Published:Updated:

மிஸ்டர் கழுகு: வாரிச்சுருட்டும் வாரிசுகள்! - அலறும் அ.தி.மு.க நிர்வாகிகள்...

ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி - கமல்

கடந்த வாரம் ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டதிலிருந்தே துர்கா மன உளைச்சலில் இருந்திருக்கிறார்

மிஸ்டர் கழுகு: வாரிச்சுருட்டும் வாரிசுகள்! - அலறும் அ.தி.மு.க நிர்வாகிகள்...

கடந்த வாரம் ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டதிலிருந்தே துர்கா மன உளைச்சலில் இருந்திருக்கிறார்

Published:Updated:
ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி - கமல்
லேசான சாரல் மழையில் நனைந்தபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடாக இஞ்சி டீயை அவருக்கு நீட்டிவிட்டு, “கடந்த வாரம் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், வழிகாட்டுதல் குழு ஓரங்கட்டப்படுவதாக நீர் கூறிய தகவல் கழகத்துக்குள் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறதே?’’ என்றோம். ‘‘கட்சிக்குள் நடப்பதைத்தான் நான் சொல்கிறேன். எந்த உள்நோக்கமும் இல்லை... ‘வழிகாட்டுதல்குழுவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல், இனி முக்கிய முடிவு எடுக்கப்படும் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை’ என்று முறுக்கிக்கொண்டிருக்கிறாராம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்’’ என்றபடி டீயைப் பருகிய கழுகார், ‘‘இலைக்கட்சியில் வாரிசுகளின் வசூல் வேட்டை தூள்பறக்கிறது’’ என்று தொண்டையைச் செருமிக்கொண்டே அடுத்த களேபரத்துக்குள் தாவினார்.

‘‘கொங்கு ஏரியாவில்தான் இந்த வேட்டை ஆரம்பித்திருக்கிறதாம். உச்ச அமைச்சர் ஒருவரின் வாரிசும், ‘வாரியம்’ அமைச்சர் ஒருவரின் வாரிசும் இந்த வேட்டையில் இறங்கியிருக்கிறார்களாம். எம்.எல்.ஏ சீட் எதிர்பார்த்து வருபவர்களிடம், ‘தொகுதிக்கு மூன்று பேரை செலக்ட் செய்கிறோம். அதில் உங்கள் பெயரையும் நுழைத்துவிடுகிறோம். வேட்பாளர் தேர்வின்போது உங்களுக்கு சீட் கன்ஃபார்ம் ஆகிவிடும்’ என்று டீல் பேசி மூன்று ஸ்வீட் பாக்ஸ்கள் வரை வாங்குகிறார்களாம். சீட் கேட்டு வருபவர்களை நான்கைந்து நாள்கள் அலையவிட்டு, அவர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிய பின்னரே சந்திப்பை அரங்கேற்றுகிறதாம் வாரிசுகள் தரப்பு. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளுடன் பரிமாற்றங்கள் முடிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்துவிட்டு வந்தவர்கள், அது பற்றிப் பெருமையாகத் தங்களுக்கு நெருக்கமானவர் களிடம் சொல்ல, ‘அத்தனையும் அம்போதான்... சீட் எதுவும் கிடைக்காது’ என்று ‘ஷாக்’ கொடுக்க... அலறித் துடிக்கிறார்களாம் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தவர்கள்.”

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

‘‘ஓஹோ... தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா திடீரென வடநாடு சென்று திரும்பியிருக்கிறாரே..?’’

‘‘கடந்த வாரம் ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டதிலிருந்தே துர்கா மன உளைச்சலில் இருந்திருக்கிறார். ‘கங்கைநதியை வழிபட்டால் சஞ்சலம் நீங்கும்’ என்று ஜோதிடர்கள் சொல்லவும், டெல்லி மார்க்கமாக வாரணாசி சென்றவர், கங்கை தீப ஆராதனையில் கலந்துகொண்டாராம். இதற்காகத்தான் இந்த திடீர்ப் பயணம்.’’

‘‘சரிதான்...’’

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

‘‘போடி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டால், அவரை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வனைக் களமிறக்க தி.மு.க திட்டமிடுகிறது. ஆனால், அங்கு அவருக்குப் பெரிதாக ஸ்கோப் இல்லாததால், ‘வேற யாரையாவது நிக்க வையுங்க. நான் ஜெயிக்கவெச்சு தர்றேன். எனக்கு ஆண்டிப்பட்டி தொகுதியை ஒதுக்கிடுங்க’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பின்வாங்கினாராம். ‘ஜெயிக்கலைன்னாலும் பரவாயில்லை. அதுக்கு பதிலா ராஜ்யசபா சீட் தர்றோம்’ என்று தி.மு.க தலைமை கூறியிருக்கிறது. ஆனால், ‘பின்னாடி கிடைக்குறது எதுக்கு... கைக்குக் கிடைக்குறது தானே நமக்கு’ என்று தனக்கு நெருக்கமானவர் களிடம் புலம்பிய தங்கம் இதற்கு உடன்பட வில்லையாம். இந்தத் தகராறை உன்னிப்பாக கவனித்துவருகிறது பன்னீர் தரப்பு.’’

‘‘ம்ம்... ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன?’’

‘‘டிசம்பர் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே முடிவுகளை எடுக்கவிருக்கிறாராம் ரஜினி. ஜனவரி முதல் வாரம் சென்னையில் நிர்வாகிகளைச் சந்திப்பவர், மீண்டும் ஹைதராபாத்துக்கு ‘அண்ணாத்த’ ஷூட்டிங்குக்காகச் செல்கிறாராம். பொங்கலுக்கு முன்பாக சென்னைக்கு வந்துவிடுவாராம். சமீபத்தில் ரஜினிக்கு நெருக்கமான நிறுவனத்துக்கும், மத்திய அரசுத் தரப்பினருக்கு நெருக்கமான ஒரு நிறுவனத்துக்கும் இடையே துபாயில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளது. ரஜினியின் அரசியல் வரவுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்கும் நிறையவே தொடர்பு உண்டு என்கிறார்கள்.’’

‘‘ஓ... ‘தேர்தலில் தோற்றுவிட்டால் கட்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டுமா?’ என்றும் ரஜினி யோசிப்பதாகச் சொல்கிறார்களே..?’’

‘‘தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், கட்சியைத் தொடர்ந்து நடத்துவதில் ரஜினிக்கு விருப்பமில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். தனது எண்ணத்தை டெல்லிக்கும் தெரியப்படுத்திவிட்டாராம். ‘ஏன் கண்டதையும் நினைச்சு மனசைக் குழப்பிக்கிறீங்க... உங்களை வெற்றியடையச் செய்வது எங்கள் பொறுப்பு’ என்று உறுதியளித்திருக்கிறதாம் டெல்லி மேலிடம்’’ என்ற கழுகாருக்கு, சூடாக அல்வாவை நீட்டினோம். “இம்முறையும் அல்வாவா... வேறு ஸ்வீட்டே உமக்குக் கிடைக்கவில்லையா?” என்று சலித்துக்கொண்ட கழுகாரிடம் “நாமும் எமக்குக் கிடைத்த ஸ்வீட்டைத்தான் தருகிறோம். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றபடி கண்ணைச் சிமிட்டினோம்.

ரஜினி
ரஜினி

“கழுகாருக்கே கவுன்ட்டர் தருகிறீர்களாக்கும்... ம்க்கும்... விவரத்தைச் சொல்கிறேன். பெயர் கேட்காதீர்’’ என்றபடி செய்தி களைத் தொடர்ந்தார் கழுகார்.

”தி.மு.க தரப்புக்கு ஆலோசகராக இருக்கும் மீசைக்கார முன்னாள் காவல் அதிகாரி ஒருவர், ‘பரிசு’ அதிபர் ஒருவரிடம் நேரடி டீலிங் போட்டிருக்கிறார். வட மாநிலங்களில் தொழில் செய்யும் அந்த ‘பரிசு’ அதிபருக்கு வியாபார ரீதியாக சில தொந்தரவுகள் இருக்கின்றனவாம். ‘அந்தப் பிரச்னைகளை என் தொடர்புகள் மூலமாகத் தீர்த்துவைக்கிறேன். பதிலுக்கு மாதம் இவ்வளவு தொகை தந்துவிடுங்கள். நேரடியாக உங்களுடன் மட்டும்தான் பேசுவேன்’ என்று டீலிங்கை முடித்திருக்கிறாராம் அந்த மீசைக்காரர். இந்த டீல் குறித்து தன் நட்பு வட்டத்தில் ‘பரிசு’ அதிபர் பேசவும், அவர்கள் பதிலுக்கு ‘போச்சா!’ என்று ‘உச்’ கொட்டியிருக்கிறார்கள்.’’

‘‘என்னவாம்?’’

