Published:Updated:

மிஸ்டர் கழுகு: தினகரன் டீல்! - நழுவிய பா.ஜ.க...

தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
தினகரன்

சிறையிலிருந்து வந்த பிறகு அ.தி.மு.க-விலிருந்து கணிசமானோர் தன்னைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. மன்னார்குடி உறவுகள் தரப்பிலிருந்து இரண்டு அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: தினகரன் டீல்! - நழுவிய பா.ஜ.க...

சிறையிலிருந்து வந்த பிறகு அ.தி.மு.க-விலிருந்து கணிசமானோர் தன்னைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. மன்னார்குடி உறவுகள் தரப்பிலிருந்து இரண்டு அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

Published:Updated:
தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
தினகரன்

சிறகுகளைப் படபடத்தபடியே வந்தமர்ந்தார் கழுகார். கையில் ரெடியாக வைத்திருந்த லட்டை கழுகாரிடம் நீட்டிவிட்டு, ‘‘கடந்த இதழில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யின் பணியிட மாற்றம் தொடர்பாக, ‘முதல்வர் தரப்பிலிருந்தே ஜெயக்குமாருக்கு நல்ல தகவல் சொல்லப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருந்தீர். அதுபோலவே நடந்துவிட்டது. செய்திகளை முந்தித் தந்ததற்குத்தான் இந்த ஸ்வீட்’’ என்றோம். புன்முறுவலுடன் லட்டை மென்ற கழுகார், ‘‘எனக்கு வந்த தகவல்களைச் சொல்கிறேன். அவ்வளவே...’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘அ.தி.மு.க கூட்டணிப் பங்கீடு விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு கூட்டணி இறுதி செய்யப்படுமாம். ஒருவழியாக வரும் வாரத்திலேயே வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிடவும் முடிவெடுத்திருக்கிறதாம் அ.தி.மு.க தலைமை.

27 சீட்களுக்கும், 250 ஸ்வீட் பாக்ஸ்களுக்கும் தைலாபுரம் ஓகே சொல்லிவிட்டதாகத் தகவல்.’’

‘‘தே.மு.தி.க கதி?’’

‘‘இழுபறி நீடிக்கிறது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில், ‘ஒற்றை இலக்க எண்ணிக்கைக்கு மேல் தொகுதிகளை ஒதுக்க முடியாது’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறதாம் அ.தி.மு.க. ‘எதிர்க்கட்சியாக இருந்தவர்களுக்கு ஒற்றை இலக்கமா?’ என்று பிரேமலதா தரப்பில் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். ஆளும் தரப்பிலோ நக்கலாக, ‘அது விஜயகாந்த் கட்சி. இது பிரேமலதா கட்சி. அவ்வளவுதான் ஒதுக்க முடியும்’ என்று மல்லுக்கட்டியிருக்கிறார்கள். எப்படியும் அ.தி.மு.க வழிக்கு தே.மு.தி.க சென்றுவிடும் என்கிறார்கள்.’’

‘‘தி.மு.க கட்சித் தலைமை மிதப்பில் இருக்கிறதாமே?”

‘‘இந்த மிதப்பு நல்லதல்ல என்று அந்தக் கட்சியின் சீனியர் தலைவர்களே புலம்புகிறார்கள். சமீபத்தில் ஸ்டாலினின் பிரசாரத்துக்கு இடையே அவரிடம் பேசிய சீனியர் தலைவர் ஒருவர், ‘வட மாவட்டங்களிலுள்ள 80 தொகுதிகளையும், கொங்கு மண்டலத்திலுள்ள 55 தொகுதிகளையும் அ.தி.மு.க-விடமிருந்து தட்டிப்பறிப்பது அவ்வளவு எளிதல்ல. எடப்பாடியின் கடைசி நேர அஸ்திரங்கள் மக்களிடம் நன்றாக எடுபடுகின்றன. போதாக்குறைக்கு ‘தேவேந்திர என்பது என்னுடைய நரேந்திர என்ற பெயருடன் ஒத்திருக்கிறது’ என்று மோடி பேசியது, தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் தேவேந்திரர் சமூகத்தையும் பா.ஜ.க பக்கம் கொண்டு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை ஒரு மாவட்டச் செயலாளர் பதவியைக்கூட அந்தச் சமூகத்துக்கு தி.மு.க கொடுக்கவில்லை. இதேரீதியில் சென்றால், தேர்தல் முடிவுகளில் கடும் பின்னடைவு ஏற்படும்’ என்று ஓப்பனாகச் சொல்லிவிட்டாராம். அதற்கு ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லாவிட்டாலும், ‘நம் வெற்றியை யாரும் தடுக்க முடியாது’ என்று மட்டும் சொன்னாராம்!

