Published:Updated:

மிஸ்டர் கழுகு: வில்லங்க நிறுவனத்துக்கு வரிந்துகட்டுவது யார்? - சுகாதாரத்துறைக்குள் டெண்டர் சர்ச்சை!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

நானும் கவனித்தேன். தொடக்கத்தில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடல் காரில் வலம்வந்தவர், சமீபகாலமாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் காரில் பவனிவந்தார்.

மிஸ்டர் கழுகு: வில்லங்க நிறுவனத்துக்கு வரிந்துகட்டுவது யார்? - சுகாதாரத்துறைக்குள் டெண்டர் சர்ச்சை!

நானும் கவனித்தேன். தொடக்கத்தில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடல் காரில் வலம்வந்தவர், சமீபகாலமாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் காரில் பவனிவந்தார்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

சத்தமின்றி என்ட்ரி கொடுத்த கழுகார், தயாராகிக்கொண்டிருந்த கவர் ஸ்டோரியில் கண்களை ஓடவிட்டார். ‘‘சபாஷ்... நான் சொல்ல நினைத்த அத்தனை தகவல்களையும் உமது நிருபர் படையே கொடுத்துவிட்டதுபோல’’ என்று பாராட்டியவருக்கு, சூடான லெமன் டீயைக் கொடுத்தோம். உறிஞ்சியபடியே மற்ற செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘மத்திய அரசின் கண்காணிப்பில், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கான மருந்துகளைக் கொள்முதல் செய்து தருவது எல்லாமே தமிழகச் சுகாதாரத்துறைதான். கடந்த ஐந்தாண்டுகளாக இ.எஸ்.ஐ நிறுவனத்துக்கான மருத்துவப் பொருள்களை ஒரு நிறுவனமே பெருமளவில் சப்ளை செய்துவந்தது. இந்த நிறுவனத்தின் சப்ளையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக, தமிழ்நாடு இ.எஸ்.ஐ நிர்வாகத்துக்கு, டெல்லி இ.எஸ்.ஐ நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பகத்திலிருந்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. அதுபோக, ‘இந்த முறைகேடுகள் முழுவதுமாக விசாரிக்கப்பட்டு முடிவடையாத வரை, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எந்த மருந்து சப்ளைக்கான ஆர்டரும் வழங்க வேண்டாம்’ என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசுத் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டதாம். ஆனால், அந்த எச்சரிக்கையையும் மீறி அந்த நிறுவனத்துக்கு இ.எஸ்.ஐ மருந்துக் கொள்முதல் டெண்டரை வழங்க அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம்.’’

‘‘ஓஹோ...’’

சபரீசன்
சபரீசன்

‘‘ஜனவரி முதல் வாரத்தில், தமிழ்நாடு இ.எஸ்.ஐ. இயக்குநரகத்திலிருந்தே, ‘அந்த நிறுவனத்துக்கு மருந்து வழங்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று மருந்து கம்பெனிகளுக்கு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். ‘மத்திய அரசின் விசாரணைப் பட்டியலிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு, அதுவும் மருந்துக் கொள்முதல் தடைக்குள்ளான ஒரு நிறுவனத்துக்குச் சாதகமாக சுகாதாரத்துறை நடந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்வி அந்தத் துறைக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது.’’

‘‘சரிதான்... முதல்வர் ஸ்டாலின் சமீபகாலமாகப் புதுப்புது கார்களில் வலம்வருகிறாரே?’’

‘‘நானும் கவனித்தேன். தொடக்கத்தில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடல் காரில் வலம்வந்தவர், சமீபகாலமாக லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் காரில் பவனிவந்தார். தற்போது கறுப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில் வலம்வருகிறார். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கார், அவர் மகள் செந்தாமரை சபரீசன் இயக்குநராகவிருக்கும் ‘ட்ராக்கர் வேவ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்குச் சொந்தமானதாம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், தேசியக்கொடி பொருத்தாத இந்த காரை அவர் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.’’

துரை வைகோ
துரை வைகோ

‘‘சரிதான்... தி.மு.க கூட்டணிச் செய்திகள் ஏதுமிருக்கிறதா?’’

‘‘ம.தி.மு.க-வை தி.மு.க-வுடன் இணைப்பதற்குப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகியிருக்கின்றன. வைகோவின் மகன் துரை வைகோவும், முதல்வரின் மருமகன் சபரீசனும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்களாம். வைகோவுக்கு வயதாகிவிட்டது; உடல்நிலையும் சரியில்லை. கட்சி நடத்தப் பெருந்தொகை தேவைப்படுவதால், தி.மு.க-வில் ஐக்கியமாகிவிடத் தீர்மானித்திருக்கிறதாம் கோவில்பட்டி தலைமை பீடம். இதை வெளிப்படையாகச் சொல்லாமல், ‘பா.ஜ.க-வின் வளர்ச்சியைத் தமிழகத்தில் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், திராவிடக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்’ என்ற கருத்தாக்கத்தில் இந்த இணைப்பு நடைபெறலாம் என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.’’

‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் என்ன பிரச்னை?’’

