Published:Updated:

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு... தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு?!

ரஜினியைக் கண்டித்து போஸ்டர்

பிரீமியம் ஸ்டோரி

குளிரில் நடுங்கிக்கொண்டு வந்த கழுகாருக்கு சுடச்சுட பொங்கல், வடையுடன் ஃபில்டர் காஃபியும் கொடுத்து உபசரித்தோம். உற்சாகமான கழுகாரிடம், ‘‘உள்ளாட்சி அமைப்புகளின் மறைமுகத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அ.தி.மு.க பொங்கல் வைத்துவிட்டதே?’’ என்ற சூடான கேள்வியையும் முன்வைத்தோம்...

மென்மையாகச் சிரித்த கழுகார், ‘‘உண்மையைச் சொல்வதானால் அது காங்கிரஸ் வைத்த பொங்கல் என்றுதான் சொல்லவேண்டும்’’ என்று தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு... தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு?!

‘‘கே.எஸ்.அழகிரியின் அறிக்கையைப் பார்த்திருப்பீரே... ‘தி.மு.க-வின் சொம்பு’ என்று அவரை திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் வசைபாடிக்கொண்டிருந்தார்கள். அதற்கேற்ப உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க-வின் மாவட்டச்செயலாளர்கள், காங்கிரஸ் கட்சியினரை மொத்தமாகக் கைகழுவப் பார்த்தனர். அதற்குப் பின்புதான் தி.மு.க-வை விமர்சித்து காட்டமாக அறிக்கை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி, ‘உங்களை மதிக்காத தி.மு.க நிர்வாகிகளுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டாம்’ என்று சொல்லி, அங்காங்கே அவர்களாகவே முடிவெடுக்கச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லி அடித்திருக்கிறாரே?’’

‘‘காங்கிரஸ்தான் அங்கே அ.தி.மு.க-வுக்கு கை கொடுத்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் தி.மு.க-தான் அதிக இடங்களில் ஜெயித்திருந்தது. ஆனால், துணைத்தலைவர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்து, தலைவர் பதவியில் தன் ஆளை ஜெயிக்க வைத்துவிட்டார் விஜயபாஸ்கர். அதையும் சேர்த்து 14 மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டது ஆளுங்கட்சி. இனிமேல் தலைமையின் கட்டளையைவிட கரன்சிதான் எதையும் முடிவு செய்யும் என்ற நிலைமையை இந்தத் தேர்தல் உருவாக்கியிருக்கிறது. தி.மு.க-வுக்கு மட்டுமில்லை. எல்லா கட்சிகளுக்கும் இதுதான்

நிலைமை.’’

‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டு வைத்ததன் மூலம், தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு வைத்துவிட்டதா?’’

‘‘இது சும்மா மிரட்டல். அழகிரியே ‘அந்த அறிக்கை முடிந்துபோன கதை’ என்று மறுபடியும் அறிவித்துவிட்டார். காங்கிரஸ் தலைமையுடன் தி.மு.க தலைமை மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி மாறுவதையும் இரு கட்சிகளும் விரும்பாது. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றுவதில் ஆளுங்கட்சி தீவிரமாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு இதற்காக ரகசிய அசைன்மென்ட் தரப்பட்டிருப்ப தாகவும் தகவல் பரவியிருக்கிறது.’’

‘‘தர்பார் எப்போது பார்த்தீர்... வசனத்தை நீக்குவதற்கு முன்பா, பின்பா?’’

‘‘முன்பே பார்த்துவிட்டேன். ‘சிறைக்குள் இருந்துகூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனத்தை நீக்காவிட்டால், வழக்கு தொடரப்படும்’ என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறிய பின்புதான், அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த வசனம் ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே இடம் பெற்றிருக்கிறது என்று நினைக்கும் அ.ம.மு.க-வினர், ரஜினியைக் கண்டித்து போஸ்டர் அடித்துள்ளனர்.’’

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

‘‘ஆனால், அ.ம.ம.க உள்பட பல கட்சிகளுடனும் ரஜினி கூட்டணி வைக்கக்கூடும் என்று பேச்சிருக்கிறதே?’’

‘‘உண்மைதான். அ.ம.மு.க-வை ரஜினியின் கூட்டணியில் சேர்ப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு கல்வித்தந்தைகள் முயற்சி மேற்கொண்டனர். அது அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான், அந்த வசனங்களை நீக்குவதற்கு ரஜினி தடையேதும் சொல்லவில்லை யாம். அவருடைய ஒப்புதலுடன்தான் அதை நீக்கியுள்ளனர்.’’

‘‘ஓ... அ.ம.மு.க-வின் போஸ்டர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பெரிதாக ரியாக்‌ஷன் காட்டாததன் காரணம் இதுதானோ?’’

‘‘ஓரளவுக்கு உண்மை. ஆனால், ரஜினியிடமிருந்து இன்னும் அழுத்தமான அறிவிப்பு வராத கோபம் ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டிருப்பதுதான், ரியாக்‌ஷன் மிஸ்ஸானதற்கு முக்கிய காரணம். ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ஒரு படம், பிருத்விராஜுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களுக்கு ரஜினி ‘புக்’ ஆவதில், அவருடைய அரசியல் என்ட்ரியை எதிர்பார்க்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் ரஜினி, அதற்கான எந்த வேலையையும் செய்யாமல் இருக்கிறார் என்று அவர்கள் மத்தியில் புலம்பல் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. அதோடு, இன்னொரு தகவலும் பரவிக்கொண்டிருக்கிறது...’’

‘‘என்ன தகவல்?’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசிய ரஜினி, ‘நீங்க எல்லோரும் உங்களுடைய வேலையையும் தொழிலையும் பாருங்கள். மன்ற வேலைகள் வேறு எதையும் பெரியளவில் செய்யவேண்டாம்’ என்று கூறினாராம். அவர் சொன்னதைப் பார்த்தால், அரசியலுக்கு வருவதில் அவருக்கு விருப்பமே இல்லை என்பதைப் போலிருந்ததாம். ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் அந்த விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது மற்றவர்களுக்கும் பரவியிருக்கிறதாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அதனால்தான் ரசிகர் மன்றங்கள் சைலன்ட் மோடில் இருக்கின்றனவா?’’

‘‘அப்படித்தான் தெரிகிறது. தன்னைச் சந்திக்கும் யாரிடமும் அரசியலில் தன்னுடைய நிலைப்பாடு பற்றி எதையுமே அவர் பகிர்வதில்லை என்கிறார்கள்.’’

‘‘இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்தாரே... என்ன விசேஷம்?’’

‘‘ரஜினியை விக்னேஸ்வரன் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி, இலங்கையிலும் விநோதமாகத்தான் பார்க்கப் படுகிறது. விசாரித்ததில், ரஜினி தரப்பிலிருந்துதான் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு போயிருக்கிறது.’’

‘‘என்ன பேசினார்களாம்?’’

‘‘இலங்கையில் தற்போதுள்ள நிலையைப் பற்றி விக்னேஸ்வரன் விளக்கியிருக்கிறார். இந்திய அரசு என்னென்ன செய்தால் அங்குள்ள தமிழர்களுக்கும் இங்குள்ள அகதிகளுக்கும் பலனளிக்கும் என்பதையும் விவரித்திருக்கிறார். ‘இதுபற்றி

பி.ஜே.பி தலைவர்களிடம் நீங்கள் பேசவேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்த விக்னேஸ்வரன், ‘இலங்கைக்கு வந்து வடக்கு மாகாணத்தின் நிலைமையை நீங்கள் நேரில் பார்க்கவேண்டும்’ என்றும் அழைப்பு விடுத்தாராம்.’’

‘‘ரஜினி என்ன சொன்னாராம்?’’

ரஜினியுடன் விக்னேஸ்வரன்
ரஜினியுடன் விக்னேஸ்வரன்

‘‘எல்லாவற்றுக்கும், ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறாராம். அநேகமாக இலங்கைத் தமிழர்கள், இங்குள்ள அகதிகள் தொடர்பாக பி.ஜே.பி தலைவர்களிடம் ரஜினி பேசுவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘தமிழக அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்கு கள் விரைவில் சூடுபிடிக்கும் என்கிறார்களே?’’

‘‘மார்ச் மாதத்துக்குப் பின்பு அதற்கு வாய்ப்புண்டு. அறப்போர் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் செய்தி மையம் போன்றவை ஏகப்பட்ட ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்டிருக்கின்றன. அடுத்தடுத்து வழக்கு களையும் தாக்கல் செய்துவருகின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட அமைப்பினரைப் பலவிதங் களிலும் மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் அதிகமாகி யிருக்கிறதாம். இப்படித்தான் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்ட மக்கள் செய்தி மையத்தின் கடையும் திடீரென அகற்றப் பட்டிருக்கிறது.’’

‘‘எப்படி திடீரென அகற்றினார்களாம்?’’

‘‘அரசுக்கு எதிராக நீங்கள் சர்ச்சைக்குரிய புத்தகத்தை உங்கள் கடையில் விற்கிறீர்கள் என்று சொல்லித்தான் அந்த மையம் நடத்திய 101-ம் நம்பர் கடையை அகற்றச் சொல்லி கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் நோட்டீஸ் கொடுத்திருக் கின்றனர். இதற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக் கின்றனர். ஆக, ஒரு வழியாக புத்தகக் கண்காட்சியிலும் அரசியல் புகுந்துவிட்டது’’ என்ற கழுகார், பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுச் சிறகுகள் விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு