Published:Updated:

மிஸ்டர் கழுகு: பெண் தொழிலதிபர் வாக்குமூலம்... வேலுமணிக்கு சிக்கலா?

வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

செய்தித்துறையின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு விரைவில் பதவிக்காலம் நிறைவடைகிறது. அவரோ இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: பெண் தொழிலதிபர் வாக்குமூலம்... வேலுமணிக்கு சிக்கலா?

செய்தித்துறையின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு விரைவில் பதவிக்காலம் நிறைவடைகிறது. அவரோ இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

Published:Updated:
வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

“காணொலி வாயிலாக தி.மு.க தலைவர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டாரே...” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகார், கவர் ஸ்டோரியில் பார்வையை ஓட்டியபடியே, “இப்படி எல்லாவற்றையும் கவர் செய்துவிட்டால், நான் எதைத்தான் சொல்வது... ஆனாலும் உமது நிருபர் டீமுக்கு சபாஷ்!” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார்...

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்து, 5-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. பிப்ரவரி 7-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறும் கடைசி நாளும் முடிந்துவிட்டது. இந்தப் பரிசீலனையின்போது திண்டுக்கல், தூத்துக்குடி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பேரூராட்சிகள், நகராட்சிகளில் அ.தி.மு.க-வினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்னொரு பக்கம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், வெளி ஆட்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த உள்ளூர் நிர்வாகிகள், கட்சிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள். இதனால், விழிபிதுங்கிக் கிடக்கிறது அ.தி.மு.க வட்டாரம்.”

“தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லும்... டி.ஜி.பி-யுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறாரே?”

“எல்லாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்தான். தி.மு.க-விலும் கட்சி நிறுத்திய வேட்பாளர்களை எதிர்த்து சொந்தக் கட்சியினர் பலரும் சுயேச்சையாகக் களம் காண்கிறார்கள். உதாரணத்துக்கு, சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வார்டுகளில் கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கும், அதிருப்தி வேட்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கிடையே பா.ஜ.க வேறு ‘துணை ராணுவப் பாதுகாப்பு வேண்டும்’ என்று கேட்டிருக்கிறது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டு, துணை ராணுவம் வந்து தலையிட்டால் தமிழக காவல்துறைக்கு தலைக்குனிவு ஏற்படும் என்பதால், தேர்தல் நேரத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: பெண் தொழிலதிபர் வாக்குமூலம்... வேலுமணிக்கு சிக்கலா?

“காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டிருப்பது இருக்கட்டும்... ஆளுங்கட்சியினரே தலைவரின் உத்தரவை மதிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்திருக்கிறதே?”

“ஆமாம்... ‘குற்றப்பின்னணி இருப்பவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டாம். கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள். உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்’ என்றெல்லாம் கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்கள், கட்சி உறுப்பினர் அட்டையே இல்லாதவர்கள் என வேட்பாளர் தேர்வில் அமைச்சரும், எம்.எல்.ஏ தரப்பும் புகுந்து விளையாடிவிட்டனராம். மூத்த நிர்வாகிகள் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எதிர்த்து கேட்டவர்களிடம், ‘தலைமை, எல்லாப் பொறுப்புகளையும் எங்களிடம்தான் கொடுத்திருக்கிறது. யாரும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை’ என்று அதட்டியிருக்கிறார்கள். நொந்துபோன உடன்பிறப்புகள் அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறார்கள்!”

“தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜமப்பா... அது சரி, கோட்டையில் ஏதும் விசேஷம் உண்டா?”

“ஏன் இல்லாமல்... செய்தித்துறையின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு விரைவில் பதவிக்காலம் நிறைவடைகிறது. அவரோ இரண்டாண்டுகள் பதவி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அந்த அதிகாரிக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டாம் என்று கோட்டையின் முக்கிய அதிகாரி தரப்பிலிருந்தே முதல்வர் அலுவலகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே, அ.தி.மு.க ஆட்சியில் ‘அழகு’ நபருக்கு இதே போன்று பதவி நீட்டிப்பு கொடுத்தபோது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதே போன்று இவர் விஷயத்திலும் நடந்துவிடக் கூடாது என்று அந்த அதிகாரி எச்சரித்திருக்கிறாராம்.”

“டாஸ்மாக் பார் விவகாரம் ஓயாது போலிருக்கிறதே!”

“ஆமாம்... ‘டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சில்லறை விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதியுண்டு; பார்களுக்கு டெண்டர்விட அனுமதியில்லை’ என்று சொல்லியிருக்கிறது உயர் நீதிமன்றம். மேலும், ‘பார்களை ஊக்குவிக்க விரும்பினால், உரிய சட்டத் திருத்தத்தை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்; இல்லையெனில் பார்களை மூட வேண்டும்’ என்றும் அதிரடி காட்டியிருக்கிறது நீதிமன்றம். அதேசமயம், பார்களை மூடுவதால் சில பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் டாஸ்மாக் வட்டாரத்தில். பார்கள் இல்லையெனில், சாலை ஓரங்களிலேயே குடிப்பார்கள்; காலி இடம், விளையாட்டுத் திடல் என்று எந்த இடத்தையும் விட மாட்டார்கள். இதனால், சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். தமிழகத்தில் பெரும்பாலான மதுக்கடைகளுக்கு பாரோடு சேர்த்து வாடகைக்கு இடம்பிடித்துக் கொடுத்திருப்பதே பார் உரிமையாளர்கள்தான். பார் இருந்தால்தான் மதுக்கடையும் இருக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை உள்ளது. ஒருவேளை பார்கள் மூடப்படுமானால், மதுக்கடைகளையும் தற்காலிகமாக மூட நேரிடும். அடுத்த இடம் பார்த்து கடைவைப்பதற்குச் சிலகாலம் பிடிக்கும். இது வருவாய்க்கே வேட்டுவைத்துவிடும் என்று அரசு தரப்பு யோசிக்கிறது!”

“ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் நிர்வாகத்தையே சீரமைக்க வேண்டும் என்று சொல்லும்... அது சரி, நீட் விவகாரத்தில் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க ஏன் கலந்துகொள்ளவில்லை?”

“பிப்ரவரி 5 அன்று நடந்த கூட்டத்துக்கு முதல் நாள் வரை ‘கூட்டத்துக்குப் போவதா, வேண்டாமா?’ என்று அ.தி.மு.க தலைமைக்குள்ளே இரு வேறு கருத்துகள் நிலவின. கடைசியில் எடப்பாடிதான், ‘தி.மு.க இந்த விவகாரத்தைவைத்து ஸ்கோர் செய்துவிடும். ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் நாம் கலந்துகொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்தில் புதிதாக ஒன்றும் செய்துவிட மாட்டார்கள். பா.ஜ.க வேறு நம்மீது வருத்தத்தில் இருக்கிறது. இப்போது கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க-வின் கோபத்தையும் அதிகமாக்கிக்கொள்ள வேண்டாம். நீட்டுக்கு எதிரான நமது கருத்தை அறிக்கையாக மட்டும் கொடுப்போம்’ என்று சொல்லி விவகாரத்தை முடித்துவைத்துள்ளார்.”

“ஓஹோ... பெண் தொழிலதிபரைவைத்து மாஜி அமைச்சருக்கு செக் வைத்திருக்கிறார்களே?”

“வேலுமணி விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... அவரது இடங்களில் ரெய்டு நடந்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் கோவைக்குச் சென்ற மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், வேலுமணிக்கு வேண்டப்பட்ட பிரபல பெண் தொழிலதிபரைச் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தொடர்ந்து அந்தப் பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்தவர், ஆளும் தரப்புக்கு நெருக்கமானவர்களிடம் வேலுமணி தொடர்பான சீக்ரெட் தகவல்களை வாக்குமூலம்போல ஒப்பிக்கவைத்துவிட்டார். தேர்தல் முடியட்டும் என்று காத்திருக்கிறது ஆளும் தரப்பு!” என்ற கழுகாருக்கு, சூடாக ஃபில்டர் காபி கொடுத்தோம். காபியைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

“செந்தில் பாலாஜிக்கு எதிராக கோவை தி.மு.க-வில் பகிரங்கமாக எதிர்ப்பு வெடித்திருக்கிறது. அங்கு மாவட்டப் பொறுப்பாளர்களின் உள்ளடி வேலைகளால் தினம் தினம் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் பார் டெண்டர், கரூர் உடன்பிறப்புகளின் ஆதிக்கம் ஆகிய விவகாரங்களால் கடுப்பில் இருந்த உள்ளூர் நிர்வாகிகள், தற்போது வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். பிப்ரவரி 5-ம் தேதி பொள்ளாச்சியில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்துக்கு வந்த செந்தில் பாலாஜியின் காரைச் சுற்றிவளைத்த உடன்பிறப்புகள், கொடியைப் பிடுங்கி, காரை பலமாகத் தட்டத் தொடங்கிவிட்டனர். அதிர்ச்சியடைந்த செந்தில் பாலாஜி, ‘தொலைச்சுப்புடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். விரைவில் கொங்கு ஏரியாவில் உட்கட்சிக் கலகம் பெரிதாக வெடிக்கலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

தினகரனிடம் ரகசியப் பேச்சுவார்த்தை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜும், அ.ம.மு.க திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜும் சமீபகாலம் வரை எதிரும் புதிருமாக வலம்வந்தார்கள். இந்த நிலையில், கடந்த வாரம் தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த எஸ்.காமராஜின் மகள் திருமண விழாவில் ஆர்.காமராஜ், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சம்பந்தி தவமணி ஆகியோர் கலந்துகொண்டனர். தவமணி மட்டும் தினகரனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் அ.தி.மு.க வெற்றிபெற உதவ வேண்டும் என்று தினகரனிடம் ஏற்கெனவே ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். அதன் வெளிப்பாடாகவே எஸ்.காமராஜ் இல்லத் திருமணத்தில் ஆர்.காமராஜ் கலந்துகொண்டார் என்கிறார்கள்!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கடந்த வாரம் ஆளும் தரப்பின் வாரிசுப் பிரமுகர்கள் அரபு தேசத்துக்கு விசிட் செய்து, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துள்ளனர். இந்தப் பயணம் குறித்தும், இவர்கள் யாருடனெல்லாம் சந்திப்பு நடத்தினார்கள் என்பது குறித்தும் மத்திய உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறதாம் டெல்லி.

* சிவில் சர்வீஸ் சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைப்படுத்தியவுடன் தமிழகத்திலிருந்து மூத்த டி.ஜி.பி ஒருவரை வடகிழக்கு மாநிலத்துக்குத் தூக்கியடிக்க வேண்டும் என்று துடிக்கிறது டெல்லி. இரண்டாம் இடத்திலிருக்கும் உச்சப் பிரமுகர் பழைய பகையை மறக்காததே இதற்குக் காரணமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism