Published:Updated:

மிஸ்டர் கழுகு: அமைப்பு செயலாளர் மீது அதிரடி புகார்!

ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி

- கண்டுகொள்ளாத தி.மு.க தலைமை...

‘டினிங்’ எனச் சிணுங்கியது மொபைல். கழுகாரிடமிருந்து குறுந்தகவல்... ‘கேன்டீனுக்கு வரவும்’ என்றது. சூடாக காபியுடன் அல்வாவும் சேர்த்தே ஆர்டர் செய்தோம். அல்வாவைச் சுவைத்து முடித்தவர், “பட்ஜெட் போன்று நீண்ட நேரமெல்லாம் வாசிக்க மாட்டேன். சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். கேள்விகளை ஆரம்பிக்கவும்” என்றார் தோரணையாக!

“தி.மு.க-வில் மாற்றங்கள் தொடங்கியிருக் கின்றனவே?”

மிஸ்டர் கழுகு: அமைப்பு செயலாளர் மீது அதிரடி புகார்!

“கே.என்.நேருவுக்குப் பொறுப்பு, கொங்கு பகுதியில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் என, கடந்த மாதம் தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த பேச்சுகளே இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அந்தச் செயற்குழுவில் கொங்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்கள். ‘சரியாகச் செயல்படவில்லை’ என்று கூறி சேலம் மாவட்டத்தில் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜாவை டம்மி பதவியான தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பொறுப்புக்கு மாற்றிவிட்டார்கள். மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்தை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டார்கள். மேற்கு மாவட்டச் செயலாளராக செல்வகணபதி நியமிக்கப் பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து காந்திசெல்வனை விடுவித்துள்ளார்கள். அங்கு இளைஞரணியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரை, பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“மாற்றங்களுக்கு என்ன காரணமாம்?”

“ராஜாமீது ஏகப்பட்ட புகார்கள் கட்சியினரிடமிருந்து எழுந்தனவாம். ஆனாலும், வீரபாண்டியார் முகத்துக்காக ராஜாவை மாற்ற வேண்டாம் என பிப்ரவரி 2-ம் தேதி இரவு வரை அறிவிப்பை ஒத்தி வைத்திருக்கிறார்கள். கே.என்.நேருவும் ராஜாவுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், ‘ராஜாவின் பதவியை செல்வ கணபதிக்குக் கொடுக்க வேண்டும்’ என்று கிச்சன் கேபினட்டிலிருந்து ஏகப்பட்ட பிரஷர். கடைசியில் கிச்சன் கேபினட்டே வென்றது. நாமக்கல் காந்திசெல்வன் பதவி போனதற்கு, கிச்சனே காரணமாம். தற்போது அங்கு நியமிக்கப்பட்டிருப்பவர் எ.வ.வேலுவுக்கு வேண்டப்பட்டவர் என்கிறார்கள்.”

ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி
ஸ்டாலின் - ஆர்.எஸ்.பாரதி

‘‘நேரு மீண்டும் வருத்தத்தில் இருக்கிறாராமே!’’

“ஏற்கெனவே திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தார்கள். அதில் ஒரு மாவட்டத்துக்கு தன் ஆதரவாளரான அன்பழகனைப் பொறுப்புக்கு நியமிப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. இதை ஸ்டாலினிடம் நேரடியாகவே சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லை. தவிர, திருச்சியின் மற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனங்களிலும் நேருவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லையாம். ‘நடவடிக்கைகள் இத்துடன் நிற்காது... தொடரும்’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!’’

‘‘செயற்குழுவில் ‘சும்மா இருக்க மாட்டேன்’ என்று கர்ஜித்ததை, செயலில் காட்ட ஆரம்பித்துவிட்டாரோ!’’

‘‘ம்க்கும்... அப்படிப் பார்த்தால் முதலில் அவர் அறிவாலயத்தில்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பலரும் புகார் வாசித்திருக்கிறார்கள். மாவட்டத்தில் நடக்கும் பிரச்னைகளை விசாரிக்க அமைப்புச் செயலாளருக்கு அதிகாரம் கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், ‘ஆர்.எஸ்.பாரதியிடம் புகார் அளித்தால் மறுநாளே குற்றம்சாட்டப்பட்ட நபருக்கே தகவல் போய்விடுகிறது’ என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். பாரதியின் உதவியாளர்மீதும் புகார்கள் குவிந்திருக்கின்றனவாம். அவர்தான் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு டீலிங் பேசுகிறார் என்று புலம்புகிறார்கள் கட்சியினர்.’’

‘‘அதுதான் ஆடியோவாக வெளியாகியிருக்கிறதோ?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஆமாம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியச் செயலாளர் மருதவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்கிற கட்சிக்காரரிடம் ‘ஊராட்சித் தலைவர் பதவிக்கு 30 லட்சம் ரூபாய் வேண்டும்’ என்று பேரம் பேசும் ஆடியோ வெளியானது. அதில், ‘மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்குக் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் மருதவேல். இந்த ஆடியோவும் தலைமைக்குப் போனது. ஆனால், நடவடிக்கை இல்லை. ‘கோவையில் தென்றல் செல்வராஜ் மற்றும் ராமச்சந்திரன், நாகப்பட்டினத்தில் வேதா முருகன், கிருஷ்ணகிரியில் பிரகாஷ், கும்மிடிபூண்டியில் வேணு, புதுக்கோட்டையில் செல்லப்பாண்டி உள்ளிட்ட மாவட்டப் பொறுப் பாளர்கள், ஆர்.எஸ்.பாரதியின் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்’ என்றும் சத்தமாகவே புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.”

அழகிரியுடன்
ரஜினிகாந்த்
அழகிரியுடன் ரஜினிகாந்த்

“ஓஹோ...”

“தினமும் அறிவாலயத்தில் நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் தங்கள் கட்சியின் தலைவரைப் பார்த்து குறைகளைச் சொல்ல வருகிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் ஸ்டாலின் கேட்பதில்லையாம். ‘குறைகளை என்னிடம் கூற வேண்டாம்; பாரதி யிடம் சொல்லுங்கள் என்று மனுவைப் படித்துக்கூடப்பார்க்காமல் அனுப்பிவிடுகிறார் தலைவர். அந்த மனுக்கள் மீதெல்லாம் முறையான நடவடிக்கைகள் இருப்பதில்லை. இதனால் பாரதி மீது கோபத்தில்தான் இருக்கிறார்கள் கட்சிக் காரர்கள் பலரும். இதைப் பற்றியெல்லாமும் கூட தலைவருக்கு மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகின்றனர் தி.மு.க-வினர்.’’

``பாவம்தான்!’’

‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வேறு ஒரு நபரிடமிருந்து கட்சியின் முக்கியமான நிர்வாகி ஒருவருக்கு இரண்டு சாக்கு மூட்டைகள் கைமாற்றப்பட்டனவாம். ‘அவருக்கு எப்படி இரண்டு மூட்டைகள்?’ என்று அப்போதே பிரச்னை வெடித்துள்ளது. அது தலைமை வரை புகாராகப் போயும் நடவடிக்கை இல்லையாம். அந்தப் புகாரையே அமுக்கிவிட்டார்கள் என்றும் தி.மு.க-வில் புலம்பல் சத்தம் கேட்கிறது.’’

‘‘கே.என்.நேருவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டிருக்கிறாரே டி.ஆர்.பாலு?’’

“பாலுவின் பதவியைப் பறித்துதான் நேருவிடம் கொடுத்தார்கள். இந்தக் கடுப்பில் டெல்லிக்குச் சென்றுவிட்டார் பாலு. ‘நேரு பதவியேற்புக்கு வாருங்கள்’ என்று தலைமையிலிருந்து அழைப்புவிடுத்ததும் அரைமனதாகத்தான் அவர் டெல்லியிலிருந்து கிளம்பி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். நிகழ்ச்சியிலும் அவர் யாருடனும் சரியாகப் பேசவில்லை என்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்த விமானத்திலேயே டெல்லிக்குப் பறந்துவிட்டாராம்.’’

“பிரஷாந்த் கிஷோர், தி.மு.க-வுக்காகப் பணியாற்றப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளாரே ஸ்டாலின்?”

“ஆமாம். இதற்கு, சொந்த கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ‘அண்ணாவும் கருணாநிதியும் வழிநடத்திய தி.மு.க-வுக்கு வடக்கிலிருந்து வந்த கார்ப்பரேட் நபர் ஆலோசனை சொல்வதா... தி.மு.க தொண்டர் களிடம் இல்லாத ஆலோசனைகளா இவர்களைப் போன்றோரிடம் கிடைத்துவிடும்!’ என்று கொந்தளிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

“கிஷோர் தரப்பிலிருந்து ரியாக்‌ஷன் ஏதேனும் வந்ததா?”

“இல்லை. ஆனால், ‘கிஷோர் நமக்குப் பணியாற்ற வந்தால் அதை அவர்தானே முதலில் அறிவிக்க வேண்டும்; நீங்கள் எதற்கு அறிவிக்க வேண்டும். இது நாமே இறங்கிப்போவதுபோல் ஆகாதா?’ என்று ஸ்டாலினிடமே பலரும் கேட்டுவிட்டார்களாம். ஆனால், ‘அ.தி.மு.க பக்கம் கிஷோர் போகவிருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரப்பப்படுகின்றன. அதைத் தடுக்கவே நாமே இதை அறிவித்துவிட்டோம்’ என்று ஸ்டாலின் தரப்பில் சொல்லப் பட்டதை, கட்சியின் மூத்த தலைவர் களே பெரிதாக ரசிக்கவில்லையாம்.”

