அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: டெல்லி அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம்! - சிக்கலில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

கோட்டையின் ஹாட் நியூஸ் இதுதான்... அந்த அமைச்சரின் திருமதி செய்யும் வேலைகளைப் பார்த்து அரசியல்வாதிகளே மிரண்டுபோயிருக்கிறார்கள்

கனமழையில் கையில் பளபளக்கும் லெதர் லேப்டாப் பேக்... கண்களில் கூலிங் கிளாஸ்... கையில் ஸ்மார்ட் வாட்ச் சகிதம் படு ஸ்டைலாக வந்தார் கழுகார். நாம் விழிவிரியப் பார்த்துக்கொண்டிருந்தபோதே பையைத் திறந்தவர், குட்டிக் குட்டியாக சிலபல டிஜிட்டல் சாதனங்களை டேபிளில் அடுக்கினார். “செய்தி சேகரிப்பதற்காக வாங்கிய நவீன சாதனங்கள் இவை. புத்தாண்டு வாழ்த்துகள்!” என்றபடியே உரையாடலைத் தொடர்ந்தார்...

‘‘2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. ஸ்டாலின் முதல்வரான பிறகு ஜார்ஜ் கோட்டையில் நடைபெறப்போகும் முதல் சட்டமன்றக் கூட்டம் என்பதால், வளாகம் முழுவதையும் புனரமைத்து வண்ணம் பூசியிருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் இருக்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இம்முறை கூட்டத்தொடர் முழுமையாக நடக்காது என்கிறது சட்டசபை பட்சி. ஆளுநர் உரையோடு தொடங்கும் கூட்டத்தொடரை மூன்று நாள்களில் முடிக்க ஆலோசனைகள் நடக்கின்றன.ஒமைக்ரான் பரவலால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம். வளாகம் முழுவதும் சானிடைஸ் செய்யப்பட்டிருக்கும்நிலையில், வாசலில் மருத்துவப் பரிசோதனை செய்து, கைகளைச் சுத்தப் படுத்திக்கொள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு மினி சானிடைஸர் பாட்டில் அளிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: டெல்லி அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம்! - சிக்கலில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி...

‘‘கைகளைச் சுத்தப்படுத்துவது இருக்கட்டும்... சுத்தமான கைக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த அமைச்சரின் பெயர் கரன்சி விவகாரங்களில் டேமேஜ் ஆகிறதே?’’

‘‘கோட்டையின் ஹாட் நியூஸ் இதுதான்... அந்த அமைச்சரின் திருமதி செய்யும் வேலைகளைப் பார்த்து அரசியல்வாதிகளே மிரண்டுபோயிருக்கிறார்கள். கட்சி ஆட்கள் யாரையும் வசூல் செய்யக் கூடாது; கை சுத்தமாக இருக்க வேண்டும் என்று கறார் காட்டும் அம்மணி பின்வாசல் வழியாக கரன்சியைக் கச்சிதமாக வசூலித்துவிடுகிறார். துறை தொடர்பான டிரான்ஸ்ஃபர்கள், டெண்டர்கள் ஒன்றையும் விடுவதில்லை. அம்மணியிடம் தட்சணை வைத்தால் லிஸ்ட்டைத் தயார் செய்து, ‘சித்தமான’ ஒருவரிடம் கொடுக்கிறார். அந்த லிஸ்ட் கோட்டையின் ‘வரதமானவர்’ ஒருவரின் கைக்குப் போகிறது. அடுத்த சில நாள்களிலேயே ஆர்டர்கள் ஓகே ஆகிவிடுகின்றன.’’

‘‘மருந்து கொள்முதல் விவகாரம் ஒன்றும் தடதடக்கிறதே?”

