அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்...’ - பன்னீரின் புத்தாண்டு ஆஃபர்...

பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர்செல்வம்

வாரியிறைக்கப்படும் பதவிகள்!

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம் கருப்பட்டி மிட்டாயை நீட்டினோம். ``இன்னமும் இந்த ஓட்டை வாட்ச்சை மாற்ற மனமில்லையா... நேற்று அரசியலுக்கு வந்தவர்கள்கூட, லட்சக்கணக்கான ரூபாய் வாட்ச் போட்டிருக்கிறார்கள்...” என்று வம்பிழுத்தார் கழுகார். “பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் பற்றி விசாரித்துவிட்டீர்போலத் தெரிகிறதே?” என்றோம்.

மிஸ்டர் கழுகு: ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்...’ - பன்னீரின் புத்தாண்டு ஆஃபர்...

“ஆமாம்... தன்னுடைய வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்ததும், ‘அது ரஃபேல் விமான உதிரி பாகத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. தேச உணர்வுக்காகக் கட்டியிருக்கிறேன்’ என ‘அடடே’ விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை. இதில் வேடிக்கை என்னவென்றால், ரஃபேல் விமானங்களை வாங்கும் முடிவு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக மோடி கையெழுத்திட்டது 2016-ல்தான். அதற்கு முன்னதாகவே, ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்சால்ட்’ நிறுவனத்தின் பொன்விழாவையொட்டி, 2015-ல் சிறப்பு கடிகாரங்களைத் தயாரித்தது ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ‘பெல் அண்ட் ரோஸ்’ நிறுவனம். அந்தக் கடிகாரத்தைத்தான் அண்ணாமலை கையில் கட்டியிருக்கிறார் என்கிறார்கள். ‘ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியதால், இந்தியாவிலுள்ள பல பா.ஜ.க தலைவர்களுக்கு ‘அன்பளிப்பாக’ விலையுயர்ந்த வாட்சுகள் ‘டஸ்சால்ட்’ நிறுவனத்தால் பரிசளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் அண்ணாமலை கைக்கு வந்திருக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த விஷயத்தில் அண்ணாமலையின் நேர்மையுடன் சேர்த்து, ரஃபேல் பேரம் பற்றியும் தி.மு.க-வினர் போட்டுத்தாக்குவதால், மேலிடத்து மாப்பிள்ளை கட்டும் வாட்ச் ரகங்கள், அவற்றின் விலையைப் பட்டியலெடுத்து வெளியிடத் தீவிரமாகிறதாம் அண்ணாமலைத் தரப்பு.”

“வாட்ச் அரசியல் இருக்கட்டும்... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கமலாலயத்துக்கு திடீர் விசிட் அடித்திருக்கிறாரே... என்ன விஷயமாம்?”

“எல்லாம் கட்சிப் பஞ்சாயத்துதான். சீனியர்கள் பலரும் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக, டெல்லி மேலிடம் வரை புகாராகப் போயிருக்கிறது. அண்ணாமலையைச் சுற்றியிருப்பவர்கள் அவர் பெயரைச் சொல்லி தொழிலதிபர்களிடம் வசூலில் ஈடுபடுவதாக, வருவாய் புலனாய்வுப் பிரிவினரும் நிதியமைச்சருக்கு ‘நோட்’ போட்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம், கையில் எடுத்துக்கொண்டுதான் கமலாலயம் வந்திருக்கிறார் நிர்மலா. அதில் கட்சி சீனியர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லையாம். அண்ணாமலை அண்ட் கோ மட்டும்தான் இருந்திருக்கிறது. ‘கமலாலயத்துல ரெளடியிசம்தான் அதிகமாகியிருக்கு. ஆடியோ, வீடியோ ரிலீஸ்னு ஏதோ படம் வெளியாகுற மாதிரி கட்சியை அசிங்கப்படுத்துற வேலை நடக்குது. சீனியர்களை மதிக்கிறதே கிடையாது. கட்சி நடத்துறீங்களா, கட்டப்பஞ்சாயத்து பண்றீங்களா?’ என்று அண்ணாமலையை வெளுத்து வாங்கிவிட்டாராம் அவர். பிரதமரோடு நேரடித் தொடர்பிலிருப்பவர், கமலாலயத்துக்கே வந்து சத்தம் போட்டுவிட்டுச் சென்றிருப்பதால், ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைபோல’ என்று கமுக்கமாகச் சிரிக்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.”

அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன்

“ம்... அமைச்சர் பெரியகருப்பன் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார்களே?”

“இருக்காதா பின்னே... தன்னிடமிருந்த ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றாக, பழையபடி இந்து சமய அறநிலையத்துறை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். கூட்டுறவுத்துறையைக் கொடுத்து மேலும் புண்படுத்திவிட்டதாம் கட்சித் தலைமை. உணவுத்துறையோடு சேர்ந்துதான் பெருமளவு கூட்டுறவுத்துறை செயல்பட வேண்டியிருக்கும். கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதால், அதிலும் பெரியகருப்பனால் எதுவும் செய்ய முடியாது. ‘கூட்டுறவுத்துறையிலும் பெயருக்குத்தான் அமைச்சராக இருக்கணும்போல’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்திருக்கிறார் பெரியகருப்பன். மனம் சஞ்சலிக்கும்போதெல்லாம், ஊரில் குறிகேட்பது அவரது வழக்கம். ‘கருப்பனிடம் குறி ஏதாவது கேட்கலாமா?’ எனத் தீவிரமாக ஆலோசித்துவருகிறாராம்.”

“அவரே பெரிய சாமியார்தானே... கரூரில் ஏதோ அரசியல் கலகம் என்றார்களே?”

“அது தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்ட கலகம். சமீபத்தில் கரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் வந்திருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும், மேடைக்கருகில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கதர்த்துண்டை மாத்திடலாமா?’ என காங்கிரஸ்காரர்களுக்கு தி.மு.க-வில் சேர மறைமுக அழைப்பு விடுத்திருக்கிறார். ‘அண்ணன்கிட்ட போனா செலவுக்காவது ஏதாவது மிஞ்சும்’ என சில கதர்களும் சஞ்சலமடைய, காங்கிரஸ் வட்டாரம் சூடாகிவிட்டது. சத்தியமூர்த்தி பவனுக்குத் தகவல் தெரிந்தவுடன், ‘எங்கள் மடியிலேயே கைவைப்பதா?’ என அறிவாலய சீனியர்களிடம் புலம்பியிருக்கிறார்கள். ‘சும்மாதான் பேசியிருப்பார்... அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்’ என அவர்கள் சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.”

“இன்னொரு பக்கம், சொந்தக் கட்சிக்குள்ளேயே அணிகளுக்குள் ஆட்களை இழுக்கும் வேலை நடக்கிறதாமே?”

“மாவட்ட அளவில் ஒவ்வோர் அணிக்கும் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் மும்முரமாகியிருக்கிறது தி.மு.க. மொத்தம் 15,000 பதவிகள் இருக்கின்றன. ஆனால், இளைஞரணி தவிர பிற அணிகளில் சேருவதற்கு தி.மு.க நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை. ‘எப்படியாவது நிர்வாகிகள் நியமனத்தை நடத்திவிட வேண்டும்’ என்கிற நெருக்கடியில் ஒவ்வோர் அணியினரும் மற்ற அணி நிர்வாகிகளுக்குத் தூண்டில் போட்டிருக்கிறார்கள். ‘அங்கே இருந்தா மாவட்ட துணைச் செயலாளர் பதவிதான். இங்கே வந்தா, மாவட்டத் தலைவர் பதவியே தர்றோம்’ என வலைவீசி வருகிறார்களாம் இதர அணி நிர்வாகிகள்” என்ற கழுகாருக்குச் சூடாக பாதாம் பாலை நீட்டினோம். பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“அமைச்சர் மூர்த்தி, தன் மகனுக்கு நடத்திய பிரமாண்ட திருமணத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சூழலில், அதைவிட பிரமாண்டமாகத் தன் மகள் திருமணத்தை நடத்த தீவிரமாகியிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். பத்திரிகை வைப்பதற்காகத் தன்னிடம் அவர் வந்தபோதே, ‘திருமணத்தை சிம்பிளாக நடத்தி முடியுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ‘சரிண்ணே... சரிண்ணே...’ எனத் தலையை ஆட்டிவிட்டு வந்த உதயகுமார், மதுரை திருமங்கலம் அருகே அவர் கட்டியிருக்கும் ஜெயலலிதா கோயில் வளாகத்தில், திருமணவிழாவை மாநாடுபோல நடத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். ‘இந்த ஏற்பாடுகளுக்கு இவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது?’ என மதுரை கரைவேட்டிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தவுடன், ‘இது சமூக சமத்துவ திருமண விழா. ஜெயலலிதா பேரவை நடத்துகிறது. இதற்கு நாங்கள் செலவு செய்யவில்லை. கட்சி நிர்வாகிகளிடம் நிதி வாங்கி நடத்துகிறோம்’ என்று வித்தியாச விளக்கம் அளிக்கிறதாம் உதயகுமார் தரப்பு. ‘சொந்த மகள் திருமணத்தைக்கூட சொந்தமாக நடத்த முடியாத அளவுக்கு ஏழையா உதயகுமார்?’ என்று சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கிண்டலடிக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்...’ - பன்னீரின் புத்தாண்டு ஆஃபர்...

“அதுசரி. பன்னீர் அணியில் புத்தாண்டு ‘ஆஃபர்’ கொடுக்கப்படுகிறதாமே. விசாரித்தீர்களா?”

“பெரிய ஆஃபர்தான். ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற லெவலுக்கு, தன் அணியிலுள்ளவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்குகிறார் பன்னீர். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கான நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். அதில், மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்பட்ட ஜோசப் பர்ணான்டோ என்பவருக்கு மாநகரக் கிழக்குப் பகுதிச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோலத்தான், பல மாவட்டங்களில் ஒரே நபருக்கு இரண்டு, மூன்று பதவிகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு சகட்டுமேனிக்குப் பதவிகள் வாரி இறைக்கப்பட்டிருக்கின்றன. வரும் 21-ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டத்தையும் நடத்தவிருக்கிறார். விரைவில், பொதுக்குழுவுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்கிறார்கள். அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, தன்னுடைய அணியை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற முடிவிலேயே இந்த நியமனங்களை அவர் வாரி வழங்குவதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகார்...

“ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா யாத்திரை’ வரும் 24-ம் தேதி டெல்லிக்குள் நுழைகிறது. அந்தச் சமயத்தில், தன்னுடன் யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு, ராகுல் காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். தேர்தல் வியூக வகுப்பாளர் ஒருவரின் ஆலோசனைப்படிதான் இப்படியொரு கடிதம் எழுதினாராம் ராகுல். அதை ஏற்றிருக்கும் கமல், ‘மக்கள் நீதி மய்யம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்’ எனக் கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். ‘டெல்லியில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ம.நீ.ம நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் - ம.நீ.ம கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. எங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான்’ என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள் ம.நீ.ம கட்சிக்காரர்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

மிஸ்டர் கழுகு: ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்...’ - பன்னீரின் புத்தாண்டு ஆஃபர்...

மகிழ்ச்சியில் நஞ்சப்பா சத்திரம் மக்கள்!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கான, நலத்திட்ட உதவிகள் அமல்படுத்தப்படாதது குறித்து, ‘முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கிய ₹2.5 கோடி எங்கே?’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் கட்டுரை வெளியாகியிருந்தது. இதையடுத்து 17.12.2022 அன்று, நஞ்சப்பா சத்திரம் கிராமத்துக்கு வருகைதந்த அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, முதற்கட்டமாக 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள்.