அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பெண் போலீஸுக்கே பாதுகாப்பில்லாத தி.மு.க விழா...

பிரபாகர் ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபாகர் ராஜா

தவறு செய்தவர்களுக்காக வரிந்துகட்டிய எம்.எல்.ஏ!

“அ.தி.மு.க-வின் பூத் கமிட்டி நிர்வாகிகளை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுக்கிறது எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தோம் அல்லவா... தற்போது அதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. முதற்கட்டமாக மூத்த நிர்வாகிகளை அழைத்து, பூத் கமிட்டி உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தச் சொல்லி எடப்பாடி உத்தரவிட்டிருக்கிறாராம்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ ‘சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும்’ என எடப்பாடி தரப்பு வைத்த கோரிக்கையை ஆளும் தரப்பு ஏற்பதாகத் தெரியவில்லை. ஜனவரி 9-ம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில், எடப்பாடி தலைமையில் இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, ‘சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை மாற்றிக் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கூட்டத்தில் பங்கேற்போம்’ என சீனியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எரிச்சலடைந்த எடப்பாடி, “என்னண்ணே... இவ்வளவு நடந்த பிறகும் அவரு பக்கத்துல போய் உட்காரச் சொல்லுறீங்க... கோரிக்கையை ஏத்துக்கலைன்னா, கடந்த முறையைவிட கடுமையா போராடுவோம். சட்டமன்றத்தை நடத்தவிடாம முடக்குவோம்” எனக் கொதித்துவிட்டாராம்.”

“ஆக, அ.தி.மு.க-வினர் இந்த முறையும் எதிர்க்கட்சிக்கான பொறுப்புடன் செயல்படப் போவதில்லை... அப்படித்தானே... சரி, மதுரையில் என்ன சலசலப்பு?”

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

“பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருக்கும் இடத்தில் சலசலப்புக்கு என்ன பஞ்சம்... மதுரை லோக்கல் அரசியலில், அமைச்சர் மூர்த்தி வகையறாக்களிடம் மல்லுக்கட்ட முடியாமல், விரக்தியில் சொன்ன வார்த்தைகள் அவருக்கே வினையாகியிருக்கின்றன. பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், ‘பதவி வரும், போகும். நாளை 10 சீட்கூட கிடைக்காத கட்சியாக மாறலாம். ஆனால், அன்புதான் நிரந்தரம். எனக்கு எத்தனை பதவிகள் கிடைத்தாலும், நான் பி.டி.ஆரின் மகன் என்பதே எனக்குப் பெருமை’ எனப் பேசியிருக்கிறார் தியாகராஜன். ‘மேயரையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து, தியாகராஜனை மதுரை அரசியலிலிருந்தே ஓரங்கட்டப் பார்க்கிறது அமைச்சர் மூர்த்தி தரப்பு. இந்த லோக்கல் அரசியலை எதிர்கொள்ள முடியாத அவர், அமைச்சர் பதவி போனால் போகிறது என்கிற மனநிலைக்கே வந்துவிட்டார். அந்த விரக்தியில்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்’ என்கிறது தி.மு.க வட்டாரம்.”

“சீனியர் அமைச்சர் ஒருவருடனும் மோதியிருக்கிறார்போல...”

“மதுரையில் மூர்த்தி, மேயர் தரப்புக்கு இடையில் பஞ்சாயத்து செய்வதற்காக மதுரைக்குச் சென்ற சீனியர் அமைச்சர், கவுன்சிலர்களைத் தனித்தனியாக அழைத்துப் பேசியதோடு, மேயரையும் கடுமையாக எச்சரித்திருந்தார் அல்லவா... இதில் உஷ்ணமான பி.டி.ஆர், ‘எனது தொகுதிக்குள் சென்று, என்னுடைய ஆதரவாளரை எப்படி அவர் கேள்வி கேட்கலாம்?’ என இருவருக்கும் பொதுவானவர்களிடம் எகிறியிருக்கிறார். ‘இந்த வேகமெல்லாம் என்கிட்ட வேணாம்... தலைமை சொல்லித்தான் போனேன்... எதுவாக இருந்தாலும் அங்கே கேட்கச் சொல்லுங்க’ எனச் சொல்லிவிட்டாராம் அந்த சீனியர். இந்த விவகாரமும் தலைமை வரை சென்றிருக்கிறது. பி.டி.ஆரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறதாம் தலைமை.”

“ ‘மகளிர் உயர மாநிலம் உயரும்... தலைநிமிர்ந்த தமிழகம், மனங்குளிருது தினந்தினம்’ என்று விளம்பரம் செய்துவிட்டு, மகளிர் மாண்புக்கு எதிராகவே செயல்படுகிறார்களே?”

பிரபாகர் ராஜா
பிரபாகர் ராஜா

“எதைச் சொல்கிறீர் எனப் புரிகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டத்தில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் இருவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட காவலர் அழுதுகொண்டே உயரதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார். உடனடியாக, அந்த நிர்வாகிகள் இருவரையும் காவல்துறை கைதுசெய்ய முற்பட்டபோது, அங்கிருந்த தி.மு.க-வினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உச்சக்கட்ட அபத்தமாக, அந்தப் பகுதி எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா ‘பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து வேறு வழியில்லாமல் இருவரையும் கைதுசெய்யாமல் அனுப்பிவைத்திருக்கிறது காவல்துறை. தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் மா.சு., எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. பிரச்னை தீவிரமடைவதால், இப்போது அந்த இருவரையும் கைதுசெய்யும் முனைப்பிலிருக்கிறது காவல்துறை. ‘தலைகுனிந்த தமிழகம்... மனங்கொதிக்குது தினந்தினம்’ என்று விளம்பர வாக்கியத்தைத் தலைகீழாக மாற்றுமளவுக்கு நடந்துகொண்டிருக்கிறார்கள்...” என்று கடுப்பான கழுகாரைச் சாந்தப்படுத்தி, “பா.ம.க இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்த தமிழ்க்குமரன் திடீரென கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரே?” என அடுத்த செய்திக்கு இழுத்தோம்.

“கட்சித் தலைவர் அன்புமணி கொடுத்த நெருக்கடிதான் அவர் ராஜினாமா செய்வதற்குக் காரணம் என்கிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். தமிழ்க்குமரனுக்கு இளைஞரணித் தலைவர் பொறுப்பை ராமதாஸ் கொடுத்தபோதே, அதில் அன்புமணிக்கு உடன்பாடு இல்லையாம். ‘பொறுப்பு கொடுத்த பிறகும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டவில்லை. முழுக்க சினிமாவில்தான் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கேன் பொறுப்பு கொடுத்தீர்கள்?’ என ராமதாஸிடம் அன்புமணி கேள்வி கேட்டதாகவும் சொல்கிறார்கள். அதற்கு, ‘உனக்காகத் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த ஜி.கே.மணியின் மகன் அவன். இதுகூடச் செய்யலைன்னா எப்படி?’ எனச் சொன்னாராம் ராமதாஸ். தமிழ்க்குமரனை முன்வைத்து, தைலாபுரம் தோட்டத்தில் ஒரு பனிப்போரே நடந்திருக்கிறது.”

“தந்தை மீதான கோபமெல்லாம் தமிழ்க்குமரன் மீது திரும்பியிருக்குமே?”

தமிழ்க்குமரன்
தமிழ்க்குமரன்

“சரியாகச் சொன்னீர். தமிழ்க்குமரனிடம், ‘பெரியவர் ஒரு பேச்சுக்கு பொறுப்பேத்துக்கச் சொன்னா, உடனே நீங்க பொறுப்பு ஏத்துப்பீங்களா... `எனக்குத் தயாரிப்பு நிறுவன வேலையெல்லாம் இருக்கு. என்னால கட்சி வேலை பார்க்க முடியாது’னு சொல்ல வேண்டியதுதானே?’ என அன்புமணி தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். சமீபத்தில், புதிதாக ஆறு பெரிய பட்ஜெட் படங்களுக்கான வேலைகளை தமிழ்க்குமரன் தொடங்கியதும், ‘என்னால் கட்சிப் பணிக்கு சரிவர நேரம் ஒதுக்க முடியவில்லை எனக் கூறி பதவியை நீங்களே ராஜினாமா செய்துவிடுங்கள்’ என அன்புமணி தரப்பிலிருந்து அவருக்கு மீண்டும் அழுத்தம் வந்ததாகச் சொல்கிறார்கள். இப்படி அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனதாலேயே, இனி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்ற முடிவோடு தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் தமிழ்க்குமரன். ஆனால், ஜி.கே.மணிக்குத்தான் இதில் பெரும் வருத்தம். ‘அவங்க ஈகோவுக்கு, நம்ம பையனை அசிங்கப்படுத்திட்டாங்களே’ என மனதுக்குள் குமைந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகாருக்கு இஞ்சி டீ கொடுத்தோம். அதை ருசித்தபடியே அடுத்த செய்திகளுக்குத் தாவினார்.

“புத்தாண்டை ஒட்டி, சென்னையில் ‘நியூ இயர் பார்ட்டி’களுக்குப் பல விடுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பார்ட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டால், அதை வீடியோ, போட்டோ ஆதாரங்களாகத் திரட்டி, தமிழக அரசியலைச் சூடாக்க திட்டமிட்டிருந்ததாம் பா.ஜ.க. இதற்காக, ஒவ்வொரு ஹோட்டலுக்கும் தலா ஐந்து பேரை அனுப்ப முடிவெடுத்து, ‘பார்ட்டி’ பாஸ்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். விஷயத்தை மோப்பம் பிடித்த சென்னை மாநகரக் காவல்துறை, விடுதி நிர்வாகங்களையெல்லாம் அழைத்து, கடுமையாக எச்சரித்திருக்கிறது. போலீஸின் இந்தக் கெடுபிடியால், யாரும் போதைப்பொருளைப் பயன்படுத்தாதபடி விழிப்புடன் கண்காணித்திருக்கின்றன விடுதி நிர்வாகங்கள். கேமராவோடு சுற்றிய பா.ஜ.க ஸ்லீப்பர் செல்கள், ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கிறார்களாம்” என்று கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்...

“புத்தாண்டுப் பரிசாக ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இடமாறுதல், பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஜி-க்கள் முருகன், தினகரன் ஆகியோர்மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதிகாரிகளின் இடமாற்றம் காரணமாக சென்னையில் அண்ணாநகர், தி.நகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆகிய துணை கமிஷனர் பணியிடங்களும், சென்னை மேற்கு இணை கமிஷனர் பணியிடமும் காலியாகியிருக்கின்றன. மொத்தம் 14 போஸ்ட்டுகள் காலியாக இருப்பதால், அவற்றைப் பிடிக்க ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஒரு அதிகாரி நிழலானவரின் சிபாரிசுடன் பதவியைப் பிடித்திருக்கிறார். காலியாக இருக்கும் மற்ற இடங்களுக்கும் அவரது சிபாரிசே எடுபடும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ‘இதிலுமா அவரது தலையீடு?’ என்று அப்செட்டில் இருக்கிறது ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.