Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும்! பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்!

கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்

- பாலிடிக்ஸ் பட்டிமன்றம்

மிஸ்டர் கழுகு: முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும்! பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்!

- பாலிடிக்ஸ் பட்டிமன்றம்

Published:Updated:
கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்

‘‘ஒருவழியாக நகராட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். இனி நீர் பிஸியோ பிஸிதான்!’’ - கழுகார் உள்ளே நுழைந்ததும் நாம் இப்படிச் சொல்ல... ‘‘தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, தி.மு.க மாவட்டச் செயலாளர்களைப் பிடிப்பதுதான் சிரமம் என்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர்’’ என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க தலைமை நேரடியாகக் கூட்டணித் தலைமையிடம் பேசுவதில்லை. மாவட்டச் செயலாளர்களிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுகிறார்கள். கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் தி.மு.க மா.செ-க்களை அணுகினால், ‘ஏன் உங்கள் தலைமையிலிருந்து எங்களிடம் பேச மாட்டார்களா?’ என்று கிண்டலடிக் கிறார்களாம். குறைந்தபட்சம் காங்கிரஸ் மூன்று மேயர் பதவிகளையும், வி.சி.க ஒரு மேயர் பதவியையும் எதிர்பார்க்கிறது. அதனால், அதற்கேற்ப கவுன்சிலர் சீட்களை அதிகம் கேட்கிறார்கள். ஆனால், 21 மேயர் பதவிகளையும் கைப்பற்றும் எண்ணத்தில் தி.மு.க இருப்பதால், கூட்டணிக் கட்சியினருக்கு அவற்றை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லையாம்.”

``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உடைந்தால், அணித் தாவல்களை எதிர்பார்க்கலாம் அல்லவா?’’

‘‘சரிதான். ஆனால் அது எளிதில் நடக்காது. கவர்ஸ்டோரியில் இந்த விவகாரத்தை நன்றாக அலசியிருந்தீர்கள்” என்ற கழுகாருக்குச் சூடான ஆனியன் பஜ்ஜியை நீட்டினோம்.

“தமிழக அரசு நடத்திய குடியரசு அணிவகுப்பைப் பார்த்தீரா?’’

பஜ்ஜியை ருசித்துச் சுவைத்தவர் தொடர்ந்தார், ‘‘ஜனவரி 26-ம் தேதி அன்று, சமூக வலைதளங்களில் சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பையும், டெல்லியில் நடந்த அணிவகுப்பையும் ஒப்பிட்ட காட்சிகள்தான் வைரலாக ஓடிக்கொண்டிருந்தன. தமிழக அரசின் செய்தித்துறையினர், டெல்லியில் நிராகரிக்கப்பட்டிருந்த அலங்கார வாகனத்தை மட்டுமே அணிவகுப்பில் இடம்பெறச் செய்ய முதலில் முடிவெடுத்திருக்கிறார்கள். பின்னரே, ‘ஒரு வாகனம் மட்டும் சென்றால் நன்றாக இருக்காது’ என யோசித்தவர்கள், அவசரமாகக் கூடுதலாக நான்கு வாகனங்களையும், பெரியார், திருப்பூர் குமரன் என்று தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் பல தலைவர்களையும் வரிசையாக நிற்க வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘பெரியாரை எந்த அடிப்படையில் இந்த அணிவகுப்பில் கொண்டுவந்தார்கள்?’ என்று பா.ஜ.க தரப்பில் கேள்வியெழுப்பினாலும், அதைத் தமிழக முதல்வர் கண்டுகொள்ளவில்லையாம். அனைத்து வாகனங்களின் மாடல்களையும் குடியரசு தினத்துக்கு முந்தைய தினமே முதல்வரிடம் காட்டி ஓகே வாங்கிவிட்டதால், அதிகாரிகள் தரப்பு துணிச்சலாக இருந்துள்ளது.’’

‘‘ஓஹோ... பொங்கல் பரிசுத்தொகுப்பு சர்ச்சை விவகாரத்தில் அரசுத் தரப்பு ஆக்‌ஷனில் இறங்கிவிட்டதுபோலவே?’’

‘‘ஆமாம். அந்த விவகாரத்தில், தமிழ்நாடு முதுநிலைத் தரக்கட்டுப்பாட்டு மேலாளரைப் பணி இடைநீக்கம் செய்துள்ளது அரசு. அதோடு, இந்தக் குளறுபடிகள் குறித்து விசாரித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ஆட்சியின் மீது தேவையில்லாத அவப்பெயரை ஏற்படுத்திய ‘சம்பந்தப்பட்டவர்கள்’ மீதான கோபம், முதல்வரிடம் கொஞ்சம்கூட தணியவில்லையாம். சமீபத்தில் வழங்கப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கான பருப்பு டெண்டர் விவகாரங்கள் குறித்தும் அப்டேட் கேட்டிருக்கிறாராம்.’’

மிஸ்டர் கழுகு: முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும்! பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்!

‘‘காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது?’’

‘‘தலைவர் பதவியில் இன்னும் சில காலம் நீடிக்க, தலைமை ஒப்புதல் அளிக்கும் என்று காத்திருந்த கே.எஸ்.அழகிரிக்கு டெல்லியிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லையாம். இனிமேல், பதவியில் நீடிக்கப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டதால்தான் கே.எஸ்.அழகிரி இவ்வளவு மந்தமாகத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தினர்.”

“கே.எஸ்.அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் நடந்த பட்டிமன்றத்தை கவனித்தீரா?”

“ஆமாம்... அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தி.மு.க எம்.பி-யான டி.கே.எஸ்.இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, ‘முதல்வர் ஸ்டாலின் பேசுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக அவர் குறைத்துப் பேசுவதில் தவறில்லை என்றாலும்கூட, நண்பர்களோடும் எங்களைப் போன்ற தோழமைக் கட்சிகளோடு மட்டுமாவது முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும். பொது மேடையில் இதைச் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும், அவருடன் இருக்கும் நட்பின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன்’ என்று பேச, அதற்கு அதே மேடையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘என்னைப் பொறுத்தவரை, பேச்சைக் குறைத்து நமது செயலில் திறமையைக் காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்’ என்று பதில் சொல்ல, பாலிடிக்ஸ் பட்டிமன்றம் களைகட்டியது. அதேசமயம், விழாவுக்குப் போன இடத்தில், அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படி அழகிரி பேசியிருப்பதை காங்கிரஸ் கட்சியினரே ரசிக்கவில்லையாம்.’’

‘‘ஆதீனம் பின்வாங்கிய கதை தெரியுமா?’’

‘‘மதுரை ஆதீனத்தைத்தானே சொல்கிறீர்? திருக்குறளை கிறிஸ்தவ நூலாகக் குறிப்பிட்டுவரும் தெய்வநாயகம் மற்றும் திருமாவளவனையும் கண்டித்து, திருக்குறள் மாநாட்டை மதுரையில் ஏற்பாடு செய்திருந்தது இந்து மக்கள் கட்சி. இதில், சிறப்புரை ஆற்றவுள்ளதாக மதுரை ஆதீனத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஏராளமான விளம்பரங்களைச் செய்திருந்தார்கள். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை... ‘நான் கலந்துகொள்ள முடியாது’ என்று ஆதீனம் மறுத்துவிட்டார். விசாரித்ததில், ‘திருக்குறள் சம்பந்தமான மாநாடு என்றால், நிச்சயம் நான் அங்கு சென்று பேசியிருப்பேன். ஆனால், அது தி.மு.க-வைத் திட்டுவதற்கு இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த மாநாடு என்பதே பின்புதான் தெரிந்தது. தேவையில்லாத அரசியலுக்குள் நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை’ என்று நெருங்கியவர்களிடம் காரணம் கூறியுள்ளார்” என்ற கழுகாருக்கு இஞ்சி டீ கொடுத்தோம்.

உறிஞ்சிக் குடித்த கழுகாரிடம் “தமிழக காவல்துறையில் புகைச்சல் அதிகமாக உள்ளதே? என்று கொக்கியைப் போட்டோம்.

“ஆமாம். தமிழக காவல்துறையில் தற்போது, எஸ்.பி-க்களுக்கான பதினாறு இடங்கள் காலியாக உள்ளதாம். அதேநேரம் ஏ.எஸ்.பியாக இருக்கும் சிலருக்கு எஸ்.பி-யாக பதவி உயர்வு வழங்க வேண்டியதும் உள்ளது. தமிழக உள்துறைச் செயலாளர் தரப்பிலிருந்து இதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதமே ஏ.எஸ்.பி ஒருவருக்கு எஸ்.பி-யாகப் பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அவருக்கு வழங்கப்படாமல் இருப்பதால், அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையிட இருக்கிறாராம்.”

“அப்படியா?”

“ஒருபுறம் பதவி உயர்வுக்கான ஃபைல்கள் தேங்கிக்கிடக்கும் நிலையில், சென்னை காவல்துறை ஆணையகத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையரகத்துக்கு முழுமையாக அதிகாரிகளை இதுவரை ஒதுக்காமல் இருப்பது, அந்த ஆணையர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆணையரகத்துக்கான அலுவலகம் வரை முதல்வர் திறந்துவைத்துவிட்டார், ஆனால் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால், புது அலுவலகத்தில் புயல் வேகத்தில் செயல்படலாம் என்று திட்டமிட்டிருந்தவர்கள், யாரிடம் பணிகளை ஒப்படைப்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்ற கழுகார் சட்டென சிறகை விரித்துப் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: முதல்வர் இன்னும் கொஞ்சம் அதிகம் பேச வேண்டும்! பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்!

தி.மு.க-வினரை அப்செட்டாக்கும் மதுரை எம்.பி!

சமீபத்தில் மதுரை மாவட்ட வளர்ச்சி சம்பந்தமாக, 25 கோரிக்கைகளைக்கொண்ட மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார் சி.பி.எம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மறு நாளே மதுரை மாவட்டத்துக்குப் புதிய திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால், மதுரை தி.மு.க அமைச்சர்கள் அப்செட்டாகியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், மதுரையில் தி.மு.க அரசுக்கு எதிராக சி.பி.எம்., சி.ஐ.டி.யூ., விவசாயச் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், மதுரை மாநகரில் சாலை அமைக்க மாநகராட்சி டெண்டர் விட்டிருக்கிறது. இந்தச் சாலைப் பணிகள் மிக மோசமாக நடப்பதாக மக்கள் புகார் எழுப்பிய நிலையில், சாலையை ஆய்வுசெய்யும் பணியில் சு.வெங்கடேசன் இறங்கினார். இதுவும் தி.மு.க முக்கியப் புள்ளிகளைக் கடுப்பேற்றியுள்ளது. கூட்டணிக் கட்சி எம்.பி-யே இப்படிச் சோதனை நடத்தலாமா... அப்படியானால் மக்கள் தி.மு.க அரசைப் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் என்ன நினைப்பார்கள்?”என்று புலம்பிவருகிறது தி.மு.க அமைச்சர்கள் தரப்பு!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மேற்கு மண்டல அ.தி.மு.க-வில் சில கைது நடவடிக்கைகள் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பே முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் என்னைக் கைதுசெய்ய தி.மு.க திட்டமிட்டுள்ளது’ என்று ஓப்பனாகவே கூறினார். அதற்கு இப்போது சாத்தியம் அதிகமாம்!

* கடல் வளத்தைப் பெருக்கும் துறையில் ‘வித்தியாசமான’ பெயர்கொண்ட பிரமுகரின் தலையீடு ஏகத்துக்கும் இருக்கிறதாம். ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் தொழிலதிபர்களைச் சந்திக்கும் அந்தப் பிரமுகர், துறை மேலிடத்தின் பெயரைச் சொல்லி டெண்டர் விவகாரங்களில் வசூலில் பட்டையைக் கிளப்புகிறாராம். ‘எந்த டெண்டராக இருந்தாலும் ‘இரண்டு பர்சன்ட்’-க்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே ஃபைல் நகரும்’ என்று அந்தப் பிரமுகர் கறார் காட்டுவதால், அரண்டுகிடக்கிறார்கள் தொழிலதிபர்கள்!

சசிகலாவுக்காக தூது!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இறுக்கமான முகம் கலைத்து, கடந்த சில நாள்களாக விருதுநகர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். ‘அண்ணன் இப்பத்தான் பழையபடி மாறியிருக்கார்’ என அவரின் ஆதரவாளர்களும் சந்தோஷத்திலிருக்கிறார்கள். இந்த நிலையில், “ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மேல ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில இருக்காரு. அவரை எப்படியாவது நம்ம பக்கம் இழுத்துட்டா நமக்கு பலம் கூடும்” என்று அ.ம.மு.க-வின் சில முக்கிய நிர்வாகிகள் சசிகலாவிடம் சொல்ல... “அவரை எதுக்கும் பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க. நான் ஆதரவா இருக்கேன். அவரோட போன் காலுக்காகக் காத்திருக்கேன்” என ராஜேந்திர பாலாஜியின் நெருக்கமான நண்பர் ஒருவரிடம் சொல்லி சசிகலா தரப்பில் தூது அனுப்பப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ந்த ராஜேந்திர பாலாஜி, “எனக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போகணுமா? அந்தம்மா சம்பந்தமா எங்கிட்ட எதுவும் பேச வேண்டாம். நானும் யாருகிட்டயும் பேச விரும்பலை” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism