அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் உரசும் தி.மு.க

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

தமிழகத்தை நீங்கள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது’ என்று ராகுல் சூடாகிப் பேசிய மறுதினமே, நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி

‘‘தேர்தல் அறிவித்ததுதான் அறிவித்தார்கள்... அத்தனை கட்சிகளிலும் பிரச்னைகள் வெடித்துக் கிளம்புகின்றனவே...’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘சொல்லும்... அப்படி என்ன பிரச்னைகள்?’’ - சூடான வெங்காய பஜ்ஜியை, சட்னியுடன் தட்டில் நிரப்பிக் கொடுத்தோம். மென்றுகொண்டே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘வார்டுகளை ஒதுக்கியது முதல் சீட் வழங்கியது வரை இரண்டு திராவிடக் கட்சிகளிலுமே பிரச்னைகள் வெடித்தபடிதானே இருக்கின்றன. பிப்ரவரி 2-ம் தேதி, அமைச்சர் சேகர் பாபு வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க-வினரே போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 77-வது வார்டில் சி.வேலு என்பவருக்கு சீட் கொடுத்திருக்கிறார் சேகர் பாபு. அவர் 2017-ல் கந்துவட்டி வழக்கு விவகாரத்தில் சிக்கியவராம். அதேபோல், பெரம்பூர் பகுதியில் ஒரு வார்டை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்ததும் தி.மு.க-வினரைக் கொதிப்படையவைத்துவிட்டதாம். இப்படிப் பலரும் ஒவ்வொரு பிரச்னையுடன் சேகர் பாபுவின் வீட்டுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். ‘மீண்டும் அ.தி.மு.க-வுக்கே ஓடு’ என்று கோஷமெல்லாம் போட்டிருக்கிறார்கள். அன்றைய தினம் முழுக்க சேகர் பாபு வீட்டைவிட்டு வெளியில் வரவே இல்லையாம்.’’

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் உரசும் தி.மு.க

‘‘அ.தி.மு.க-வில் என்ன பஞ்சாயத்து?’’

“சைதாப்பேட்டை பகுதியில், 139-வது வார்டில் கடும்பாடி என்பவரை வேட்பாளராக எடப்பாடி - பன்னீர் தரப்பு `டிக்’ செய்த விவகாரத்தில், மாவட்டச் செயலாளர்களுக்கும் தலைமைக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் ஆகியோர்கொண்ட ஐவரணி சொல்பவர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. கடும்பாடியை மாற்றியே ஆக வேண்டுமென பிரஷர் கொடுத்திருக்கிறது ஐவரணி. இரு தரப்புக்குமான வாக்குவாதம் சூடான நிலையில், ஐவரணி சொன்னதைக் கேட்டுக்கொண்டதாம் தலைமை. மத்திய மாவட்டப் புள்ளியின் சிபாரிசுதான் ஐவரணியின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.”

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

‘‘அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளை முடக்கம் செய்திருக்கிறதே அமலாக்கப் பிரிவு?’’

“தி.மு.க தலைமைக்கே இது கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது. மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், 2001 - 06 அ.தி.மு.க ஆட்சியில், அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர்மீது கடந்த 2006-ல் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் கையிலெடுத்து விசாரணை நடத்தி முடித்து, விசாரணை அறிக்கை தயாராகிவிட்டது. இந்நிலையில்தான், அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகளை அதிரடியாக முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை ஏனோ?’’

‘‘அது புரியாமல்தான் தவிக்கிறார்கள் தூத்துக்குடி உடன்பிறப்புகள். உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்டுப்பாட்டிலுள்ள காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இரண்டு நகராட்சிகளைக் கைப்பற்ற வலுவான வேட்பாளர்களைக் களமிறக்கி, மும்முரமாக வேலை பார்த்துவந்த நிலையில், இந்தச் சொத்து முடக்க நடவடிக்கை, அனிதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம். அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கையால் அமைச்சர் பதவி பறிபோகுமோ என்றும் அச்சப்படுகிறாராம். ‘பதவி, சொத்து போனாக்கூடப் பரவாயில்லை. இந்த வழக்குல குடும்பத்தினர் மேல நடவடிக்கை எடுத்துட்டா என்ன செய்யறதுங்கிறதை நினைச்சுத்தான் கவலையா இருக்கு’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பினாராம்.’’

‘‘இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ஆளும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாமே?’’

‘‘ம்! ஏற்கெனவே அவர்கள் இலங்கையில் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறார்கள். அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராஜபக்சே தரப்பு பதவிக்கு வந்தவுடன், இவர்களது முதலீட்டுக்கு நெருக்கடி வந்தது. மத்திய அரசு மூலம் சில மூவ்களைச் செய்து சரிக்கட்டிவந்த நிலையில், இப்போது பொருளாதார நெருக்கடியால் அந்த நாடு சிக்கித் தவித்துவரும் நிலையில், முதலுக்கே மோசம் என்ற நிலை வந்துவிட்டதாம். இதனால், இனி முதலீடுகளை மத்திய ஆசியா பக்கம் கொண்டுபோவதே சரி என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.’’