‘‘ஆமாம். இ.எஸ்.ஐ மருத்துவமனைகளுக்கு மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக, சமீபத்தில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ‘கல்பேஷ் என்பவரது நிறுவனம்தான் பெருமளவு மருந்துகளை சப்ளை செய்தது. ஆட்சியாளர்களை நன்றாக கவனித்ததால், மருத்துவமனை நிர்வாகங்கள் சொன்ன அளவைவிடக் கூடுதலாக மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும், அந்த நிறுவனமே மீண்டும் மருந்து சப்ளையில் நுழைய லாபி செய்கிறது. குட்கா விவகாரத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரோடு கல்பேஷின் பெயரும் அடிபட்டது. 2017-ல் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோது, கல்பேஷ் வீட்டிலும் சோதனை நடத்தி ஆவணங்கள் அள்ளப்பட்டன. இந்த நிலையில்தான், இந்த நிறுவனத்துக்கு மீண்டும் மருந்து சப்ளை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று டெல்லியிலிருக்கும் லஞ்ச ஒழிப்பு கூடுதல் ஆணையரகம், தமிழக மருந்து கொள்முதல் நிறுவனத்துக்கு டிசம்பர் 28-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது. ஆனாலும், அதே நிறுவனத்துக்கு மருந்து சப்ளை ஆர்டரை அளிப்பதில் தீவிரமாக இருக்கிறார் முதன்மையானவரின் இரண்டாம் நிலை அதிகாரி. இதையடுத்து, அந்த அதிகாரியின் விவகாரங்களைத் தோண்டத் தொடங்கியிருக்கிறது மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பகம்!”

விஷ்ணுபிரசாத்
விஷ்ணுபிரசாத்

‘‘ `அப்பழுக்கற்ற ஆட்சி நடத்துகிறோம்’ என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? அது சரி... ஆரணி எம்.பி-க்கும், சென்னை ஆட்சியருக்கும் அப்படி என்னதான் மோதல்?’’

‘‘ஒன்றுமில்லாத விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டாராம் ஆரணி எம்.பி விஷ்ணுபிரசாத். சில தினங்களுக்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் விஷ்ணுபிரசாத். அவர் சென்றபோது மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அவரைப் பக்கத்து அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, சாப்பிட்ட பிறகு வந்து சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆட்சியர். இதையடுத்து, ‘ஆட்சியர் என்னை மதிக்கவில்லை; தேவையில்லாமல் காக்கவைத்துவிட்டார்’ என்று தலைமைச் செயலாளரிடம் புகார் வாசித்திருக்கிறார் எம்.பி.”

“சரி...”

“விஷ்ணுபிரசாத்தின் மாமியார் வழி முன்னோர் பல வருடங்களுக்கு முன்பு, சென்னை ஈ.சி.ஆரில் உத்தண்டி அருகில் 100 ஏக்கர் நிலத்தை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தானமாகக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது, அந்த இடத்தை விஷ்ணுபிரசாத் குடும்பத்தினர் திருப்பிக் கேட்கிறார்களாம். விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், எம்.பி-யிடம் மாவட்ட ஆட்சியர் பிடிகொடுத்துப் பேசவில்லை என்கிறார்கள். இதை மனதில்வைத்தே எம்.பி பிரச்னையை திசைதிருப்பியிருக்கிறார் என்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் தரப்பினர்” என்ற கழுகாருக்கு சூடான கிரீன் டீயைக் கொடுத்தோம். சுவைத்துக்கொண்டே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘அண்ணா பிறந்த நாளையொட்டி 700 கைதிகளை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, சமீபத்தில் விடுதலை செய்யப்படும் கைதிகள் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, உளவுத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றிருந்த சில கைதிகளுக்கு இப்போதும் வெளியே பெரிய நெட்வொர்க் இருப்பதால், அவர்களை விடுவிப்பது ஆபத்தானது என்று என்.ஓ.சி தர மறுத்துவிட்டாராம் உளவுத்துறையின் அந்த முக்கிய அதிகாரி. ஆனால், துறை மேலிடத்திலிருந்து என்.ஓ.சி கேட்டு அழுத்தம் வரவே... ‘எனக்கு மெமோ கொடுத்தாலும் சரி... முடியவே முடியாது’ என்று கையெழுத்து போட மறுத்துவிட்டாராம் அந்த அதிகாரி!’’

விஜயா ராணி
விஜயா ராணி

‘‘அவரு வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவார் என்றெல்லாம் பன்ச் ஓடுகிறது... கேட்டீரா?”

