Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜனாதிபதி டீ பார்ட்டியில் தமிழக நடிகை!

ராஷ்டிரபதி பவனில் கௌதமி
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்டிரபதி பவனில் கௌதமி

தமிழக பா.ஜ.க தலைவர் தேர்வு தள்ளிப்போகும் நிலையில் கௌதமியின் இந்த லாபி தமிழகத் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

மிஸ்டர் கழுகு: ஜனாதிபதி டீ பார்ட்டியில் தமிழக நடிகை!

தமிழக பா.ஜ.க தலைவர் தேர்வு தள்ளிப்போகும் நிலையில் கௌதமியின் இந்த லாபி தமிழகத் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

Published:Updated:
ராஷ்டிரபதி பவனில் கௌதமி
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்டிரபதி பவனில் கௌதமி

அலுவலகத்துக்குள் கழுகார் நுழைந்தபோது, சிவாஜி கணேசன் நடித்த `திருவிளையாடல்’ படக் காட்சி டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. தருமி நாகேஷ், ‘அவன் வர மாட்டான்... அவனை நம்பாதே!’ என்று தனியாகப் புலம்பிக்கொண்டிருந்த காட்சியைப் பார்த்த கழுகார், ‘‘இந்தக் காட்சியைவைத்துதான் ‘அவர் அரசியலுக்கு வரவே மாட்டார். அவரை நம்பாதீர்கள்’ என்று அமைச்சர்கள் சிலர் கமென்ட் அடித்திருக்கிறார்கள்’’ என்றார்.

மிஸ்டர் கழுகு: ஜனாதிபதி டீ பார்ட்டியில் தமிழக நடிகை!

அவரிடம், ‘‘நீர் யாரைச் சொல்கிறீர் என்று தெரிகிறது. அதற்கு அவரே பதில் சொல்லிக் கொள்வார். நாம் வேறு கதைகளுக்கு மாறுவோம். நீர் சொன்னபடியே தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் மாற்றம் நடந்தேவிட்டதே?’’ என்றோம்.

அந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததைப்போல் தகவலைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

‘‘கடந்த இதழிலேயே ‘முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து டி.ஆர்.பாலுவை மாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தேன். அது நடந்துவிட்டது. செயற்குழுவுக்கு முன்னரே மு.க.ஸ்டாலின் வீட்டில் இதுகுறித்து ஆலோசனை நடந்துவந்தது. கே.என்.நேருவுக்கு மாநிலப் பொறுப்பு, அன்பில் மகேஷுக்கு மாவட்டச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்குப் பதிலாக அவர் மகனுக்கு இளைஞர் அணியில் பதவி கொடுத்து சரிக்கட்டுவது எனப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் கே.என்.நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவி என்று முடிவாகியிருக்கிறது.’’

‘‘நேரு என்ன நினைக்கிறாராம்?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பதவி மாற்றம் என்பது, அவருக்கு முன்னரே தெரிந்துவிட்டது. மலைக்கோட்டையை தனது கோட்டையாக வைத்திருந்தவர், அதை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனால், ‘எவ்வளவு காலம்தான் மாவட்டப் பொறுப்பிலேயே இருப்பீர்கள்?’ என்று ஸ்டாலின் சொல்லிய பிறகே புதிய பொறுப்புக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டவர்களையும் சந்தித்திருக்கிறார். ‘திருச்சியில் மாவட்டச் செயலாளராக யார் இருந்தாலும் உங்கள் ஆலோசனையின்றி அங்கே எதுவும் நடக்காது’ என்று ஸ்டாலின் சொன்ன பிறகுதான் ஓரளவு உற்சாகமாகி இருக்கிறார் நேரு.’’

 ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்ற தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்ற தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு

‘‘டி.ஆர்.பாலு வருத்தத்தில் இருக்கிறாராமே?’’

‘‘தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘என்னிடம் பொறுப்பு கொடுத்த குறுகிய காலகட்டத்திலேயே அதைப் பறித்து விட்டனர். இதேபோன்று துரைமுருகன் பொறுப்பைப் பறிக்க முடியுமா?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் குமுறியிருக்கிறாராம். அவரின் குமுறலைக் குறைக்கத்தான், அவர் மகனுக்கு இளைஞரணி துணைச் செயலாளர் பதவியைக் கொடுக்கப்போகிறார்கள். தி.மு.க அமைப்புத் தேர்தல், விரைவில் நடக்கவிருக்கிறது. அப்போது இன்னும் பல தலைகள் உருளும் என்கிறார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். குறிப்பாக, பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர்களாக பதவி வகித்துவரும் பல மூத்தவர்கள் ஓரம்கட்டப்பட்டு, அடுத்த தலைமுறையை உட்காரவைக்கப் போகிறார்கள். இதுகுறித்த பீதி இப்போதே கட்சிக்குள் பரவிவருகிறது.’’

‘‘நீர்பாட்டுக்கு தி.மு.க செய்திகளாகக் கொடுக்கிறீர். அந்தக் கட்சியின் தலைவரோ, ‘அடிப்பேன், உதைப்பேன்’ என்று மேடையிலேயே டென்ஷனாகிறார். எதற்கும் ஜாக்கிரதையாக இரும்!’’ என்ற நாம், ‘‘அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமியை திடீரென கைதுசெய்துள்ளதே காவல்துறை?’’ என்று அடுத்த கேள்வியை வீசினோம்.

‘‘எம்.ஜி.ஆர் காலத்து சீனியர் பிரமுகரான கே.சி.பழனிசாமி, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதாகக் கூறி கட்சியிலிருந்து அவரை நீக்கினார்கள். ஆனால், ‘என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது. கட்சியில் இப்போது பொதுச்செயலாளர் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கெல்லாம் கட்சியைவிட்டு நீக்கும் அதிகாரம் இல்லை’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துவந்தார் கே.சி.பி. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றம் வரை சட்டப் போராட்டமும் நடத்திவந்தார்.’’

‘‘அதெல்லாம் தெரிந்த கதைதானே... இப்போது என்ன பிரச்னையாம்?’’

‘‘போலீஸார், ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தவறாகப் பயன்படுத்திவருகிறார். அ.தி.மு.க பெயரில் போலி இணையதளம் நடத்தி, முறைகேடாக ஆட்களைச் சேர்த்துவருகிறார்’ என்று 17 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, கோவை தடாகம் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கே.சி.பழனிசாமியைக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்தக் கைது பின்னணியில் எடப்பாடி பழனிசாமி அல்லது வேலுமணி இருப்பார் என்று தகவல்கள் வெளியாயின. கே.சி.பழனிசாமி, ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர் என்பதால் இப்படித்தான் எல்லோரும் சந்தேகப்பட்டார்கள். ஆனால் `கே.சி.பி கைது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இரு தரப்பும் இணைந்து எடுத்த முடிவு’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.”

கே.சி.பழனிசாமி கைதானபோது...
கே.சி.பழனிசாமி கைதானபோது...

“ஓஹோ!’’

‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் நியமிப்பது தொடர்பாக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இந்த இரண்டு வழக்குகளும், ஓ.பி.எஸ்-க்கு இரட்டைத் தலைவலியாக படுத்தியெடுக்கின்றனவாம். இதனால், கே.சி.பழனிசாமி தன் ஆதரவாளராக இருந்தாலும்கூட எடப்பாடி தரப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ். அதனாலேயே இப்படி ஒரு நடவடிக்கை என்கிறார்கள். பிப்ரவரி 7-ம் தேதி வரை கே.சி.பி-க்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வெளியில் வந்தாலும், ‘கட்சியில் பதவி வாங்கித் தருகிறேன்’ என்று பலரிடமும் பணம் வாங்கி மோசடி செய்ததாக ஒரு வழக்கை அவர்மீது பாய்ச்சுவதற்கும் திட்டம் இருக்கிறதாம்.’’

‘‘ரகசிய ஆய்வு ஒன்று நடந்ததாமே?’’

‘‘மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்கள், தமிழகத்தில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி சமீபத்தில் ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தியிருக் கிறார்கள். அதில் செயல்படுத்தியதைவிட கணக்குகாட்டிய தொகைதான் அதிகமாக இருக்கிறதாம். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி, அம்ருட், ஸ்வச் பாரத் திட்டங்களுக்காக ஒதுக்கப் பட்ட நிதியில் ஊழல் அதிகளவு நடந்திருக்கிறதாம். இந்த விவரங்களையெல்லாம் ஒரு ஃபைலாக டெல்லிக்குக் கொண்டு போயிருக் கிறார்களாம். எந்த நேரத்திலும் அந்த ஃபைல் திறக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படலாம்.’’

‘‘எனக்கென்னவோ நம்பிக்கையில்லை... அதுதான் மாதந்தோறும் மாமூல் போகிறது என்கிறார்களே?’’

‘‘இங்கிருந்து எந்தெந்த அமைச்சர், டெல்லியிலே யார் யாரைக் கவனிக்கிறார்கள், அவர்களுக்கான தமிழக புரோக்கர்கள் யார் யார் என்கிற விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளனவாம். இந்த அமைச்சர்கள்மீது நடவடிக்கை பாயும்முன் இந்த புரோக்கர்களின் நிறுவனங்களில் ஐ.டி ரெய்டு அதிரடியாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிகின்றன.’’

‘‘தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான போட்டி உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவரும் நேரத்தில், டெல்லி லாபியில் தமிழ் நடிகை ஒருவர் அசத்துகிறாராமே?”

ராஷ்டிரபதி பவனில் கௌதமி
ராஷ்டிரபதி பவனில் கௌதமி

‘‘நீர் யாரைச் சொல்கிறீர் எனத் தெரிகிறது... ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாலை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி சார்பில் தேநீர் விருந்து நடைபெற்றது. அந்த விருந்துக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அந்த விருந்தில், பா.ஜ.க-வில் இணைந்திருக்கும் நடிகை கெளதமியும் கலந்துகொண்டுள்ளார். யார்மூலம் அழைப்புவிடுக்கப்பட்டது, எப்படி அந்த விருந்தில் பங்கேற்றார் என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடி அழைப்பு என்று கௌதமி மூலம் தகவல் வெளியானதும் ஆடிப்போயிருக்கிறார்கள்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘தமிழக பா.ஜ.க தலைவர் தேர்வு தள்ளிப்போகும் நிலையில் கௌதமியின் இந்த லாபி தமிழகத் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது. அதுவரை தமிழக தலைவர் அறிவிப்பு பற்றி யோசிக்கக்கூட முடியாது என்று பா.ஜ.க தலைமை சொல்லி விட்டதாம்.’’

‘‘யாரை தலைவராகப் போட்டால் தமிழகத்தில் தாமரை மலரும் என யோசிக்கிறார்களோ?’’

‘‘அது தெரியவில்லை... ஆனால் தமிழகத்தில் வன்னியர், முத்தரையர், கொங்கு வேளாளக் கவுண்டர், தேவேந்திரகுல வேளாளர், அகமுடையார் ஆகிய ஐந்து சமூகங்களின் வாக்குகளைத் திரட்டுவதற்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் ஒரு ரிப்போர்ட் தரப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஐந்து சமூக வாக்குகளை ஒருங்கிணைத்தாலே போதும், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறலாம் என்று சென்னையைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிருத்வி அறிக்கை கொடுத்திருக்கிறாராம். அதன்படி, இந்தச் சமூக வாக்குகளைக் குறிவைப்பதற்கான வேலைகள் இனி வேகமெடுக்குமாம்!’’ என்ற கழுகார், விடைபெற்று சிறகு விரித்தார்.

ஆடிட்டருக்கு எதிராக சுவாமி!

காஞ்சி சங்கர மடத்தில் ஆடிட்டர் கை ஓங்கிவரும் நிலையில், சங்கரமடத்துக்குச் சொந்தமான பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வரும் மார்ச் மாதம் நடைபெறுகிறது. அதற்கு சிறப்பு விருந்தினராக சுப்பிரமணியன் சுவாமியை அழைக்க விஜயேந்திரர் ஒப்புதல் கொடுத்துள்ளார். இது ஆடிட்டர் தரப்பை டென்ஷனாக்கியிருக்கிறதாம். மடத்தின் நிர்வாகத்தை சத்தமில்லாமல் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார் விஜயேந்திரர் தம்பி ரகு. `ஆடிட்டருக்கு எதிராக சுவாமியைக் களத்தில் இறக்குவது ரகுவின் திட்டம்தான்’ என்கிறார்கள் மடத்துக்கு நெருக்கமானவர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism