Published:Updated:

மிஸ்டர் கழுகு: கலெக்டர்களை மிரட்டி கலெக்‌ஷன்! - போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்...

வைகோ
பிரீமியம் ஸ்டோரி
News
வைகோ

மடியில் கனம் இருக்கும் சிலர் பயப்படத்தானே செய்வார்கள்... சில நாள்களில் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களை சீனி என்பவர் தொடர்புகொள்கிறாராம்.

சிறகுகளைச் சிலுப்பியபடியே வந்தமர்ந்தார் கழுகார். சூடான மொறுமொறு சமோசாக்களைத் தந்தவர், ‘‘ஸ்வீட் பாக்ஸ்களை மீட்பதற்குள் ஆட்சியாளர்கள் படாதபாடு பட்டுவிட்டார்களாம்!” என்றபடி விறுவிறு செய்திகளுக்குள் புகுந்தார்.

“தேர்தல் நெருங்குவதால், ஸ்வீட் பாக்ஸ்களுக்கு பஞ்சமிருக்காது... நீர் சொல்வது எந்த ஊர் ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்?”

‘‘எல்லாம் தஞ்சாவூர் விவகாரம்தான்... மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க தலைமை கொடுத்துவைத்திருந்ததாகக் கூறப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்களைத் தோண்டியெடுத்து, மற்றோர் அமைச்சரிடம் ஒப்படைத்திருந்தார்களாம். திடீரென அவரும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிடவும் தலைமை பதறிப்போனதாம். நல்லவேளையாக, அந்த அமைச்சர் உடல்நலம் தேறிவிட்டதால், நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அ.தி.மு.க தலைமை, அந்த ஸ்வீட் பாக்ஸ்களை இடம் மாற்றி வைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறதாம்.’’

‘‘மன்னார்குடி உறவுகள் சசிகலாவை வரவேற்க மும்முரமாகத் தயாராகின்றனபோல..!”

‘‘ஆமாம். பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றபோது, அவருக்கு உதவியாக திவாகரனின் மாப்பிள்ளை டாக்டர் விக்ரமன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர். அப்போதும் சரி... தற்போது சசிகலா தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸிலும் சரி... முக்கியப் பிரமுகர்கள் யாரையும் சசிகலாவை நெருங்கவிடவில்லையாம். சென்னைக்கு வரும் சசிகலா, சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு டெல்டா பக்கம் செல்லவிருப்பதாகப் பேச்சு ஓடுகிறது. ‘சசிகலா எங்கள் வீட்டில்தான் தங்கப்போகிறார்’ என்று திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், ம.நடராஜனின் அண்ணன் சாமிநாதனின் குடும்பத்தினர் என ஆளாளுக்குப் போட்டி போடுகிறார்கள். விளார் கிராமத்திலுள்ள வீட்டை சசிகலா தங்குவதற்காக வாஸ்து முறைப்படி மாற்றியமைத்திருக்கிறது சாமிநாதனின் குடும்பம். தஞ்சாவூரிலிருக்கும் நடராஜனின் வீடும் சசிகலாவுக்காகத் தயாராகிறது.’’

மிஸ்டர் கழுகு: கலெக்டர்களை மிரட்டி கலெக்‌ஷன்! - போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்...

‘‘எடப்பாடி சும்மா இருப்பாரா... என்ன?”

‘‘அவர் எப்படி சும்மா இருப்பார்! மன்னார்குடி உறவுகளுடன் தொடர்பிலிருக்கும் கட்சிப் பிரமுகர்களிடம், ‘இப்போதே ஆட ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் அவர்களிடம் அடிமையாக இருக்கப்போகிறீர்களா?’ என்று தூபமிட்டிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. கூடவே, பசையான விஷயங்களுக்கும் ஆசை காட்டப்பட்டிருக்கிறது. இதனால், சலனத்திலிருக்கிறார்களாம் சில கட்சி பிரமுகர்கள்...’’

‘‘ம்ம்... பிப்ரவரி 3-ம் தேதி தாயகத்தில் நடந்த ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்?’’