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் உரசும் தி.மு.க

“ம்ம்... மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டீரா?”

“கேட்டேன். தீப்பிழம்பாகிவிட்டார். ‘தமிழகத்தை நீங்கள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது’ என்று ராகுல் சூடாகிப் பேசிய மறுதினமே, நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி. பதிலடியாக, பிப்ரவரி 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது தமிழக அரசு. முல்லைப்பெரியாறு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். மாநில உரிமை சார்ந்த விவகாரங்களில், மத்திய அரசோடு தீவிரமாக உரச ஆரம்பித்திருக்கிறது தி.மு.க அரசு. டெல்லியுடனான இந்த மோதல் இனி வீரியமடையவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்” என்ற கழுகார் சிறகை விரித்துப் பறந்தார்.

****

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் உரசும் தி.மு.க

ஆறுமுக நயினார் மீது நடவடிக்கை... ஷாக் துரைமுருகன்!

புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் விழுப்புரம் மண்டல இணை இயக்குநர், ஆறுமுக நயினார். இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் இவர் சம்பந்தப்பட்ட இடங்களில் பிப்ரவரி 2-ம் தேதி ரெய்டு நடத்தி, பல ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. மதுரையில் நடந்த கிரானைட் குவாரிகள் மோசடிகளில் இவர் பெயர் அடிப்பட்டு, சகாயம் கமிஷனால் இவர் விசாரிக்கப்பட்டார். அப்போதே பல கோடி சொத்து சேர்த்திருக்கிறார் என்று பேச்சு உலவியது. தி.மு.க ஆட்சியில் இவர்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக அமைச்சர் துரைமுருகனுக்கு பி.ஏ-வாக இவர் சேர்ந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிறகு, விழுப்புரம் மண்டலச் சுரங்கத்துறை இணை இயக்குநராக ஆறுமுக நயினார் நியமிக்கப்பட்டாலும் ,துரைமுருகனுடன் நெருக்கமாகவே இருந்துவந்திருக்கிறார். இந்நிலையில், இந்த ரெய்டு நடவடிக்கை, துரைமுருகனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

தேர்தலுக்குப் பிறகு கல்யாணத்தை நடத்திக்கொள்ளுங்கள்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சமூக நலக் கூடங்களை, திருமண விழாக்களுக்காகப் பொதுமக்கள் ‘புக்’ செய்துவைத்திருந்தனர். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தச் சமூக நலக்கூடங்களில்தான் பாதுகாப்பாக வைப்பது வழக்கமாம். இதற்காக, சமூக நலக்கூடங்களை புக் செய்திருந்தவர்களிடம், ‘தேர்தல் முடிந்த பிறகு கல்யாணத்தை நடத்திக்கொள்ளுங்கள். இப்போதைக்குச் சமூக நலக்கூடங்கள் தரப்பட மாட்டாது’ என்று குண்டை வீசியிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். ‘புக் செய்வதற்காக அளித்த பணத்தையாவது திருப்பித் தாருங்கள்’ என்று பொதுமக்கள் கேட்டதற்கு, ‘எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகுதான் சாத்தியம்’ என்று கைவிரித்திருக்கிறது அதிகாரிகள் தரப்பு. சமூக நலக்கூடங்களை புக் செய்தவர்களெல்லாம் விக்கித்துப்போயிருக்கிறார்கள்!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வட மாவட்ட மாநகராட்சி மேயர் பதவியை, தங்களது அன்புக்குரியவர் களுக்காகக் காய்நகர்த்துகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர். அதிலும், சட்டப்பேரவைக்குச் சென்றுவரும் ஆளுங்கட்சிப் புள்ளியோ, மகளிரணிப் பிரமுகருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, மேயர் பதவிக்காக ஓவராகவே ‘தம்’ கட்டுகிறாராம்!

* கோவை மேயர் கனவுடன் வலம்வந்தார் ஆளுங்கட்சியின் மாநிலப் பெண் நிர்வாகி ஒருவர். இனிஷியல் அமைச்சருக்கு நெருக்கமாக இருந்தும் அந்தப் பெண் நிர்வாகிக்கு சீட்டே வழங்கவில்லை தி.மு.க தலைமை. அதீத நம்பிக்கையில் தேர்தல் பணிமனை தொடங்கி, பிரசாரமும் செய்திருக்கிறார் அந்தப் பெண்மணி. ஆனால், ‘இவருக்கு வாய்ப்பளித்தால் இனிஷியல் அமைச்சரின் தலையீடு கொங்கு மண்டலத்தில் அதிகமாகிவிடும்’ என்று தலைமையிடம் பற்றவைத்து, காரியத்தை முடித்துவிட்டாராம் அணில் அமைச்சர்!