
இந்தமுறை ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பெருமளவில் பணப் பட்டுவாடா நடக்கும். அதைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் இருக்க வேண்டும்
“தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டதே!” - குரலைச் செருமியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். கழுகாருக்காக நேந்திரம் பழம் சிப்ஸ்களைத் தட்டில் நிரப்பிவிட்டு, “தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோராவின் விசிட் களத்தை மேலும் சூடாக்கியிருக்கிறது. பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்?” என்றோம். சிப்ஸை நொறுக்கியபடி, “ஒரேகட்டமாக தமிழகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
“எதிர்க்கட்சிகள் தரப்பில், ‘இந்தமுறை ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பெருமளவில் பணப் பட்டுவாடா நடக்கும். அதைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் இருக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டது. இதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கும் திட்டத்தில் இருந்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 22-ம் தேதிக்குப் பிறகு நடக்கவிருப்பதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள் ஆணையம் தரப்பில்.”
“சரிதான்...”
“பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதற்கு முன்பாக, அமைச்சர்களைச் சரிக்கட்டும் வேலையில் எடப்பாடி ஈடுபடுவார் என்கிறார்கள். அமைச்சர்கள் பலருக்கும் தாங்கள் பெரிதாக எதுவும் பலனடையவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதாம். அந்த வருத்தத்தை எடப்பாடி போக்குவார் என்று கூறப்படுகிறது.”
“பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் இருக்குமே...”
“தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் அல்லவா... கவர்ச்சிகர அறிவிப்புகளுக்குப் பஞ்சமிருக்காது. அதேவேளையில், முதல்வர் அறிவித்த ‘கூட்டுறவு கடன்கள் ரத்து’ என்கிற அறிவிப்பில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறதாம். 2016-ம் ஆண்டு விவசாயிகள் பெற்ற குறுகிய காலக் கடன்களை, 2017-ம் ஆண்டு தமிழக அரசு மத்திய காலக் கடன்களாக மாற்றியமைத்தது. இப்படி மாற்றியமைத்ததால் ஏற்பட்ட நிலுவைத் தொகை மட்டுமே தனியாக ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறதாம். ‘இந்தத் தொகையை முதல்வர் சமீபத்தில் அறிவித்த தள்ளுபடியில் சேர்க்க முடியாது’ என்று சம்பந்தப்பட்ட துறையினர் சொல்கிறார்கள். இதனால், சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி ஆகாது என்கிறார்கள்.”
“அடப்பாவமே...”
“மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 11-ம் தேதி ஸ்ரீவாரி மண்டபத்தில் நடந்தது. பொதுக்குழுவில், ‘கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என அனைவருக்கும் மாற்றாகவே நான் கட்சி ஆரம்பித்தேன். அந்த நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்வோம்’ என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் கமல்ஹாசன். கூட்டத்தில் நிறைவாக, தேர்தல் தொடர்பாக முடிவெடுப்பதற்கு கமலுக்கு அதிகாரம் அளித்திருக்கிறது பொதுக்குழு.”
“கமலுடன் தி.மு.க தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பேச்சு ஓடியதே!”
“அந்தப் பேச்சுவார்த்தையில்தான் கடுப்பாகிவிட்டாராம் கமல். தி.மு.க தரப்பில் ‘மாப்பிள்ளை’தான் கமலுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். கமல் தரப்பு 40 சீட் வரை எதிர்பார்த்திருக்கிறது. ஆனால், மாப்பிள்ளை தரப்பினர், தாங்கள் கையோடு கொண்டு சென்ற ஒரு ஃபைலைக் காட்டி, ‘இந்தந்தத் தொகுதிகளில் உங்களுக்கு இவ்வளவு வாக்கு சதவிகிதம்தான் இருக்கிறது. குறிப்பிட்ட சில தொகுதிகளில் உங்கள் கட்சிக்கு ஆட்களே இல்லை’ என்று நக்கலாகச் சொன்னதை கமல் ரசிக்கவில்லையாம். மாப்பிள்ளையின் அலம்பல் பேச்சால்தான் கூட்டணி பேச்சுவார்த்தை முறிவடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.”

“சீமானுடன் கமல் கைகோப்பாரோ?”
“அதற்கும் வாய்ப்பில்லை. கூட்டணிக்காக கமல் தரப்பிலிருந்து சிலர் சீமானை அணுகியிருக்கிறார்கள். அதற்கு, ‘வேட்பாளர் அறிவிப்பு செய்து தம்பி, தங்கைகள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இனி அவர்களின் மனநிலையை மாற்றுவது கடினம்’ என்று சொல்லிவிட்டாராம் சீமான். பிப்ரவரி 18-ம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கும் சீமான், முதற்கட்டமாக ‘நெய்தல் நெடும் பயணம்’ என்கிற பெயரில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடல் சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்திப் பயணம் செய்கிறார். இப்படி ஐவகை நிலங்களின் வழியாகப் பயணம் செல்லும் வகையில் பிரசாரத்தை வடிவமைத்திருக்கிறார் சீமான்” என்ற கழுகாருக்கு, சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியைப் பருகியபடி, “இளவரசி குடும்பத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அனைவரையும் உருக வைத்துவிட்டது... தெரியுமா!” என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.
“இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்கு ஆராத்யா என்றொரு மகள் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தபோது சிறையிலிருந்த இளவரசியால் பேத்தியைப் பார்க்க முடியவில்லை. குழந்தையைச் சிறைக்கு அழைத்து வருவதாக விவேக் சொன்னபோது, ‘இங்கேயெல்லாம் வேணாம்ப்பா’ என்று பதறியபடி இளவரசி மறுத்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து பேத்தி நினைவாகவே இருந்த இளவரசியை, பிப்ரவரி 8-ம் தேதி காலையில் பெங்களூருவிலிருந்து, தான் கிளம்புவதற்கு முன்பாக தனி வாகனத்தில் சென்னைக்கு அனுப்பியிருக்கிறார் சசிகலா. கிருஷ்ணப்ரியாவின் வீட்டுக்கு வந்த இளவரசி, முதன்முறையாக பேத்தி ஆராத்யாவைப் பார்த்தவுடன் கண்ணீர்விட்டுக் கதற, இதைப் பார்த்து சுற்றியிருந்தவர்கள் அழ... அந்த இடமே உணர்ச்சிமயமாகி யிருக்கிறது.”

“பேத்தி பாசம் இருக்காதா பின்னே!”
“குழந்தை முதலில் இளவரசியிடம் செல்லவே பயந்ததாம். பிறகு, ‘நான்தாம்மா உன் அப்பத்தா’ என்று சொல்லி பேத்தியைக் கட்டியணைத்து அழுதிருக்கிறார் இளவரசி. தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு கிருஷ்ணப்ரியாவின் வீட்டுக்கு சசிகலா வந்து சேர பிப்ரவரி 9-ம் தேதி காலை ஆகிவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்றைய தினம்தான் ஆராத்யாவின் இரண்டாவது பிறந்தநாளாம். குழந்தையை சசிகலாவுக்குக் காட்டி, ‘பாருங்க அண்ணி, என் பேத்தி என்னைய மாதிரியே இருக்கால்ல...’ என்று அழுதிருக்கிறார் இளவரசி. இந்த நிகழ்வு அவர்களின் குடும்பத்தில் பலரது மனதையும் உருக வைத்துவிட்டதாம்.”

“திருப்பதி ஏழுமலையானை தரிசித்திருக்கிறாரே துணை முதல்வர் பன்னீர்செல்வம்!”
“தை அமாவாசை தினமான பிப்ரவரி 11-ம் தேதி திருப்பதி கோயிலுக்குச் சென்ற பன்னீர், மனக்குமுறல்களை பெருமாளிடம் இறக்கிவைத்துவிட்டு வந்திருக்கிறாராம். சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தக் கூடாதென்று டி.ஜி.பி அலுவலகத்தில் அமைச்சர்கள் புகார் கொடுக்கச் சென்றது முன்கூட்டியே பன்னீருக்குச் சொல்லப்படவில்லையாம். இது தொடர்பாக தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம், ‘புகார் கொடுக்கப் போனவங்க தேசியக்கொடி கட்டின கார்ல போயிருக்க வேண்டாம். கட்சிக்கொடி கட்டின கார்ல போயிருக்கலாம். நம்மகிட்ட யார் கேட்கறா?’ என்று வருத்தப் பட்டிருக்கிறார்.

“ஓஹோ...”
“வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கும் விவகாரத்திலும் முட்டுக்கட்டை போடுவது பன்னீர்தான் என்று சமீபநாள்களாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. இப்படிக் கிளப்புவதே எடப்பாடி கோஷ்டிதான் என்று பன்னீருக்குத் தகவல் போயிருக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக பா.ம.க தலைவர்
ஜி.கே.மணி, முதல்வர் எடப்பாடியிடம் நேரில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தவுடன்
ஜி.கே.மணி தரப்பைத் தொடர்புகொண்ட பன்னீர், ‘இட ஒதுக்கீட்டுக்கு நான் முட்டுக்கட்டை போடுவதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் அப்படி எதுவும் செய்யவில்லை. டாக்டரிடம் தகவலைச் சொல்லிவிடுங்கள்’ என்று கொந்தளித்துவிட்டாராம். எடப்பாடியே இதை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்!”

“சசிகலாவுக்கு ஆதரவாக பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பதன் சீக்ரெட் என்னவோ?”
“மேலிடத்து சிக்னல் இல்லாமல் அவர் அப்படிப் பேசியிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆனால், அவர் சீரியஸாகப் பேசவில்லை என்கிறது குமரி வட்டாரம். பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் பன்னீர், பழனிசாமி இருவரும் பேசுவதற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். அன்று தெரிந்துவிடும் பா.ஜ.க-வின் நிலைப்பாடு” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.