Published:Updated:

மிஸ்டர் கழுகு: “தம்பிக்கு உதவி செய்ய முடியாது!” - கறார் ஓ.பி.எஸ்

கரூரில் அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் கைகோத்துக் கொண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

‘ஏ.ஜி.டி.எம்.எஸ் ஸ்டேஷனிலிருந்து மெட்ரோ ரயிலில் வந்துகொண்டிருக்கிறேன். எனக்காகக் காத்திருக்கவும்!’ - கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் நமது மொபைலுக்கு வந்து விழுந்தது. சற்று நேரத்தில் கழுகார், அலுவலகத்தில் ஆஜர்.

‘‘அறிவாலயம் போய் வந்திருக்கிறீரா? அவசர செயற்குழுவாக அறிவிக்கப்பட்ட தி.மு.க-வின் செயற்குழுவில் எந்த அவசர தீர்மானமும் நிறைவேற்றவில்லையே... ஏன்?’’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கினோம்.

மிஸ்டர் கழுகு: “தம்பிக்கு உதவி செய்ய முடியாது!” - கறார் ஓ.பி.எஸ்

‘‘நீர் கேட்ட கேள்வியைத்தான் மூத்த உடன்பிறப்புகள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கேட்டிருக்கிறார்கள். அவசர செயற்குழு என்றாலும், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி - தோல்வியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் தி.மு.க சந்தித்த சரிவு பற்றி, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியிடமும் வரிசையாக கருத்துக் கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.’’

‘‘என்ன சொன்னார்களாம் மாவட்ட நிர்வாகிகள்?’’

‘‘வேட்பாளர் தேர்வில் நடந்த குளறுபடிகள் பற்றி கோவை தெற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டுகளைக் குவிக்க, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறாராம். நீலகிரி மாவட்ட நிர்வாகி முபாரக் மீது அந்த மாவட்ட நிர்வாகிகள் சொன்ன குறைகளுக்கும், அவர் மழுப்பலாகவே பதில் சொல்லியிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக விசாரணை நடந்திருக்கிறது.’’

‘‘ஓஹோ!’’

‘‘வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா பேசும்போது ‘என் மாவட்டத்தில் நான் கைக்காசைப் போட்டுச் செலவுசெய்கிறேன். ஆனால், எனக்குக் கீழ் பணியாற்றும் நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைப்பதில்லை. சில நிர்வாகிகள்மீது நான் சொன்ன புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காததால்தான் இப்படியானது’ என்று சில விவரங்களைச் சொல்ல, அதை ஆமோதிப்பது போல் ஆர்.எஸ்.பாரதியும் தலையாட்டியிருக் கிறார்.’’

‘‘கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி என்ன சொன்னாராம்?’’

ஓ.பன்னீர்செல்வம் - ஓ.ராஜா
ஓ.பன்னீர்செல்வம் - ஓ.ராஜா

‘‘அவர், ‘கரூரில் அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் கைகோத்துக் கொண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனால், அடுத்த நகர்மன்றத் தேர்தலில் இதை சரிசெய்துவிடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்.’’

‘‘காங்கிரஸ் பற்றியும் கடும் விமர்சனங்கள் எழுந்தனவாமே?’’

“ஆமாம். குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் ரகுபதியின் பேச்சுதான் உச்சம் என்கின்றனர். அவர் பேசும்போது, ‘எங்கள் மாவட்டத்தில் தி.மு.க பின்னடைவுக்கு முழுக் காரணமே காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் நம் முதுகில் குத்திவிட்டனர். நமக்கு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டனர். இதற்குப் பின்னால் இருந்தது ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகிய மூவரும்தான். அவர்கள் நிறுத்திய வேட்பாளர்களுக்குக்கூட பணம் செலவு செய்யவில்லை. நாம்தான் செலவும் செய்தோம்’ என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். இதே பாணியில் பேசிய கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ், ‘இதற்கு வசந்தகுமாரும் ஒரு காரணம்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘தூத்துக்குடியிலும் பலத்த அடிவாங்கினார்களே?’’

‘‘தோல்வியடைந்த மாவட்டங்களை வரிசையாகக் கேட்ட ஸ்டாலின், பெரும்பின்னடவைச் சந்தித்த தூத்துக்குடி, தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை. அரியலூர் சிவசங்கர் பேசும்போது, ‘தோல்விக்கு, மாவட்டச் செயலாளர்களை மட்டும் குறை சொல்லாமல்... கீழுள்ள நிர்வாகிகளின் உள்ளடிவேலைகளையும் தலைவர் கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.’’

‘‘ஸ்டாலின் என்ன சொன்னாராம்?’’

‘‘ ‘காங்கிரஸ் கட்சியுடன் நமக்கு பூசல் ஏற்பட்டு, அதற்குப் பிறகு அவர்கள் வந்து நம்மிடம் வருத்தம் தெரிவித்துவிட்டார்கள். அதேநேரம் பல மாவட்டச் செயலாளர்கள் சர்வாதிகாரிகள் போன்று நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபற்றி எனக்கும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அடுத்த ஆண்டு நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதற்கு முழு ஒத்துழைப்பு உங்களிடமிருந்து வேண்டும். மாறாகச் செயல்படுபவர்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்’ என்று பொங்கியிருக்கிறார்.’’

‘‘இதைத்தான் அவர் அடிக்கடி சொல்கிறாரே... நடவடிக்கைதான் ஒன்றுமே இல்லையே?’’

‘‘இல்லை. விரைவில் மாற்றம் வரப்போகிறது. மூத்த மாவட்டச் செயலாளர்கள் மாநிலப் பொறுப்புக்கு வரப்போகிறார்கள். இளையவர்கள் சிலர் மாவட்டப் பொறுப்பை ஏற்க உள்ளார்களாம். உதயநிதியின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷை, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கவுள்ளார்கள். அதேபோல் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இளைஞரணி துணைச்செயலாளர் பதவி வழங்கப்போகிறார்களாம். முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து டி.ஆர்.பாலு மாற்றப்படும் வாய்ப்பிருக்கிறது. இந்த மாற்றத்தில் தன் மகனுக்கு ஏதேனும் பதவியைப் பெற்றுவிட நினைக்கிறாராம் பொன்முடி.’’

‘‘இந்த மாற்றங்கள் எப்போது நடக்குமாம்?’’

‘‘இந்த மாதம் இறுதியில் திருச்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி நிர்வாகிகள் மாநாட்டுக்குப் பிறகு அறிவிப்பு வெளிவர இருக்கிறதாம். இந்த மாற்றங்களுக்கு, கட்சிக்குள் கடும் அதிருப்தி கிளம்பவும் வாய்ப்பிருக்கிறது. வாரிசுகளுக்கு தொடர்ந்து பதவி தருவது கட்சிக்கு நல்லதல்ல என்கிறார்கள் சீனியர்கள்.’’

‘‘ரஜினி விவகாரத்தில் ஸ்டாலின் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கிறாரே?’’

‘‘அவருக்குப் பதிலாக உதயநிதி ஸ்கோர் செய்வதையும் கவனிக்க வேண்டும். `நண்பர் ரஜினி’ என்று ஸ்டாலின் பேட்டியில் சொல்கிறார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் உதயநிதி, ‘ரஜினிகாந்த், விஷயம் தெரியாமல் இப்படி ஏதாவது பேசி மாட்டிக்கொள்கிறார். உண்மை தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்பார்’ என்று சொன்னார். தனக்கு எதிராக உதயநிதி தொடர்ந்து குரல்கொடுப்பது ரஜினிக்கு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறதாம்.’’

‘‘பெரியார் பேச்சு விவகாரத்தில் அ.தி.மு.க-வே அதிகளவு ரஜினிக்கு எதிராக கம்பு சுற்றியிருக்கிறதே?’’

‘‘அதுதான் ஆச்சர்யமே! அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் ரஜினியைக் கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக, அமைச்சர் ஜெயக்குமார் ‘ரஜினி தேவையில்லாததைப் பேசுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வாயை மூடி மெளனமாக இருக்க வேண்டும்’ என எச்சரிக்கும்விதத்தில் பேசியிருக்கிறார். இத்தகைய விமர்சனங்களைவிட, இந்த விவகாரத்தில் தன் மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தை மையப்படுத்திப் பேசுவதுதான் ரஜினியை அப்செட் ஆக்கியிருக்கிறது.’’

‘‘ஓ.ராஜாவின் ஆவின் நியமனப் பதவிக்கு நீதிமன்ற உத்தரவால் ஆபத்து வந்திருக்கிறதே?’’

தி.மு.க தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம்
தி.மு.க தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம்

‘‘ஆமாம், அவர் மதுரை - தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஆனபோதே அந்த நியமனத்தை எதிர்த்து அமாவாசை என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். அதற்குப் பிறகு, மதுரை அ.தி.மு.க-வினரின் எதிர்ப்பால் தேனி ஆவினுக்கு மட்டும் ஓ.ராஜா தலைவராக அறிவிக்கப்பட்டார். இதிலும் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனத் தொடர்ந்த வழக்கில்தான், ஓ.ராஜா நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரை கிளை. இதுமட்டுமன்றி, தேனி ஆவினை நிர்வகிக்க அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழுவின் 17 உறுப்பினர்களின் நியமனத்தையும் ரத்துசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த விஷயம் சர்ச்சையானதிலிருந்து ஓ.பி.எஸ், ‘நீதிமன்ற விஷயங்களில் தலையிடக் கூடாது’ என்று முடிவு எடுத்ததுடன், தன் ஆதரவாளர்களிடமும் தன் தம்பிக்கு உதவக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டாராம்.’’

‘‘எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்திருக்கிறதே?’’

‘‘கடந்த இதழில் நீர் சொல்லியிருந்த தகவலின்படியே, இந்த வழக்கில் என்.ஐ.ஏ தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த பிச்சைக்கனி என்கிற புறா கனி, அமீர், முகமது அலி ஆகியோர் சட்டவிரோதமான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தப்பியோடிய ஷேக்தாவூத் என்பவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. ஷேக்தாவூத் மீது ஏற்கெனவே என்.ஐ.ஏ-வில் வழக்கு பதியப்பட்டுள்ளதால் கைதுசெய்யப்பட்ட மூவரையும் என்.ஐ.ஏ விசாரிக்கவுள்ளது. ‘ஜிகாதி’ பரப்புரைக்கான ஆடியோ சி.டி-களும் புத்தகங்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி அன்று தமிழகத்தில் ஏதாவது விபரீதம் நடந்துவிடுமோ என்ற அச்சம் தமிழக போலீஸ் அதிகாரிகள் மத்தியில் நிறையவே இருக்கிறது.’’

‘‘அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறதே?’’

‘‘அதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவில்தான் எல்லாம் தெரியும்’’ என்ற கழுகார், சிறகுகளை விரித்தார்.

தரலைன்னா வருவாங்க!

வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களைக் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. ரெய்டு நடந்துகொண்டிருந்தபோது அந்த நிறுவனத்துக்கு நெருக்கமான ஒரு புள்ளியிடம் வருமானவரித் துறை உயரதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, ‘இந்த ரெய்டை நிறுத்த வேண்டுமென்றால், நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்’ என்று சில டிமாண்டுகளைச் சொன்னாராம். இந்தத் தகவலை தமிழக ஆளும் தரப்பிடம் கொண்டுசென்றுவிட்டது கல்வி அதிபர் தரப்பு. நாடாளுமன்றத் தேர்தலின்போது டெல்லியிலிருந்து வைக்கப்பட்ட சில கோரிக்கைகளை கல்வி நிறுவன நிர்வாகம் கண்டுகொள்ளாததுதான் ரெய்டுக்குக் காரணம் என்பது இப்போதுதான் புரிந்ததாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு