Published:Updated:

மிஸ்டர் கழுகு: அடுத்த ரெய்டுக்கு டிக்! - மூன்று மாஜிக்கள் திக் திக்...

மூன்று மாஜிக்கள் திக் திக்...
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்று மாஜிக்கள் திக் திக்...

எம்.ஆர்.விஜயபாஸ்கரில் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி என்று பயணித்து தற்போது தங்கமணியில் வந்து நிற்கிறது

செய்தி சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது என்ட்ரி கொடுத்த கழுகார், கவர் ஸ்டோரியில் கண்களை மேயவிட்டார். அவருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதை ருசித்தவாறே, ‘‘கவர் ஸ்டோரியில் இல்லாத சில விஷயங்கள் என்னிடம் உள்ளன’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்...

‘‘எம்.ஆர்.விஜயபாஸ்கரில் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி என்று பயணித்து தற்போது தங்கமணியில் வந்து நிற்கிறது. அடுத்தடுத்து ரெய்டு நடக்கலாம் என்கிறார்கள். இப்போதைக்கு மூன்று முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் ‘டிக்’ செய்யப்பட்டுள்ளன. கொங்குப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டெல்டாவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர்தான் அந்த மூவர் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம். இறுதிக் கட்டமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: அடுத்த ரெய்டுக்கு டிக்! - மூன்று மாஜிக்கள் திக் திக்...

‘‘சும்மா சும்மா ரெய்டு போய் என்ன பயன்... நடவடிக்கை இல்லையே!’’

‘‘அந்த விமர்சனம் தி.மு.க-வுக்குள்ளும் எழுந்துவிட்டது. நேரம் வரும்போது கைது நடக்கும் என்கிறது முதல்வர் தரப்பு. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகுதான் அ.தி.மு.க-வினர் மீதான நடவடிக்கைகளெல்லாம் இருக்குமாம். அதுவரை ரெய்டு படலம் மட்டுமே என்கிறார்கள்.’’

‘‘ஆளும் தரப்பில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு சூடுபிடித்துவிட்டதே?”

“ஆமாம், வேகமாக இறங்கிவிட்டார்கள். கடந்த முறை ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அநேகமாக வரும் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படலாம்’ என்று சொல்லியிருந்தேன் அல்லவா? சில தினங்களுக்கு முன்பு நிதித்துறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்க ஆலோசிக்கப்பட்டதாம். அதேபோல், வேறு சில திட்டங்களும் ஜனவரியில் கூடவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படலாம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், உள்ளாட்சித் தேர்தலில் எந்த அளவு வெற்றியை ஈட்டித் தருகிறார்களோ, அதை வைத்துத்தான் அவர்களின் பதவிகள் தொடருமா... இல்லை கழற்றிவிடப்படுவார்களா என்பதை முதல்வர் முடிவுசெய்யவிருக்கிறாராம். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று அந்தப் பகுதிக்குப் பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்களிடம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் முதல்வர்.’’

‘‘அ.தி.மு.க தரப்பு என்ன செய்யப்போகிறதாம்?’’

‘‘மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடியிடம், ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக நமக்கு இன்னும் நெருக்கடிகள் வருமே...’ என்று பதற்றத்துடன் சொல்லியிருக்கிறார்கள். ‘எது நடந்தாலும் அமைதியாகக் கடந்து செல்ல வேண்டும்’ என்று எடப்பாடி அட்வைஸ் செய்திருக்கிறார். எடப்பாடிக்காக டெல்லியில் பேசுவது முன்னாள் நீதித்துறை பிரமுகர்தானாம். அவர் எடப்பாடியிடம், ‘தி.மு.க உங்கள்மீது கேஸ் போட்டாலும் கவலைப்பட வேண்டாம். தி.மு.க விஷயத்தில் இன்னும் சில காலம் மட்டுமே டெல்லி தலைமை அமைதியாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் இன்னும் வேகமெடுக்கும்’ என்று தைரியம் சொல்லியிருக்கிறார். தி.மு.க தரப்புக்கு எதிராக இப்போது எடப்பாடி துணிச்சலாக அறிக்கைவிடக் காரணமே அந்த முன்னாள் நீதித்துறை பிரமுகரின் ஆலோசனைதான் என்கிறார்கள். ‘தனித்து நின்றால் ஆட்சியைப் பிடித்திருப்போம்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சொன்னதற்குக் கடுமையாக பதிலடி கொடுத்தார் எடப்பாடி. அவர் இப்படிப் பேசுவார் என்பதை பா.ம.க-வினரே எதிர்பார்க்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் பா.ம.க இருக்காது என்பதால், தங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என பா.ஜ.க நம்புகிறது. பிரசாரத்துக்கு டெல்லி தலைவர்கள் பலரை அழைத்துவந்து தி.மு.க-வை பா.ஜ.க கிடுகிடுக்கவைக்கும். அது ரெய்டுகளுக்கு அணைபோட உதவும் என நம்புகிறார் எடப்பாடி.’’

தி.மு.க.வில் இணைந்த கே.சி.விஜய்
தி.மு.க.வில் இணைந்த கே.சி.விஜய்

‘‘சசிகலாவின் உறவினர் ஒருவர் தி.மு.க-வில் இணைந்திருக்கிறாரே!’’

‘‘டாக்டர் வெங்கடேஷ் செல்வாக்குடன் இருந்தவரை, அவருக்கு வலது கைபோல இருந்த கே.சி.விஜய் என்பவர்தான் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இவர் மன்னார்குடி வகையறாக்களுக்கு தூரத்துச் சொந்தம் என்கிறார்கள். அ.தி.மு.க-வில் இருந்தபோது அவருக்கு இளைஞர் பாசறையில் பொறுப்பு கொடுத்தார்கள். தினகரன் அ.ம.மு.க தொடங்கியபோது, அங்கு சென்றவருக்கு இளைஞர் பாசறை பொறுப்பு கொடுக்கப்பட்டது. இடையில் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகியிருந்தார். சசிகலா எப்படியும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவார் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், தி.மு.க-வில் இணைந்துவிட்டார்.”

‘‘இன்னும் எத்தனை விக்கெட் விழுகிறதென்று பார்ப்போம்...’’

‘‘ஜூ.வி-யில் வெளியாகும் பல செய்திகள் ரியாக்‌ஷன்களை ஏற்படுத்திவருகின்றன. அந்த வகையில், 15.12.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறோம்’ என்ற தலைப்பில் எம்.எல்.ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொடுக்கப்படாத விவரத்தை எழுதியிருந்தீர். தற்போது அதற்கான அறிவிப்பு வந்திருக்கிறது. தமிழக பட்ஜெட்டில் எம்.எல்.ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 705 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், முதற்கட்டமாக 352.5 கோடி ரூபாய் டிசம்பர் 16-ம் தேதி விடுவிக்கப்பட்டது. உமது நிருபருக்கு எனது வாழ்த்துகளைச் சொல்லிவிடும்’ என்ற கழுகார், பாக்கெட்டிலிருந்த சாக்லேட்டை எடுத்து நீட்டியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘தி.மு.க கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க-மீது வருத்தத்தில் இருக்கிறதாம். திண்டுக்கல்லில் பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி அதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கண்டித்துப் போராடிய பாலபாரதி மீது வழக்கு பாய்ச்சியதை சி.பி.எம் ரசிக்கவில்லை. தி.மு.க-வை உரசுவதுபோல ‘தீக்கதிர்’ நாளிதழில் இப்போது அடிக்கடி கட்டுரைகள் வெளியாவதற்கு இதுவும் ஒரு காரணம். உள்ளாட்சித் தேர்தலில் இந்த உரசல் இன்னும் அதிகமாகலாம்.’’

‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் - தமிழக முதல்வர் சந்திப்பில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா?”

‘‘பெரிதாக அரசியல் பேசப்படவில்லை என்கிறார்கள். சந்திரசேகர ராவ் தரப்பில் 2024 தேர்தல் குறித்துப் பேசியபோது, ‘அப்போதைக்கு பார்த்துக்கொள்ளலாம்’ என்று முதல்வர் தரப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் நரசிம்மன் உடல்நிலை சரியில்லாமல், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைக் காண சென்னை வந்த சந்திரசேகர ராவ், முதல்வரையும் சந்திக்க விரும்பியிருக்கிறார். ஸ்டாலின் குடும்பத்தினரோடு சந்திரசேகர ராவ் குடும்பம் நல்ல நட்பில் உள்ளது. அந்த நெருக்கத்தில் குடும்பத்துடன் முதல்வரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். தெலங்கானாவைச் சேர்ந்த இரண்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனவாம். அது குறித்தும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசியிருக்கிறார்.’’

‘‘சத்தமில்லாமல் நடந்திருக்கிறதே புதுமனை புகுவிழா!”

‘‘அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் வீட்டைத்தானே சொல்கிறீர்... ஆமாம், அவர் தஞ்சாவூர் அருளானந்த நகரில் பிரமாண்ட பங்களா ஒன்றைக் கட்டியுள்ளார். பன்னீர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து புதுமனை புகுவிழாவை பிரமாண்டமாக நடத்த முதலில் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், கடந்த வாரம் யாருக்கும் சொல்லாமல் சத்தமில்லாமல் பால் காய்ச்சி புது பங்களாவில் குடியேறிவிட்டார். ரெய்டுகள் அனல் பறக்கும் நேரத்தில் விமரிசையாக விழா எடுத்தால், `எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாகிவிடும் என்பதாலேயே சிம்பிளாக முடித்தாராம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: அடுத்த ரெய்டுக்கு டிக்! - மூன்று மாஜிக்கள் திக் திக்...

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* முதன்மையானவருக்கு ஆல் இன் ஆலாக இருந்த ராஜ பிரமுகரை, சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கழற்றிவிட்டுவிட்டார்கள். வெளிநாட்டு பரிவர்த்தனைகளில் இவரால் ஏற்பட்ட நஷ்டத்தாலேயே இந்த நடவடிக்கையாம்.

* சமீபத்தில் கல் குவாரிகளுக்கு ஆய்வுக்குச் சென்ற கதர் புள்ளியை வழியிலேயே மடக்கிய குவாரி அதிபர்கள், அவருக்குத் தக்க மரியாதையைச் செய்திருக்கிறார்கள். இதையடுத்து, அப்படியே யூ டர்ன் போட்டு திரும்பிவிட்டாராம் பெயரிலேயே வசதி படைத்த அந்த வி.ஐ.பி!