‘‘அடேங்கப்பா!’’

‘‘தி.மு.க கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. தி.மு.க தரப்பிலிருந்து, ‘25 தொகுதிகள் வரை ஒதுக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘நாங்க உங்களோட இருக்குறதாலதான் 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல உங்களுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் விழுந்திருக்கு. முப்பது சீட்டுக்கு குறையாம கொடுக்கணும்’ என்று கதர்கள் கறார் காட்டியிருக்கிறார்கள். கூட்டணி தொடர்பாக மாற்றுத் திட்டம் இல்லாமல் கதர் பார்ட்டிகள் இப்படிப் பேச வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.”

சசிகலா
சசிகலா

‘‘ஓஹோ... சசிகலா ஏதோ அப்செட் என்கிறார்களே?’’

‘‘இருக்காதா பின்னே? சிறையிலிருந்து வந்த பிறகு அ.தி.மு.க-விலிருந்து கணிசமானோர் தன்னைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. மன்னார்குடி உறவுகள் தரப்பிலிருந்து இரண்டு அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார்கள். ‘கண்டிப்பாக வருகிறோம்’ என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார்களாம் அந்த அமைச்சர்கள். வைத்திலிங்கத்திடம் வேறொரு சேனலில் பேசியிருக்கிறது மன்னார்குடி தரப்பு. அவர்களிடம் பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்த வைத்தி, ‘பொதுச்செயலாளராக சசிகலா பதவியேத்ததுக்கு வாழ்த்து சொல்லப் போனேன். என்னை கயித்துக்கு அந்தப் பக்கம் பல மணி நேரம் நிக்கவெச்சு அசிங்கப்படுத்திட்டாங்க. பழசையெல்லாம் மறக்கச் சொல்றீங்களா?’ என்று ஒரேடியாகக் கொந்தளித்தவர், சசிகலாவைச் சந்திக்க மறுத்துவிட்டாராம். எம்.எல்.ஏ கருணாஸிடம், ‘ஒருமுறை நீங்க வந்து அம்மாவைப் பார்த்துட்டுப் போங்க’ என்று கேட்டுக் கொண்டார்களாம். நீண்ட யோசனைக்குப் பிறகு, ‘சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் வருகிறேன்’ என்று ஜகா வாங்கியிருக்கிறார் கருணாஸ். இந்தச் சம்பவங்களால் சசிகலா டோட்டல் அப்செட்!’’

மிஸ்டர் கழுகு: தினகரன் டீல்! - நழுவிய பா.ஜ.க...

‘‘பா.ஜ.க தலைவர்களை தினகரன் தரப்பு சந்தித்ததாகச் சொல்லப்படுகிறதே... உண்மைதானா?’’

‘‘சென்னை கிண்டியிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சந்திப்பு நடந்ததாகத் தகவல். தினகரன் தரப்பிலிருந்து, ‘உங்களுக்கு

70 தொகுதிகள் கேளுங்கள். அதிலிருந்து உள் ஒதுக்கீடாக அ.ம.மு.க-வுக்கு 40 சீட் தாருங்கள். அப்படி இல்லையென்றால், அ.தி.மு.க-வுக்கு 117 சீட்டுகள்; பா.ஜ.க-வுக்கு 117 சீட்டுகள் என்று கேளுங்கள். உங்களுக்கு ஒதுக்கப்படும் 117 தொகுதியிலிருந்து அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க என்று மற்ற கட்சிகளுக்குப் பிரிக்கலாம். இதன் மூலம் நீங்கள் விருப்பப்பட்டதுபோல உங்கள் தலைமையிலான கூட்டணி என்பதையும் சாதித்துக்கொள்ளலாம்’ என்று தூண்டில் வீசியிருக்கிறார்கள். அமைதியாகக் கேட்டுக்கொண்ட கிஷன் ரெட்டி, ‘டெல்லி மேலிடத் தலைவர்களுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று நழுவிவிட்டாராம்.

அ.தி.மு.க-வை 120 தொகுதிகளுக்குள் போட்டியிட வைத்தால், ஒருவேளை இந்தக் கூட்டணி வெற்றிபெற்றாலும் தனது தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் தினகரனின் திட்டமாம்” என்ற கழுகாருக்கு, சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகிவிட்டு செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

கே.எஸ்.அழகிரி,  விஜயதரணி
கே.எஸ்.அழகிரி, விஜயதரணி

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்யவிருக்கிறார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ விஜயதரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். விஜயதரணி பேசும் போது, கூட்டத்தில் சிலர் கூச்சலிட்டுள்ளார்கள். அப்போது டென்ஷனான விஜயதரணி, ‘தைரியம் இருந்தா எழுந்து நின்னு சத்தம் போடுங்க’ என கூறவும், திடுதிப்பென ஏழெட்டு பேர் எழுந்து நின்றுவிட்டார்களாம். திகைத்துப்போன விஜயதரணி ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு, ‘நீங்க கட்சிக்காரங்களே இல்லை. உங்களை யார் கூட்டத்துக்குள்ள அனுமதிச்சது?’ என ஆவேசமாகியிருக்கிறார். இந்தக் களேபரம் போதாதென்று, ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், ‘எப்பவும் வட்டாரச் செயலாளர்களையே செலவுசெய்ய சொல்றீங்க. எம்.பி சீட்டு கேட்கிறவங்ககிட்ட செலவுசெய்ய சொல்லுங்க’ என ஆவேசமாகியிருக்கிறார். களேபரங்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது கூட்டம்!’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“முதல்வரின் பிரசாரத்தில் திட்டமிடல் சரியில்லை என்று முணுமுணுக்கிறார்கள். இதை நிரூபிப்பதுபோல பிப்ரவரி 22-ம் தேதி விழுப்புரம் பிரசாரக் கூட்டத்துக்கு முதல்வர் சென்றிருந்தபோது, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வெயிலில் காத்திருந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர் அய்யாவு என்பவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இதில் எடப்பாடி கடும் அப்செட் என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

வைகுண்டராஜனுக்கு சிறை!

மிஸ்டர் கழுகு: தினகரன் டீல்! - நழுவிய பா.ஜ.க...

வி.வி.மினரல் நிறுவனத்தின் பங்குதாரரான வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்ததாக 2016-ல் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜா பாட்டியா, மத்திய அரசு அதிகாரியாக இருந்த நீரஜ் குமார் காட்ரி மற்றும் வைகுண்டராஜன் ஆகியோரைக் குற்றவாளிகள் என்று பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பளித்தார். இரு தரப்பு விவாதத்துக்குப் பிறகு, பிப்ரவரி 22-ம் தேதி வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின் மீது அதிருப்தியில் நாராயணசாமி!

மிஸ்டர் கழுகு: தினகரன் டீல்! - நழுவிய பா.ஜ.க...

புதுச்சேரியில் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க எம்.எல்.ஏ வெங்கடேசன் தனக்கு நெருக்கமானவர்களிடம், “கட்சித் தலைவர்கிட்ட சொல்லிட்டுதான் இந்த முடிவை எடுத்தேன்” என்று சொன்னாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியான நாராயணசாமி, ஸ்டாலினுக்கே போனை போட்டு, “தலைவரே நீங்களுமா!” என்று அங்கலாய்த்தார் என்கிறார்கள். ஸ்டாலின் தரப்பிலோ பொத்தாம் பொதுவாக “நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு, வெங்கடேசனைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினாலும், ‘தலைமை சிக்னல் கொடுக்காமலா ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்வார்?’ என்று கொதிக்கிறது நாராயணசாமி தரப்பு!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதிக்கு கடும் டஃப் கொடுக்க முடிவு செய்திருக்கிறது பா.ஜ.க. உதயநிதி திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டால் அங்கு குஷ்புவையும், ஆயிரம் விளக்கு அல்லது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் அங்கு காயத்ரி ரகுராமையும் களமிறக்கத் தயாராகிவருகிறதாம் கமலாலயம்!

பிரசாரத்தின்போது பா.ஜ.க அரசின் சாதனைகளை முதல்வர் பழனிசாமி பேசுவதில்லை என்று கொந்தளிப்பில் இருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். தவிர, முதல்வரின் பயணத் திட்டம் குறித்தும் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படுதில்லையாம். இவையெல்லாம் புகாராக கமலாலயத்துக்குப் போயிருக்கிறது.

எதிரும் புதிருமாக இருந்த புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமானும், அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தோஸ்த்துகளாக மாறிவிட்டனர். சமீபத்தில், புதுக்கோட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் சந்தித்துக்கொண்ட இருவரும், நான்காண்டுப் பகையை மறந்து கைகோத்தார்களாம். புதுக்கோட்டை தொகுதியை கார்த்திக்கு பெற்றுத்தருவதாக விஜயபாஸ்கர் உறுதி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism