Published:Updated:

மிஸ்டர் கழுகு: மீண்டும் வெடிக்கும் போன் டேப் விவகாரம்! - கண்காணிப்பு வளையத்தில் அதிகாரிகள்...

சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபை

எல்லாம் பட்ஜெட் தயாரிப்புப் பணிதான்... உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: மீண்டும் வெடிக்கும் போன் டேப் விவகாரம்! - கண்காணிப்பு வளையத்தில் அதிகாரிகள்...

எல்லாம் பட்ஜெட் தயாரிப்புப் பணிதான்... உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
சட்டசபை
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபை

எப்போதுமே கலகலப்பாக என்ட்ரி கொடுக்கும் கழுகார் முகத்தில் கவலை ரேகைகள்... ‘‘ஏனிந்த சோகம்?’’ என்று நாம் கேட்க, ‘‘புதுக்கோட்டையில் முடிவெட்டும் சலூன்களில்கூட சாதியப் பாகுபாடு பார்க்கப்படுவது வேதனையான விஷயம்... உயர் நீதிமன்ற மதுரைக் கிளையே கண்டித்திருக்கும் இந்தத் தீண்டாமை விரைவில் அகற்றப்பட வேண்டும்’’ என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘நீட் விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது. பிப்ரவரி 8-ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி, மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்திருக் கிறார்கள். ‘இம்முறை ஆளுநர் அதைத் திருப்பி அனுப்ப வாய்ப்பு இல்லை; குடியரசுத் தலைவருக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும்’ என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையே சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில்

அ.தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் மோதிக்கொண்டதுதான் சுவாரஸ்யம். ‘நீட் என்ற வார்த்தையை 2010-ம் ஆண்டு காங்கிரஸ் அரசுதான் அறிமுகப்படுத்தியது’ என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர், அரசு கெஸட்டைக் கையில் வைத்துக்கொண்டு பேச... இதற்கு காங்கிரஸ்

எம்.எல்.ஏ-க்கள் கூச்சல் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும், ‘நகராட்சித் தேர்தல் நேரத்தில், விஜயபாஸ்கரை முழுமையாகப் பேசவிட்டிருந்தால் முதலுக்கே மோசமாகியிருக்கும்... நல்லவேளையாக அமுங்கிப்போனது...’ என்று காங்கிரஸ் கட்சியினரே நிம்மதிப் பெருமூச்சுவிட்டது தனிக்கதை.’’

மிஸ்டர் கழுகு: மீண்டும் வெடிக்கும் போன் டேப் விவகாரம்! - கண்காணிப்பு வளையத்தில் அதிகாரிகள்...

‘‘கதர்கள் என்றாலே காமெடிதானா... அது சரி, தி.மு.க-வும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறதே!’’

‘‘ஆமாம், ஒருகட்டத்தில் விஜயபாஸ்கர் நீட் விவகாரத்திலுள்ள சட்டச் சிக்கலைக் குறிப்பிட்டுப் பேசினார். உடனே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு ‘நீங்கள் எதற்காக இந்தச் சட்டச் சிக்கலை தீர்க்கவில்லை?’ என்று சூட்டைக் கிளப்பினார். விவகாரம் திசை மாறிச் செல்வதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனிடம் சைகை காட்ட... அவர் எழுந்து பழனிவேல் தியாகராஜனை ஆஃப் செய்துவிட்டு, விஜயபாஸ்கரை சீக்கிரம் பேச்சை முடிக்கச் சொல்லியிருக்கிறார். இந்தத் தீர்மானம் நிறைவேறுவதில் எந்த ரூபத்திலும் சிக்கல் வந்துவிடக் கூடாது; நடுவே யாரும் குட்டையைக் குழப்பிவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டியிருக்கிறார் ஸ்டாலின். இத்தனைக்கும் பேரவைக் கூட்டம் தொடங்கும் முன்பே சபாநாயகரை அவரது அறையில் சந்தித்து, அமைதியாகக் கூட்டத்தைக் கொண்டுசெல்லுங்கள் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.’’

‘‘இரட்டைத் தலைமைக்குள் மீண்டும் பிரச்னையாமே?’’

‘‘ம்க்கும்... எப்போதுதான் அவர்களுக்குள் பிரச்னை இல்லாமல் இருந்தது! கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்தான் என்றாலும் வட்ட, நகர, பகுதி, ஒன்றியச் செயலாளர்கள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் எடப்பாடியிடம்தான் தேர்தல் விவகாரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இதுவே பன்னீருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பா.ஜ.க-வுடன் கூட்டணியை உதறியதே பன்னீருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் தன்மீது எந்தப் பழியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரின் மகன் ரவீந்திரநாத்தை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசவைத்தாராம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் ஒதுக்கிய விவகாரத்திலும், தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக வருத்தத்தில் இருக்கிறார் பன்னீர்!”

‘‘கோட்டையில் நிதித்துறை பரபரப்பாக இயங்குகிறதே... என்ன விசேஷம்?”

‘‘எல்லாம் பட்ஜெட் தயாரிப்புப் பணிதான்... உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் நிதி நெருக்கடியை மனதில்வைத்து பட்ஜெட் தயார் செய்யப்படுவதால், மாநில வரி வருவாயைப் பெருக்க முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அதனால், வரியுடன்கூடிய பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்கிறார்கள் நிதித்துறை வட்டாரத்தில். குறிப்பாக வணிக வரித்துறை மூலம் வரவேண்டிய நிதி வருவாய் முறையாக வராமல் இருப்பதால், அந்தத் துறைக்குள் வரி விதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது!”

“ஓஹோ!’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியபோதே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பட்ஜெட்டுக்கு முன்பாகவே தேர்தலை முடித்துவிடுங்கள்’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதாவது பட்ஜெட்டில் வரி ஏற்றம் இருக்கப்போகிறது என்பதை முன்னரே முதல்வரிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். அதேபோல் பல்வேறு துறைகளில் வரி வசூல் செய்த பணம் கஜானாவுக்கு வந்து சேர்வதில்லை என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால், அனைத்துத் துறைகளிலும் வரி வசூலை டிஜிட்டல்மயமாக்கவும் உத்தரவு வரப்போகிறது.’’

‘‘வரி விதித்து கஜானாவை நிரப்புவதெல்லாம் இருக்கட்டும்... ஏற்கெனவே தருவதாகச் சொன்ன பணம் கஜானாவிலிருந்து வெளிவருமா?”

அண்ணாமலை
அண்ணாமலை

“குடும்பத் தலைவிகளுக்குத் தருவதாகச் சொன்ன ஆயிரம் ரூபாய் அறிவிப்புதானே... கஜானாவில் ஏதாவது இருந்தால்தானே வெளியே எடுக்க முடியும்... இது பற்றிப் பேச்சு வந்தபோது நிதியமைச்சர் ம்ஹூம்’ சொல்லிவிட்டாராம். அதற்கு பதிலாக முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் சில தளர்வுகளை அறிவிக்கவிருக்கிறார்கள். முன்பு முதியோர் உதவித்தொகையான ஆயிரம் ரூபாயைப் பெற ஏகப்பட்ட நிபந்தனைகள் இருந்தன. இந்த நிலையில் 60 வயதைக் கடந்தவர்கள் விண்ணப்பித்தாலே மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கலாம் என்கிற அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்!” என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியைக் கொடுத்தோம்... ருசித்துப் பருகியவர் அதே சூட்டுடன் செய்திகளைத் தொடர்ந்தார்...

‘‘தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு பிரச்னை வந்துவிடுமோ என்று தமிழக அரசு பதறிப்போனது. ஆனால், ஐந்து மணி நேரத்தில் குண்டு வீசியவர் என்று ஒருவரைக் கொண்டுவந்து காவல்துறை நிறுத்தியதால், அரசுத் தரப்பு சற்றே பெருமூச்சுவிட்டது. ஆனாலும், விவகாரத்தை அவ்வளவு சீக்கிரம் பா.ஜ.க விடாதுபோலிருக்கிறது... ‘காவல்துறை கைதுசெய்தது உண்மையான குற்றவாளியா?’ என்ற சந்தேகத்தை கிளப்பிய பா.ஜ.க., ‘எங்கள் அலுவலகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளில் சரியாகத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளார்கள். இதனால் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது’ என்கிறார்கள்.’’

‘‘அது மட்டுமா... தனது போன், டேப் செய்யப்படுவதாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புலம்பியிருக்கிறாரே?’’

‘‘சமீபகாலமாக தமிழக அரசு அதிகாரிகள் சிலர் அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டுவதாக அரசுத் தரப்பு சந்தேகப்பட்டது. இது பற்றி தமிழக உளவுத்துறை விசாரித்ததில், அண்ணாமலையுடன் அதிகாரிகள் சிலர் பேசிய விவகாரங்கள் தெரியவந்தன. இதையடுத்து, அந்த அதிகாரிகளைக் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்திருக்கிறது உளவுத்துறை. இதைத் தொடர்ந்தே, ‘எனது போனை தமிழக அரசு ஒட்டுக்கேட்கிறது’ என்ற குற்றச்சாட்டை வீசியிருக்கிறார் அண்ணாமலை. இந்த விவகாரம் விரைவில் வேறு ரூபத்தில் வெடிக்கலாம் என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.”

‘‘இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஆள்பிடிப்பு வேலையில் மும்முரமாக இருக்கிறதே பா.ஜ.க?”

‘‘ஆமாம்... அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறிய பிறகு அ.தி.மு.க-விலிருந்தே ஆட்களை ஹைஜாக் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க தலைமையால் ஓரங்கட்டப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. கொங்கு மண்டலத்தில் பலமாக உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், பா.ஜ.க நெட்வொர்க்கில் நெருக்கமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த நிலையில், அவரின் சகோதரரை பா.ஜ.க-வில் இணைத்துக்கொள்ள ‘அன்பாக’ தூது விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சகோதரர் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பா.ஜ.க விஷயத்தில் கூடுதல் தகவல் ஒன்றையும் சொல்கிறேன்... தமிழக பா.ஜ.க-வுக்கு, பிரத்யேகமாக தினசரி நாளிதழும், தொலைக்காட்சி சேனலும் தொடங்குவதற்காக மாநில நிர்வாகம் அனுமதி கேட்டு டெல்லிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது... இன்னும் பதில் வரவில்லை” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* புதுச்சேரியில் இரண்டு உச்ச பிரமுகர்களும் ராசியாகிவிட்டதால், கோடிகளில் கல்லாகட்டுகிறாராம் பொறுப்பு பிரமுகர்!

* கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது தமிழக அரசு. ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை அரசு இதுவரை தரவில்லை. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் நிலையில் இருக்கின்றன!

* இலைக் கட்சியில் முக்கியத் தலைவர் ஒருவரின் வாரிசுப் பிரமுகர், சோலார் மின் உற்பத்தி நிறுவனம் நடத்திவருகிறார். சமீபத்தில் அவரிடம் 20 சிறிய ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிக்கொண்டு, அவரது நிறுவனத்திடம் மின்சாரம் கொள்முதல் செய்ய, சம்பந்தப்பட்ட துறை வி.ஐ.பி அனுமதி கொடுத்திருக்கிறாராம்!