Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினின் டெல்லி கணக்கு! - செக் வைக்கும் பா.ஜ.க...

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

பால்வளத்துறை அமைச்சர் நாசர், கிரீன்வேஸ் சாலையிலிருக்கும் தனது வீட்டில் சென்டி மென்ட்டாகப் பசு மாடு ஒன்றை வளர்த்துவந்தார்.

கையில் ஜூவி இதழுடன் என்ட்ரி கொடுத்த கழுகார், “கடந்த இதழ் கவர் ஸ்டோரியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் ‘கோட்டை விட்ட காவல்துறை...’ என்று எழுதியிருந்தீர். அதற்குப் பிறகும் விழித்துக்கொள்ளவில்லை காவல்துறை. முன்பு தமிழகத்திலிருந்து பாலாஜி வெளியேறியபோது கோட்டைவிட்டார்கள் என்றால், இந்தமுறை மீண்டும் அவர் தமிழகத்துக்குள் என்ட்ரி கொடுத்தபோது கோட்டை விட்டிருக்கிறார்கள்!” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார்...

“உச்சக்கட்ட புலம்பலில் இருக்கிறார் பாலாஜி. ‘நானே அரெஸ்ட் ஆயிருப்பேன். ஆனா, இந்த போலீஸ்காரங்களும், கட்சிக்காரப் பயலுகளும் எஸ்கேப் ஆகச் சொல்லி, இப்ப என்னை சர்வதேச பயங்கரவாதி ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்க’ என்று அழாத குறையாக நண்பர் ஒருவருக்கு ரகசிய தகவல் அனுப்பியிருக்கிறார் பாலாஜி. தமிழக போலீஸ் தரப்பில் பாலாஜிக்கு சிலர் உதவி செய்வதே, இத்தனை நாள்களாகியும் அவரைப் பிடிக்க முடியாததற்குக் காரணம் என்கிறார்கள். டிசம்பர் 16-ம் தேதி தமிழகத் திலிருந்து கேரளாவுக்குள் நுழைந்த பாலாஜி அங்கு திருவனந்தபுரம், வர்கேலா, ஆலப்புழா, திருச்சூர் என்று சுற்றிவிட்டு, சில நாள்களுக்கு முன்பு பாலக்காடு வழியாக மீண்டும் தமிழகத் துக்குள் நுழைந்துள்ளார். அவர் என்ட்ரியான தகவல் உளவுத்துறை மூலம் கொங்கு மண்டல காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் கோட்டைவிட்டுள்ளார்கள்!”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினின் டெல்லி கணக்கு! - செக் வைக்கும் பா.ஜ.க...

“ம்க்கும்... கோட்டைவிட்டார்களா, தெரிந்தே விட்டார்களா?”

“அது காவல்துறைக்கே வெளிச்சம்... இதில் டபுள்கேம் விஷயம் ஒன்றையும் சொல்கிறார்கள். பாலாஜி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறிய சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் பிறகு ராசியாகி, இப்போது பாலாஜிக்கு பக்கபலமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது அல்லவா... அதெல்லாம் சும்மா உல்லுலாய்யாம்... பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு, பாலாஜியைக் கவிழ்ப்பதற்காகத் தப்புத் தப்பாக ஐடியா கொடுத்து சிக்கலை ஏற்படுத்தியதே ராஜ வர்மன்தான் என்கிறார்கள்.”

“டெரர் பீஸை காமெடி பீஸ் ஆக்கிவிட்டார் என்று சொல்லும்... அது சரி, முதல்வர் ஸ்டாலினை தேசிய அளவில் முன்னிறுத்தத் தொடங்கிவிட்டார்களே?”

“ம்ம்... டிசம்பர் 24 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஒரு விழாவில் பேசிய திருமாவளவன், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அண்ணன் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான அணியை கட்டமைக் கும் வல்லமை உங்களிடம் மட்டுமே உள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும். பா.ஜ.க-வின் பாசிச சக்தியை வீழ்த்த, தேசிய அரசியலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று சொல்லியிருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஸ்டாலின் டெல்லி அரசியலில் கிங் மேக்கராக மாற வேண்டும் என்று ஏற்கெனவே அறிவாலயம் வட்டாரத்தில் ஒரு கனவு இருக்கிறது. அதை இப்போது திருமா வாயால் சொல்ல வைத்திருக்கிறார்கள். இதற்கு ஸ்டாலின், ‘திருமாவளவனின் அன்புக்கு நான் கட்டுப் பட்டவன்; அவரது பேச்சுக்கும் கட்டுப்பட்டவன்’ என்று நெகிழ்ந்திருக்கிறார். இதன்மூலம் திருமாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக் கிறார் ஸ்டாலின்!”

ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

“ஆனால், பா.ஜ.க இதை எளிதாக விடுமா என்ன?”

“அதெப்படி? அவர்களும் இதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள். ஏற்கெனவே பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் இல்லாத ஓர் அணியை அமைத்தே தீருவேன் என்று மம்தாவை வைத்து லாபி செய்து வருகிறார். இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், மம்தாவும் அந்த அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இதுதான் பா.ஜ.க-வை பதற்றமடைய வைத்துள்ளது. தங்களை எதிர்ப்பவர்கள் மம்தா அணி, காங்கிரஸ் அணி என்று இரண்டாகப் பிரிந்திருப்பதுதான் தங்களுக்கு சாதகம் என்று நினைக்கிறது பா.ஜ.க. இதற்குத் தி.மு.க எதிராக நிற்கும்பட்சத்தில், அந்தக் கட்சியினருக்குக் குடைச்சல் கொடுக்கவும் தயாராக இருக்கிறது டெல்லி. இன்னொரு பக்கம் தமிழக பா.ஜ.க, தி.மு.க-வுக்கு செக் வைக்கும் விதத்தில் சில அமைச்சர்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியலோடு ஆளுநர் மாளிகைக்கு ஊர்வல மாகச் சென்று புகார் அளிக்கவும் திட்ட மிட்டுள்ளது” என்ற கழுகாருக்கு வெண்ணிலா கேக்கையும் சூடான இஞ்சி டீயையும் கொடுத்தோம்.

நாசர்
நாசர்

ரசித்து சாப்பிட்டபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்... “ஸ்டாலின் டெல்லிக் கணக்குப் போடுகிறார் என்றால், அவரின் மகன் உதயநிதியோ அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி அமைச்சர்கள் சிலரது ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்குப் பின்னணியில் அரசியல் கணக்கும் இருக்கிறது என்கிறார்கள். ஏற்கெனவே இந்த ஆட்சியில் உதயநிதிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அதனால், இப்போதைக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று சித்தரஞ்சன் வட்டாரத்தில் ஆலோசனை நடந்துள்ளது. அதேசமயம், கட்சியின் சில சீனியர்களோ, ‘அந்தத் தம்பி இளைஞரணி பொறுப்புக்கு வர்றதுக்கு முன்னாடி கட்சியில தொண்டனாக மட்டும்தான் இருப்பேன்னு சொன்னிச்சு. இப்ப என்னாச்சு? அமைச்சராக விருப்பம் இல்லைன்னு சொன்னாலும் சீக்கிரமே அவர் அமைச்சர் பதவி ஏத்துக்கிட்டாலும் ஆச்சர்யம் இல்ல’ என்று முணுமுணுக்கிறார்கள்!”

“அமைச்சர் ஒருவர் அரண்டுபோயிருக்கும் சங்கதி தெரியுமா?”

“பால்வளத்துறை அமைச்சர் நாசர், கிரீன்வேஸ் சாலையிலிருக்கும் தனது வீட்டில் சென்டி மென்ட்டாகப் பசு மாடு ஒன்றை வளர்த்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அந்த மாடு இறந்து விட்டது. அபசகுனமாகக் கருதிய அமைச்சரின் குடும்பத்தினர், வேறொரு பசுமாட்டை கொண்டு வந்து வளர்த்தனர். சில நாள்களுக்கு முன்பு அந்த மாடும் திடீரென இறந்துவிட்டதால், அரண்டுபோயிருக்கிறார் அமைச்சர். ‘வீடு ராசியில்லை’ என்று குடும்பத்தினர் புலம்பவும்... வீட்டை மாற்றவும் திட்டமிட்டிருக்கிறார் நாசர்” என்ற கழுகார், கையிலிருந்த ஜூவியைப் புரட்டியபடியே, “உம் நிருபர் கொடுத்த செய்திக்கு அரசுத் தரப்பில் உடனடி ரியாக்‌ஷன் எழுந்துள்ளது. கடந்த இதழில் ‘பார் டெண்டரை யார் எடுப்பது?’ என்கிற தலைப்பில் செய்தி எழுதியிருந்தோம். அந்தச் செய்திக்காக டாஸ்மாக் எம்.டி சுப்ரமணியனிடமும் விளக்கம் கேட்டு வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, நமது இதழ் வருவதற்கு முந்தைய நாளான டிசம்பர் 24-ம் தேதியே தகுதியான ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் விண்ணப்பத்தைக் கொடுக்கும்படி டாஸ்மாக் மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கொங்கு மண்டலத்தின் ஆளும் தரப்பினரை மொத்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் அந்த அழகுக்கலை பெண்மணி. பவர்ஃபுல் அமைச்சரின் ஆதரவு அவருக்கு இருப்பதால், ஒப்பந்ததாரர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டிலேயே பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொள்கிறார்கள். எதிர்முகாம் எம்.எல்.ஏ-க்களும் அடிக்கடி அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கட்சித் தலைமையிடம் பற்றவைத்திருக்கும் உள்ளூர் உடன்பிறப்புகள், “அந்தம்மாவுக்கு மேயர் சீட் கொடுத்தா ஒருத்தரும் வேலை பார்க்க மாட்டோம்’’ என்று புகாரும் வாசித்திருக்கிறார்கள்!

* ஆட்சி மேலிடத்தின் ‘இன் அண்ட் அவுட்’ விவகாரங்களைத் தோண்டி துருவிவருகிறது அமலாக்கத் துறை. சமீபத்தில், ஆட்சி மேலிடத்தின் குடும்பப் பிரமுகர் ஒருவர் ஐரோப்பிய தேசத்துக்குச் சென்றிருந்தார். அங்கு நடந்த சிலபல டீலிங்களைப் பற்றி வெயிட்டாகச் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றனவாம்!

“பாகுபாடு காட்டலாமா?”

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி ஒரு மாத பரோலில், டிசம்பர் 27-ம் தேதி வெளியே வந்தார். இந்த நிலையில் நளினி தரப்பினர், தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்... “இதே வழக்கில் பேரறிவாளனுக்குத் தமிழக அரசு நேரடியாகப் பலமுறை பரோல் வழங்கியிருக்கிறது... ஆறாவது முறையாக அந்த பரோலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நளினியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒரு முறைகூட பரோல் வழங்கியதில்லை. ஐந்தாவது முறையாக அவர் நீதிமன்றத்தை அணுகிய பின்னரே பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பாகுபாடு காட்டுவது நியாயமா?” என்று வருத்தப்படுகிறார்கள் நளினிக்கு வேண்டப்பட்டவர்கள்!