அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

பீலே
பிரீமியம் ஸ்டோரி
News
பீலே

ஏற்கெனவே கொண்டுவந்த பண மதிப்பிழப்புக்கே இன்னும் விடை தெரியல. இதுல மறுபடியும் முதல்லருந்தா...

கி.சீனிவாசன், சிவகங்கை.

‘ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே’ என்று நீங்கள் நினைக்கும் விஷயம்?

நிறைய்ய்ய இருக்கின்றன. குறிப்பிட்டு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், ஆற்றுமணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளை.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்.

மீண்டும் பண மதிப்பிழப்பு கொண்டுவரப்படுமா?

ஏன் பாஸ்... ஏற்கெனவே கொண்டுவந்த பண மதிப்பிழப்புக்கே இன்னும் விடை தெரியல. இதுல மறுபடியும் முதல்லருந்தா... ஆமா, ரெண்டாயிர ரூபாய்னு பஞ்சுமிட்டாய் கலர்ல கொண்டுவந்தாங்களே... அதை எங்கேயாவது சமீபத்துல நீங்க பாத்தீங்களா?

@செல்வி, திருவாரூர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் யார் வசம் கழுகாரே?

மக்கள் வசம்!

செந்தில்குமார். எம், சென்னை-78.

ராகுல் காந்தி - உதயநிதி ஸ்டாலின் - துரை வைகோ... இந்த ஒப்பீட்டைப் பார்க்கும்போது கழுகாருக்கு என்ன நினைவுக்கு வருகிறது?

‘குரூப்ல டூப்பு’ கேம் நினைவுக்கு வருகிறது!

ராமைய்யா, கோயமுத்தூர்.

இப்போது மாணவர்களுக்குத் தேவை அரசியலா... ஆன்மிகமா?

கல்வி!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

அண்ணாமலை உட்கட்சிப் பிரச்னைகளையும், கோஷ்டி மோதல்களையும் எப்படிச் சமாளிக்கிறார்?

அதையெல்லாம் தொடங்கி வைப்பவருக்கு, அதைச் சமாளிக்கத் தெரியாதா என்ன?

இசக்கியம்மாள் சுப்புராஜ், பாளையங்கோட்டை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தொண்டர்கள் அதிகம் முணுமுணுக்கும் பாடல் என்ன கழுகாரே?

“சதிச்செயல் செய்தவன் புத்திசாலி... அதைச் சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி. உண்மையைச் சொல்பவன் சதிகாரன்... இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்...” ‘கடவுள் ஏன் கல்லானான்’ என்கிற பாடலிலுள்ள இந்த வரிகளைத்தான்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

இறை வழிபாடு, இயற்கை வழிபாடு... எது முக்கியமானது?

‘இயற்கையே இறை’ என்பதுதானே நம் பண்பாடு!

கழுகார் பதில்கள்

வாசுதேவன், பெங்களூரூ.

பீலே?

நிறவெறி உலகில், கறுப்புக் கால்களால் வெற்றியை உதைத்து விளையாடியவன்!

கழுகார் பதில்கள்

பரமேஷ்வரன், திருநள்ளாறு.

``பா.ஜ.க-வை எதிர்கொள்ள தி.மு.க-வினர் தயாராக இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது எதைக் காட்டுகிறது?

நாடாளுமன்றத் தேர்தல் யுத்தப் பரபரப்பு, அனைத்துக் கட்சிகளிடமும் தொற்றிக்கொண்டுவிட்டதைக் காட்டுகிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்தவர்கள், இப்போது வேண்டும் என்கிறார்கள்” என்ற இ.பி.எஸ்-ஸின் பேச்சு?

பெரும்பாலான விஷயங்களில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒண்ணு. இதை அறியாதவர் வாயில ‘பன்’னு!

நஞ்சுண்டன், மதுரை.

தமிழக அரசியலில் இன்றைய ‘அமைதிப்படை அமாவாசை’ யார்?

“கட்டுல பதிமூணும் ஜோக்கரா இருந்தா என்ன பண்றது?” என்று வடிவேல் ஒரு காமெடியில் கேட்பார். அந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

சிவராமன், நாகூர்.

`வாரிசு’, `அடுத்த வாரிசு’ என்ன வித்தியாசம்..?

‘வாரிசு’ ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் விஜய் படம். ‘அடுத்த வாரிசு’ எண்பதுகளில் வெளியான ரஜினி படம். ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை’ என்கிற பாடலும், ‘பேசக் கூடாது... வெறும் பேச்சில் சுகம்...’ என்கிற இரண்டு ஹிட் பாடல்களும் அதில் உண்டு!