அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கரும்புக்கு கமிஷன்! - கல்லாகட்டும் ஆளும் கட்சியினர்

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

மூன்று நாள்களில் பெரிதாக எதையும் செய்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஆளும் தரப்பு.

‘‘கடந்த இதழ் அச்சுக்குப் போன இடைவெளியில், ஒமைக்ரான் அச்சத்தால் சட்டமன்றக் கூட்டத்தொடரை கலைவாணர் அரங்குக்கு மாற்றிவிட்டார்கள். இல்லையென்றால், நான் சொல்லியிருந்தபடி ஜார்ஜ் கோட்டையில்தான் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டிருக்கும். அதேசமயம், கூட்டத்தொடரை மூன்று நாள்களுக்குள் முடித்துவிடும் முடிவில் மாற்றம் இருக்காது. அதற்காகத்தான் ஆளுநரை சபாநாயகர் சந்தித்துள்ளார்” - கடந்த இதழ் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியான செய்திக்கு சின்சியராக விளக்கம் அளித்துவிட்டே உரையாடலைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்தவகையில் ஆளுநரை அழைக்கச் சென்ற சபாநாயகர், ஆளுநர் உரையில் இடம்பெறப் போகும் முக்கிய விஷயங்களைப் பற்றியும் கூறியுள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது நடைபெற்ற ஆளுநர் உரையில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இம்முறை தமிழக அரசு தயார் செய்து கொடுக்கும் ஆளுநர் உரையிலும் அந்த வார்த்தை இடம்பெறாவிட்டால், ஆளுநரே அதைச் சேர்த்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறாராம். அதேபோல் உரையை டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிய பிறகே வாசிக்கும் முடிவிலும் இருக்கிறாராம்.’’

மிஸ்டர் கழுகு: கரும்புக்கு கமிஷன்! - கல்லாகட்டும் ஆளும் கட்சியினர்

‘‘அ.தி.மு.க தரப்பிலும் ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்களே?’’

‘‘ஆமாம்... 40 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. எல்லாம் தி.மு.க மீதான சூடான புகார்கள்தான். ஆளுநரைச் சந்தித்த சட்ட ஆலோசனைக் குழுவினரான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை உள்ளிட்டோர் கையோடு கொண்டு சென்ற மனுவை ஆளுநரிடம் கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவது, ராஜேந்திர பாலாஜி வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அ.தி.மு.க முன்னாள் அமைச் சர்கள் மிரட்டப்படுவது உள்ளிட்ட புகார்களை கண்ணீர்விடாத குறையாக வாசித்திருக்கிறார்கள். இறுதியாக, ‘செயலாளர் மூலம் நான் இது குறித்து ரிப்போர்ட் கேட்கிறேன்’ என்று ஆளுநர் உறுதியளிக்கவே, நிம்மதியுடன் வெளியே வந்திருக்கிறது அ.தி.மு.க தரப்பு.’’

‘‘சட்டமன்றத்திலும் சத்தம் அதிகம் இருக்கும்போலவே?’’

‘‘கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் விமர்சனத்தை ஏற்படுத்தின. இம்முறை அதற்கு இடம் தரக் கூடாது என்ற முடிவில் இருக்கிறது அ.தி.மு.க தலைமை. பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கிளப்பி, வெளிநடப்பு செய்யவும் முடிவெடுத்துள்ளார்கள். இன்னொரு முனையில் பா.ஜ.க-வும் சட்டசபையில் போர்க்கொடி உயர்த்தத் தயாராகிவருகிறது!’’

“அதையும்தான் பார்ப்போம்... சரி, ஆளும் தரப்பு இதை எப்படி எதிர்கொள்ளுமாம்?’’

‘‘மூன்று நாள்களில் பெரிதாக எதையும் செய்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஆளும் தரப்பு. இன்னொரு புறம், எதிர்க்கட்சியிலுள்ள சில எம்.எல்.ஏ-க்கள் ஆளும் தரப்பிடம் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க தரப்பில் சத்தம் அதிகமானால், இணக்கமான எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சியை வாழ்த்திப் பேசுவதை எடப்பாடி பார்க்க நேரிடும். பொறுத்திருந்து பாருங்கள்’ என்று கண்சிமிட்டுகிறது தி.மு.க தரப்பு!”

‘‘ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லும்... நடப்பதெல்லாம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருக்கின்றனவே!”

மிஸ்டர் கழுகு: கரும்புக்கு கமிஷன்! - கல்லாகட்டும் ஆளும் கட்சியினர்

‘‘உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... ஏற்கெனவே தி.மு.க நிர்வாகிகள் பலரும், ‘தேர்தலைத் தள்ளிவைக்கலாம்’ என்று கேட்டபோது, ‘நீதிமன்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்’ என்று கடுகடுத்தார் முதல்வர். ஆனால், தேர்தல் ஒத்திவைப்பு திட்டத்துக்குச் சாதகமாக ஒமைக்ரான் வந்துவிட்டது. ‘ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவிட்டது’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னதன் பின்னணியிலும் இந்தத் திட்டம்தான் இருக்கிறதாம். கிடைக்கும் அவகாசத்தில் கவர்ச்சிகரமான சில திட்டங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்துவிடலாம் என்பதே அரசின் திட்டமாம். அநேகமாகத் தேர்தல் மே மாதத்துக்குப் பிறகு நடத்தப்படலாம். தவிர, ஜனவரி 12-ம் தேதி பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைத் தவிர, மற்ற பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் இரண்டு மாதங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறதாம் முதல்வர் தரப்பு.”

‘‘பா.ஜ.க தனி ஆவர்த்தனம் செய்யப்போகிறதாமே?”

‘‘அதற்குப் பின்னால் பெரிய பஞ்சாயத்தே நடந்துள்ளது. விருதுநகர் அரசு விழாவில் 70 இருக்கைகள் மட்டுமே பா.ஜ.க-வுக்கு ஒதுக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்ல, கடுப்பாகிவிட்டார்கள் பா.ஜ.க-வினர். இதையடுத்து, ‘ `மோடி பொங்கல்’ என்ற பெயரில் நாம் தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்’ என்று முடிவெடுத்துள்ளார்கள். டெல்லியும் அனுமதி கொடுக்கவே... பிரதமர் முதலில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மதுரை ஏர்போர்ட் அருகிலேயே இடம் பார்த்திருக்கிறார்கள். முதலில் 10,008 பொங்கல் பானைகள் வைக்கத் திட்டமிட்டவர்கள், ஒமைக்ரான் அச்சம் காரணமாக அதை 1,008 பானைகளாகக் குறைத்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகே பிரதமர் ஹெலிகாப்டரில் விருதுநகருக்குச் சென்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறாராம்” என்ற கழுகாருக்கு வெட்டப்பட்ட கரும்புத்துண்டு ஒன்றைக் கொடுத்தோம்...

ஆர்வத்துடன் கடித்துச் சுவைத்தபடியே “ஆஹா பிரமாதம்...” என்றவர் திடீரென முகம் சுருக்கி, “ஆனால், பொங்கல் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளுக்குக் கசப்புதான் மிஞ்சியிருக்கிறது... அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலைக்கும், விவசாயிகளுக்குக் கொடுக்கும் தொகைக்கும் இரண்டு மடங்கு வித்தியாசம் இருக்கிறதாம். ஒவ்வொரு கரும்புக்கும் ஆளும் புள்ளிகள் கமிஷன் வசூலித்திருக்கிறார்கள். வட மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரே, பல மாவட்டங்களுக்கும் கரும்பு சப்ளையைக் கச்சிதமாகச் செய்து முடித்து கல்லாகட்டிவிட்டாராம்.’’

‘‘கட்சியில் ஏன்தான் சேர்ந்தோம் என்று விரக்தியில் இருக்கிறாராமே அந்த வி.ஐ.பி?’’

‘‘மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த டாக்டர் மகேந்திரனைத்தானே சொல்கிறீர்கள்? பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அமைச்சராகிவிட்டதால், அவர் வகித்துவரும் தி.மு.க ஐடி விங் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் மகேந்திரன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான், தி.மு.க உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தில் ‘உறுப்பினர் விவரம்’ என்று ஒரு பகுதியைச் சேர்த்து அதில், ‘அங்கீகரிப்பவர்’ என்ற இடத்தில் மகேந்திரனின் பெயரைப் போட்டு விநியோகித்துள்ளார்கள். இதைப் பார்த்த உடன்பிறப்புகளோ, ‘அவருக்கு ஐடி விங்ல உறுப்பினர்களைச் சேர்க்கவே அதிகாரம் இல்லை. அவர் எப்படி தி.மு.க உறுப்பினர்களை அங்கீகரிக்க முடியும்?’ என்று தலைமையிடம் பொங்கியுள்ளனர். இதையடுத்து, மகேந்திரன் தரப்பை ஓரங்கட்டத் தயாராகிவருகிறதாம் பி.டி.ஆர் தரப்பு’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் முக்கியப் பொறுப்பில் சித்தரஞ்சன் சாலைக்கு நெருக்கமான ரத்த உறவினர் அமரவைக்கப்பட்டிருக்கிறார். இவரைவிட சீனியர்கள் 17 பேருக்குத் தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயம் முதன்மையானவருக்கே தெரியாதாம்!

* முதன்மை அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு இடையே ஈகோ யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போதே, அதிகாரி ஒருவர் தனது மாநிலம் சார்ந்த அதிகாரிகளை பவர்ஃபுல்லான இடத்துக்குக் கொண்டுவரும் வேலையை கச்சிதமாகச் செய்துவருகிறாராம்!

* சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் டெண்டர் விவகாரம், அமைச்சரால் மட்டுமே முடிவுசெய்யப்பட்டதில்லையாம். வாரிசுப் பிரமுகர் முடிவுசெய்ததுதானாம். இதற்குக் குடும்ப உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தும், அதையும் மீறித்தான் டெண்டர் விடப்பட்டதாம்!

மிஸ்டர் கழுகு: கரும்புக்கு கமிஷன்! - கல்லாகட்டும் ஆளும் கட்சியினர்

போதை எஸ்.ஐ-க்காக பன்னீர் அறிக்கை?!

ஜனவரி 2 அன்று வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ் எஸ்.ஐ சீனிவாசன் என்பவர் தி.மு.க-வினரால் மிரட்டப்படுவதாக, தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். இது வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வினரை கடுப்படையச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., தி.மு.க பிரமுகர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஆடியோக்களை வெளியிட்டார். வேலூர் எஸ்.பி விசாரணையில், அந்த எஸ்.ஐ., ‘போதையில் உளறிவிட்டேன்’ என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார். தற்போது அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அவர் தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் செம மப்பில் உளறிய புதிய ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்தே, ‘‘போதை எஸ்.ஐ-க்காக நம்ம தலைவரு அறிக்கைவிட்டு ஏன் கட்சி மானத்தை வாங்குறாரு’’ என்று வருத்தப்படுகிறார்கள் வேலூர் அ.தி.மு.க-வினர்!