‘‘சாதியப் பிரச்னையால், திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் வன்முறை வெடிக்கக்கூடிய பதற்றம் நிலவுவதாகச் சொல்கிறார்கள். வீரளூர் சாதிய வன்முறையின் பதற்றமே இன்னும் தணியாத நிலையில், நாயுடுமங்கலம் எனும் கிராமத்தில் 1989-ல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் திறந்துவைத்த ‘அக்னிக் கலச’த்தை ஜனவரி 27-ம் தேதி நள்ளிரவில் வருவாய்த்துறையினர் அகற்றியது, பா.ம.க-வினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாயுடுமங்கலம் கிராமத்துக்கு வந்த வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, ‘பிப்ரவரி 6-ம் தேதிக்குள் அக்னிக் கலசத்தைத் தமிழக அரசு மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். இல்லையென்றால், வடமாவட்டங்களில் போராட்டம் வெடிக்கும்’ என்று எச்சரித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரம் என்பதால், வன்முறைகள் நிகழாமல் தடுக்க, மாவட்டம் முழுவதும் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களைக் காவல்துறையினர் கண்காணித்துவருகிறார்கள்.’’

வேல்முருகன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வேல்முருகன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

‘‘வேல்முருகனுக்கும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும் முட்டிக்கொண்டதாமே?’’

‘‘கடலூர் மாவட்டத்திலிருக்கும் புலியூர்தான் பண்ருட்டி எம்.எல்.ஏ-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகனின் சொந்த ஊர். அந்தப் பஞ்சாயத்துக்குத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களை ஓரங்கட்டிவிட்டு, எம்.எல்.ஏ வேல்முருகனின் சகோதரர் திருமால் வளவன்தான் நிழல் தலைவராக வலம்வருவார். தற்போது தேந்தெடுக்கப்பட்டிருக்கும் தலைவர் மணிவண்ணன், வேல்முருகன் குடும்பத்தினருக்குப் பங்காளி முறை என்பதால் அவர்களுக்குப் பிடிகொடுக்கவில்லை. இதனால், மணிவண்ணன் மீது எஸ்.சி., எஸ்.டி பிரிவில் புகார் கொடுத்து, வழக்கு பதிவுசெய்து கைதுசெய்யும்படி குள்ளஞ்சாவடி காவல் நிலைய எஸ்.ஐ ஷியாம் சுந்தருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ வேல்முருகன். முகாந்திரம் இல்லையென்றாலும் எம்.எல்.ஏ கூறியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்த அந்த எஸ்.ஐ, கைதுசெய்வதற்கு மறுத்துவிட்டாராம். உடனே, இரவோடு இரவாக ஐ.ஜி வரை பேசி, அந்த எஸ்.ஐ-யைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டதாம் எம்.எல்.ஏ தரப்பு. அதையடுத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைச் சந்தித்திருக்கிறார் அந்த எஸ்.ஐ. கடுப்பான அமைச்சர், ஐ.ஜி-க்கு போன் போட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதுடன், ‘என் தொகுதியில் எனக்குத் தெரியாம அரசியல் செய்றீங்களா… யாரைக் கேட்டு அவரை மாத்துனீங்க? ஒரு மணி நேரத்துல அவர் மறுபடியும் அந்த ஸ்டேஷன்ல இருக்கணும்’ என்று கடுகடுத்திருக்கிறார். அதே வேகத்தில் அறிவாலயத்தில் எம்.எல்.ஏ வேல்முருகன் மீதும் புகார் கூறியிருக்கிறது அமைச்சர் தரப்பு. இதையடுத்து அடித்துப் பிடித்துக்கொண்டு அந்த டிரான்ஸ்ஃபர் ஆர்டரைத் திரும்பப் பெற்றிருக்கிறது ஐ.ஜி அலுவலகம்.’’

‘‘சரி, சென்னை மேயர் தி.மு.க வேட்பாளர் யார் என்பது தெரிந்ததா?’’

‘‘அது தெரியவில்லை. ஆனால், தென் சென்னையில் இருந்துதான் பட்டியலினப் பெண் கவுன்சிலர் ஒருவர் மேயராகத் தேர்வாகப்போகிறார் என்பது மட்டும் ஓரளவுக்குத் தெளிவாகிவிட்டது. மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன்தான் இதற்கான வேலைகளைச் செய்துவருகிறார். துணை மேயர் பதவியும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தானாம். இதனால், வட சென்னை மா.செ-க்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ‘அப்ப வட சென்னைக்கு என்னதான் கிடைக்கும்?’ எனக் கேட்கும் அவர்களது கேள்வியும் நியாயம்தானே?’’ என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கூட்டணி இருந்தவரை கோவை மேயர் பதவியை பா.ஜ.க கேட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு சீட் கேட்டார்கள். இப்போது கூட்டணி உடைந்ததால், ‘செலவுக்கு எங்கே செல்வது?’ என்று பா.ஜ.க-வினர் ஓட்டம்பிடிக்கிறார்கள். அ.தி.மு.க தரப்பில் மாஜியின் நிழல் மனிதரான ‘நிலா’ பெயர் கொண்டவரின் மனைவியை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. இப்போது அவரும் பின்வாங்கும் முடிவிலிருப்பதால் மாஜி வட்டாரம் அப்செட்!

* நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். “கொடைக்கானலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்புக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் வாங்கிக் கொடுத்ததில், அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் வினோத். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விஷயம் வெளியில் வந்துவிட, ‘நமக்கு மட்டுமே தெரிந்த விஷயம் எப்படி வெளியானது?’ எனக் கடுப்பான சீமான் தரப்பினர், வினோத்தோடு சண்டைக்குச் சென்றிருக்கிறார்கள். ‘என்னையே சந்தேகப்படுறீங்களா?’ என்று வெகுண்ட வினோத், பாதுகாப்புக்காக தி.மு.க-வில் இணைந்துவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism