Published:Updated:

மிஸ்டர் கழுகு: சந்தேக வளையத்தில் வேலுமணி... எடப்பாடியின் கோபப் பின்னணி!

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

படம்: ஆர்.கண்ணன்

சிறகுகளைப் படபடத்தபடி வந்தமர்ந்தார் கழுகார். ‘‘தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வு பெற்றதும், அரசின் அட்வைஸராக நியமிக்கப்படுவார் என்று சொல்லியிருந்தீர். அது அப்படியே நடந்துவிட்டதே...’’ என்றபடி மைசூர் பாக் நீட்டினோம். புன்முறுவலுடன் ஸ்வீட்டைச் சுவைத்தவர், ‘‘எனக்குக் கிடைத்த செய்தியைச் சொன்னேன். இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த விவகாரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு முதல்வர் பழனிசாமி செக் வைத்துவிட்டார்’’ என்றார்.

‘‘எடப்பாடிக்கு வேலுமணி அவ்வளவு நெருக்கம். அப்புறம் ஏன் செக் வைக்க வேண்டும்?’’ என்றோம்.

‘‘அமைச்சர் வேலுமணியின் வசமுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில், கூடுதல் தலைமைச் செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா இருக்கிறார். வேலுமணியின் ஆசியைப் பெற்றவர் என்பதால், வர்மாவைத் தலைமைச் செயலாளராக நியமிக்க முதல்வர் விரும்பவில்லையாம். ஆனாலும், வேலுமணியின் அழுத்தத்தால் யோசனையில் இருந்திருக்கிறார். இச்சூழலில்தான், மாதவரம் மீன்வளப் பூங்காவை ஆய்வுசெய்வதற்காக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் ஜனவரி 21-ம் தேதி தமிழகம் வந்தனர். யதேச்சையாக முதல்வர் கண்ணில் ராஜீவ் ரஞ்சன் பட்டுவிடவும், நெடுஞ்சாலைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர் என்பதால், தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு அவரின் பெயரை முதல்வர் `டிக்’ செய்துவிட்டாராம். வேலுமணியின் சிபாரிசை முதல்வர் ஏற்காதது கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.’’

மிஸ்டர் கழுகு: சந்தேக வளையத்தில் வேலுமணி... எடப்பாடியின் கோபப் பின்னணி!

‘‘வேலுமணி மீது திடீரென எடப்பாடிக்கு அப்படியென்ன கோபம்?’’

‘‘அரசியலில் யார் நெருக்கமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உறுத்தும் அல்லவா? அப்படி ஒருவர் போட்டுக்கொடுத்த விவகாரம்தான் காரணம். சமீபத்தில் சசிகலா தொடர்பாக எடப்பாடியுடன் மூத்த அமைச்சர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர், ‘அண்ணே, நீங்க வேலுமணி விஷயத்துல கவனமா இருக்கணும். 2012 ஜனவரியில அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், சசிகலாகிட்ட சரண்டராகி 2014-ல திரும்பவும் அமைச்சர் பதவியை வாங்கினவரு அவரு. 2017 பிப்ரவரியில பன்னீர் தர்மயுத்தம் தொடங்கினப்ப, தன் உறவினரை பன்னீர் வீட்டுக்கே அனுப்பி துணை முதல்வர் பதவிக்கு ரூட் போட்டாரு. பெங்களூருல தி.மு.க பிரமுகர் ஒருத்தர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு. இந்தக் கதையெல்லாம் எங்களுக்குத் தெரியும். இப்போ உங்களுக்கு நெருக்கமா இருக்காரு. அவர் கையில எத்தனை எம்.எல்.ஏ-ங்க இருக்காங்க தெரியுமா?’ என்று பல கதைகளைப் பட்டியலிட்டு முதல்வரிடம் பற்றவைத்திருக்கிறார். வேலுமணி பற்றி முதல்வருக்கு நன்கு தெரியும் என்றாலும், இது அவர் மனதில் சந்தேக சாம்பிராணியை புகையவைத்ததாகச் சொல்கிறார்கள்.’’

‘‘ஓஹோ... சசிகலாவைப் பார்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரு சென்றிருக்கிறாராமே!’’

‘‘அப்படித்தான் ராமநாதபுரம் முழுவதும் பேச்சு ஓடுகிறது. தன் ஆதரவாளர்களிடம், ‘எல்லோரின் நலனுக்காகவும்தான் பெங்களூரு செல்கிறேன்’ என்று மணிகண்டன் கூறிச் சென்றதாகத் தகவல். இதற்கிடையே, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் திருச்சி மண்டல செயலாளர் வினுபாலன், தஞ்சை பால்வளத் தலைவர் காந்தி, தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் துரை.வீரணன் ஆகிய மூவரும் சசிகலா கணவர் ம.நடராசனின் அக்காள் மகன் தனசேகரனை அவரின் வீட்டில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களான இவர்கள் மூவரும், சசிகலா தரப்பைச் சந்தித்திருப்பதால், ‘சமாதானப் பேச்சுவார்த்தையை வைத்திலிங்கம் தொடங்கிவிட்டார்’ என்று டெல்டா முழுவதும் அனலடிக்கிறது.’’

‘‘சரிதான்!’’

‘‘பெங்களூரில் தங்கியிருக்கும் சசிகலா, பிப்ரவரி 5-ம் தேதி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறாராம். பிப்ரவரி 7-ம் தேதி அவர் சென்னை வருவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. மருத்துவமனையிலிருந்து சசிகலா வெளியே வரும் காட்சிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த சீனியர் அமைச்சர் ஒருவர், ‘ஜெயலலிதா பயணித்த காரை சசிகலா எப்படிப் பயன்படுத்த முடியும்? போயஸ் கார்டன் வீடு, அங்கிருந்த பொருள்களையெல்லாம் கையகப்படுத்தி நினைவு இல்லமாக அறிவித்தபோதே, அந்த காரும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டுமே... ஏன் கோட்டைவிட்டீர்கள்?’ என்று உயரதிகாரிகளிடம் கடிந்தாராம். அதற்கு, ‘அந்த காரின் உரிமையாளர் ஜெயலலிதா அல்ல. வேறொருவர் பெயரில் இருக்கிறது’ என்று பதில் வந்ததும், அமைச்சர் கப்சிப் ஆகிவிட்டாராம்.’’

‘‘ம்ம்... மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள்போல. சரி, தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?’’

‘‘கூட்டணியில் 30 சீட்டுகளுக்குக் குறைவாகப் பெறக் கூடாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறதாம். கதர்களை மிரட்டுவதற்காக மக்கள் நீதி மய்யத்தை மீண்டும் அணுகியிருக்கிறதாம் அறிவாலயம். தி.மு.க வாரிசு பிரமுகர் மூலமாக கமலை அப்ரோச் செய்துள்ளார்கள். ‘பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று கமல் தரப்பில் சொல்லப்பட்டதாம். ‘தி.மு.க தலைவர் ஸ்டாலின், `அதீத வெற்றியை நோக்கிச் செல்கிறோம்’ என்கிறார். அப்புறம் எதற்காக நம்மிடம் வலிய கூட்டணிக்கு அழைக்கிறார்கள்’ என்று சிரித்தாராம் கமல். மக்கள் நீதி மய்யத்தைக் கையிலெடுத்து, அவர்களைக் காட்டியே காங்கிரஸ் கட்சியிடம் பேரத்தைக் குறைக்க நினைக்கிறது தி.மு.க. இந்தக் கூட்டல் கழித்தல் தெரிந்ததால்தான் கமல் அப்படி கமென்ட் அடித்தாராம்.’’

மிஸ்டர் கழுகு: சந்தேக வளையத்தில் வேலுமணி... எடப்பாடியின் கோபப் பின்னணி!

‘‘அரசியலில் கமல் தேறிவிட்டார் என்று சொல்லும்!’’

‘‘ஜனவரி 31-ம் தேதி பா.ம.க நிர்வாகக்குழுக் கூட்டம் நடந்தது. அதற்கு முதல்நாள் இரவு, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் அவசரமாக தைலாபுரத்தில் ராமதாஸைச் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, ‘பிப்ரவரி 3-ம் தேதி அரசு அழைத்திருக்கும் பேச்சுவார்த்தைக்கு முதலில் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று சி.வி.சண்முகம் கூறியிருக்கிறார். ஆனால், ‘30 சீட்டுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே கூட்டணியை உறுதிசெய்ய முடியும்’ என்று கறார் காட்டிவிட்டதாம் தைலாபுரம். கூடவே 300 ஸ்வீட் பாக்ஸ்களுக்கும் பேரம் பேசுவதாகத் தகவல்’’ என்ற கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியைப் பருகியபடியே, ‘‘ஓர் அரசியல் வாரிசைப் பற்றிச் சொல்கிறேன். யாரென நீரே யூகித்துக்கொள்ளும்’’ என்றபடி செய்தியைத் தொடர்ந்தார்.

‘‘சமீபத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் வாரிசு வட மாவட்டம் ஒன்றில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தை முடித்துக்கொண்டு அன்றிரவு மாவட்டக் கட்சி அலுவலகத்திலுள்ள ஏ.சி அறையில் நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். அந்த மாவட்டத்தின் ‘மணி’யான பிரமுகர் ஒருவர், ‘எதிர்காலமே இவர்தான். இப்போ வெயிட்டா கவனிச்சாத்தான் நாம கட்சிப் பதவியில உயர முடியும்’ என்று ‘உற்சாகமாக’க் கவனித்துவிட்டாராம். இதில் வாரிசுக்கு தள்ளாட்டம் ஓவராகி, கால்கள் பின்ன ஆரம்பித்துவிட்டதாம். நள்ளிரவு திடீரென பவர் கட்டானதால் ஏ.சி நின்றுபோயிருக்கிறது. ‘வாரிசுக்கு வியர்த்துவிடுமே’ என்று பதறிப்போன ‘மணி’யான பிரமுகர், உடனடியாக அருகிலிலுள்ள ஹோட்டலுக்குக் கைத்தாங்கலாகவே வாரிசை அழைத்துச் சென்றிருக்கிறார். உற்சாகம் ஓவராக இருந்ததால், ஹோட்டல் கதவு என்று நினைத்து சுவரில் முட்டிக்கொண்டு தடுமாறிவிட்டாராம் வாரிசு. இந்த விவகாரம் கிச்சன் கேபினெட்டுக்கு தெரியவந்ததும், கண்கள் சிவக்க காளி அவதாரம் எடுத்தவர், ‘மணியான பிரமுகருடன் யாரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது’ என்று உத்தரவு போட்டுவிட்டாராம்.’’

“யாரெனப் புரிந்தது... செல்லுமிடமெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதே வாரிசுக்கு வேலையாகிவிட்டது. சரி, சமத்துவ மக்கள் கட்சிப் பணிகளில் ராதிகா சரத்குமார் திடீர் ஆர்வம்காட்டுகிறாராமே?”

மிஸ்டர் கழுகு: சந்தேக வளையத்தில் வேலுமணி... எடப்பாடியின் கோபப் பின்னணி!

‘‘சமீபத்தில் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சரத்குமாருடன் அவர் வந்திருந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினாராம். ஆலங்குளம் தொகுதியில் சரத்குமாரும், வேளச்சேரி தொகுதியில் ராதிகாவும் களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது குறித்து நிர்வாகிகளிடம் ராதிகா கருத்து கேட்டறிந்துள்ளார். தென் மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டாராம் சரத்.’’

‘‘ஓஹோ...’’

‘‘வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன், ஜனவரி இறுதியில் ஓய்வு பெற்றார். அவர் வகித்த பொறுப்பை, டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப் பொறுப்பிலிருந்த சந்தோஷ்குமாரிடம் தற்காலிகமாகக் கொடுத்து கவனிக்கச் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் சந்தோஷ்குமாரையே ரெகுலர் ஐ.ஜி-யாக நியமிக்கப்போகிறார்களாம். இவர் ஏற்கெனவே டி.ஐ.ஜி-யாக விழுப்புரம் சரகத்தில் பணிபுரிந்தவர். அந்த வகையில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நன்கு அறிமுகம் என்பதால், தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர்தான் சந்தோஷ்குமாரை வடக்கு மண்டல ஐ.ஜி-யாகப் பரிந்துரை செய்தாராம்’’ என்றபடி சிறகுகளை சிலுப்பிய கழுகார்,

‘‘கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் மாவட்டவாரியாக நடந்த பணிகளுக்கான ‘கவணிப்புகளை’ மேலிடம் பெறவில்லையாம். அந்தந்த மாவட்டங்களிலுள்ள முக்கியப்புள்ளிகள் வீட்டில் ஒப்படைக்கச் சொல்லி உத்தரவு போயிருக்கிறது. தேர்தல் நேரத்தில் பட்டுவாடாவுக்குச் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, தொகுதிக்கு பத்து ஸ்வீட் பாக்ஸ்களைப் பதுக்க ஆளும்தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.