Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘மேக் இன் தமிழ்நாடு’ - ரஜினியைச் செதுக்கும் மோடி!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

ரௌத்திரம் பழகும் எடப்பாடி

‘எந்திரா... எந்திரா...’ என்ற பாட்டொலி கேட்டுத் திரும்பினால், ‘எந்திரன்’ படத்தில் வரும் ‘சிட்டி ரோபோ’போல நடைபோட்டு மெள்ள உள்ளே நுழைந்துகொண்டிருந்தார் கழுகார்.

‘‘வாரும் வாரும்... ரஜினி பற்றிய செய்திகள்தான் இன்றைய ஆரம்பம். அப்படித்தானே?’’என்றபடி வரவேற்றோம்.

‘‘அதேதான். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், அதற்காக ரஜினிக்கு மேக்கப் போடும் வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளார் மோடி. ‘எந்திரன்’ படத்தில் ‘சிட்டி ரோபோ’ ரஜினியை, ‘விஞ்ஞானி வசீகரன்’ ரஜினி பார்த்துப் பார்த்துச் செதுக்குவார். அதற்கும் பல படிகள் மேலாக ரஜினியைச் செதுக்க ஆரம்பித்துள்ளார் மோடி.’’

‘‘ஓ... அரசியல் பயிற்சியோ!’’

‘‘அதுவும் சேர்த்துதான். ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வழிகளை முதலில் பா.ஜ.க பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. ரஜினியும் அவ்வப்போது தன் இணக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பெரியார் பற்றிய பேச்சு, வருமானவரித் துறை வழக்குகள் வாபஸ், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு, ‘தர்பார்’ படத்தில் நஷ்டம் என்று நெருக்கடி கொடுத்தவர்கள்மீது வருமானவரித் துறை அதிரடி என பரஸ்பரம் மாறி மாறிச் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘முன்பு, ‘என்மீது காவிச்சாயம் பூச முடியாது’ என்று பா.ஜ.க-வுக்கு எதிராகவே சீறியவராயிற்றே ரஜினி?’’

‘‘அது அந்த மாசம்... இது இந்த மாசம். அரசியல் அல்லவா... இன்னும் நிறைய அதிரடியான காட்சிகளைக் காணப்போகிறீர். அடுத்ததாக அ.தி.மு.க-வை ஓர் உலுக்கு உலுக்கப்போகிறார்களாம். அதாவது, ரஜினி தலைமையில் தேர்தலைச் சந்திப்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். ஆனால், அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமைகள் அதற்கு உடன்பட மறுத்துக்கொண்டே உள்ளன. அதனால், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளை, ‘ரஜினி ஆதரவு கோஷம்’ போடவைக்கும் வேலைகளை முதற்கட்டமாக கையில் எடுத்துள்ளனர்.’’

‘‘கில்லாடி ஐடியாவாக இருக்கிறதே!’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘முதலில் பா.ம.க-வை ரஜினியுடன் சேர்க்கப்போகிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டனவாம். தமிழருவி மணியன்கூட ‘பா.ம.க-வுடன் ரஜினி கூட்டணி அமைப்பார்’ என்று ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். இது, ரஜினிக்குத் தெரியாமல் நடந்ததல்ல என்கிறார்கள். ரஜினியின் கூட்டணிக்கணக்கில் பா.ம.க-வும் இடம்பெறும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இப்போது, அதை உறுதிப்படுத்தியுள்ளார் தமிழருவி மணியன்.’’

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

‘‘ஆக, சீக்கிரமே கட்சியைத் தொடங்கிவிடுவாரா ரஜினி?’’

‘‘ம்ஹூம்... இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. சின்னச் சின்னதான தயக்கங்கள் அவருக்குள் தடைபோட்டுக்கொண்டுள்ளன. அதேசமயம், அரசியலில் கால் வைத்தால் தி.மு.க-தான் தன் எதிரி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுவும் பா.ஜ.க-வின் பிளான்தான். ரஜினி தலைமையில் பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க,

த.மா.கா, விடுதலைச் சிறுத்தைகள் எனப் பல கட்சிகளையும் ஓரணியில் இணைத்து, பிரமாண்டமான கூட்டணியை உருவாக்குவதுதான் திட்டம்.’’

‘‘அ.ம.மு.க-வையெல்லாம் சேர்த்துக்கொள்வாரா ரஜினி?’’

‘‘ஏன், அ.தி.மு.க-வையே சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கும்போது, அ.ம.மு.க மட்டும் கசக்கவாபோகிறது. ‘யார் மீது என்ன குற்றச்சாட்டு இருந்தாலும், ரஜினிதான் தலைவர்; அவருக்காகத்தான் ஓட்டுகள் விழப்போகின்றன. மற்றவர்கள் எல்லோரும் பேருக்குத்தான். `ரஜினி’ என்கிற ஒரே மந்திரத்துக்காகத்தான் ஓட்டு. அவர்தான் அடுத்த முதல்வர்’ என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தமாகவே பேசுகிறார்கள்.’’

‘‘அப்படியென்றால், இத்தனை நாள்களாக மோடிக்கு விசுவாசம் காட்டிவந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீசெல்வம் ஆகியோரின் கதி?’’

‘‘அதற்குத்தான் இத்தனை நாள்களாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவிகளில் உட்கார வைத்து பிரச்னையில்லாமல் அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார்களே! எனவே, சொன்னதைக் கேட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால், இருக்கவே இருக்கின்றன ஊழல் வழக்குகள், வருமானவரித் துறை நடவடிக்கைகள். அதன் பிறகு

அ.தி.மு.க-வையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். ரஜினி தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டிய வேலையும் சுலபமாகிவிடும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஓ... இதெல்லாம் தெரிந்துதான் தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக உறும ஆரம்பித்துள்ளாரோ எடப்பாடி பழனிசாமி?’’

‘‘ஆம், கொஞ்சம் கொஞ்சமாக ரௌத்திரம் பழகத் தொடங்கியிருக் கிறார் என்றுகூட சொல்லலாம். ஏற்கெனவே, ஜெயலலிதாவுக்கும்மேலாக தன்னைத் தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்து விட்டார். எங்கு திரும்பினாலும், ‘எடப்பாடி ஐயா ஆட்சி’ என்ற குரல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு முன், தனிப்பெரும் தலைவனாக உருமாற்றிக்கொள்ளும் அத்தனை அஸ்திரங்களையும் கையில் எடுத்துவிட்டார். இத்தகைய சூழலில், ரஜினியை பா.ஜ.க முன்னிலைப்படுத்தும் விஷயம், இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற அளவுக்கு அவருடைய கோபத்தைக் கூட்டிவிட்டதாம். அதற்காகத்தான் பா.ஜ.க அரசின் சில திட்டங்களை எதிர்க்கவும் தயாராகிவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.’’

‘‘ஓ... புள்ளப்பூச்சிக்கும் கொடுக்கு முளைக்கிறதோ!’’

எடப்பாடியுடன் ஓ.பி.எஸ். - ஸ்டாலினுடன் எ.வ.வேலு
எடப்பாடியுடன் ஓ.பி.எஸ். - ஸ்டாலினுடன் எ.வ.வேலு

‘‘5 மற்றும் 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டது, டெல்டா பகுதி பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தடலாடியாக அறிவித்தது எல்லாம் அதன் பின்னணியில்தானாம். இதன்மூலமாக, ‘நான் யாருக்கும் அடிமை இல்லை’ என்று ஊருக்கு அறிவிக்க நினைக்கிறாராம் எடப்பாடி!’’

‘‘ஓஹோ...’’

‘‘சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி தரப்பினர் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘அவர்களுக்கு நாம் எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்பு தருகிறோம். அதற்குப் பலனாக அடிமை அரசு என்கிற அவப்பெயரையும் வாங்கியிருக்கிறோம். ஆனால், அவர்கள் ரஜினியைக் கொண்டுவந்து நமக்கே வில்லனாக்கப் பார்க்கிறார்கள். நாமும் சில அதிரடிகளைக் காட்டி, நாம் எவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்பதைப் புரியவைக்க வேண்டும்’ என்று சொன்னார்களாம். அதற்குப் பிறகுதான் அடுத்தடுத்து இந்த அறிவிப்புகள் வந்திருக்கின்றன.’’

‘‘பா.ஜ.க-வை எதிர்க்கும் தைரியம், உண்மையிலேயே எடப்பாடிக்கு வந்துவிட்டதா என்ன?’’

‘‘அந்தச் சந்தேகமும் பலருக்கும் இருக்கிறது. பா.ஜ.க-வை எதிர்த்தால் என்ன நடக்கும் என எடப்பாடிக்குத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் சி.ஏ.ஏ, காஷ்மீர் போன்ற பெரிய விவகாரங்களில் எல்லாம் ஆதரவாக இருந்துவிட்டு, பொதுத்தேர்வு, வேளாண் மண்டலம் என்று மாநில அரசு சம்பந்தப்பட்ட திட்டங்களில் மட்டும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கிறார் என்றும் பேசுகிறார்கள்.’’

‘‘ஒருவேளை தன் எதிர்ப்பில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டியாகி விடுமோ?’’

‘‘அதிக வாய்ப்புண்டு. தி.மு.க-வை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான வழி என்று பா.ஜ.க நினைக்கிறது. ஸ்டாலின் முதல்வராக வரக் கூடாது என்பதில் பா.ம.க தீவிரமாகவே இருக்கிறது. எடப்பாடி ஆட்சி ஒழிய வேண்டும் என்பதில் அ.ம.மு.க தெளிவாகவே இருக்கிறது. இதெல்லாமே ரஜினிக்குச் சாதகமான அம்சங்கள். இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது என்பதால்தான் ரஜினியை சீக்கிரமாக கட்சி ஆரம்பிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறதாம் பா.ஜ.க. கட்சி ஆரம்பிப்பதாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க-வையே கையில் எடுப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் ரஜினி தயார்தான் என்கிறார்கள்.’’

‘‘அதுசரி... ‘காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்று முதல்வர் அறிவித்ததில் ஓ.பி.எஸ் பயங்கர அப்செட் என்கிறார்களே... உண்மையாக்?’’

‘‘பிப்ரவரி 14-ம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. நிதியமைச்சர் என்ற வகையில் பட்ஜெட் உரையை ஓ.பி.எஸ் வாசிப்பார். அதில் ‘டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்கிற அறிவிப்பு இடம்பெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்ததாம். இதன்மூலம் ஸ்கோர் செய்யப்பார்த்தார் ஓ.பி.எஸ். ஆனால், முந்திக் கொண்டுவிட்டாராம் எடப்பாடி.’’

‘‘ம்... ஜல்லிக்கட்டு நாயகன் என்பதுபோல் டெல்டா நாயகன் என்கிற பெயர் கிடைத்திருக்கும். பறிபோய்விட்டதே... பாவம்தான் பன்னீர்!’’

‘‘அறிவாலயத்தில் புலம்பல்கள் அதிகமாகி விட்டன. நிறைய விவகாரங்களுக்குக் காரணம் என்று எ.வ.வேலுவை நோக்கி கை நீட்டுகிறார்கள். அறிவாலயம் மட்டுமல்ல, செனடாப் ரோடு வரை அவருடைய ஆதிக்கமே அதிகமாக உள்ளதாம். கட்சியில் யாரைத் தூக்குவது, நீக்குவது, தக்கவைப்பது என்பதெல்லாமே வேலுவின் கையில்தான் என்கின்றனர்.’’

‘‘இதெல்லாம் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியாதா?’’

‘‘அவர், வேலு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். குறிப்பாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த மாவட்டத்திலும் பொறுப்பாளரை மாற்றலாம் என்று ஆலோசனை நடந்துள்ளது. ஆனால், அதை வேலு தடுத்துவிட்டாராம். ‘அவருக்கு தலைவர் அதிக இடம் கொடுக்கிறார். வேலு நினைத்தால் மாவட்டச் செயலாளர்களை மாற்றலாம்; நினைத்தவர்களுக்குப் பொறுப்பு வழங்கலாம் என்கிற நிலை இருக்கிறது. அவரால் பதவிக்குக் கொண்டுவரப்படும் பலரும் அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்கள்தான்’ என்கிறார்கள். ‘என்ன நடந்தாலும் வேலுவை யாராலும் அசைக்கவே முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன’ என்று கண்சிமிட்டுகின்றனர் வேலுவின் ஆதரவாளர்கள்’’ என்ற கழுகார் நம்மிடமும் கண்சிமிட்டிவிட்டு, சிறகுகளை விரித்தார்.

ஒரு விளக்கம்!

ஜூ.வி 09.02.2020 தேதியிட்ட இதழின் ‘மிஸ்டர் கழுகு’ பகுதியில், ‘அமைப்புச் செயலாளர் மீது அதிரடி புகார்! கண்டுகொள்ளாத தி.மு.க தலைமை...’ என்ற தலைப்பில் சில தகவல்களை வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் அவரின் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் நமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், ‘ஆர்.எஸ்.பாரதி குறித்து தாங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை. நேர்மையாகவும் கவனத்துடன் பணியாற்றும் அவர், புகார்களை கட்சித் தலைவருக்கு அனுப்பிவைக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்கிறார். கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல் ஆர்.எஸ்.பாரதி எவ்விதமான தவறான நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதியை முன்வைத்து அவர் சார்ந்த தி.மு.க-வினரிடையே பேசப்பட்டு வரும் செய்திகளின் அடிப்படையில்தான் அந்தத் தகவல்கள் ஜூ.வி-யில் வெளியிடப் பட்டன. மற்றபடி யாரையும் அவமதிக்கும் நோக்கிலோ, உள்நோக்கத்துடனோ செய்தி வெளியிடப் படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

- ஆசிரியர்