Published:Updated:

மிஸ்டர் கழுகு: திரளும் முதல்வர்கள்! - திகிலில் மத்திய அரசு...

ஸ்டாலின், மம்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மம்தா

தி.மு.க-வில் சீட் கிடைக்காத பலர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள்.

மிஸ்டர் கழுகு: திரளும் முதல்வர்கள்! - திகிலில் மத்திய அரசு...

தி.மு.க-வில் சீட் கிடைக்காத பலர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள்.

Published:Updated:
ஸ்டாலின், மம்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மம்தா

“உத்தரப்பிரதேசத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. நமது நிருபர் தேர்தல் களத்தை உன்னிப்பாக கவனிக் கிறார் அல்லவா...” - சீனியருக்கே உரிய பொறுப்புடன் அறிவுறுத்தியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க-வுக்குள் சில இடங்களில் மறைமுக டீலிங் முடிந்திருக்கிறது. சென்னை அ.தி.மு.க-வில் கோலோச்சும் ஐவர் அணியிலுள்ள மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொரு வரின் கீழும் தலா இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதியில் குறைந்தது ஐந்து வார்டுகள் இருக்கின்றன. ‘அவற்றில், ஒரு தொகுதிக்கு ஒரு வார்டை மட்டும் எங்களுக்கு விட்டுக்கொடுங்கள். அந்த இடங்களில் டம்மி வேட்பாளர்களையோ, கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களையோ நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஐவரணி ‘வெயிட்டாக’ டீலிங் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 10 வார்டுகளை அ.தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுக்கும் விதமாக டம்மி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நிறுத்தியிருப்பதாக உடன்பிறப்புகளே குற்றம்சாட்டுகிறார்கள். இதன் மூலம் 10 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களிடம் ஸ்வீட் பாக்ஸ்கள் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இந்த வெற்றியைக் காட்டியே மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதே அ.தி.மு.க ஐவரணியின் கணக்கு!”

‘‘பலே டீலிங்காக இருக்கிறதே... போட்டி வேட்பாளர்களைக் களையெடுத்திருக்கிறதே தி.மு.க தலைமை?”

‘‘தி.மு.க-வில் சீட் கிடைக்காத பலர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள். அப்படி, போட்டி வேட்பாளராகக் களமிறங்கிய 56 பேரைக் கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்கியுள்ளது தலைமை. கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டுகளை ஒதுக்கியதாலும், தங்களுக்கு சீட் கிடைக்காத கடுப்பிலும் சுயேச்சையாகப் பலர் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் கட்சித் தலைமை இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், பிரசாரம் சூடுபிடித்த நேரத்தில் போட்டி வேட்பாளர்களும் களத்தில் அதிரடியாக இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தியும் கேட்காமல் போகவே... மாவட்டவாரியாக போட்டி வேட்பாளர்கள் லிஸ்ட் பெறப்பட்டு அவர்களைத் தற்காலிகமாக நீக்கச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டாராம். தேர்தல் முடிந்த பிறகு இவர்களில் பலர் கட்சிக்குள் ரீ-என்ட்ரி ஆகலாம் என்கிறார்கள். காரணம், சில வார்டுகளில் போட்டி வேட்பாளராகக் களம் காண்பவர்கள் கோடீஸ்வரர்கள் என்பதால், பணபலம் காரணமாக கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் வென்ற பிறகு இந்த அறிவிப்பில் மாற்றம் வரலாம்.’’

‘‘வழக்கமாக நடப்பதுதானே... சரி, ஸ்டாலின் தரப்பிலிருந்து கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை சென்றுள்ளதாமே?’’

மிஸ்டர் கழுகு: திரளும் முதல்வர்கள்! - திகிலில் மத்திய அரசு...

‘‘ஆமாம். உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து இரு நாள்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகத்துக்கு உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதில் ‘கொங்கு மண்டலம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் கூடுதல் இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு டென்ஷனாகிவிட்டாராம் ஸ்டாலின். தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி மாலை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்ட முதல்வர், ‘உங்கள் மாவட்டத்திலிருந்து வரும் ரிப்போர்ட் சரியில்லை. தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தால் உங்கள் பதவி இருக்காது’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல... அமைச்சர்கள் சிலரும் இந்த டோஸில் தப்பவில்லையாம். இதனால், ஆளுங்கட்சி என்ற மிதப்பில் இருந்தவர்களும் அலறியடித்துக்கொண்டு களத்துக்கு வந்துவிட்டார்கள்.’’

‘‘தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லும்... கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க-வுக்குள் என்ட்ரியாகிவிட்டாரே?’’

‘‘அவரைக் கட்சிக்குள் சேர்த்தது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ‘கட்சியைவிட்டு வெளியே போனதும், தலைவர் மற்றும் அவரின் மனைவி துர்கா மீதும்தான் அத்தனை குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். அவரை எதற்காக மீண்டும் சேர்க்க வேண்டும்?’ என்று சீனியர் நிர்வாகிகளே கேட்டிருக்கிறார்கள். ஆனால், கு.க.செல்வம் தி.மு.க-வுக்குள் மீண்டும் வரக் காரணமே துர்காதான் என்கிறார்கள். கு.க.செல்வத்திடம் ஓட்டுநராக இருந்தவர்தான், இப்போது துர்காவின் கார் டிரைவராக இருக்கிறார். அவர் வழியாக கு.க.செல்வம் தூதுவிட... மனமிரங்கிய துர்கா, தன் கணவரிடம் பரிந்துரைத்ததே கு.க.செல்வம் இணைப்புக்குக் காரணம் என்கிறார்கள்.”

‘‘சரி, சென்னை மேயர் வேட்பாளர் யார் என்பது தெரிந்ததா?’’

‘‘அவ்வளவு பெரிய சஸ்பென்ஸை பொசுக்கென்று கேட்டால் எப்படி? உமக்காக ஒரு கணக்கு சொல்கிறேன்... சென்னை மாநகராட்சியில் 16 வார்டுகள் பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு வார்டுகளைக் கூட்டணிக்குக் கொடுத்துவிட்டார்கள்... மீதமிருப்பவை 12 வேட்பாளர்கள். அவர்களிலும் குறிப்பாக வடசென்னையைச் சேர்ந்த ஏழு பேரில் ஒருவர்தான் மேயர் வேட்பாளர் என்கிறார்கள்.’’

‘‘கணக்கைக் கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது... முடிவுகள் வரட்டும் பார்ப்போம். மத்திய அரசுக்கு எதிராக முதல்வர்கள் சிலர் திரள்கிறார்களே... கவனித்தீரா?”

‘‘ஆமாம். மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கி அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் வெளியிட்ட அறிவிப்பு தேசிய அளவில் பெரும் விவாதமானது. தமிழக முதல்வர் அதைக் கண்டித்து ட்வீட் போட்டார். தொடர்ந்து, ‘முதல்வரின் கோரிக்கைப்படியே இந்த முடக்கம் நடந்தது’ என்று மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, ‘பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில், ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் ஒன்றுகூடிச் சந்திக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்துத்தான் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து கூட்டம் நடத்த முடிவாகியிருக்கிறது. ஏற்கெனவே ஸ்டாலினிடம் இது போன்ற ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியிருக்கிறார். இப்போது மம்தா, உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்களும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்கள். விரைவில் இந்த முதல்வர்கள் நடத்தப்போகும் ஆலோசனைக் கூட்டம், மத்திய அரசை திகிலில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்ற கழுகாருக்கு சூடாக மசால் வடையும், இஞ்சி டீயும் கொடுத்தோம். அவற்றைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: திரளும் முதல்வர்கள்! - திகிலில் மத்திய அரசு...

‘‘தன்னை மாற்ற வேண்டும் என தி.மு.க தரப்பு வைத்த கோரிக்கையால் ஏக டென்ஷனில் இருக்கிறார் தமிழக ஆளுநர் ரவி. பிப்ரவரி மாத இறுதியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு இல்லாமல் இழுத்தடிக்கப்படலாம் என்கிறார்கள். அதேபோல் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த விவரங்களையும் அதிகாரிகள் மூலம் ஆளுநர் அலுவலகம் விரைவில் கேட்கவிருக்கிறது. இதனால் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது’’ என்ற கழுகார்,

‘‘பெயர் சொல்ல மாட்டேன். நீரே யூகித்துக்கொள்ளும். முக்கியமான இரு துறைகளை கையில் வைத்திருக்கும் அந்த அமைச்சருக்கு, மாதம் இத்தனை ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுக்க வேண்டும் என்று மேலிடத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மனிதர் சொன்ன தேதியில், சொன்ன ஸ்வீட் பாக்ஸ்களைவிட அதிகமான பாக்ஸ்களை டெலிவரி செய்துவிடுகிறாராம். ‘இவரைப்போல இன்னும் நான்கு பேர் இருந்தால் போதும்!’ என்று இவரைப் பற்றித் தனக்கு நெருக்கமானவர்களிடம் சிலாகித்திருக்கிறார் மேலிடப் புள்ளி ஒருவர்’’ என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கடந்த ஆட்சியில் அதிகமாக ஆட்டம்போட்ட அதிகாரிகள் சிலர்மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறது ஆளும் தரப்பு. முதற்கட்டமாக தலைநகரின் வெள்ளை மாளிகையில் பொறுப்பிலிருந்த அதிகாரிக்குக் குறிவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்டான சில விஷயங்களைத் தோண்டியதில் கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த முடிவாம்!

* சென்னையில் சசிகலா தரப்புக்கு நெருக்கமான இடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தி சில ஆவணங்களையும் அள்ளியது. அந்த ஆவணங்களில் சில கொடநாடு விவகாரத்துடன் தொடர்புடையவையாம். அந்த ஆவணங்களை வெளியிட்டு எதிர் முகாமைக் கலங்கடிக்கும் வேலையில் சில அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்.