‘‘வைகோவின் மகன் துரை வையாபுரிக்குக் கட்சிப் பொறுப்பு அளிக்க வேண்டுமென தஞ்சாவூர் ஆடுதுறை முருகன், துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மணி ஆகியோர் கூறியிருக்கிறார்கள். அதற்கு வைகோ, ‘கட்சியில் இளைஞர்களுக்கு நிச்சயமாக வாய்ப்புகளைக் கொடுப்போம். தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சுவோம்’ என்று சொல்லியிருக்கிறார். வைகோவின் பேச்சைப் பார்த்தால், தேர்தலுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் துரை வைகோவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்படலாம் என்கிறது ம.தி.மு.க வட்டாரம்.’’

மிஸ்டர் கழுகு: கலெக்டர்களை மிரட்டி கலெக்‌ஷன்! - போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்...

‘‘மற்றொரு வாரிசு தமிழக அரசியலில் உதயமாகிறது என்று சொல்லும்!”

‘‘வாரிசு என்றதும் நினைவுக்கு வருகிறது... தி.மு.க-வில் வாரிசு தொடர்பான பேச்சு ஒன்று கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க துணைச்செயலாளர் சுந்தரேசன், ‘தி.மு.க-வில் வாரிசு அரசியல் தாண்டவமாடுகிறது’ என்று பேசிய வீடியோ ஒன்று கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்திவிட்டது. ‘உதயநிதியை மனதில் வைத்துத்தான் அவர் அப்படிப் பேசினார்’ என்று கொந்தளிக்கிறது கிச்சன் கேபினெட். இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பினால் என்ன செய்வது என்று பதற்றமான கட்சித் தலைமை, சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.’’

“சரிதான்... அறிவாலயத்தில் கூட்டம் அலைமோதுகிறதே!”

“பிப்ரவரி மாதம் இறுதியில் விருப்ப மனுக்களை வாங்குவதற்கு அறிவாலயம் ஆயத்தமாகிறது. பிப்ரவரி 22-ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது. ஒரு வாரம் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஆளும்தரப்பு. இதன் தொடர்ச்சியாக, மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும் என்கிறார்கள். அதற்கு முன்னதாக விருப்ப மனு வாங்கும் படலத்தை முடித்துவிட்டு, மார்ச் மாதம் மூன்றாவது வாரத்துக்குள் வேட்பாளர்களையும் அறிவிக்கத் தயாராகிவருகிறது தி.மு.க” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை அளித்தோம். டீயைச் சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘சென்னையைச் சுற்றியிருக்கும் சில மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை, சிப்காட் உள்ளிட்டவற்றுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் வேலைகள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ-யின் பெயரைச் சொல்லி ஒரு டீம் பல கோடி ரூபாய் பணம் பார்க்கிறதாம். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு சி.பி.ஐ-யிலிருந்து பேசுவதாக போனைப் போடும் இந்த டீம், ‘உங்கள்மீது புகார் வந்துள்ளது’ என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். அரண்டுபோகும் ஆட்சியர்கள், கொஞ்சம் பம்மினால் போதும்... உடனே, ‘ஒன்றும் பிரச்னையில்லை. எங்களுக்கு வேண்டிய நபர் உங்களைப் பார்க்க வருவார். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று சிக்னல் காட்டிவிடுகிறதாம்.”

“அடேங்கப்பா... ஆட்சியர்களையே மிரட்டுகிறார்களா... அதிர்ச்சியாக இருக்கிறதே!”

“மடியில் கனம் இருக்கும் சிலர் பயப்படத்தானே செய்வார்கள்... சில நாள்களில் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களை சீனி என்பவர் தொடர்புகொள்கிறாராம். சென்னையில் நட்சத்திர விடுதியில் அறையெடுத்து தங்கியிருக்கும் சீனி, ‘உங்களுக்கு சி.பி.ஐ-யால் எந்தப் பிரச்னையும் வராது. அரசு கையகப்படுத்தும் இடத்துக்கான க்ளியரன்ஸ் மட்டும் கொடுத்துவிடுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று டீல் பேசுகிறாராம். வழக்கமாக இந்த க்ளியரன்ஸ் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. தனியாரிடமிருந்து நிலங்களை வாங்கி, அதை அரசுக்கு இரண்டு மடங்கு மதிப்பிட்டுக் கொடுப்பதில் பல கோடி ரூபாயை நிலத் தரகர்கள் லாபம் பார்ப்பார்கள். இப்படிக் கூடுதல் விலையில் மதிப்பீடு செய்வதற்கு க்ளியரன்ஸ் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களிடம் இருக்கிறது. இதற்காகத்தான் மாவட்ட ஆட்சியர்களை சி.பி.ஐ போல் மிரட்டி, பல கோப்புகளில் கையெழுத்து வாங்கியிருக்கிறது சீனி டீம். தற்போது விவகாரம் வெளியே கசிய ஆரம்பித்ததும், சீனியின் ஜாதகத்தை நோண்ட ஆரம்பித்திருக்கிறது காவல்துறை. இவர் உடுமலைப்பேட்டையில் இதேபோல் மோசடியில் சிக்கியவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறதாம். விரைவில் விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள்.”

“ம்ம்...”

மிஸ்டர் கழுகு: கலெக்டர்களை மிரட்டி கலெக்‌ஷன்! - போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்...

“சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்று புதிதாக பெயர் சூட்டியிருப்பதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கட்டட நிறுவனமான பாஷ்யம், ஆளும்தரப்புக்கு நெருக்கமானதாக அறியப்படுகிறது. சில நாள்களாக கோயம்பேடு பாலத்தில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்று அங்கு எழுதியதைத்தான் வைகோ கண்டித்திருக்கிறார். மேலும் அவர், ‘யார் இந்த பாஷ்யம்... கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாரா... தமிழ்நாட்டுக்கு ஏதேனும் தியாகம் செய்திருக்கிறாரா? திருவனந்தபுரம் ஏர்போர்ட் பராமரிப்பு பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்ததை கேரள அரசு கண்டித்தது. வீட்டுக்கு வண்ணம் பூச வருபவர்கள், வீட்டு முகப்பில் தன் பெயரை எழுதிக்கொண்டால் அனுமதிக்க முடியுமா?’ என்று கொந்தளித்திருக்கிறார். ஏற்கெனவே, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் முத்தூட் நிறுவனத்தின் பெயர் வைக்கப்பட்டபோது, தனியாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், கோயம்பேடு மெட்ரோ விவகாரத்தில் மெட்ரோ நிலையத்துக்கே பாஷ்யத்தின் பெயரைச் சூட்டியதால் சர்ச்சை வெடித்திருக்கிறது.’’

‘‘ஓஹோ...’’

மிஸ்டர் கழுகு: கலெக்டர்களை மிரட்டி கலெக்‌ஷன்! - போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்...

‘‘ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து இத்தனை காலம் மௌனம் காத்ததற்கு, டெல்லியிலிருந்து வந்த சிக்னலே காரணம் என்கிறார்கள். ‘இந்த விவகாரத்தில் நாம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நீதிமன்றம் மூலமே முடிவைக் கண்டுகொள்ளட்டும்’ என்று சொல்லிவிட்டதாம் டெல்லி. இதையடுத்துதான் பிப்ரவரி 4-ம் தேதி இரவு, எழுவர் விடுதலையை நிராகரித்துவிட்டாராம் ஆளுநர்” என்ற கழுகார் புறப்படுவதற்கு முன்னதாக,

‘‘இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறதே பார்த்தீரா..? தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த மணல் லாரி உரிமையாளர்களான விக்னேஷ்வரன், விவேக் மற்றும் அவரின் நண்பர்கள்தான் தங்களிடம் வேலை செய்த ராகுல் என்ற இளைஞரை கட்டிவைத்து அடித்திருக்கிறார்கள். பிறகு அம்மணமாக்கி, அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் ராகுல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராம். அவரை அடித்தவர்கள் அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசியதற்காக இந்த தண்டனையாம். இதனால் விரக்தியடைந்த ராகுல் தற்கொலை முயற்சி வரை சென்றும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை காவல்துறை. வீடியோ வைரலான பிறகே அவசரமாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கலாம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.