சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் டீல்... சர்வரோக நிவாரணி தேடும் அண்ணாமலை!

அ.தி.மு.க
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தி.மு.க

தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் என ஒரு புதிய யூனிட் தொடங்கப்படும் எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

‘‘விளம்பர கோதாவில் புதிதாக ஓர் அமைச்சரும் குதித்துவிட்டாரே கவனித்தீர்களா..?’’ என்று பீடிகை போட்டவாறே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம் சுடச்சுட வெங்காய சமோசாவை நீட்டினோம். ‘‘ஏது... குடிநீர்க்குழாய் உடைப்பை நாசர் உருண்டு உருண்டு ஆய்வுசெய்ததைச் சொல்கிறீரா..?’’ என்றதற்கு, தலையாட்டியவாறே சமோசாவை ருசித்தார். டேபிள் மீதிருந்த கவர் ஸ்டோரியில் கண்களை ஓடவிட்டவர், “ஓ... பாலைத்தான் காய்ச்சி எடுத்திருக்கிறீர்களா?” என்று நம்மைப் பார்த்துச் சிரித்தவர், ‘‘ஆள்பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்களாமே...” என்றார்.

“காங்கிரஸ் கட்சியைச் சொல்கிறீரா?” என்ற நம்மிடம், “நான் பா.ஜ.க-வைச் சொல்கிறேன். பாரத் ஜோடோ யாத்திரை முடிவதற்குள், கதர்களுக்குள் கலகத்தை உண்டுபண்ணப் பார்க்கிறதாம் பா.ஜ.க. கமலாலயத்திலிருந்துதான் இதற்கான ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தரப்பட்டிருக்கிறது’’ என்றபடியே செய்திகளைத் தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் டீல்... சர்வரோக நிவாரணி தேடும் அண்ணாமலை!

‘‘தென்மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கும், சத்தியமூர்த்தி பவனுக்குமான இடைவெளி வெகுவாக அதிகரித்துவிட்டது. மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்தவருக்கு, ‘உங்களுக்கு மீண்டும் சீட் கொடுப்பதற்கே யோசிக்கிறோம். மாநிலத் தலைவர் பதவியை எந்த தைரியத்தில் எதிர்பார்க்கிறீர்கள்?’ என விளாசிவிட்டார்களாம் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள். இதனால், அதிருப்தியின் உச்சத்திலிருக்கும் அந்த அதிரடி எம்.எல்.ஏ., சில நாள்களாகத் தன் நெருங்கிய வட்டாரத்தில் காங்கிரஸுக்கு எதிரான கோப வார்த்தைகளை அனலடிக்கும்விதமாக பேசிவந்திருக்கிறார். அவரின் மனநிலையை மோப்பம் பிடித்த கமலாலய பா.ஜ.க பிரமுகர்கள் சிலர், ‘நம்ம கட்சிக்கு வந்துடுங்க. உங்களுக்கான அரசியல் வளர்ச்சிக்கு நாங்க கேரன்டி’ என டீல் பேசியிருக்கிறார்கள்.”

“யார் அந்த எம்.எல்.ஏ எனப் புரிகிறது. தன் உடல் எடையை தடாலடியாகக் குறைத்தவருக்கு, திடீரென இப்படியொரு மன பாரமா?”

“ ‘அந்த பாரத்தைக் கமலாலயத்தில் இறக்கி வையுங்கள்’ என இழுக்கப் பார்ப்பவர்களால்தான் அரசியல் புயல் கிளம்பியிருக்கிறது. டீல் பேச வந்தவர்களிடம், ‘50 கோடி ரூபாயும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தான் கேட்கும் தொகுதியும் வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறார் அந்த அதிரடி எம்.எல்.ஏ. ‘முதலில் கட்சியில் சேருங்கள். நீங்கள் எதிர்பார்த்ததெல்லாம் கிடைக்கும்’ என்றிருக்கிறது தூது சென்ற தரப்பு. ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’, வரும் குடியரசு தினத்தில் ஸ்ரீநகரில் கொடியேற்றி முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக, அந்த அதிரடி எம்.எல்.ஏ-வை பா.ஜ.க பக்கம் இழுத்து வந்து, காங்கிரஸ் தரப்புக்கு ‘ஷாக்’ கொடுக்கப்பார்க்கிறது கமலாலயம். டீல் பேசியபடி அவர் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால், கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தன் எம்.எல்.ஏ பதவியை அவர் இழக்க நேரிடும். ஆனால், ‘பதவி போனால் போகிறது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாராம் அவர்.”

மிஸ்டர் கழுகு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் டீல்... சர்வரோக நிவாரணி தேடும் அண்ணாமலை!

“சரிதான்... இதில், கமலாலயத்துக்கு அப்படி என்ன லாபமாம்?”

“கமலாலயத்துக்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ... மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு லாபம். தமிழகத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, முக்கியமான மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்கள் யாரும் பா.ஜ.க-வில் இணையவில்லை. டிசம்பர் 25-ம் தேதி சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், மயிலாப்பூர் பிரமுகர், சில பா.ஜ.க புள்ளிகளெல்லாம் கலந்துகொண்டனர். விழா முடிந்த பிறகு நடந்த சிறிய சந்திப்பில், ‘மாநிலத் தலைவர் மாற்றம்’ என்கிற விஷயம் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. தன் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை உணர்ந்துவிட்டார் அண்ணாமலை. தன் அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் ஒரு சர்வரோக நிவாரணி எது எனத் தேடிக்கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான், அந்த அதிரடி எம்.எல்.ஏ-வை பா.ஜ.க-வில் இணைத்து, தன் பெயரில் கணக்கெழுதி, இமேஜை ‘பூஸ்ட்அப்’ செய்யப் பார்க்கிறாராம் அண்ணாமலை.”

“தனக்குத் தானே எவ்வளவுதான் பூஸ்ட் செய்துகொள்வாரோ... சரி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென மருத்துவமனைக்குச் சென்று வந்திருந்தாரே, என்ன விஷயமாம்?”

“சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என்பதால், மருத்துவமனைக்குச் சென்றதாகச் சொல்கிறது தி.மு.க தரப்பு. ஆனால், சமீபகாலமாகவே கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் துரைமுருகன். ‘தன்னை டம்மியாக்கிவிட்டு, அணைக்கட்டு நந்தகுமாருக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கூடுகிறது’ என ரொம்பவே ஃபீல் பண்ணுகிறாராம். அவரிடமிருக்கும் முக்கியத் துறையைப் பிடுங்குவதற்கும் தீவிரமாகக் காய்கள் நகர்த்தப்படுவதை அவர் புரிந்துகொண்டதால் ரொம்பவே மன பாரத்தில் இருக்கிறாராம். இந்த விஷயங்கள் குறித்த மன உளைச்சல் அதிகமானதால்தான் மூச்சுவிடச் சிரமப்பட்டு, அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள். சீனியர் அமைச்சரான பொன்முடி, ‘2021 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி பிரசாரத்தால்தான் வெற்றிபெற்றோம்’ என முழங்கிவருவதிலிருந்தே, தலைமையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், துரைமுருகன் போன்றவர்களால் இந்த மாற்றத்தை ஏற்க முடியவில்லை என்கிறது அறிவாலய வட்டாரம்”

மிஸ்டர் கழுகு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் டீல்... சர்வரோக நிவாரணி தேடும் அண்ணாமலை!

“க.அன்பழகன் சீனியராக இருந்த காலத்தில் இவர் முக்கிய இடத்துக்கு வந்ததுபோலத்தானே... இதெல்லாம் அரசியலின் அடிப்படை என்பதை இன்னுமா இவர் புரிந்துகொள்ளவில்லை... சரி, அமைச்சரான கையோடு உதயநிதி, மாவட்டம் மாவட்டமாக வலம்வரத் தொடங்கிவிட்டார்போல..?”

“ஆமாம். ஆனால், அவர் சென்ற இடங்களிலெல்லாம் சர்ச்சைகளும் கூடவே வலம்வருகின்றன. கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதயநிதி பிற்பகலில்தான் வந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே அங்கு அழைத்துவரப்பட்டிருந்த பள்ளிக் குழந்தைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, கொளுத்தும் வெயிலில் காக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாய்மொழி உத்தரவு சென்றதையடுத்தே, பள்ளிக் குழந்தைகளை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல... செல்லும் இடமெல்லாம் சாலையை மறித்து பேனர்கள், கொடிக்கம்பங்கள் நடுவதும் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன. இதன் உச்சமாக, காரைக்குடியில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ‘பேனர் வைக்கக் கூடாது’ என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. தி.மு.க தலைமையும் பல்வேறு சந்தர்ப்பங்களில், அதை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் வருங்கால தி.மு.க-வின் தலைவராகச் சொல்லப்படும் உதயநிதியே மதிக்கவில்லை என்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது” என்றவருக்கு இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியவாறே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் டீல்... சர்வரோக நிவாரணி தேடும் அண்ணாமலை!

“அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தடுமாற்றத்திலிருக்கிறார் என்கிறது ராயப்பேட்டை வட்டாரம். தன் கட்சி நிர்வாகிகளிடம், எம்.ஜி.ஆர் நினைவுநாளை ஒட்டி மாவட்டம்தோறும் நலத்திட்ட உதவிகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால், ‘மாசா மாசம் ஏதாவது நிகழ்வு வந்துக்கிட்டேதான் இருக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் நாங்களே செலவு செஞ்சுக்கிட்டே இருக்குறது... இந்த முறை தலைமையே கொடுக்கட்டும்’ என நிர்வாகிகள் பலரும் பர்ஸைத் திறக்கவில்லை. அதனால், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளும் பெரிய அளவில் நடக்கவில்லை. இந்தச் சூழலில், விழுப்புரம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்கள். கட்சிக்குச் செலவு செய்ய முடியாமல் நிர்வாகிகள் பலரும் கரைவேட்டி மாறுவதால், தடுமாறிப்போயிருக்கிறார் தினகரன்” என்ற கழுகார்,

“தமிழக காவல்துறையில் டிரோன் போலீஸ் என ஒரு புதிய யூனிட் தொடங்கப்படும் எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் மேற்பார்வையில் இந்த டீம் ரெடியாகிவிட்டது. விரைவில் அதற்கான தொடக்க விழா நடக்கவிருக்கிறதாம். குறிப்பாக, கடற்கரைப் பகுதிகள், கூட்ட நெரிசல்மிக்க இடங்களை டிரோன் போலீஸ் படை கண்காணிக்கும். இந்தப் படையில், பயிற்சிபெற்ற 20 போலீஸார் இருக்கின்றனர். இதற்கென டிரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்கெனவே வாங்கி பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது” என்றபடியே சிறகுகளை விரித்தார்.