அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜெயிலுக்குள்ள உட்கார முடியாது! - நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி... கைவிட்ட டாடி...

அ.தி.மு.க கிறிஸ்துமஸ் விழா
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க கிறிஸ்துமஸ் விழா

தருமபுரி ஆள் இழுப்பு விவகாரத்தைத்தானே சொல்கிறீர்... சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தி.மு.க-வில் ஐக்கியமானார் அல்லவா...

வழக்கமாக கழுகார்தான் ‘பொடி’வைத்து பேச்சை ஆரம்பிப்பார். இம்முறை கழுகார் நுழைந்ததும், “ஒரு கதை சொல்லட்டுமா?” என்று கேட்டோம். “ஹா ஹா ஹா...” என்று சிரித்தபடியே “எதைப் பற்றிக் கேட்க வருகிறீர்கள் என்பது தெரியாதா!” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“டிசம்பர் 20-ம் தேதி அ.தி.மு.க சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. பன்னீர், எடப்பாடி இருவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் குட்டிக் கதை ஒன்றைச் சொன்னார் பன்னீர்... ‘தவறு செய்தவர்கள் தவற்றை உணர்ந்து திருந்திய பின்னர் அவரை நம்முடன் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை’ என்பதே அந்தக் கதையின் சாராம்சம். அதாவது, சசிகலாவை கட்சிக்குள் மீண்டும் கொண்டுவருவதில் தவறில்லை என்றரீதியில்தான் பன்னீர் அப்படிப் பேசியதாகச் சொல்கிறார்கள். சில வாரங்களாக சசிகலா விஷயத்தில் அடக்கியே வாசித்த பன்னீர், மீண்டும் எடப்பாடி முன்னிலையிலேயே இப்படிப் பேசியிருப்பது கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதே பாணியில் தமிழக பா.ஜ.க தலைவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். ‘அனைத்து நல்ல தலைவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்; அ.தி.மு.க பலமாக இருக்க வேண்டும்’ என்று அவர் பேசியிருக்கிறார். இதுவும் சசிகலாவை மனதில் வைத்தே சொல்லப்பட்ட கருத்தாம்!”

மிஸ்டர் கழுகு: ஜெயிலுக்குள்ள உட்கார முடியாது! - நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி... கைவிட்ட டாடி...

“என்னே ஓர் அக்கறை... அதிருக்கட்டும், அண்ணாமலையால் அமைச்சர் ஒருவர் அப்செட்டில் இருக்கிறாராமே?”

“அதை ஏன் கேட்கிறீர்... வலியச் சென்று வம்பில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி. சமீபத்தில் கிருஷ்ணகிரிக்குச் சென்ற காந்தியிடம் செய்தியாளர்கள், அண்ணாமலை பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். திடீரென்று எமோஷனலான காந்தி, ‘அவன்... இவன்...’ என்று அண்ணாமலையை ஒருமையில் விளாசிவிட்டார். இந்த வீடியோ வைரலானதால், பா.ஜ.க-வினர் கொந்தளித்துவிட்டார்கள். சில நாள்களுக்கு முன்பு வேலூருக்கு வந்திருந்த ஹெச்.ராஜா, ‘கள்ளச்சாராயம் காய்ச்சிக்கிட்டிருந்த காந்தி, இப்போ கைத்தறித்துறை அமைச்சர். அவர் வேற எப்படிப் பேசுவாரு!’ என்று பழைய கதையைத் தோண்ட... அந்த வீடியோ இப்போது வைரலாகிவருகிறது. ‘இதெல்லாம் தேவையா?’ என்று தி.மு.க நிர்வாகிகள் அமைச்சரிடமே கேட்க, அப்செட்டில் இருக்கிறார் காந்தி.”

காந்தி
காந்தி

“தி.மு.க-வில் வடக்குப் பக்கமும் ஆள் இழுக்கும் படலம் தொடங்கிவிட்டதே!”

“தருமபுரி ஆள் இழுப்பு விவகாரத்தைத்தானே சொல்கிறீர்... சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தி.மு.க-வில் ஐக்கியமானார் அல்லவா... தருமபுரியில் அ.தி.மு.க ஆட்களை ‘ஹைஜாக்’ செய்ய வேண்டும் என்பதே அவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டாம். அதன்படி அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாம். இதையடுத்து அந்த இருவரும் சமீபத்தில் பசுமைத்துறையை கவனிக்கும் அமைச்சரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். விரைவில் சட்டமன்றத்தில் தனி ஆவர்த்தனம் நடந்தாலும் ஆச்சர்யமில்லை!”

“தமிழக உளவுத்துறையில் வீசிய புயல் பற்றித் தகவல் கேள்விப்பட்டீரா?”

“கடந்த மாதம் கேரளாவில் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், துப்பாக்கி உள்ளிட்டவற்றைக் கடலோர காவல்படை பறிமுதல் செய்தது. அந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து, சபேசன் என்பவரைக் கைதுசெய்தது. ஆனால், என்.ஐ.ஏ சபேசனைக் கைதுசெய்வதற்கு முன்பே, சென்னை ‘க்யூ’ பிரிவின் ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த சரவணக்குமார் என்பவர் அவரை விசாரித்திருக்கிறார். ஆனால், சபேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சரவணக்குமார் விடுவித்துவிட்டார் என்று என்.ஐ.ஏ., தமிழக காவல்துறைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. மேலும், ‘தமிழக உளவுத்துறையின் முக்கிய அங்கமான ‘க்யூ’ பிரிவில் மூவ் செய்யப்படும் பல விவகாரங்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்குக் கசிந்துவிடுகின்றன’ என்கிறரீதியில் என்.ஐ.ஏ அந்த ரிப்போர்ட்டில் சொல்ல... ஆடிப்போயிருக்கிறது டி.ஜி.பி அலுவலகம்.”

“துப்புக்கூலி விவகாரம் என்று சொல்லும்...”

“அதேதான்... இது தொடர்பாக இரண்டு நாள்கள் தொடர் விசாரணை மேற்கொண்ட தமிழக காவல்துறை உயரதிகாரிகள், சரவணக்குமாரை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பிரிவுக்கு மாற்றியிருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்தபோது அவர்மீது பல்வேறு புகார்கள் எழுந்திருக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கும் இதேரீதியில் தகவல் பரிமாற்றம் நடந்திருக்கிறதாம். இந்தக் குளறுபடிகளைத் தவிர்க்க உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் பின்னணியை அலசி ஆராய ஆரம்பித்துள்ளார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஜெயிலுக்குள்ள உட்கார முடியாது! - நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி... கைவிட்ட டாடி...

“தமிழக போலீஸுக்குத் தண்ணி காட்டுகிறாரே மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?”

“ஆமாம்... ஆமாம். கேரளா, குற்றாலம், பெங்களூரு, திருப்பதி என்று பாலாஜியைத் தேடி அலைகின்றன எட்டு தனிப்படைகள். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 3 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அவர்மீது பதிவுசெய்யப்பட்ட மோசடி வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காததால் டெல்லியின் உதவியை நாடியிருக்கிறது பாலாஜி தரப்பு. ‘ஜெயிலுக்குள்ள எல்லாம் உட்கார முடியாது... நீங்க சொன்னீங்கன்னா பா.ஜ.க-வுல சேரவும் தயார்’ என்று பாலாஜி தரப்பிலிருந்து நூல்விட்டிருக்கிறார்கள். ஆனால், நூலை அறுத்துவிட்டது டெல்லி என்கிறார்கள். ‘மோசடிப் புகாரில் சிக்கிய ராஜேந்திர பாலாஜியைக் கட்சியில் இணைத்தால் தேவையற்ற விமர்சனங்கள் வரும்; பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியிலும் சர்ச்சை ஏற்படும்’ என்று காரணம் சொன்னதாம் டெல்லி!”

“ஓ மை காட்... டாடியும் கைவிட்டுவிட்டார் என்று சொல்லும்!”

“இன்னும் இருக்கிறது கேளும்... இதையடுத்து, அ.தி.மு.க தலைமையிடமும் உதவி கேட்டுள்ளார் பாலாஜி. ஆனால், தலைமையும் ‘ஊஹூம்’ சொல்லிவிட்டதாம். நொந்துபோனவர், ஆளும் தரப்புக்கும் தூதுவிட்டுள்ளார்... அவர்களோ, ‘ஏற்கெனவே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களைக் கைதுசெய்யலைன்னு எங்களை போட்டுத் தாக்குறாங்க... ஜெயிலுக்குப் போனப்புறம் ஜாமீன் வாங்கிக்கோங்க’ என்கிறரீதியில் தகவல் சொல்ல... மொத்த போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாம் பாலாஜி தரப்பு. அதேசமயம், எந்த நேரமும் அவர் கைதுசெய்யப்படலாம் என்கிறது காவல்துறையின் உளவுப் பட்சி!”

மிஸ்டர் கழுகு: ஜெயிலுக்குள்ள உட்கார முடியாது! - நூல்விட்ட ராஜேந்திர பாலாஜி... கைவிட்ட டாடி...

“ஆபாச வீடியோ விவகாரம் ஒன்றில் ஆளும் தரப்பு தலைகள் அடிபடுகின்றனவே?”

“சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா என்பவர் சிலருடன் நெருக்கமாக இருக்கும் வில்லங்க வீடியோவை வைத்து பிளாக்மெயில் செய்த விவகாரத்தில், கார்த்தி என்பவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சங்கதியும் உள்ளது. திருப்பூர் மாவட்ட தி.மு.க இளைஞரணிப் பொறுப்பில் இருக்கிறார் கார்த்தி. ‘பவர்ஃபுல்’ அமைச்சர் ஒருவருக்கும் கார்த்தி வேண்டப்பட்டவர் என்று சொல்லப்படும் நிலையில், வீடியோவில் சிக்கிய தொழிலதிபர் ராஜா ‘பாசமான’ அமைச்சருக்கு நெருக்கமாம். கடைசியில் இந்த விவகாரம் சித்தரஞ்சன் சாலைக்கே செல்ல... ஏகத்துக்கும் சூடாகிவிட்டாராம் முதன்மையானவர். அதன் பிறகே கார்த்தியைக் கைதுசெய்துள்ளார்கள்” என்ற கழுகாருக்கு தேன் குழல் முறுக்கு கொடுத்தோம்.

“ஆஹா... அற்புதம்” என்று சுவையை சிலாகித்தபடியே தொடர்ந்தார் கழுகார்... டிசம்பர் 17 அன்று அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசைக் கண்டித்து மாநில அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னையிலுள்ள கட்சிரீதியான எட்டு மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து பெருங்கூட்டத்தைக் காட்டலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நான் தனியாக என் மாவட்டத்தில் நடத்திக்கொள்கிறேன்’ என்று ஒதுங்கிக்கொள்ள... அவரைப் பார்த்து அசோக், ஆதிராஜாராம் ஆகிய இரு மா.செ-க்களும் ஒதுங்கிவிட்டார்கள். கடைசி நேரத்தில் நான்கு மா.செ-க்கள் மட்டுமே ஒன்றாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ‘மணக்கும்’ மூத்த அதிகாரி ஒருவர், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்த பில்களை க்ளியர் செய்வதற்கு ஆறு பர்சன்ட் வரை எதிர்பார்ப்பதால், அரண்டுபோயிருக்கிறார்கள் உபகரண உற்பத்தியாளர்கள்.

* தமிழக காவல்துறையில் 41 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான ஃபைல் ஒன்று கடந்த ஒரு மாதமாக அலைக்கழிப்பில் இருக்கிறது. அமைச்சர்கள், உச்ச அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் மாறி மாறி சிபாரிசு செய்வதால், அந்தரத்திலேயே பந்தாடப்படுகிறது ஃபைல்!

அரசுக்கு இழப்பு... கிடப்பில் ஃபைல்!

அறுபடை நகர் ஒன்றின் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2019-ல் தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான சொத்து கைமாறியதில் முறைகேடு நடந்திருக்கிறது. இதனால், அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும், அந்த ஃபைல் கிடப்பில் இருக்கிறதாம். காரணம், அன்றைக்குத் துறைக்குப் பொறுப்பாக இருந்த வெளிச்சமான அதிகாரிதான் என்கிறார்கள்.