Published:Updated:

மிஸ்டர் கழுகு: பழைய புகார்... புதுச்சிக்கல்! - சபரீசனைக் குறிவைக்கும் டெல்லி

சபரீசன்
பிரீமியம் ஸ்டோரி
சபரீசன்

‘எடப்பாடியின் பிரசாரத்துக்குப் பணம் கொடுத்துத்தான் கூட்டத்தைக் கூட்டுறாங்க. அவரைப் பார்க்க யாரும் தானா வர்றதில்லை’ என்று கமென்ட் அடித்தாராம்

மிஸ்டர் கழுகு: பழைய புகார்... புதுச்சிக்கல்! - சபரீசனைக் குறிவைக்கும் டெல்லி

‘எடப்பாடியின் பிரசாரத்துக்குப் பணம் கொடுத்துத்தான் கூட்டத்தைக் கூட்டுறாங்க. அவரைப் பார்க்க யாரும் தானா வர்றதில்லை’ என்று கமென்ட் அடித்தாராம்

Published:Updated:
சபரீசன்
பிரீமியம் ஸ்டோரி
சபரீசன்

‘‘நடிகர் விஜய்யை முதல்வர் பழனிசாமி குஷிப்படுத்திவிட்டாரே?’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். காராசேவுகளைத் தட்டில் நிரப்பிவிட்டு, ‘‘தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பதைக் கூறுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்தபடி காராசேவை அள்ளிய கழுகார், ‘‘3.1.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில், எடப்பாடியிடம் விஜய் தரப்பு இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்ததைச் சொல்லியிருந்தேன். அதுதான் தற்போது நிறைவேறியிருக்கிறது. இனி, முதல்வரை விஜய் குஷிப்படுத்துகிறாரா என்று பார்ப்போம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற, மறைந்த அ.தி.மு.க தலைவர் பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டபத் திறப்பு விழாவுக்காக, எடப்பாடியும் பன்னீரும் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்றது கட்சிக்காரர்களுக்குப் பெரிய ஆச்சர்யம். அங்கேயிருந்து ஒரே காரில் திருநெல்வேலி சென்ற இருவரும், ஒரே ஜீப்பில் ஏறி வரவேற்பையும் ஏற்றுக்கொண்டனர். ஒரே வாகனத்தில் ஒட்டி நின்றபடி பிரசாரத்திலும் ஈடுபட்டார்கள். திருநெல்வேலி அ.தி.மு.க-வில் எடப்பாடி - பன்னீர் கோஷ்டிகளின் பூசல் உச்சத்தில் இருப்பதால், மணிமண்டபத் திறப்பு விழாவுக்கு வரும் இருவரும் கட்சி நிர்வாகிகளைச் சமாதானப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது தலைவர்கள் இருவருமே கைகோத்துக்கொண்டு பயணித்திருப்பதால், `கட்சி நிர்வாகிகள் தலைவர்களைச் சமாதானப்படுத்தினார்களா, கட்சி நிர்வாகிகளைத் தலைவர்கள் சமாதானப்படுத்தினார்களா?’ என்ற பட்டிமன்றமே அ.தி.மு.க-வில் நடக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: பழைய புகார்... புதுச்சிக்கல்! - சபரீசனைக் குறிவைக்கும் டெல்லி

‘‘ஆனால், அவ்வளவு எளிதாகச் சமாதானமாகிவிடுவார்களா என்ன!”

‘‘சிக்கல்தான். பன்னீர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, ‘எடப்பாடியின் பிரசாரத்துக்குப் பணம் கொடுத்துத்தான் கூட்டத்தைக் கூட்டுறாங்க. அவரைப் பார்க்க யாரும் தானா வர்றதில்லை’ என்று கமென்ட் அடித்தாராம். தவிர, ஜனவரி 9-ம் தேதி நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுக்குழுவுக்கு முன்னதாக, சில திருத்தங்களைச் செய்ய எடப்பாடி தரப்பு முனைந்ததாம். அதற்கு பன்னீர் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்கள். முதல் நாள் வரை போயஸ் தோட்டத்தில் அமைதியாக இருந்துவிட்டு திடீர் தியானம் செய்தவர் என்பதால், பன்னீரின் நடவடிக்கையை எடப்பாடி தரப்பு சந்தேகக் கண்ணோடுதான் கவனித்துவருகிறது.’’

