-ம் தேதி ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. இனி, மாதம்தோறும் கூட்டம் நடத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.”

“அப்பா எஸ்.ஏ.சி-யோடு பிணக்கிருக்கிறதே... யார் அவருக்கு இப்படியான அரசியல் யோசனைகளைச் சொல்கிறார்கள்?”

“மூன்று முன்னாள் காவல்துறை உயரதிகாரிகள்தான் விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை வழங்குவதாகச் சொல்கிறார்கள். தவிர, பொறுப்பில் இருக்கும் இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் உதவுகிறார்களாம். ‘கடந்த 18 மாதங்களில், எங்கேயெல்லாம் தி.மு.க அரசு சறுக்கியிருக்கிறது’ என்கிற பட்டியலும், அந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வழியாக விஜய் கைக்குப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் விஜய்யோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, ‘விஜய் என்ன செய்யப்போகிறார்’ என்பதுதான் கேள்வி.”

“இன்னொரு நடிகர், நிர்வாகிகளையெல்லாம் கூண்டோடு மாற்றியிருக்கிறாரே...”

“தேர்தல் வருகிறதே கெத்து காட்டலாம் என்று போதைப்பொருள்களுக்கு எதிராகவும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். ஆனால், விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் கூட்டம் வந்திருக்கிறது. அந்தக் கடுப்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டச் செயலாளர்களின் பொறுப்புகளைப் பறித்திருக்கிறார் நாட்டாமை. கையோடு புதிய நிர்வாகிகளையும் நியமித்திருக்கிறார். நீக்கப்பட்டவர்களைவிட புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்தான் அதிக துயரத்தில் இருப்பதாகத் தகவல்.”

“பா.ஜ.க தகவலேதும் இருக்கிறதா?”

“மாவட்டம்தோறும் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கியது பா.ஜ.க மேலிடம். சில மாவட்டங்களில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில மாவட்டங்களில் வேலைகள் நடந்துவருகின்றன. இந்தக் கட்டடம் கட்ட ஒதுக்கிய பணத்தில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. மாநிலத் தலைமையின் பெயரிலேயே இந்த மோசடி நடந்திருப்பது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இந்த விவகாரம் கமலாலயத்தில் வெடிக்கும் என்கிறார்கள்” என்ற கழுகார்...

“தீயணைப்புத்துறை இயக்குநராக இருந்த பிரஜ் கிஷோர் ரவி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவி, கூடுதல் பொறுப்பாக சீமா அகர்வால் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, ‘ஃபையர் மேன்’ டிரான்ஸ்பர் தொடர்பாக உளவுத்துறை வழங்கிய ‘நோட்’ அடிப்படையிலேயே, பி.கே.ரவி காத்திருப்போர் பட்டியலுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* உதயநிதி பதவியேற்பு முடிந்ததும், ஆளுநருடன் தனியாகப் பேசியிருக்கிறார் முதல்வர். அப்போது தேங்கிக்கிடக்கும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறது ராஜ் பவன் வட்டாரம்.

* சென்னை மாநகராட்சி ஆணையர் பெரிய இடத்துக்குப் போகும் வாய்ப்பு இருப்பதால், முருகனின் பெயரைக்கொண்டவர், நிலாவின் பெயரைச் சூடியவர் ஆகிய இரு அதிகாரிகளில் ஒருவர் ஆணையராக நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.