Published:Updated:

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘கூட்டணியில் புதியவர்களை உள்ளே கொண்டுவரத் தேவையில்லை. இப்போதுள்ள கூட்டணியே வலுவாக இருக்கிறது’ என்று சமீபத்தில் ஐபேக் அறிக்கை கொடுத்திருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

‘‘விருப்ப மனு குறித்த அறிவிப்பை அ.தி.மு.க வெளியிட்டிருக்கிறதே?’’ - கழுகார் உள்ளே நுழையும்போதே இப்படியொரு கேள்வியுடன் வரவேற்றோம். ‘‘ஜெயலலிதா இருந்தவரை வேட்பாளர்கள் அறிவிப்பு முதல் கூட்டணி வரை தேர்தல் களத்தில் அ.தி.மு.க-வே முந்திக்கொள்ளும். இந்தமுறை அதை எடப்பாடி கையிலெடுத்திருக்கிறார். பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கிறது. அன்றே விருப்ப மனு பெறும் நிகழ்வைத் தொடங்குகிறது அ.தி.மு.க. மார்ச் 5-ம் தேதி வரை விருப்ப மனுவை அளிக்கலாம் என்றும் அ.தி.மு.க தலைமை சொல்லியிருக்கிறது’’ என்றபடி செய்திகளுக்குள் புகுந்தார் கழுகார்.

‘‘இவ்வளவு விரைவாக விருப்ப மனுவை வாங்குவதற்குக் காரணம் என்னவாம்?’’

“இரண்டு பிரதான காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று, சசிகலா தரப்புடன் நாங்கள் இணக்கமாகப் போகவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காகவும், அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும்தான் இந்த வேகமாம். மற்றொன்று... விருப்ப மனுக்களைப் பெற்றுவிட்டால், தனது ஆட்களை வேட்பாளராக அறிவிப்பதிலுள்ள சிக்கல்களையும் சீக்கிரம் கலைந்துவிடலாம் என்றும் எடப்பாடி கணக்கு போடுகிறாராம்.’’

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘‘தி.மு.க-விலும் தேர்தல் வேலைகள் வேகமெடுத்துவிட்டதுபோலவே?’’

‘‘ஆமாம்... ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்கான சுற்றுப்பயணத்திலிருக்கும் ஸ்டாலின், பிப்ரவரி இறுதியில் சென்னை வந்த பிறகு தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அறிவிக்கவிருக்கிறார். அதன் பிறகு மார்ச் முதல் வாரத்திலிருந்து கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியாக அழைத்து, தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்யவிருக்கிறாராம்.’’

‘‘குழு அமைத்துவிட்டால் அவர்களே பார்த்துக்கொள்வார்களே?’’

‘‘அதுதான் இல்லை என்கிறார்கள். குழுவை ஒப்புக்குத்தான் பயன்படுத்தப்போகிறாராம். நேரடியாக ஸ்டாலினே பேச்சுவார்த்தையில் இறங்கப்போகிறாராம். ‘கூட்டணியில் புதியவர்களை உள்ளே கொண்டுவரத் தேவையில்லை. இப்போதுள்ள கூட்டணியே வலுவாக இருக்கிறது’ என்று சமீபத்தில் ஐபேக் அறிக்கை கொடுத்திருக்கிறது. அதையொட்டியே ஸ்டாலினின் பேச்சுவார்த்தையும் இருக்கும் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘‘காங்கிரஸ் கட்சி, கடைசி நேரத்தில் தி.மு.க-வுக்கு கல்தா கொடுத்துவிடும் என்று கதர்ச்சட்டைக்காரர்கள் மத்தியில் ஒரு பேச்சு ஓடுகிறதே?’’ என்றபடி தேங்காய்ப்பால் முறுக்கை நீட்டினோம்.

சுவைத்தபடியே தொடர்ந்தார்... ‘‘காங்கிரஸ் கட்சிக்குள் இப்படியொரு பேச்சு ஓடுவது உண்மைதான். ஆனால், காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடும் எண்ணம் இப்போதைக்கு தி.மு.க-விடம் இல்லையாம். 20 சீட் என்று ஆரம்பத்தில் தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டது. அதை

30 வரை உயர்த்தும் ஐடியாவுக்கு தி.மு.க வந்திருக்கிறது. அதற்கு காங்கிரஸ் தரப்பிடம் சில உறுதிமொழிகளைக் கேட்கவிருக்கிறது. வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அவர்களை ஜெயிக்கவைப்பதற்கான தி.மு.க-வின் ஆலோசனை இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தப் போகிறார்களாம். இதற்கிடையே, காங்கிரஸ் டெல்லி மேலிடமும் தி.மு.க-விடம் கறார் காட்டும் மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘அவர்களுமா?’’

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘‘ம்! தி.மு.க சார்பில் சில கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையை நடத்திவந்தார் சபரீசன். அந்த அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்ற சபரீசன், ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். ஆனால், ராகுல் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான பதில் வரவில்லையாம். ‘தி.மு.க தரப்பில் எதுவாக இருந்தாலும் ஸ்டாலினிடம் பேசிக்கொள்ளலாம், குறிப்பாக சீட் குறித்து ஸ்டாலினிடம் மட்டுமே பேச வேண்டும். சபரீசனிடம் பேசினால் வேறு மாதிரியாகிவிடும்’ என்று தமிழக காங்கிரஸார் டெல்லிக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்களாம். இதனால் சபரீசனுடனான சந்திப்பைத் தவிர்த்துவிட்டாராம் ராகுல். ‘மாப்பிள்ளையைத் தவிர்த்தால், மாமனார் வழிக்கு வந்துவிடுவார்’ என்று கணக்கு போடுகிறார் ராகுல். 89-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தமிழகத்தில் நடத்திய பிரசாரத்தைப் போன்று, நீண்ட நாள்களுக்கு ராகுல் காந்தியும் தமிழகத்தில் பிரசாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப்போகிறாராம். கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணம் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘‘தி.மு.க தரப்பால் 700 கோடி ரூபாய் டெண்டர் நின்றுபோனதாமே?’’

‘‘கடைசி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கோட்டைவிட்ட சோகத்தில் ஆளும்தரப்பு இருக்கிறது. சென்னை நந்தனம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தையும், அதன் அருகேயுள்ள தந்தை பெரியார் மாளிகையையும் இணைத்து, பாலத்துடன் புதிய கட்டடங்கள் கட்ட 668 கோடி ரூபாயில் புதிய டெண்டரை தமிழக அரசு ஜனவரி 12-ம் தேதி வெளியிட்டது. டெண்டர் அறிவிப்பு வந்த மறுதினமே, கட்டடங்களை இடிப்பதற்கான ஆணையும் வெளியாகியிருக்கிறது. ‘இந்த டெண்டரில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது’ என தி.மு.க-வைச் சேர்ந்த பூச்சி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘ஆளும்தரப்பு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இந்த டெண்டரை ஒதுக்கும் வகையில், டெண்டர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது’ எனக் குறிப்பிட்டு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த ஒப்பந்தத்துக்குத் தடை விதித்துள்ளது. முதல்வர் துறையிலுள்ள வேறு சில டெண்டர்களுக்கும் இதேபோல் சிக்கல்கள் வரும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.’’

‘‘சென்னை மாநகராட்சியிலும் வில்லங்கம் வெடிக்கும் என்கிறதே தி.மு.க தரப்பு?’’

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘‘சென்னை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணியில், ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிக்கான இடத்தையும் கொடுத்து, குப்பைகளைத் தரம் பிரிப்பதற்குப் பணமும் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்துக்கும் அமைச்சர் ஒருவருக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. சென்னை மாநகராட்சியின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தம்பியும் இதில் பங்குதாரராக இருக்கிறாராம். இந்த விவகாரத்தில் பல ஆதாரங்களை தி.மு.க சேகரித்துள்ளதாம். இதையே அந்த அமைச்சருக்கு எதிரான புகாராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்கவிருக்கிறார்களாம்’’ என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபி கொடுத்தோம்.

ரசித்துக் குடித்தவர், ‘‘அ.தி.மு.க-வில் நடந்த அதிரடி ஒன்றைச் சொல்கிறேன்... குறித்துக்கொள்ளும்’’ என்றபடி அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘அ.தி.மு.க-வின் மூத்த பிரமுகருக்கு இப்போது போதாத காலம் போலிருக்கிறது. ஆரம்பத்தில் பன்னீர் கோஷ்டியில் இருந்தார். இடையில் எடப்பாடி கோஷ்டிப் பக்கம் சாய்ந்தார். இரண்டு தலைகளுக்கிடையே ‘யுத்தம்’ நடந்தபோது, இரு தரப்புகளுக்கிடையே தூது போனார். அனுமன்போலத் தகவல்கள் பரிமாற்றத்தைத்தான் செய்கிறார் என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு முறை தூது போகும்போதும், கூடவே தனக்கு வேண்டிய சிபாரிசுகளையும் சாதித்துக்கொண்டாராம். கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், ‘அவரு ரவுசு தாங்க முடியலை சாமி. அடிக்கடி வந்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ரெண்டு பேர்கிட்டேயும் பேசிட்டேன்னு சொல்லி சில சிபாரிசுகள், காரியங்களைச் செய்யச் சொல்றார்’ என்று புகார்ப் பட்டியல் வாசித்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக பிரதமரின் சென்னை விசிட்டால் காட்சிகள் மாற, தங்கள் பூசல்களை இனி நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், தூதுவர் வேண்டாம் என்று இருவரும் சொல்லிவிட, தூதுபோன சமயத்தில் அமைச்சர்களுக்கு ஈடாக கல்லா கட்டிய அந்தப் பிரமுகர் இப்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.’’

மிஸ்டர் கழுகு: சபரீசனுக்கு தடா... ராகுல் கறார்!

‘‘சசிகலா சத்தமில்லாமல் இருக்கிறாரே?’’

‘‘சத்தமில்லாமல் சில காரியங்களைச் செய்ய திட்டமிட்டுவருகிறார். ஒரு வார ஓய்வுக்குப் பிறகு, முதலில் தங்கள் குடும்பத்தின் குலசாமி கோயிலுக்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறார். அங்கு நடராஜன் உறவுகளைச் சந்தித்தும் பேசவிருக்கிறாராம். சிறையில் இருந்தபோதே நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் சசிகலாவிடம், ‘அண்ணனின் சொத்து ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. அதை உங்களுக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருந்தார். அந்தப் பணிகளைக் குலதெய்வ வழிபாட்டை முடித்த பிறகு பார்க்கவிருக்கிறாராம். அதன் பிறகு பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவும் தயாராகிவருகிறாராம்’’ என்றபடி ஜூட் விட்டார் கழுகார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு