Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

உதயநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, ஸ்டாலின்

ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் களேபரங்கள் தொடங்கிவிட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் தொடர்வது கடினம் என்று அறிவாலயத்தில் முணுமுணுப்பு ஆரம்பித்துவிட்டது

மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் களேபரங்கள் தொடங்கிவிட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் தொடர்வது கடினம் என்று அறிவாலயத்தில் முணுமுணுப்பு ஆரம்பித்துவிட்டது

Published:Updated:
உதயநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, ஸ்டாலின்

கேபினுக்குள் என்ட்ரி கொடுத்த கழுகார், உரிமையோடு லேப்டாப்பை தனது பக்கம் திருப்பி கவர் ஸ்டோரியை பொறுமையாக வாசித்தார். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். அவ்வளவு அவசரம்... கவர் ஸ்டோரியில் இல்லாத அ.தி.மு.க தகவல்கள் சில என்னிடமும் இருக்கின்றன” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“அ.தி.மு.க செயற்குழு முடிந்த மறுதினமே உட்கட்சித் தேர்தலை அறிவித்ததற்குக் காரணம் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக வந்தால், தனது தலைமைக்குச் சிக்கல் இன்னும் அதிகரித்துவிடும் என்று கணக்கு போட்டே எடப்பாடி இந்த முடிவை எடுத்து, பன்னீரிடமும் பக்குவமாகப் பேசி சம்மதிக்கவைத்தாராம். இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கில் தனக்குச் சிக்கல் ஏற்பட்டாலும், பதவிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு என்கிறார்கள். இதற்கிடையே செயற்குழு நடந்த அதே டிசம்பர் 1-ம் தேதியன்று மாலை பெங்களூரு புகழேந்தி, டெல்லியில் தேர்தல் கமிஷனரைச் சந்தித்து, ‘ஏற்கெனவே எடப்பாடி, பன்னீர் தரப்பினருக்கு இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்குக் கொடுத்திருக்கும் அனுமதியை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்’ என்று மனு கொடுத்திருக்கிறார். கூடவே, ‘கடந்த நான்கு வருடங்களில் கட்சியின் நிர்வாகத்தைத் தவறாக வழிநடத்தினார்கள். தேர்தல் கமிஷன் தந்த அனுமதியையும் தவறாகப் பயன்படுத்தினார்கள்’ என்று சில ஆதாரங்களையும் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!
மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

“அது சரி... மாஜி அமைச்சர் குறித்த சர்ச்சையைக் கேள்விப்பட்டீரா?’’

“ம்ம்... அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான உடுமலை ராதாகிருஷ்ணன் படத்தைப் போட்டு, ‘உடுமலை நாயகரே வருக... வருக...’ என்று உதயசூரியன் சின்னம், தி.மு.க கொடி, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் படங்களையெல்லாம் போட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டனர். தொடர்ந்து, அன்வர் ராஜா அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட அன்றே உடுமலை ராதாகிருஷ்ணனும் அ.தி.முக-விலிருந்து நீக்கப்பட்டதாக பன்னீர், எடப்பாடி கையெழுத்துடன் ஓர் அறிக்கை வெளியானது. சில மணி நேரத்துக்குப் பிறகு அது போலி என்று அ.தி.மு.க ஐடி விங் அறிவித்தது. இதையடுத்து டிசம்பர் 2-ம் தேதி மதியம் உடுமலை ராதாகிருஷ்ணன் தரப்பில் ‘அ.தி.மு.க லெட்டர்பேடு போல போலியாகத் தயார் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து அருண்பிரசாத் என்பவரை போலீஸ் கைதுசெய்துள்ளது. இதையெல்லாம் கூட்டிக்கழித்து கணக்கு போடும் கட்சி நிர்வாகிகளோ, ‘நெருப்பில்லாமல் புகையுமா? உள்ளுக்குள் என்னமோ நடந்திருக்கிறது’ என்று கண்சிமிட்டுகிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

“அறிக்கையைவைத்து ஆழம் பார்க்கிறார்கள் என்று சொல்லும்!”

“அடுத்த விஷயத்துக்கு வருகிறேன்... ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் களேபரங்கள் தொடங்கிவிட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் தொடர்வது கடினம் என்று அறிவாலயத்தில் முணுமுணுப்பு ஆரம்பித்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை, கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் வேண்டும் என்று காம்ரேடுகள் இப்போதே துண்டுபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அந்த மூன்று மாநகராட்சிகளின் ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார்கள். ‘உள்ளாட்சித் தேர்தலிலும் அவர்களை எதற்காகத் தூக்கி சுமக்க வேண்டும்?’ என்று தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகளே ஸ்டாலினிடம் போட்டுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். போதாத குறைக்கு காங்கிரஸ் கட்சியும் மேயர் பதவியில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து, ‘கொடுப்பதை வாங்கிக்கொண்டால் கூட்டணி... இல்லாவிட்டால் தனித்தே களம் காண்போம்’ என்கிற முடிவை எடுக்கப்போகிறதாம் அறிவாலயம்!”

“ஒப்பந்ததாரர் ஒருவர் தெறித்து ஓடிய கதை தெரியுமா?”

“கதையல்ல நிஜம்... வடமாவட்டம் ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டது. இன்ஷியல் அமைச்சரின் துறைக்குள் நடந்த அந்த டெண்டரை எடுக்க, சிலர் மட்டுமே முன்வந்துள்ளனர். அமைச்சர் தரப்பில் சில கண்டிஷன்களை வைக்கவே... அனைவரும் பின்வாங்கிய நிலையில், ஒருவர் மட்டுமே டெண்டர் எடுக்க முன்வந்திருக்கிறார். அதன் பிறகு அந்த கண்டிஷன்களுடன், அமைச்சர் தரப்பு கேட்ட ஸ்வீட் பாக்ஸைக் கேட்ட அந்த நபர் ஆடிப்போய்விட்டாராம். ‘இதோ வீட்டுக்குச் சென்று எடுத்துவருகிறேன்’ என்று சொன்ன அந்த நபர் அதன் பிறகு அமைச்சர் இருந்த திசைப் பக்கம்கூட திரும்பவில்லை. கடைசிவரைக்கும் காத்திருந்த அமைச்சர் தரப்பு, வேறு யாரும் டெண்டர் எடுக்க முன்வராததால் டெண்டரையே ஒத்திவைத்திருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

“சபாநாயகர் மீதே வில்லங்கம் கிளம்பியுள்ளதே!”

“ஆமாம். தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அப்பாவு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம், ‘அப்பாவு மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்புங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அப்பாவு மீது கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் அவர்மீது நில அபகரிப்பு புகார் வந்திருப்பது கட்சித் தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.”

“வடகிழக்குப் பருவமழைக்குப் போட்டியாக ‘அன்பு’ மழை பொழிந்ததைக் கவனீத்தீரா?”

“கவனித்தேன்... கவனித்தேன்... ‘உதயநிதி அமைச்சராக வேண்டும்’ என்கிற அன்பில் மகேஷ் வைத்த கோரிக்கையைத்தானே சொல்கிறீர்கள்... தனது பிறந்தநாள் அன்று அவர் இதைச் சொல்லியிருக்கா விட்டால்தானே ஆச்சர்யம். ‘நண்பேன்டா’ ரோலை அவர் மிக நன்றாகவே செய்கிறார். எல்லாம் ஏற்கெனவே சித்தரஞ்சன் சாலையில் எழுதி முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் என்கிறார்கள். முதன்மையானவர் தரப்பில் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்ட நிலையில், உதயநிதியின் கால்ஷீட்டுக்காகத்தான் கட்சியே வெயிட்டிங்காம். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் சினிமா ஷூட்டிங்கில் பிஸி என்பதால், அதன் பிறகுதான் இந்த ஷூட்டிங்குக்கு நேரம் கொடுப்பார் என்கிறார்கள்.”

“அப்படியென்றால் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது என்று சொல்லும்!”

“சினிமாவைத்தானே சொன்னீர்... நம்பிவிட்டேன். சரி, சினிமாவை மிஞ்சும் சில காட்சிகளை நான் சொல்கிறேன். தனது பிறந்தநாளை முன்னிட்டு அன்பில் மகேஷ் டிசம்பர் 2-ம் தேதியன்று அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கே சென்று ஆசி வாங்கியிருக்கிறார். இதையடுத்து, எதிரும் புதிருமாக நிற்கும் இருவரின் ஆதரவாளர்களும் ஜெர்க் ஆகியிருக்கிறார்கள். அடுத்ததாக முதல்வரிடமும் ஆசி வாங்கிவிட்டு, தனி விமானம் ஏறி ஷீரடி சாய்பாபாவை தரிசிக்கச் சென்றுவிட்டார் அன்பில். முதல்வர் மனைவியின் அன்புக்கட்டளையாம் இது!”

“அட... டைட்டில் தயாராகிவிட்டதே...” என்ற நமது கமென்ட்டைக் கண்டுகொள்ளாத கழுகார், “உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். ஜனவரி இறுதியில் என்று முதலில் சொன்னவர்கள், இப்போது பிப்ரவரி என்கிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையே பொங்கல் பரிசாக அறிவித்துவிட்டு, தேர்தலைச் சந்திக்கலாம் என்று சில மூத்த அமைச்சர்கள் முதல்வரிடம் சொல்லியிருக் கிறார்கள். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனோ, ‘நிதி நிலைமை தெரிஞ்சுதான் பேசுறீங்களா?’ என்று டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘ஏற்கெனவே அறிவித்த திட்டங்களுக்கே நிதியில்லை. இதற்கு எங்கே போவது?’ என்பது அவரது கவலை. இதையடுத்து, கடன் வாங்கியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாமா என்று யோசித்துவருகிறது முதல்வர் அலுவலகம்” என்ற கழுகாருக்கு சூடாக மசால் டீயை நீட்டினோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்...

“விரைவில் மின்வாரியத்தில் டிஜிட்டல் மீட்டர் டெண்டர் விடப்போகிறார்கள். போக்கு வரத்துத்துறையிலும் ‘நிர்பயா’ திட்ட நிதியின்கீழ் பேருந்துகளுக்கு சிசிடிவி கேமராக்களை கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேற்கண்ட டெண்டர்களை தனியாருக்குக் கொடுக்காமல் அரசு நிறுவனமான ‘எல்காட்’டுக்குக் கொடுத்தால் கமிஷன் சச்சரவுகள் இல்லாமல், தரமான பொருள்களைக் கொள்முதல் செய்யலாம் என்று அரசுக்கு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தரப்பு ஆலோசனை கொடுத்திருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? - உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

உதவ மறுத்த வி.வி.ஐ.பி... வெங்கடாசலம் தற்கொலை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவுசெய்திருந்த நிலையில், அவரை இன்னும் சில நாள்களில் கைதுசெய்யத் திட்டமிட்டிருந்ததாம். இதையறிந்த வெங்கடாசலம், தன் தூரத்து உறவினரான எதிர்க்கட்சி வி.வி.ஐ.பி ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், அந்த வி.வி.ஐ.பி-யே கட்சிப் பிரச்னைகள், வழக்குகள் என்று ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கிக்கொண்டிருப்பதால் வெங்கடாசலத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்கிறார்கள். இதனால் மனமுடைந்தவர், டிசம்பர் 2 அன்று தனது சென்னை, வேளச்சேரி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். “இந்த விவகாரம் இதோடு முடியாது... வெவ்வேறு கோணங்களில் பூதாகரமாக வெடிக்கும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* தமிழக வி.வி.ஐ.பி-யின் வாரிசு விரைவில் காலியாகவிருக்கும் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்கப்போகிறாராம். சிமென்ட் நிறுவன உரிமையாளரின் மகள் வகித்துவரும் அந்தப் பதவி, அடுத்த ஆண்டு காலியாகும் நிலையில் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்திருக்கிறது வாரிசுத் தரப்பு. எல்லாம் அந்த மத்திய அமைச்சரின் மகனுக்கு இணையாக வலம்வரும் திட்டம்தானாம்!

* `கோவை மேயர் பதவி எனக்கே எனக்கு’ என்று சொல்லிவருகிறாராம் அழகு நிலைய அம்மணி. எல்லாம் வடக்கு மாவட்ட அமைச்சர் கொடுக்கும் தெம்புதான் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism