அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல்வராக வாழ்த்தியவர் அண்ணனாக வாழ்த்தவில்லையே...

கனிமொழி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
கனிமொழி - ஸ்டாலின்

திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு முதல்வர் திரும்பும்போது, கோவையில் வைத்து அவரிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் கனிமொழி.

“பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டிவிட்டதாமே...” என்றபடி அலுவலகத்துக்குள் என்ட்ரி கொடுத்த கழுகாரை முந்திரி பக்கோடாவுடன் வரவேற்றோம். “கனிமொழி பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சொல்கிறீரா... கூட்டம் ஜாஸ்திதான். வாழ்த்த வந்திருந்தவர்களுக்கு தடபுடல் விருந்தும் வைத்திருக்கிறார்கள். அவரை பெரியார் தொடங்கி ஸ்டாலின் வரையிலான தலைவர்கள், அமைச்சர் நாற்காலியில் அமரவைப்பது போன்ற போஸ்டர்களும் சென்னையைக் கலங்கடித்தன. ஆனால், கனிமொழியின் மனதின் ஓரத்தில் சிறு வருத்தமாம்” என்றபடி பக்கோடாவைச் சுவைத்த கழுகார், செய்திகளுக்குள் நுழைந்தார்.

“அமைச்சர்கள் மஸ்தான், கயல்விழி, சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு மட்டுமே தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்தியிருந்தனர். மற்றவர்கள் ஒரு போஸ்ட்கூடப் போடவில்லை. அண்ணாமலைகூட வாழ்த்தியிருக்கிறார். ஆனால், தி.மு.க மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் யாரும் போஸ்டர்கூட ஒட்டவில்லை. உதயநிதி பிறந்தநாளையொட்டி இருந்த படாடோபம் எதுவும் கனிமொழி பிறந்தநாளுக்கு இல்லை. அவ்வளவு ஏன், கனிமொழியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூட எட்டிப் பார்க்கவில்லை. ‘அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில் தேரோட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டதால் வரவில்லை’ என அவர் தரப்பு சொல்கிறது. ‘அதற்காக ஒரு வாழ்த்துச் செய்தி பதிவிடக்கூடவா அவருக்கு நேரமில்லை?’ எனக் கொதிக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.”

மிஸ்டர் கழுகு: முதல்வராக வாழ்த்தியவர் அண்ணனாக வாழ்த்தவில்லையே...

“பதவிக்கு வரும் வரைதான் விசுவாசமெல்லாம்போல... சென்ற பிறந்தநாளுக்கு வாழ்த்திய சீனியர் அமைச்சர்கள்கூட வாழ்த்த வீட்டுக்கு வரவில்லையாமே?”

“உண்மைதான். திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு முதல்வர் திரும்பும்போது, கோவையில் வைத்து அவரிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் கனிமொழி. அப்போது, அங்கேயிருந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, ரகுபதி, உதயநிதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். ‘சென்ற பிறந்தநாளுக்கு கனிமொழி வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்திய சீனியர் அமைச்சர்கள், இந்த முறை போகிற போக்கில் வாழ்த்தியிருக்கிறார்கள். சி.ஐ.டி காலனி வீட்டுக்கு வந்தால், செனடாப் சாலையின் அக்னிப் பார்வைக்கு இரையாகலாம் என்பதாலேயே பெரும்பாலான சீனியர்கள் அந்தப் பக்கமே தலைகாட்டவில்லை’ என்கிறது தி.மு.க வட்டாரம்.”

“ `முதல்வராக வாழ்த்தியவர், தி.மு.க தலைவராக வாழ்த்தவில்லை’ என்கிற பேச்சும் எழுந்திருக்கிறதே?”

“அந்த வருத்தம் கனிமொழிக்கும் இருக்கிறது. ஜனவரி 5-ம் தேதிதான், கனிமொழிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிறந்தநாள். தன்னுடைய தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் மம்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், கனிமொழியை வாழ்த்தவில்லை. கனிமொழி தன்னிடம் வாழ்த்து பெற்ற புகைப்படத்தையும் பதிவிடவில்லை. தமிழ்நாடு முதல்வருக்கான ட்விட்டர் பக்கத்தில்தான் கனிமொழியை வாழ்த்திய புகைப்படம் வெளியானது. ‘முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில், அவரின் சந்திப்புகள், நிகழ்வுகள் அன்றாடம் செய்தி விளம்பரத்துறையால் பதிவிடப்படுகின்றன. அவர்களைப் பொறுத்தவரை, ‘முதல்வரிடம் கனிமொழி வாழ்த்து பெற்றார்’ என்பது ஒரு செய்தி. உணர்வு அல்ல. ஓர் அண்ணனாக, தன்னுடைய தனிப்பட்ட பக்கத்தில் வாழ்த்து பதிவுகூட ஸ்டாலின் போடவில்லையே என்கிற வருத்தம் கனிமொழிக்கு ஏற்பட்டிருக்கிறது’ என்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.”

அமைச்சரவைக் கூட்டம்
அமைச்சரவைக் கூட்டம்

“அமைச்சரவைக் கூட்டத்தில் விசேஷம் ஏதும் இருக்கிறதா?”

“கூட்டமே விசேஷம்தான். உதயநிதி பங்கேற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் அல்லவா... தமிழ்நாடு சட்டசபை வரும் ஜனவரி 9-ம் தேதி கூடுகிறது. தொழில்துறை முதலீடுகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள். ‘பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை’ திட்டத்தை, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியிலிருந்து தொடங்க முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. டாஸ்மாக் மதுபானங்களின் விலையை ஏற்றுவது குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். ‘இனிமேல் வாரத்துக்கு நான்கு நாள்கள் கோட்டைக்கு வந்தாக வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை உங்கள் துறை சார்ந்த வேலை அறிக்கையை எனக்கு அளிக்க வேண்டும்’ எனக் கண்டிப்புடன் கூறியிருக்கிறார் முதல்வர். கூட்டம் முடிந்து உதயநிதி வருவார், அவரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனக் கட்சிக்காரர்கள் பலர் அவரது அலுவலக வாசலில் காத்திருந்தனர். ஆனால், அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன் கோட்டையிலிருந்து சிட்டாகப் பறந்துவிட்டார் உதயநிதி.”

“கோட்டையில் அவர் இருப்பதே அரிது என்கிறார்களே... அமைச்சர் பணியை எப்படிச் செய்கிறாராம்?”

“போகப் போகத்தான் தெரியும். தன் துறைரீதியிலான நிகழ்ச்சிகளில் நேரக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துவிட்டாராம் உதயநிதி. அதிகாரிகளிடம், ‘காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை எத்தனை நிகழ்ச்சிகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், வருகிறேன். அதற்கு மேல் என் ‘ப்ரைவசி டைம்.’ அதில், என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது’ என்று சொல்லிவிட்டாராம் உதயநிதி. அதற்கேற்றாற்போல அதிகாரிகளும் நிகழ்ச்சிகளைத் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்தான், ‘சாயந்திரம் 6 மணிக்கு மேல படிக்கல்லாம் மாட்டேன். என்னை விளையாட விட்டுடணும்’ என அடம்பிடிப்பார்கள். அதுபோல விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் ஆரம்பித்திருக்கிறார்” என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீயைக் கொடுத்தோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: முதல்வராக வாழ்த்தியவர் அண்ணனாக வாழ்த்தவில்லையே...

“பா.ஜ.க-வில் மாநிலத் தலைவரின் செயல்பாடுகளால் பல மாவட்டத் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ‘கட்சிக் கூட்டம், தலைமை ஏற்பாடு செய்கிற நிகழ்ச்சிகள்னு அடுத்தடுத்து வர்ற செலவுகளெல்லாம் கண்ணைக் கட்டுது. பெருசா வருமானமும் இல்லை. போதாதகுறைக்கு, மாநிலத் தலைவர் ரொம்ப மரியாதைக் குறைவாப் பேசுறாரு. கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பம் நிலவுது. எவ்வளவு நாளைக்குப் பொறுத்துக்க முடியும்?’ என மன ஆற்றாமையில் கொதிக்கிறார்கள் பல மாவட்டத் தலைவர்கள். அவர்களின் பேச்சைப் பார்த்தால், சனிப்பெயர்ச்சி முடிந்தவுடன் கமலாலயத்திலிருந்தும் ஒரு கூட்டம் வேறு கட்சிகளுக்கு இடம்பெயரும் எனத் தெரிகிறது” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

“திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாகிறது. எல்லோருக்கும் முன்பாக, இடைத்தேர்தலுக்குத் தயாராகிறதாம் பா.ஜ.க. 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதி, த.மா.கா-வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை, அந்தத் தொகுதியைக் கேட்கும் முடிவில் இருக்கிறதாம் பா.ஜ.க. ஒருவேளை, அந்த சீட்டைத் தர அ.தி.மு.க மறுத்தால், தனித்துக் களமிறங்கவும் கமலாலயம் தயாராகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்வு எட்டப்படவில்லை என்றால், இந்த இடைத்தேர்தலைப் பயன்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியும் உரிமை கோரும் என்கிறார்கள். இந்தச் சூழலில் சின்னம் முடக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சென்னை எழும்பூர் காவல் அதிகாரிகள் மெஸ்ஸில், 3 லட்சம் ரூபாய்க்கு பில் பாக்கி வைத்திருக்கிறாராம் ‘பொருளாதார’ பிரிவில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர். பாக்கியை செட்டில் செய்யச் சொல்லி கடிதம் எழுதி எழுதி ஓய்ந்தே போய்விட்டார்களாம் மெஸ் அதிகாரிகள். விவகாரம் டி.ஜி.பி வரை போயிருக்கிறது.

 மத்திய அரசின் வருவாய் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உயரதிகாரிகள் பலருக்கும், புத்தாண்டை ஒட்டி பரிசுமழை பொழிந்திருக்கிறார்கள் சென்னையிலுள்ள ‘ஹவாலா’ ஏஜென்ட்டுகள். ஆர்.ஏ.புரத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில்தான் பரிசுப்பொருள்கள் கைமாறினவாம்.