‘‘மீசைக்காரர் லேசுபட்டவரல்ல. இவர் காவல்துறையில் இருந்தபோது, சென்னை புறநகரில் தி.மு.க புள்ளி ஒருவருக்குச் சொந்தமான நில விவகாரம் வெடித்தது. நிலத்தின் மதிப்பு ஆயிரம் கோடி என்பதால், கணிசமான தொகையை கமிஷனாகக் கறந்துவிடலாம் என்று எதிர் பார்த்தாராம் மீசைக்காரர். ஆனால், வழக்கு சென்னை மாநகரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இன்றுவரையில், அந்த வழக்கு அந்த தி.மு.க புள்ளிக்குக் குடைச்சலாக இருக்கிறது. தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் மீசைக்காரர், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஒருவர் மூலமாக அந்தப் புள்ளிக்கு நெருக்கடி கொடுக்கிறாராம். இத்தனைக்கும் அந்தப் புள்ளியும் மீசைக்காரரும் நகமும் சதையும் போன்றவர்கள். இந்த விவகாரத்தையெல்லாம் ‘பரிசு’ அதிபர் தரப்பிடம் பக்குவமாகக் கூறியவர்கள், ‘பண விவகாரத்துல எந்த சமரசத்தையும் அவர் செஞ்சுக்க மாட்டார்... அவருகிட்ட போய் மாட்டிக்கிட்டீங்களேண்ணே’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். திருதிருவென விழித்துக்கொண்டிருக்கிறது ‘பரிசு’ அதிபர் தரப்பு.”

“சரிதான்... ‘பிக் பாஸ் நிகழ்ச்சியால் குடும்பம் சீரழிகிறது’ என்று கமல்ஹாசனைச் சீண்டியிருக்கிறாரே முதல்வர்?’’

‘‘அதற்குத்தான், ‘முதல்வரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிலடி கொடுத்துவிட்டாரே கமல்! தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்துவரும் கமல்ஹாசனுக்கு கிராமப்புறங்களில் இயல்பாகவே கூட்டம் கூடுகிறது. இது தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளையுமே ஜெர்க் அடையவைத்திருக்கிறது. போதாதகுறைக்கு எம்.ஜி.ஆரை மேற்கோள்காட்டி கமல் பேசுகிறார். இந்தக் கடுப்பில்தான் எடப்பாடி சீறிவிட்டார் என்கிறார்கள்.’’

கமல்
கமல்

‘‘ம்ம்... சசிகலா முகாம் அப்டேட் ஏதாவது?’’

‘‘சசிகலாவுடன் சிறையிலிருக்கும் சுதாகரன், ஏற்கெனவே பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த நாள்களைக் கணக்கிட்டு, அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்கிறார்கள். இது தொடர்பாக அவர் அளித்திருந்த மனுவை ஏற்ற பெங்களூரு தனி நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட பத்து கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டினால், அவரை விடுவிக்கலாம் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வருமான வரித்துறையினர் கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பதால் பணத்தைத் திரட்டுவதில் அவர் தரப்பினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். இன்னொரு பக்கம் சொந்தங்களே அவருக்காகப் பணத்தை வெளியே எடுப்பதற்குத் தயங்குகிறார்களாம். மனிதர் நொந்துபோயிருக்கிறார். ஜனவரி 27-ம் தேதி சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அரசியலில் ஒரு கை பார்ப்பது என்ற முடிவில் இருக்கிறாராம். குக்கர் சின்னம் கிடைத்துவிட்டதால், சட்டமன்றத் தேர்தலுக்கு அ.ம.மு.க ஜரூராகத் தயாராகிறது. குறைந்தது 80 தொகுதிகளிலாவது அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை பாதித்து, தங்களின் பலத்தைக் காட்ட சபதமேற்றிருக் கிறாராம் டி.டி.வி.தினகரன்.’’

‘‘ஓஹோ...’’

‘‘கடலூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நியாய விலைக் கடைகளில் 126 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 5 முதல் 16-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஏற்கெனவே வசூல் வேட்டையை முடித்துவிட்டு, பெயரளவுக்கு இந்த நேர்முகத் தேர்வை நடத்தியிருக்கிறார்களாம். 126 பணியிடங்களுக்கும் தலா ஏழு லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டு, ஒன்றியச் செயலாளர் தொடங்கி அமைச்சர் ஒருவர் வரை பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறதாம்’’ என்றபடி கிளம்புவதற்காக எழுந்த கழுகார்,

சித்ரா
சித்ரா‘‘சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தால் ஆளும் தரப்பில் சிலர் ஆட்டம்கண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சர்ச்சைக்குப் பெயர்போன ‘சுத்தமான’ அமைச்சர் ஒருவர், சித்ரா இறப்பதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக அதே நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். இன்னொரு பக்கம் ஆளும்தரப்பு அமைச்சர்கள் வாரிசுகள் சிலருடனும் ஹேமந்த் நெருக்கமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள். இதனால், சித்ராவின் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளும் சத்தமில்லாமல் நடக்கின்றன’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.