‘‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... பாலாஜிக்கு உதவியதாகக் கூறப்படும் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனிடம் போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். அப்போது அவர் சொன்ன டயலாக்தானாம் இது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டிருக்கிறது. பொதுவாகவே பதற்றப்பட்டு உளறிக்

கொட்டுவாராம் ராஜவர்மன். இந்த விவகாரத்திலும் உளறிக்கொட்டி அதில் ஏதாவது ‘க்ளூ’ கிடைக்குமா என்று கணக்கு போடுகிறது போலீஸ்!”

ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

‘‘தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறதே பா.ம.க?’’

‘‘அப்படி அவர்கள் சொல்லாமல் போனால்தானே ஆச்சர்யம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்த பா.ம.க., அதன் பிறகு கூட்டணியிலிருந்து விலகியது. இப்போது 2026-ல் தனித்துப் போட்டி என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்பாக 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கைகோக்கும் மனநிலையில் இருக்கிறாராம் மருத்துவர். ‘அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி நீடிக்காது; அப்போது நம் தலைமையில் பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்திக்கலாம்’ என்று ராமதாஸ் நினைக்கிறாராம்!” என்ற கழுகார், தயாராக இருந்த கவர் ஸ்டோரியில் பார்வை ஓட்டியபடியே, ‘‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டிசம்பர் 30 அன்று மாலை ரூபா குருநாத் ராஜினாமா செய்துவிட்டார். அந்தப் பதவி தமிழக வி.வி.ஐ.பி-யின் வாரிசுத் தரப்புக்குச் செல்வதாக ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அந்த வைபோகமும் விரைவில் நடக்கலாம்” என்று கண்சிமிட்டியபடியே சிறகுகளை விரித்தார்!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சட்டசபைத் தேர்தலிலிருந்தே தலைமைக்கும், மலையகப் பிரதிநிதிக்கும் முட்டல் மோதல் அதிகரித்துவருகிறது. தேர்தலின்போது, அந்தத் தலைவரிடம் நிதி கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவரால் தர முடியவில்லை. அதன் பிறகு, அவரை மேலிடம் ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை என்கிறார்கள். அதனாலேயே சமீபத்தில் கோவையில் நடந்த கூட்டத்தில்கூட அவர் கலந்துகொள்ளவில்லை!

* சென்னை மத்தியப் பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், எந்நேரமும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் வீட்டிலேயே இருக்கிறாராம். பிரதிநிதியின் குடும்பத்தினர் அளிக்கும் வருவாய்த்துறை சம்பந்தமான விவகாரங்களைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால், அலுவலகத்துக்கு அவர் வருவது அரிதாகிவிட்டதாம்.

* மத்தியப் பகுதி அமைச்சரின் உறவினர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான், கிராமப்புறப் பகுதிகளுக்கான கொங்கு மண்டல ஏரியா டெண்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த உறவினருக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் அவிநாசிக்காரர் ஒருவர், பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தொழிலதிபர்களிடம் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பதால் விக்கித்து நிற்கிறார்கள் தொழிலதிபர்கள்.

டெல்லி நோட்ஸ்

* தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் 6,229 கோடி ரூபாயைக் கேட்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால், டிசம்பர் 30-ம் தேதி அஸ்ஸாம், குஜராத், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சரகம், தமிழகத்துக்கு எதுவும் ஒதுக்கவில்லை!

* நீட் தேர்வு மசோதா தொடர்பாகப் பேசுவதற்காக சமீபத்தில் தமிழக எம்.பி-க்கள் ஒன்றிணைந்து அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். ஆனால், ‘நோ அப்பாயின்ட்மென்ட்’ என்று சொல்லப்பட்டதால், கடுப்பானவர்கள் அடுத்து, குடியரசுத் தலைவரைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்!

* சமீபத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் இந்தியைத் திணித்தால் நிச்சயம் எதிர்ப்போம்’ என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். இந்தத் தகவல் டெல்லியில் சில இந்தி செய்தித்தாள்களில் அப்படியே பிரசுரமாகவே... கடுப்பான ஆர்.எஸ்.எஸ் தரப்பு, விளக்கம் கேட்டு டெல்லி பா.ஜ.க-வைக் குடைந்துவருகிறதாம்!