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்களே?”

“ஆளுநரின் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார்கள் என்று சொல்லும். முன்கூட்டியே நேரம் வாங்காமல் சென்றதால் ஆளுநரைச் சந்திக்க முடியவில்லை. விரைவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தி.மு.க வழக்கு தொடர இருக்கிறதாம்.”

‘‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அப்செட் என்கிறார்களே?”

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

“சமீபத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்தபோது ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளைக் குறிப்பிட்டு வருத்தப் பட்டனர். முன்னாள் எம்.பி-யான அன்வர் ராஜாவும் கடுமையாகக் கொந்தளித்துள்ளார். இவை யெல்லாம்தான் முதல்வரை அப்செட் ஆக்கியுள்ளன.”

“ரஜினியை மு.க.அழகிரி சந்தித்தாராமே?”

“அழகிரியின் பிறந்த நாள் அன்று ரஜினி போனில் வாழ்த்துச் சொல்லியிருந்தார். அதற்கு மறுதினம் சென்னை வந்துள்ளார் அழகிரி. அப்போது ரஜினியைத் தொடர்புகொண்டு சந்திக்க நேரம் கேட்டபோது, கேளம்பாக்கம் வீட்டுக்கு வர சொல்லியிருக்கிறார். அங்கு நீண்ட நேரம் இருவரும் பேசியிருக்கிறார்கள்.’’

“ரஜினி என்ன நிலைப்பாட்டில் இருக்கிறாராம்?”

“அடிக்கடி ஓய்வு எடுக்க கேளம்பாக்கம் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாராம். போயஸ் கார்டனில் அவர் இருந்தாலும் மன்றத்தினர் அவரைச் சந்திக்க முடியவில்லை. அவர் விரும்பும் சிலரை மட்டும் சந்திக்கிறாராம். அரசியலுக்கு வந்தால் மாநிலம் முழுவதும் கட்சியின் கட்டமைப்புகளை உருவாக்குவது, ஊர் ஊராகப் பிரசாரம் செய்வது, மாநாடுகள் நடத்துவது என்று கடுமையாக வேலைபார்க்காமல் ‘ஸ்மார்ட்’ நடவடிக்கை எடுத்து நேரடியாக அரியணையில் அமர வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று பல்ஸ் பார்க்கிறதாம் ரஜினி தரப்பு!”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

கே.எஸ்.அழகிரி மீண்டும் ஏதோ உணர்ச்சி வசப்பட்டாராமே?”

“காங்கிரஸ் துணைத்தலைவர் தாமோதரன் பிறந்த நாள் விழாவில் பேசிய அழகிரி, ‘காங்கிரஸ் கட்சிக்கும் சுயமரியாதை உண்டு. நாம் யாரையும் நம்பி இல்லை. `காமராஜர் ஆட்சி’ என்ற பேச்சையே நாம் மறந்துவிட்டோம். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுயமரியாதை யுடன் நமது பயணம் இருக்க வேண்டும்’ என்று சீறியிருக்கிறார். `எல்லாம் தி.மு.க கொடுத்த நெருக்கடியால் ஏற்பட்டவை’ என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்” என்ற கழுகார், சிறகுகளை விரித்துப் பறந்தார்.

  • எடப்பாடி பழனிசாமியை, சமீபத்தில் அவரது கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் சந்தித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு அப்போது எழுந்துள்ளது. எடப்பாடி தரப்பில், `அதெல்லாம் சரிப்பட்டுவராதுங்க!’ என வெளிப்படையாகப் போட்டுடைக்க, கூலான அந்தத் தலைவருக்கே வியர்த்துவிட்டதாம்!

  • சேலம் தி.மு.க-வில் புதிய கோஷ்டியாக, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபு சேலத்தில் அரசியல் செய்யத் தொடங்கிவிட்டார். போஸ்டர் தொடங்கி திருமண விழாக்கள் வரை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி யிருப்பவர், சமீபத்தில் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு 270 திரையரங்க டிக்கெட்டுகளை வாங்கி தொண்டர்கள் புடைசூழ ‘சைக்கோ’ படம் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்!

  • கொங்கு மண்டலத்தின் முக்கியமான நகரின் தி.மு.கழக எம்.எல்.ஏ அவர். ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார். அந்த நகரத்தின் அதிமுக்கிய அமைச்சருக்கு எதிராக ஆவேசமாக முழங்குவார். ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் அமைச்சரின் முகாமுக்கு போனைபோட்டு, ‘அண்ணே... மேலிடத்து பிரஷர்... நான் பேசினதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க’ எனக் கெஞ்சுகிறாராம்!