Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘எப்போது வேண்டுமானாலும் தூக்குவோம்!’ - வேலுமணிக்கு உணர்த்திய ஸ்டாலின்...

வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

அவர் ஒன்று நினைத்து தர்ணா செய்ய, அதுவே அவருக்கு பேக் ஃபயராகியிருக்கிறது.

மிஸ்டர் கழுகு: ‘எப்போது வேண்டுமானாலும் தூக்குவோம்!’ - வேலுமணிக்கு உணர்த்திய ஸ்டாலின்...

அவர் ஒன்று நினைத்து தர்ணா செய்ய, அதுவே அவருக்கு பேக் ஃபயராகியிருக்கிறது.

Published:Updated:
வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி

ஆட்காட்டி விரலில் மையைக் காட்டி, தான் ஓட்டுப் போட்டதை உணர்த்தியபடியே என்ட்ரி கொடுத்த கழுகார், தயாராக இருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “புதிது புதிதாக ஃபார்முலாவை உருவாக்குகிறார்கள்... ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் ஜனநாயகப் படுகொலையைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“தேர்தல் முடிந்துவிட்டதுதான்... ஆனால், பிரச்னையே இனிமேல்தான் தொடங்கும் என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள், காவல்துறை டி.ஜி.பி கலந்துகொண்ட சட்டம், ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் நடத்தினார். அப்போது அதிகாரிகள் தரப்பில், ‘பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் ஆளும் அரசுமீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது; தேர்தலிலும் பிரச்னை ஏற்பட்டால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்’ என்று சுட்டிக்காட்டினர். இதையடுத்து, ‘இப்போது விட்டுவிடலாம்; மறைமுகத் தேர்தலின்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஆளும் தரப்பில் முடிவானதாம். அதேசமயம் தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளரையும் தொடர்புகொண்ட ஸ்டாலின், ‘நகராட்சி, பேரூராட்சிகள் சில கைவிட்டுப்போவது சகஜம்தான்... ஆனால், நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது... மொத்தமிருக்கும் 21 மாநகராட்சிகளும் நமக்கு வேண்டும். ஏதேனும் ஒரு மாநகராட்சி கைவிட்டுப் போனால்கூட என் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்...’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார். இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது நடவடிக்கையே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் மறைமுகத் தேர்தல் விவகாரங்களில் அ.தி.மு.க-வுக்கு விடப்பட்ட மிரட்டல்தான் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!”

மிஸ்டர் கழுகு: ‘எப்போது வேண்டுமானாலும் தூக்குவோம்!’ - வேலுமணிக்கு உணர்த்திய ஸ்டாலின்...

“மறைமுகத் தேர்தலில் ‘பொருளாதார’ப் போரே நடக்கும் என்று சொல்லும்... சரி, இலை வட்டாரத்தில் என்ன நடக்கிறது?”

“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகத்தில் ஈடுபட்டது’ என்று குற்றம்சாட்டிய நிலையில், அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் எடப்பாடியிடம், ‘வாக்கு எண்ணிக்கையைத் தள்ளிவைக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று மறுத்த எடப்பாடி, ‘தேர்தல் முடிவுகள் எப்படியும் ஆளும் தரப்புக்குத்தான் சாதகமாக வரும். எனவே, கட்சியை வளர்க்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்’ என்று அறிவுறுத்தினாராம். அ.தி.மு.க-வில் விரைவில் ஒன்றியச் செயலாளர்களுக்கான தேர்தலை நடத்தி, மாவட்டச் செயலாளர்கள் தேர்வையும் முடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் பொதுக்குழுவும் கூடலாம் என்கிறது ராயப்பேட்டை பட்சி!”

“அதெல்லாம் இருக்கட்டும்... முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தர்ணாவை முன்வைத்து கோவை அ.தி.மு.க-விலேயே முணுமுணுப்பு எழுந்திருக்கிறதே?”

“அதை ஏன் கேட்கிறீர்கள்... அவர் ஒன்று நினைத்து தர்ணா செய்ய, அதுவே அவருக்கு பேக் ஃபயராகியிருக்கிறது. அதாவது, வேலுமணி தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கிய நிலையில், போலீஸார் அவரையும் கைதுசெய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வேலுமணிக்கு எட்டியதாம். இதையடுத்தே, பிப்ரவரி 18-ம் தேதி எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா செய்த வேலுமணி, ‘ஆளுங்கட்சியினர் வெளியூர்களிலிருந்து குண்டர்களை கோவையில் களமிறக்கி, கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கோவையில் துணை ராணுவப் பாதுகாப்பு வேண்டும்’ என்று கோஷமிட்டார். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய காவல் அதிகாரிகளிடம், ‘நான் நினைச்சா, கோவையையே ஸ்தம்பிக்க வைக்க முடியும்... மக்கள் பாதிக்கக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன், பார்த்துக்கோங்க’ என்று எச்சரித்திருக்கிறார். அதாவது, லஞ்ச ஒழிப்புத்துறை தன்னைக் கைதுசெய்தால், கோவையே ஸ்தம்பிக்கும் என்பதை ஆளும் தரப்புக்கு மறைமுகமாக உணர்த்தவே இப்படியொரு தர்ணா ஏற்பாடு என்கிறார்கள். ஆனால், ஆளும் தரப்பும் சளைக்கவில்லை... ‘எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி உள்ளே போடுங்கள்’ என்று முதல்வர் தரப்பிலிருந்தே கண்டிப்பான உத்தரவு சென்றிருக்கிறது. அதன்படி அவர் கைதுசெய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டாலும் ‘வேலுமணியைக் கைதுசெய்வதில் இந்த அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை; எப்போது வேண்டுமானாலும் அவரைத் தூக்குவோம்’ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம் ஆளும் தரப்பு. இதையடுத்து வேலுமணியின் ஆதரவாளர்களே, ‘அண்ணனுக்கு இதெல்லாம் தேவையா?’ என்று முணுமுணுக்கிறார்கள்!”

“ம்ம்... வேலுமணி மட்டுமல்ல, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார்போல?

“தேனி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு கனிமவளக் கொள்ளை நடந்ததாக பன்னீரின் உதவியாளர் அன்னபிரகாஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சி.பி.சி.ஐ.டி பிரிவினர் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தப் பட்டா மாறுதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2016 - 2017 வரையிலான காலகட்டத்தில்தான் நடந்தது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2016 டிசம்பரிலிருந்து 2017 பிப்ரவரி வரை பன்னீர் முதல்வராக இருந்திருக்கிறார். ஒருவேளை அவருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்தால் அவரையும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள்” என்ற கழுகாருக்கு ஜில்லென்ற பாதாம் கீரை நீட்டினோம்... “ஆஹா... நீண்டநாள் கழித்து கூல்டிரிங்ஸ்” என்று ருசித்துப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இப்படித்தான் கூலாக இருக்கிறாராம். இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, தோல்வி என எதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை என்கிறார்கள். அதாவது, ‘இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் தனித்துப் போட்டியிட்டிருக்கிறோம். குறிப்பாக, மாநகராட்சிகளில் மட்டும் 1,141 வார்டுகளில் போட்டியிட்டிருக்கிறோம். அதனால், இந்தத் தேர்தலில் ஏழு சதவிகித வாக்குகள் கிடைக்கும்... குறைந்தது ஐந்து சதவிகித வாக்குகளைத் தாண்டிவிட்டால்கூட போதும்; தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ஜ.க உருவெடுத்துவிடும்’ என்பது அண்ணாமலையின் கணக்காம்.”

“அவருக்கும் ஆசைப்பட உரிமை இருக்கிறதுதானே... கோட்டைத் தகவல் ஏதேனும் இருக்கிறதா?”

“அதிகாரிகள் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே முக்கியப் பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரே பதவியில் இருப்பவர்கள் என இரண்டு பட்டியல்களை எடுத்திருக்கிறார்கள். அப்போது ‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டதாம். இதையடுத்து சில அதிகாரிகளை மாற்றும் மூவ் நடந்துவருகிறது. குறிப்பாக, தண்டவாள அதிகாரியை தார் ரோட்டுக்கு மாற்றத் திட்டமிட்டார்கள். ஆனால், முதல்வர் அலுவலக அதிகாரிகள் நாசுக்காக அதைத் தவிர்த்துவிட்டார்களாம்!”

“முதல்வர் அலுவலகம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது... முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் பற்றித் தகவல் வந்திருக்கிறதே?”

“ஆமாம்... முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக துபாயில் நடந்துவரும் எக்ஸ்போவைப் பார்வையிட ஸ்டாலின் செல்லவிருக்கிறார். எக்ஸ்போவில் தமிழகம் சார்பில் அரங்கம் அமைக்கப்படவிருக்கிறது; அதைப் பார்வையிடும் முதல்வர், தொழில்முனைவோர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார். ஏற்கெனவே ஜனவரி மாதம் முதல்வரின் உறவினர்கள் சிலர் துபாய் சென்று அங்குள்ள சில தொழிலதிபர்களைச் சந்தித்திருந்தனர். வளைகுடா நாட்டின் முன்னணி வணிக நிறுவனம் ஒன்று விரைவில் தமிழகத்தில் தனது வணிகத்தைத் தொடங்கவிருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் முதல்வரின் பயணத்தில் உள்ளதாம். சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருப்பதால் பயணத் தேதி இன்னும் முடிவாகவில்லை” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ‘எப்போது வேண்டுமானாலும் தூக்குவோம்!’ - வேலுமணிக்கு உணர்த்திய ஸ்டாலின்...

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* ஏற்கெனவே ஒரு டாக்டர் கட்சியை வளைத்துப்போட்டு பேச்சுவார்த்தை நடத்திவரும் கமலாலயம் தரப்பு, மற்றொரு டாக்டர் தரப்பிலிருந்தும் ஆட்களை ஹைஜாக் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாகியிருக்கிறது. இணைப்புப் படலம் விரைவில் அரங்கேறலாம்... சமூகம் சார்ந்த அரசியலுக்கான ஏற்பாடாம் இது!

* வெளியே பார்ப்பதற்குத்தான் கரூர் பிரமுகரும் கோவை பிரமுகரும் கடுமையாக மோதிக்கொண்டார்களாம். ‘காக்கிநாடா எனக்கு... பாவாடை நாடாவும் எனக்குத்தான்’ என்கிறரீதியில் ஆளும் தரப்புக்குச் சாதகமாக கோவை பிரமுகரிடம் சில உடன்படிக்கை ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறாராம் கரூர்க்காரர்!