சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: இதையெல்லாம் அனுபவிக்கவா, வேண்டாமான்னு தெரியலியே?

தி.மு.க  ஆலோசனைக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க ஆலோசனைக் கூட்டம்

- குளிப்பாட்டும் டெல்லி... குறுகுறுக்கும் எடப்பாடி!

“உமக்கும், நம் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்” என வாழ்த்தியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவர் கொடுத்த மைசூர் பாக்கைச் சுவைத்தபடி, “உற்சாகமாக இருக்கிறீரே?” என்றோம். “நான் மட்டுமா... முதல்வர் ஸ்டாலினும்தான் உற்சாகத்தில் கரைபுரண்டிருக்கிறார்” என்றபடி செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

“தி.மு.க சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், டிசம்பர் 28-ம் தேதி அறிவாலயத்தில் நடந்தது அல்லவா... இந்தக் கூட்டத்தில்தான், உற்சாகம் குறையாமல் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார் முதல்வர். மாவட்ட அணி நிர்வாகிகள் நியமனங்களை ஜனவரி 31-க்குள் முடிக்கச் சொன்னவர், ‘கட்சியில் யாருக்கும் தனி பவர் என எதுவும் இல்லை. அணி நிர்வாகிகளுடன் மாவட்டச் செயலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். அணி நிர்வாகிகளைச் சுதந்திரமாகச் செயல்படவிடுங்கள். இவை யெல்லாம் சரியாக இருந்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியும்’ என வகுப்பும் எடுத்திருக்கிறார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஐந்து பேருக்கும், 28 சார்பு அணிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீனியர் நிர்வாகிகள் சிலரை ஸ்டாலினே பெயரைச் சொல்லி அழைத்துப் பேசச் சொன்னது அனைவருக்கும் ஆச்சர்யம்.”

மிஸ்டர் கழுகு: இதையெல்லாம் அனுபவிக்கவா, வேண்டாமான்னு தெரியலியே?

“உதயநிதி பேசியபோது ஏதோ சலசலப்பு என்றார்களே?”

“ஆமாம்... ‘மாவட்ட அளவில் அணி நிர்வாகிகள் நியமனங்களில், மாவட்டச் செயலாளர்களின் கையே ஓங்கிவிடுகிறது. இதனால், அணிச் செயல்பாடுகளில் திறம்படச் செயலாற்றுபவர்களுக்குப் பதவி கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. இளைஞரணி மட்டுமல்ல, கட்சியின் எந்த அணியின் நியமனத்திலும் மாவட்டச் செயலாளர்கள் தலையிடாதவாறு தலைவர் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றிருக்கிறார் உதயநிதி. இது மாவட்டச் செயலாளர்களின் அதிகாரத்தில் கைவைக்கும் விஷயம் என்பதால், சீனியர்கள் பலருக்கு அதிருப்தி. அவரைப்போலவே, கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசியதும் சர்ச்சையாகியிருக்கிறது. “எங்கள் அணியைத் தலைவர் கண்டுகொள்ளவில்லை’ என அவர் பேச, ஸ்டாலினின் முகம் கறுத்துவிட்டதாம். சட்டென்று சுதாரித்துக்கொண்ட லியோனி, ‘இனிமேல், உதயநிதியை `சின்னவர்’ என அழைக்கக் கூடாது. அது சின்னம்மா என்று சொல்வதுபோல இருக்கிறது. எனவே, இனி `இளைய தலைவர்’ என்றே அழைப்போம்’ எனப் பேசிச் சமாளித்திருக்கிறார்.”

“சரிதான். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கோவை விசிட் ‘சொதப்பல்’ என்கிறதே கமலாலய வட்டாரம். என்ன விவகாரமாம்?”

“சொதப்பல் மட்டுமல்ல, ‘டோட்டல் ஃபெயிலியர்’ என்றே ‘ரிப்போர்ட்’ போட்டிருக்கிறது மத்திய உளவுத்துறை. கடந்த முறை நட்டா கோவைக்கு வந்திருந்தபோது, ஓப்பன் வேனில் அவரை அழைத்துச் சென்றனர். அதற்காக ஓரளவு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த முறையும் அதேபோல ஓப்பன் வேனை தயார் செய்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த எண்ணிக்கையில் கூட்டம் கூட்டவில்லை. விமான நிலையத்தில் அவரை வரவேற்கவே வெறும் நூறு பேர்தான் போயிருக்கிறார்கள். கூட்டம் குறைவாக இருப்பதை உணர்ந்த நட்டா, ஓப்பன் வேனில் ஏற மறுத்து காரில் ஏறிவிட்டாராம். கடுப்பில், மாவட்ட நிர்வாகிகளுடன் நடக்கவிருந்த கூட்டத்தையும் ரத்து செய்திருக்கிறார். பா.ஜ.க மாநில ஐடி விங் செயலாளர் நிர்மல்குமார் தலைமையில் நடந்த சமூக ஊடகச் செயற்பாட்டாளர் களுடனான சந்திப்பில் மட்டும் கலந்துகொண்டிருக்கிறார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போதும் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்திருக்கின்றன.”

மிஸ்டர் கழுகு: இதையெல்லாம் அனுபவிக்கவா, வேண்டாமான்னு தெரியலியே?

“டென்ஷனாகியிருப்பாரே...”

“அந்தக் கோபத்தீயில், அண்ணாமலை குரூப் பாட்டு போட்டு, நெய் ஊற்றியதுதான் இன்னும் களேபரமாகிவிட்டது. நட்டா மேடை ஏறும்போதும், கூட்டம் முடிந்து அவர் கிளம்பும்போதும், ‘மலைடா... அண்ணாமலை...’ என்று ரஜினியின் ‘அண்ணாமலை’ பட தீம் மியூசிக்கை ரிப்பீட் மோடில் ஓடவிட்டிருக்கிறார்கள். கடுப்பின் உச்சத்துக்குச் சென்ற நட்டா டீம், ‘தேர்தல் பிரசாரத் தொடக்க விழானுதான் நினைச்சோம். ஆனா, உங்க புரொமோஷன் வேலையை மட்டும்தான் பார்த்துருக்கீங்க. மக்கள் மோடி முகத்துக்குத்தான் ஓட்டு போடுறாங்க... அண்ணாமலைக்கு இல்லை. புரோகிராமே டோட்டல் ஃபெயிலியர்’ என அண்ணாமலை டீமை வார்த்தைகளில் வறுத்தெடுத்திருக்கிறது. வழக்கம்போல, ‘இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாகிகள்தான் காரணம்’ என ரூட்டைத் திருப்பிவிட்டுவிட்டதாம் அண்ணாமலைத் தரப்பு. கூட்டத்தில், ‘தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை’ என்று நட்டா பேசினாலும், அவர் மனதில் இருந்தது என்னவோ, ‘கட்சி பாதுகாப்பான கைகளில் இல்லை’ என்பதுதான் என்கிறது கமலாலய வட்டாரம்” என்ற கழுகார், இளநீர் பாயசத்தைப் பருகியபடி அடுத்த செய்திக்குத் தாவினார்.

“டெல்லியிலிருந்து வாரத்துக்கு ஒரு முறையாவது எடப்பாடித் தரப்பை குஷிப்படுத்துவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். இந்த முறை குஷிப்படுத்தியிருப்பது தேசிய சட்ட ஆணையம். நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துவரும் தேசிய சட்ட ஆணையம், அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கிறது. அதன்படி, அ.தி.மு.க-வுக்கும் கடிதம் அனுப்பியிருப்பவர்கள் அதில், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ எனக் குறிப்பிட்டிருந்ததுதான் விஷயமே. ஏற்கெனவே, ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அழைப்பு, அ.தி.மு.க-வின் ஆடிட் ரிப்போர்ட்டுக்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது என எடப்பாடிக்கு அனுகூலமாகப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. தற்போது வந்திருக்கும் கடிதத்தால், ‘2024 வரையில்தான் தி.மு.க ஆட்சி. நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வரப்போகிறது’ என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், எடப்பாடியின் ஆதரவாளர்கள். ஆனால், எடப்பாடியால்தான் இந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லையாம்.”

“அவருக்கு என்ன வருத்தமாம்?”

மிஸ்டர் கழுகு: இதையெல்லாம் அனுபவிக்கவா, வேண்டாமான்னு தெரியலியே?

“டெல்லி ஏன் நம்மை இப்படிக் குளிப்பாட்டு கிறது... இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று உள்ளுக்குள் குறுகுறுப்பில் இருக்கிறாராம் அவர். ‘தற்போது வரும் கடிதங்களெல்லாம் தற்காலிக அரவணைப்புதான். உண்மையான அங்கீகாரத்தை நீதிமன்றம்தான் வழங்க வேண்டும். ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுக்கு, நீதிமன்றம் ஒப்புதல் வழங்கினால்தான் ஒரிஜினல் அங்கீகாரம் கிடைக்கும். நமக்கு லெட்டர் அனுப்பி தாஜா செய்துகொண்டு, மற்றொருபுறம் நம் மடியிலேயே கைவைத்துவிடுவார்களோ’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் எடப்பாடி.’’

“பன்னீருக்கு டெல்லி ஆதரவு கொடுத்துவிடுமா என்ன?”

“பன்னீர்தான் பஞ்சராகி நிற்கிறாரே... அ.தி.மு.க-வின் பூத் கமிட்டிகளில் பா.ஜ.க கைவைப்பதைத்தான் பதறிப்போய்ச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. தமிழ்நாடு பா.ஜ.க-வில் ‘டேட்டா விங்’ என்றொரு பிரிவை, பிரதீப் என்பவர் தலைமையில் அமைத்திருக்கிறார்கள். சூர்ய நாராயணன், வர்ஷா முரளி என இரண்டு மாநிலச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விங்-கின் வேலையே, தி.மு.க., அ.தி.மு.க-வைச் சேர்ந்த பூத் கமிட்டி ஏஜென்ட்டுகளின் டேட்டாக்களை எடுத்து, அவர்களில் பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கியிருப்பவர்களை பா.ஜ.க பக்கம் இழுப்பதுதானாம். அப்படி, அ.தி.மு.க-வில் மட்டும் சில ஆயிரம் பூத் ஏஜென்ட்டுகளை பா.ஜ.க தூக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்துதான், டிச.27-ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘நம் கட்சியில் பல பூத் கமிட்டிகள் செயலிழந்திருக்கின்றன. பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள்’ என்றிருக்கிறார் எடப்பாடி. தி.மு.க பூத் கமிட்டியில் இருப்பவர்களையும் கண்காணிக்கும் பணி தீவிரமாகியிருக்கிறது.”

“அது பா.ஜ.க-வின் சாமர்த்தியம். தங்கள் பூத்தைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய பொறுப்பு அந்தந்தக் கட்சிகளுக்குத்தானே வேண்டும்” என்றபடி, கழுகாருக்கு புத்தாண்டு பரிசாக ‘வாட்ச்’ ஒன்றைக் கொடுத்தோம். “இது அந்த வாட்ச் இல்லையே?!” என்று சிரித்த கழுகார்,

“சமீபத்தில், சென்னை வடபழனியிலுள்ள மாலுக்குச் சென்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, எலைட் டாஸ்மாக் பாரில் ‘பாட்டில்’ கேட்டிருக்கிறார். எம்.ஆர்.பி விலையைவிட 40 ரூபாய் அதிகம் கேட்கவும், அதிர்ச்சியடைந்தவர், `ஏன் அதிகம் கேட்கிறீர்கள்?’ என விசாரித்திருக்கிறார். கடை ஊழியரும் அவர் யாரென்றே தெரியாமல், ‘எல்லாம் மேல போகுது சார்... எங்களுக்காகவா கேக்குறோம்?’ எனச் சொல்ல, பாட்டிலைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, டாஸ்மாக் மேலதிகாரி ஒருவருக்கு போன் போட்டு கடுகடுத்திருக்கிறார். விவகாரத்தைக் கோட்டைக்குக் கொண்டுபோவதால் எந்தப் பயனும் இல்லை என்பதால், மத்திய நிதியமைச்சகத்திலுள்ள வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்துவிட்டாராம் அந்த அதிகாரி” என்றபடி ‘ஜூட்’ விட்டார்.