Published:Updated:

மிஸ்டர் கழுகு: விலைபோகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... ஏலம் எடுக்கும் கம்பெனிகள்!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாடுதான் கொண்டாட்டமாக இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

‘பேட்ட’ படப் பாடலைப் பாடிக்கொண்டே வந்த கழுகாரிடம், ‘‘வண்ணாரப்பேட்டைதான் சென்னையின் ஷாகின் பாக் ஆகிவிட்டதே?” என்று ஆரம்பித்தோம்.

மிஸ்டர் கழுகு: விலைபோகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... ஏலம் எடுக்கும் கம்பெனிகள்!

‘‘அரசுக்கும் இதில் தர்மசங்கடம்தான். போலீஸ் தாக்குதல் நடந்த மறுநாளே டி.ஜி.பி-யையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரையும் கூப்பிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி, ‘ஏன் அவசரப்பட்டீர்கள்?’ என்று கமிஷனரிடம் சத்தம்போட்டிருக்கிறார். அப்போது, ‘போராட்டம் பெரிதாகும் முன்னே அதைத் தவிர்த்துவிட்டால் நல்லது. சி.ஏ.ஏ போராட்டங்களைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்கலாம்’ என்று ஐடியா சொல்லியிருக்கிறார் டி.ஜி.பி திரிபாதி. முதல்வரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். அதற்குப் பிறகுதான் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பதற்காக மூன்று ஏ.டி.ஜி.பி-க்கள் உட்பட 12 அதிகாரிகளை நியமித்திருக்கின்றனர்.’’

‘‘போலீஸ் அதிகாரிகளிலேயே ஒரு தரப்பினர், ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்கிறார்களே?’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘‘ஏற்கெனவே சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியிடம் மாவட்ட அதிகாரிகள் ரிப்போர்ட் அளிக்கும் நிலையில், எதற்காக இந்த 12 பேர் தனியாக நியமிக்கப்பட்டனர் என்ற குழப்பம் எழுந்திருக்கிறது. இது அவருடைய அதிகாரத்தைப் பறிக்கும் வேலை என்றும் சொல்கிறார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் தரப்பிலோ, `இது, போராட்டமே கூடாது என மிரட்டும் நடவடிக்கை’ என்கிறார்கள்.’’

‘‘எவ்வளவு போராடினாலும் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாரே சபாநாயகர்?’’

‘‘அது பலரும் சேர்ந்து எடுத்த முடிவு. மூன்றாண்டு காலத்தை முதல்வர் பதவியில் வெற்றிகரமாக முடித்ததற்காக பிப்ரவரி 17-ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்துக்குள் நுழையும்போதே அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அதற்கு முன்பே மூத்த அமைச்சர்களிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘மத்திய அரசு விஷயத்திலும் சில அதிரடிகளை எடுக்க வேண்டும்’ என்று முதல்வர் சொல்ல, ‘அப்படி ஏதாவது செய்தால் ஆறே மாதங்களில் ஆட்சி போய்விடும்’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதன் பிறகே சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதில்லை என்று முடிவெடுத் திருக்கின்றனர்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஸ்டாலின் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறாரோ?’’

‘‘ஆமாம். 11 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்கம் தொடர்பான வழக்கில் வந்த தீர்ப்பு, ஒரு முக்கிய காரணம். சி.ஏ.ஏ விவகாரத்தைப் பற்றி சட்டமன்றத்தில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, ‘சி.ஏ.ஏ பற்றி இந்த அவையில் விவாதிக்க முடியாது. தீர்மானமும் கொண்டுவர முடியாது. வண்ணாரப் பேட்டை விவகாரத்தை மட்டும் பேசுங்கள்’ என்று அறிவித்துவிட்டார். அமைச்சர் ஜெயக்குமார், ‘பிப்ரவரி 12-ம் தேதி தி.மு.க பேச்சாளர் ஐ.லியோனி வண்ணாரப்பேட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்குப் பிறகே சில விஷமிகளின் தூண்டுதலில் இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது’ என்றார். முதல்வரும் அதையே பேசியதில் ஸ்டாலின் அப்செட் ஆகியிருக்கிறார்.’’

ஸ்டாலின்
ஸ்டாலின்

‘‘டெல்லி தோல்வி, வலுக்கும் போராட்டங்களால் சி.ஏ.ஏ சட்டத்தில் சில ஷரத்துகளை மத்திய அரசு மாற்றப்போகிறது என்று செய்தி பரவுகிறதே?’’

‘‘வாய்ப்பேயில்லை என்கிறார்கள். பிரதமர் மோடி இதில் உறுதியாக இருக்கிறாராம். அப்படிச் செய்தால் அது அவருக்கு பெரும்பின்னடைவாக இருக்கும் எனக் கருதுகிறாராம். டெல்லியிலும் மாறாது, இங்கேயும் எதுவும் செய்ய மாட்டார்கள் எனத் தெரிந்துதான், பிப்ரவரி 19-ம் தேதி அனைத்து இஸ்லாமியக் கூட்டமைப்புகள் சார்பில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். அந்தப் போராட்டம் பெரிதாக வெடிக்கும் வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருக்கிறது உளவுத்துறை.’’

மோடி
மோடி

‘‘அடுத்த ஒரு வருஷத்துக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்தான்!’’

‘‘சரியாகச் சொன்னீர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாடுதான் கொண்டாட்டமாக இருக்கிறது. ஒரு விஷயம் கேள்விப்பட்டு நானே அதிர்ந்துபோனேன்.’’

‘‘அப்படி என்ன விஷயமோ?’’

‘‘பெரும்பணம் புழங்கும் துறைகளில் உயர் பொறுப்புக்கு வருவதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் எப்போதுமே போட்டி இருக்கும். இப்படிப்பட்ட அதிகாரிகளை அங்கே கொண்டுவருவதற்கு என்றே ஒரு புரோக்கர் கூட்டம் இப்போது முளைத்திருக்கிறது. ஊழல் அதிகாரிகளை அணுகும் புரோக்கர்கள் தரப்பு, ‘உங்களை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவருவது எங்கள் பொறுப்பு. மேலே கொடுக்க வேண்டியதை நாங்களே கொடுத்துவிடுகிறோம். அதற்கான பிரதிபலனாக, நாங்கள் சொல்லும் கோப்புகளில் மட்டுமே நீங்கள் கையெழுத்து போட வேண்டும். எங்கள் சம்மதம் இல்லாமல் எந்தக் கோப்பும் உங்கள் டேபிளிலிருந்து நகரவே கூடாது’ என்று சொல்லி அதிகாரிகளை ஏலம் எடுக்கிறார்களாம்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘நகர ஊரமைப்பு இயக்ககத்துக்கு இப்படி வந்திருக்கும் ஒருவரை, பிரமாண்ட கட்டுமான நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறதாம். பெரிய கட்டடங்களுக்கு திட்ட அனுமதி தருவதில் இவருடைய கையெழுத்து ரொம்பவே முக்கியம்.’’

‘‘அவர்கள் சொன்னால் இவர் கையெழுத்து போட்டுத்தானே ஆகவேண்டும்?’’

‘‘அது உண்மைதான். ஆனால், `துறையின் வி.ஐ.பி கையெழுத்திட்டு அனுப்பும் கோப்புகளைக்கூட இந்த அதிகாரி கிடப்பில் போடுகிறார்’ என்கிறார்கள். சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் அணுகும்போது, சென்னையின் பிரதான சாலையில் உள்ள ஒரு தியேட்டர் கார் பார்க்கிங் பகுதியைச் சொல்லும் அந்த அதிகாரி, ‘பணத்தோடு அங்க போங்க. இந்த நம்பர் பைக்ல ஒருத்தர் வருவார். அவர்கிட்ட பணத்தைக் கொடுத்துட்டு, அவர் தர்ற சீட்டை எடுத்துக்கிட்டு இங்க வாங்க. உங்க ஃபைலை கிளியர் பண்ணித் தர்றேன்’ என்று சொல்கிறாராம். பணம் கை மாறினால் கோப்பும் உடனே கையெழுத்தாகிறது. இந்த டீலிங் அனைத்தையும் அந்தக் கட்டுமான நிறுவனம்தான் முடித்து லாபம் பார்க்கிறதாம். அதிகாரிக்காக மேலிடத்துக்குக் கொடுத்த தொகையைக் கழித்துக்கொண்டு, மீதம் இருந்தால் அந்த அதிகாரிக்கும் கொடுக்கிறதாம் அந்த நிறுவனம்.’’

“பெரிய தில்லாலங்கடி வேலையாக இருக்கிறதே!’’

‘‘இதேபோல் லாரி கட்டுமான நகரத்தைச் சேர்ந்த இன்னொரு கட்டுமான நிறுவனம், தனக்கு ஆதரவான அதிகாரியை உயர்கல்வித் துறைக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் லாபி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான், தமிழக பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப் படும் பெரும்பாலான டெண்டர்கள் கையாளப் படுகின்றன. நிறுவனத்தின் சம்மதமின்றி எந்தக் கோப்பும் உயர்கல்வித் துறையில் நகர்வதில்லையாம்.’’

‘‘அடுத்து?’’

‘‘பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள், அதிகாரி ஒருவரை ஏலம் எடுத்து போக்குவரத்துத் துறைக்குக் கொண்டுவந்திருக்கின்றன. அங்கும் இதே பாணியில் வசூல் பட்டையைக் கிளப்புகிறதாம். மாசைக் கட்டுப்படுத்தும் துறைக்கு இரண்டு கோடி ரூபாய் மொய் அளித்து அதிகாரி ஒருவர் வந்துள்ளார். அங்கும் இதே கதைதான். எல்லாத் துறைகளிலும் இப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஏலம் எடுத்துவிட்டால், எதிர்காலத்தில் கம்பெனிகள் கையில்தான் கவர்மென்ட் இருக்கும் என்று நேர்மையான அதிகாரிகள் குமுறுகின்றனர்.’’

‘‘பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் இன்னும் ஒரு தலைவர் கிடைக்கவில்லையா?’’

‘‘கேரளா மாநிலத்துக்கு அறிவிக்கும்போதே தமிழகத்துக்கும் அறிவிப்பு வந்துவிடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், முரளிதர ராவ் பிப்ரவரி 14-ம் தேதியன்று டெல்லியில் இல்லை. மேலும், தமிழகத் தலைவருக்கான நியமனக் கடிதத்தில் நட்டாவும் அதுவரை கையெழுத்திடவில்லையாம். நட்டாவும் ராவும் சந்தித்துவிட்டால், ராவோடு ராவாக அறிவிப்பு வந்துவிடுமாம்’’ என்ற கழுகார், ‘‘சென்னை தி.நகரில் இருக்கும் பா.ஜ.க பிரமுகர் ஒருவரின் அலுவலகம் தெலங்கானா கல்லூரி அதிபர்களால் நிரம்பி வழிகிறதாம். தமிழக பா.ஜ.க-வில் பொறுப்பில் உள்ள அவர், மாதத்தில் இருபது நாள்கள் ஹைதராபாத்தில் முகாமிடுகிறாராம். இவர் நடத்தும் வசூல்வேட்டை ஹைதராபாத்தில் பிரபலமாகி விட்டது என்கிறார்கள். விஷயம் இப்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காதுகளுக்கும் சென்றுள்ளதாம்’’ என்றபடி சட்டென்று சிறகுகளை விரித்தார்.

`ஆன்லைன் ரம்மி’ - சில விளக்கங்கள்

கடந்த 5.2.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘ஆன்லைன் ரம்மி அழியும் குடும்பங்கள்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுதொடர்பாக, ஆன்லைன் ரம்மி விளையாட்டைக் கண்காணிக்கும் ‘தி ரம்மி ஃபெடரேஷன்’ அமைப்பின் தலைமை செயல் அலுவலரான சமீர் பார்டே என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு, சில விளக்கங்களைச் சொன்னார்.

“ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அறிவுத்திறமை பயன்படுத்தப்படுவதால், இது சூதாட்டமல்ல என்பதை உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விளையாட்டை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய ‘தி ரம்மி ஃபெடரேஷன்’ அமைப்பு தொடங்கப்பட்டது. நாங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இந்த விளையாட்டு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை நாங்கள் உறுதிப்படுத்து கிறோம்.

இந்த விளையாட்டில் பங்கேற்பவரின் பணத்துக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். அவரது வங்கிக்கணக்கில் எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பாகவே ஒவ்வொருவரிடமும் சுயவிவரம்குறித்துப் பதிவுசெய்ய கேட்கிறோம். அதன்படி அவர்களால் செலவிடக்கூடிய தொகை, அவர்கள் ஆன்லைனில் தினமும் செலவிட முடியும் நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே பெற்றுவிடுகிறோம். இதனால் இந்த விளையாட்டு யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாடு முழுவதிலும் சுமார் ஏழு கோடி பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பங்கேற்கிறார்கள். இந்த விளையாட்டில் எந்த முறைகேடும் நடைபெறாமல் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு