Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்

ஒருபுறம் அ.தி.மு.க-வை முடக்க தி.மு.க திட்டமிட்டுவருகிறது என்றால், மறுபுறம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் அரசுக்கு ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

ஒருபுறம் அ.தி.மு.க-வை முடக்க தி.மு.க திட்டமிட்டுவருகிறது என்றால், மறுபுறம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் அரசுக்கு ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது

Published:Updated:
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்

“ஒருவழியாக ஆட்டம், பாட்டம், மேள, தாளக் கொண்டாட்டங்களுடன் இரண்டு பிரதான கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை நிறைவுசெய்திருக்கின்றன. உண்மையான கொண்டாட்டம் யாருக்கு, திண்டாட்டம் யாருக்கு என்பது பிப்ரவரி 24-ம் தேதி தெரிந்துவிடும்...” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘பிரசாரத்தின் இறுதிநாளான பிப்ரவரி 17 அன்று உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து இரண்டாவது ரிப்போர்ட்டை முதல்வருக்குக் கொடுத்திருக்கிறது உளவுத்துறை. அதில், 80 சதவிகித இடங்கள்வரை ஆளுங்கட்சிக்குக் கிடைக்கும்; கொங்கு மண்டலத்திலும், தென் மண்டலத்திலும்தான் 20 சதவிகிதம் இடங்கள் நஷ்டமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். இதையடுத்து, தீவிர பிரசாரத்துக்கு இடையிலும் அந்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஸ்டாலின் கறாராகப் பேசியிருக்கிறார். அவர்களோ, ‘நிறைய செலவு பண்ணியிருக்கோம். நிச்சயமா சாதகமான முடிவுகள்தான் வரும் தலைவரே...’ என்று சொல்லியிருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

‘‘அதை நாமும் பார்க்கத்தானே போகிறோம்... எதிர் முகாமில் காற்று எப்படி வீசுகிறது?”

‘‘அ.தி.மு.க தரப்புதானே... அவர்களும் தெம்புடன் இருப்பதாகத்தான் தெரிகிறது. ‘ஒன்பது மாவட்ட ஊரகத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றிபெறுவோம்; வட மாவட்டங்கள் நமக்குக் கைகொடுக்கும்’ என்று தன் சகாக்களிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. பன்னீரோ, தென் மாவட்டங்களில் கணிசமான இடங்களை அறுவடை செய்துவிட வேண்டும் என்று தன் ஆதரவாளர்களை முடுக்கிவிட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் ஒருபக்கம் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதேசமயம், கட்சிக்குள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி, பன்னீர் இருவருமே தங்களது ஆதரவாளர்களை வெற்றிபெறவைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால், கொங்கு மண்டலத்திலோ, ‘ஒரு வார்டுக்கு முதல்ல அஞ்சு லட்சம் தர்றதா மாவட்ட நிர்வாகிகள் சொன்னாங்க... ஆனா, ஒரு லட்சத்தை மட்டும் கொடுத்துட்டு, கடைசி நேரத்துல மிச்சத்தை நீங்களே பார்த்துக்கோங்க’னு சொல்லிட்டாங்க’ என்ற புலம்பலும் எழுந்துள்ளது.”

‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே... ‘வளம்’ கொழிக்கும் கொங்கு மண்டலத்திலேயே புலம்பலா?”

‘‘அட... ஆமாம் என்கிறேன்! ஆரம்பத்தில் வேலுமணி ஆக்டிவ்வாகத்தான் வலம்வந்தார். ஆனால், அவர் தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிகளிலிருந்த 110 கோடி ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியதுமே, வேலுமணியும் துவண்டுவிட்டார் என்கிறார்கள். அதனால்தான் கடைசி நேர தேர்தல் பணிகளில் அவர் வேகம் காட்டவில்லையாம். இதை எதிர்பார்த்தே ஆளும் தரப்பு பணமுடக்க அஸ்திரத்தைக் கையிலெடுத்தது.’’

‘‘ஓஹோ!’’

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

‘‘ஒருபுறம் அ.தி.மு.க-வை முடக்க தி.மு.க திட்டமிட்டுவருகிறது என்றால், மறுபுறம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் அரசுக்கு ஏகப்பட்ட குடைச்சல்களைக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க தரப்பு. மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்களுடன் ஸ்டாலின் கைகோத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் பிரதமர் மோடி. அதனால், ஸ்டாலினுக்குச் செக் வைக்க, தி.மு.க அமைச்சர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க விசாரணை ஏஜென்சிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்த பிறகு, தமிழக அரசுமீது மத்திய அரசின் கோபப் பார்வை மேலும் உக்கிரம் அடையலாம் என்கிறது கமலாலயப் பட்சி!”

‘‘என்ன செய்வார்களாம்?’’

‘‘கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர்களை எக்ஸ்போஸ் செய்து, ‘தி.மு.க-வின் அமைச்சரவை ஊழல் அமைச்சரவை’ என்று இமேஜை ஏற்படுத்திக்கொண்டே மறுபுறம், டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை முழுமையாக வழங்காமல் இழுத்தடிக்கலாம். ஏற்கெனவே ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உட்பட தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய இருபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பதால்தான், மாநில அரசு தனது பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க முடியாமல் தவிக்கிறது. சொல்லப்போனால் நிதி இருந்திருந்தால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாயை வழங்கி, தேர்தலில் மேலும் ஸ்கோர் செய்திருக்கும் ஆளும் தரப்பு. மத்திய அரசு தொடர்ந்து இதே நெருக்கடியைத் தொடர்ந்தால் என்ன செய்வது என்ற யோசனையும் முதல்வர் தரப்பில் ஓடுகிறது!”

‘‘ஆனால், முதல்வரோ ‘குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாயைக் கண்டிப்பாகக் கொடுப்போம்’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறாரே?’’

“கொடுப்பார்கள்தான்... ஆனால், ‘எப்போது கொடுப்போம்?’ என்பதைச் சொல்லவில்லையே! ‘மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகை வந்தால் மட்டுமே, இதற்குச் சாத்தியம்’ என்று அதிகாரிகள் தரப்பு கையை விரித்துவிட்டது. மேற்கு வங்கத்துக்கும் இதேபோல் நிதி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்துவருகிறது’’ என்ற கழுகாருக்கு சூடாக ஃபில்டர் காபியைக் கொடுத்தோம். காபியை ருசித்துப் பருகியவர், அதே சூட்டுடன் செய்திகளைத் தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

“ஹாலிவுட் த்ரில்லர் படங்களுக்கு இணையாக கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது என்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை முன்வைத்துத்தான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். இன்னொரு பக்கம் ஆணையத் தலைவரான முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, அரசுத் தரப்பு வழக்கறிஞர், சசிகலா வழக்கறிஞர், அப்போலோ மருத்துவமனைத் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் பிப்ரவரி 16-ம் தேதி ஆலோசனை செய்திருக்கிறார்கள். அப்போது சசிகலா வழக்கறிஞர் தரப்பில் ‘எங்களுக்கு இன்னும் மூன்று நாள்கள் அவகாசம் வேண்டும். எங்கள் தரப்பு விசாரணைகளை முடித்துக் கொள்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல கடந்த காலத்தில் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பன்னீர், இம்முறை விசாரணையிலிருந்து தப்ப முடியாது என்கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்டவரே அரசுத் தரப்பு வழக்கறிஞராக தற்போதும் தொடரும் நிலையில், புதிதாக அரசுத் தரப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் முடிவுசெய்துள்ளது ஆளும் தரப்பு. பிப்ரவரி 22-ம் தேதி மீண்டும் அடுத்த சந்திப்பை நடத்தவிருக்கிறார் ஆறுமுகசாமி. அப்போது வழக்கு விசாரணை தொடங்கும் தேதியையும், அரசு வழக்கறிஞராக யாரை நியமிப்பது என்பதையும் அறிவிக்க வாய்ப்புள்ளது.’’

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

‘‘அது சரி... பத்தாண்டுக்கால புதிருக்கு இனியேனும் விடை கிடைக்குமா?”

“அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட்டதைத்தானே சொல்கிறீர்கள்... ஆமாம், விரைவில் விசாரணை தொடங்கிவிடும். கடந்த காலங்களில் உள்ளூர் போலீஸார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ என அனைத்துப் பிரிவுகள் விசாரித்தும் உருப்படியாக எந்தத் தகவலும் சிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி பிரிவின் டி.ஜி.பி ஷகீல் அக்தர் தலையிலான புதிய டீம், எஸ்.பி ஜெயக்குமார் மேற்பார்வையில் அடுத்தகட்ட விசாரணையை, புதிய கோணத்தில் எடுத்துச் செல்ல இருக்கிறதாம். அதேசமயம், ‘கொலையாளிகள் பற்றிய விவரங்கள் கிடைத்துவிட்டன. அதைச் சட்டரீதியாக நிரூபிக்கவே புதிய டீம் நியமிக்கப்பட்டிருக்கிறது’

என்ற கருத்தும் போலீஸ் வட்டாரத்தில் ஓடுகிறது. இன்னொரு பக்கமோ ‘ஃபைலை குளோஸ் செய்யவே இந்தக் குழு’ என்றும் சொல்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: ஆறுமுகசாமி ஆணையம்... ராமஜெயம் கொலை வழக்கு... சூடுபிடிக்கும் விசாரணை!

அண்ணாமலையை வறுத்தெடுத்த டெல்லி!

சென்னை தி.நகரில் பிரசாரம் செய்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பொங்கல் தொகுப்பு விவகாரத்தை சி.பி.ஐ விசாரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ.க எடுக்கும்” என்று பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. ‘கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கு பல்வேறு இடையூறுகளை பா.ஜ.க கொடுத்துவருகிறது என்கிற எங்களது குற்றச்சாட்டை அண்ணாமலையின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்துகிறது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவது நீதிமன்றம் எடுக்கவேண்டிய முடிவு. இவர் எப்படிப் பேசலாம்?’ என்று தி.மு.க கடுகடுக்க... டெல்லி மேலிடமும், ‘நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பாக பேசக் கூடாது என்பதுகூட உங்களுக்குத் தெரியாதா?’ என்று அண்ணாமலையை வறுத்தெடுத்திருக்கிறதாம்!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* அலையடிக்கும் துறையில் சமீபத்தில் பெரிய டெண்டர் ஒன்றை வளைத்திருக்கிறார் துறை வி.ஐ.பி-யின் உதவியாளர். விஷயம் அறிந்த வி.ஐ.பி., “ஏற்கெனவே தலைக்கு மேல கத்தி தொங்கிக்கிட்டு இருக்குது. இதுல நீ வேற புதுப் பிரச்னையை உருவாக்கப் பார்க்குறியா?” என்று கொந்தளித்துவிட்டாராம்!

* நகராட்சித் தேர்தலில் ‘குக்கர்’ தலைவர், பிரசாரத்துக்கே தலைகாட்டவில்லை. இந்த நிலையில், “தலைவரே... பிரசாரத்துக்குத்தான் வரலை... தேர்தல் செலவுக்காவது காசு கொடுங்க” என்று கட்சியினர் கேட்டபோது, ‘‘கட்சியவே வெச்சிருக்கலாமான்னு யோசனையில இருக்கேன்... இதுல காசு வேற கேட்குறீங்க” என்று சொல்ல... கட்சியினர் விக்கித்துவிட்டார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism