Published:Updated:

மிஸ்டர் கழுகு: தி.மு.க எம்.பி-யின் தனிநபர் துதி! - முகம் சுளித்த மூத்த எம்.பி-க்கள்...

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்

நீர் கேட்பது புரிகிறது... எடப்பாடிக்குத் தனி உதவியாளராக இருந்த மணி என்பவரைக் கைதுசெய்துள்ளது காவல்துறை.

கழுகார் என்ட்ரி கொடுத்தபோது நாடாளுமன்றத்தில் தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்ற ‘லைவ்’ காட்சி டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்தவர், “ம்ம்... என்னவென்று சொல்வது? நாடாளுமன்றத்தைக் கட்சிப் பொதுக்கூட்ட மேடை என்று நினைத்துவிட்டார்போல! கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, ‘வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி...’ என்று கோஷம் எழுப்பியதை தி.மு.க சீனியர்களாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. சுயமரியாதைக்குச் சொந்தக்காரர்கள் தாங்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க-வில் நாடாளுமன்றத்திலேயே தனிநபர் துதி பாடியதைக் கண்டு மூத்த எம்.பி-க்கள் பலரும் முகம் சுளித்திருக்கிறார்கள். துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும் பட்டென்று, ‘நீங்கள் சொன்னது அவைக் குறிப்பில் சேர்க்கப்படாது; வெளியே சென்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்’ என்று பேசியிருக்கிறார். தேவையா இந்த சர்ச்சை...” என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்...

‘‘தமிழக காவல்துறை கோட்டைவிட்ட விஷயம் ஒன்று புயலைக் கிளப்பியிருக்கிறது. தென் கொரியாவைச் சேர்ந்த சோ ஜே வோன், சோய் யுங் சுக் இருவரும் இங்கு நிறுவனம் நடத்தி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாக, 2019-ல் கைதுசெய்யப்பட்டு திருச்சி ஸ்பெஷல் கேம்ப்பில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இருவரும் தங்களை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டுமென்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களும் விடாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய... தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்தது. அதன்படி செங்கல்பட்டு அருகே ஒரகடத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது மாடியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் போடப்பட்டிருந்தது. அங்கிருந்துதான் இருவரும் தப்பிவிட்டார்கள்.”

மிஸ்டர் கழுகு: தி.மு.க எம்.பி-யின் தனிநபர் துதி! - முகம் சுளித்த மூத்த எம்.பி-க்கள்...

‘‘அச்சச்சோ... வெளிநாட்டு விவகாரம் ஆயிற்றே!”

“ஆமாம்... கடந்த அக்டோபர் 29-ம் தேதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ஜன்னல் வழியாகத் தப்பித்துவிட்டார்கள். மறுநாள் காலை விஷயம் தெரிந்து பரபரப்பாகவே... விஷயம் லீக் ஆகாமல் போலீஸார் ரகசியமாக விசாரித்திருக்கிறார்கள். இதில் இருவரும் சென்னையிலிருந்து பெங்களூர் - கொல்கத்தா - மணிப்பூர் சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மியான்மர் - இந்தோனேசியா வழியாக தென்கொரியாவுக்குச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. இது பற்றி மேலிடத்தில் சொல்லி போலீஸார் கையைப் பிசைய... டெல்லி உள்துறையிலிருந்து அழைத்து கண்டிப்பு காட்டியிருக்கிறார்கள். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தூதரகரீதியிலான உதவியை மத்திய அரசிடம் தமிழக காவல்துறை கேட்டிருக்கிறது. விவகாரம் பெரிய அளவில் வெடிக்கலாம்!”

‘‘பல ஆண்டுகளாக அமுக்கப்பட்டிருந்த இன்னொரு விவகாரமும் வெடிக்கப் போகிறதாமே?’’

‘‘ஆமாம்... தென் மாவட்டத்தைச் சேர்ந்த மோதிரத்துக்குப் புகழ்பெற்ற தலைவரின் ‘கனி’வான வாரிசு நகர்ப்புறத் தேர்தலில் போட்டியிடுவற்காக ஒரு பேரூராட்சியைத் தேர்வுசெய்து, அங்கு தீவிரமாகக் கட்சிப் பணிகளைச் செய்துவந்தார். ஆனால், அதே மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஐ.பி ஒருவர், தனக்கும் மோதிரத் தலைவருக்கும் இருந்த பழைய பஞ்சாயத்தை மனதில் வைத்துக்கொண்டு வாரிசுக்கு வாய்ப்பளிக்கப்போவதில்லை என்று ஓப்பனாகச் சொல்லிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாரிசு நபர், வி.ஐ.பி-க்கு செக் வைக்கும்விதத்தில் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த வி.ஐ.பி-யின் குடும்பப் பெண் வாரிசு, இளைஞர் ஒருவரைக் காதலித்து அது பிரச்னையானது. ஒருகட்டத்தில் அந்த இளைஞர் சென்னையின் பசுமையான சாலையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தை அப்போது அமுக்கிவிட்டார்கள். அதைக் கையிலெடுத்துள்ள ‘கனி’வான வாரிசு, காவிக் கட்சித் தலைமைக்கு ஆதாரத்தோடு போட்டுக்கொடுத்துவிட்டார். இந்த விவகாரமும் விரைவில் வெடிக்கும் என்கிறார்கள்!”

‘‘கேரளாவுக்குச் சென்றிருக்கிறாரே மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்?’’

மிஸ்டர் கழுகு: தி.மு.க எம்.பி-யின் தனிநபர் துதி! - முகம் சுளித்த மூத்த எம்.பி-க்கள்...

‘‘கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண், விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அவர் சொல்லி வெளிநாடுகளில் பணம் முதலீடு செய்திருப்பதாகவும் கேரளா அமலாக்கப் பிரிவில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் கொச்சி அமலாக்கப் பிரிவு விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. நவம்பர் 29 காலை கொச்சி அமலாக்கப் பிரிவில் ஆஜரான விஜயபாஸ்கர், தனது தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். விஜயபாஸ்கர் தரப்பிலிருந்தும் ஷர்மிளாவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரவிருக்கிறார்களாம்’’ என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீயை அளித்தோம். அதைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘டிசம்பர் 1-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு கூடுகிறது. கடந்த வாரம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கலகத்தைத் தொடர்ந்து, செயற்குழுவில் உட்கட்சித் தேர்தல் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கிறார்கள். அதோடு கட்சி விதிகளில் மூன்று திருத்தங்களைக் கொண்டுவரவும் ஆலோசனை நடக்கவிருக்கிறது. பழைய வழிகாட்டுதல் குழுவை கலைத்துவிட்டு, புதிதாக பதினெட்டு பேர்கொண்ட குழுவை அமைக்கவும் ஆலோசனை நடக்கும் என்கிறார்கள். விரைவில் பொதுக்குழுவைக் கூட்டவேண்டியிருப்பதால் அது பற்றியும் விவாதிக்கப்படுமாம். ஆனால், பொதுக்குழுவைக் கூட்டினால், சசிகலா தரப்புக்கு ஆதரவாக ஏதும் கலகம் வெடிக்குமோ என்ற எண்ணமும் எடப்பாடி தரப்பிடம் உள்ளது. இன்னொரு பக்கம், வைத்திலிங்கம் ஏற்கெனவே சசிகலா தரப்புடன் இணக்கமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்போது அவர் முக்குலத்தோர் சமூகக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருப்பதும் எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

“எடப்பாடிக்கு அதுமட்டும்தானா அதிர்ச்சி?”

“நீர் கேட்பது புரிகிறது... எடப்பாடிக்குத் தனி உதவியாளராக இருந்த மணி என்பவரைக் கைதுசெய்துள்ளது காவல்துறை. வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு மாதம் முன்பே வழக்கு பதிவு செய்திருந்தது காவல்துறை. இதையடுத்து தலைமறைவாக இருந்த மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 28-ம் தேதி அதிகாலை சேலத்திலிருக்கும் தனது வீட்டுக்கு வந்தவரைக் கைதுசெய்துள்ளது போலீஸ். மணியிடம் நடத்தப்படும் விசாரணையில் எடப்பாடிக்கு எதிரான விவகாரங்கள் சிக்கலாம் என்கிறார்கள்.”

“மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கும், கே.என்.நேருக்கும் அப்படி என்னதான் பிரச்னை?”

‘‘பெரிதாக ஒன்றுமில்லை... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியை சி.பி.எம் எதிர்பார்க்கிறதாம். ஆனால், அங்கு போட்டியிட தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் தயாராகிவரும் நிலையில், சி.பி.எம் அதற்கு இடையூறாகிவிடக் கூடாது என்று அந்த மாவட்ட உடன்பிறப்புகள் பலரும் தலைமையிடம் முறையிட்டிருக்கிறார்கள். அப்படித்தான் நேருவிடமும் சு.வெங்கடேசன் பற்றிச் சில உடன்பிறப்புகள் பற்றவைத்திருந்த நிலையில், எதிர்பாராத இடத்தில் அது நேருவின் உள்ளத்திலிருந்து வெடித்துவிட்டது என்கிறார்கள்” என்று கிளம்பத் தயாரானவர்,

“உமது நிருபருக்கு எமது பாராட்டைச் சொல்லும்... ‘தி.நகர் எம்.எல்.ஏ பெயரில் வசூல்வேட்டை! திண்டாடும் சிறு வியாபாரிகள்...’ என்ற தலைப்பில் 28.11.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில், எம்.எல்.ஏ கருணாநிதி பெயரைச் சொல்லி சிலர் நடைபாதை வியாபாரிகளிடம் வசூல்வேட்டை நடத்துவது பற்றி எழுதியிருந்தீர் அல்லவா... இந்நிலையில், தி.நகர் கிழக்குப் பகுதி 36-வது வட்டச் செயலாளர் பி.மாரி, 141-வது வட்டச் செயலாளர் கோ.உதயசூரியன் இருவரையும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது கட்சித் தலைமை. இந்தக் காரணத்தை சொல்லாவிட்டாலும், இதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: தி.மு.க எம்.பி-யின் தனிநபர் துதி! - முகம் சுளித்த மூத்த எம்.பி-க்கள்...

பதற்றத்தில் வேலுமணி!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தலைக்கு மேல் கத்தியாக வழக்குகள் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் 27 அன்று வேலுமணியை போலீஸ் கைதுசெய்யப்போவதாகத் தகவல் பரவியது. பதறிப்போன வேலுமணி நவம்பர் 26-ம் தேதியே பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ‘எடப்பாடியின் கடந்த நான்காண்டு ஆட்சிக்கு நான்தான் உறுதுணையாக இருந்தேன். அதனால், என் மேல்தான் முதல்வர் ஸ்டாலினுக்குக் கோபம் அதிகம். நான் அரசியலில் இருக்கவே கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதற்காகவே என்னைக் கைதுசெய்யப் பார்க்கிறார்கள்” என்று படபடவெனக் கொட்டித் தீர்த்திருக்கிறார். ஆனால் ஆளும் தரப்போ, பொங்கலுக்குப் பிறகு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறதாம்!