‘‘ம்ம்... ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் முனியசாமி சிக்கலில் மாட்டிக்கொண்டாராமே?’’

‘‘மாவட்ட அ.தி.மு.க அலுவலகம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தை முனியசாமி விற்றுவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பாக விசாரிக்க, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கமிட்டி ஒன்றைக் கட்சித் தலைமை அமைத்தது. கமிட்டியின் விசாரணையில், முனியசாமி தவறு செய்திருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறதாம். உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லி கட்சித் தலைமைக்கு கே.பி.முனுசாமி நோட் போட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.’’

‘‘வேறொரு தகவலும் கேள்விப்பட்டோம். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் ஏதோ சிக்கல் என்கிறார்களே?”

மிஸ்டர் கழுகு: பழைய புகார்... புதுச்சிக்கல்! - சபரீசனைக் குறிவைக்கும் டெல்லி

‘‘2011 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், போலி மருந்து கம்பெனிகளுக்குத் துணைபோனதாக மேடைக்கு மேடை சபரீசனைக் குற்றம் சாட்டினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக மானநஷ்ட வழக்கும் சபரீசன் தரப்பிலிருந்து ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விவகாரம் அமுங்கிப்போனது. கடந்த வாரம் டெல்லியிலிருந்து வந்த சிக்னலால், பத்து வருடங்களுக்கு முந்தைய இந்த விவகாரத்தைத் தூசுதட்டி எடுத்திருக்கிறது தமிழகக் காவல்துறை. போலி மருந்து விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும், சபரீசனுக்கும் இடையே உள்ள தொடர்புகள், ஜெயலலிதா எழுப்பிய குற்றச்சாட்டுகளின் விவரங்களைத் தமிழக காவல்துறை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறதாம். விரைவில் சபரீசனுக்குச் சிக்கல் எழலாம் என்கிறது டெல்லி வட்டாரம்.’’

‘‘சரிதான்... ரஜினி எப்படி இருக்கிறார்?’’

‘‘வழக்கம்போல மனக்குழப்பத்தில் இருக்கிறார். ‘அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அறிவித்ததிலிருந்தே ஏராளமான போன் கால்களும் மெயில்களும் ரஜினிக்கு வந்திருக்கின்றனவாம். ஜனவரி 2-ம் தேதி ரிஷிகேஷிலிருந்து ரஜினியைச் சந்தித்த நமோ நாராயண சுவாமி என்பவர், ‘நீங்கள் அரசியல் முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கக் கூடாது. மறுபரிசீலனை செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சூழலில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான தமிழக கேடர் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ரஜினியைச் சந்திக்க வேண்டுமென்று நேரம் கேட்டிருக்கிறாராம். இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் பா.ஜ.க-வின் அரசியல் மூவ் குறித்து டெல்லி மேலிடம் சில உறுதியான முடிவுகளை எடுக்கும் என்கிறார்கள்’’ என்ற கழுகாருக்கு, சூடாக பாதாம் பாலை நீட்டினோம். பாலை அருந்தியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: பழைய புகார்... புதுச்சிக்கல்! - சபரீசனைக் குறிவைக்கும் டெல்லி

‘‘தமிழகத்தில் ஃபைபர் கேபிள் பதிப்பதற்கான 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் பெரும் சர்ச்சையில் இழுபறியாகக்கொண்டே இருந்தது. இந்தநிலையில், நான்கு நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறதாம் தமிழக அரசு. இந்த டெண்டரில் பங்கேற்ற ஒரு நிறுவனம், ‘இந்த நான்கு நிறுவனங்களைவிட குறைந்த தொகையை நாங்கள் ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால், எங்களுக்குத் தமிழக அரசு ஒப்பந்தம் வழங்கவில்லை’ என்று நீதிமன்றத்தை நாடிவிட்டதாம். இதனால், ஒப்பந்தம் எடுத்த நான்கு நிறுவனத்தினரும் அரண்டுபோயிருக்கிறார்கள்.’’

‘‘ஃபைபர் கேபிள் பிரச்னை ஓயாதுபோல... ஸ்டாலினை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென சந்தித்தாராமே..?’’

‘‘ஆமாம். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், தமிழகத்தின் நிதிநிலை குறித்து ஸ்டாலினிடம் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார். ‘ஆளுங்கட்சியினர் கஜானாவை முழுமையாகக் காலி செய்துவிட்டார்கள். நீங்கள் வந்தாலும் நிதி நிலைமையைச் சீராக்குவது சிரமம்தான்’ என்று சில ஃபைல்களை எடுத்துக்காட்டிச் சொல்லியிருக்கிறாராம் அந்த அதிகாரி. இதற்கிடையே கோட்டையில், குறிப்பிட்ட தொகைக்கு மேலான ஃபைல்களை அதிகாரிகள் தரப்பு கிடப்பில் போடுவதாக அமைச்சர்கள் சிலர் எள்ளும்கொள்ளும் வெடிக்கிறார்கள். ஆளும்தரப்பிடமிருந்து அழுத்தம் வந்தால், ‘என்னால இதுக்கெல்லாம் கையெழுத்து போட முடியாதுங்க. வேணும்னா, என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க’ என்று நேரடியாகச் சொல்லிவிடுகிறார்களாம் அதிகாரிகள். என்ன செய்வது என்று புரியாமல் அ.தி.மு.க கரைவேட்டியினர் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘ம்ம்... முரசொலி மூலப்பத்திர விவகாரம் வேகமெடுக்கிறதோ?”

“முரசொலி மூலப்பத்திரம் தொடர்பாக பா.ஜ.க புகார் அளித்த போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக எல்.முருகன் இருந்தார். 2019, மார்ச் மாதம் அவர் தமிழக பா.ஜ.க-வின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில், ‘மூலப்பத்திர விவகாரம் தொடர்பாக இனியும் பேசினால் வழக்கு போட வேண்டிவரும்’ என்று தி.மு.க தரப்பிலிருந்து முருகனுக்கு நோட்டீஸ் வந்ததாம். கடுப்பான முருகன், மூலப்பத்திர விவகார விசாரணையைத் துரிதப்படுத்தும்படி டெல்லியிடம் கூறியிருந்தார். இப்போது தேர்தல் நெருங்குவதால், காலியாகவுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமித்து, முரசொலி மூலப்பத்திர விசாரணையைத் துரிதப்படுத்தப்போகிறதாம் டெல்லி. அந்த விவகாரத்தைப் பற்றிப் பிரசாரத்தில் பேசும்படியும் முருகனுக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வந்துள்ளது.’’

“சரிதான்... அ.ம.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

“சமீபத்தில், சசிகலாவின் புகைப்படத்துடன் ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ என்கிற செய்தி அ.ம.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் வெளியாகியிருந்தது. ‘திடீரென இந்தச் செய்தி ஏன் வர வேண்டும்?’ என்று அ.தி.மு.க முகாமில் குழப்ப ரேகைகள் தென்படுகின்றன. ‘ரஜினி கைவிட்டுவிட்டதால், அடுத்ததாக சசிகலாவைக் கையிலெடுத்து விளையாட பா.ஜ.க திட்டமிடுகிறது’ என்று மன்னார்குடி வகையறாக்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே, ‘ஊழல் அமைச்சர்கள் எட்டு பேர்தான் பிரச்னை. அ.தி.மு.க-விலிருக்கும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று டி.டி.வி.தினகரன் சொல்லிவருகிறார். சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை வைத்து டெல்லி அடுத்த ஆட்டத்துக்குத் தயாராவதாகவும் அ.ம.மு.க வட்டாரங்கள் பரபரக்கின்றன. இதற்கிடையே, ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் பத்து வாகனங்கள் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்’’ என்றபடி கிளம்பினார் கழுகார்.