Published:Updated:

மிஸ்டர் கழுகு: “முதல்வருக்கு மரியாதையே கொடுப்பதில்லை!” - ஸ்டாலின் முன்னிலையில் எகிறிய வேலு...

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஜனவரி 5-ம் தேதி கனிமொழியின் பிறந்தநாள் அன்று அவருக்கு போனில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. கனிமொழி தரப்பிலிருந்து இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை.

மிஸ்டர் கழுகு: “முதல்வருக்கு மரியாதையே கொடுப்பதில்லை!” - ஸ்டாலின் முன்னிலையில் எகிறிய வேலு...

கழுகார் என்ட்ரி கொடுத்தவுடனே, “கடந்த முறை நீர் சொன்னதுபோலவே ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்லி உரையை முடித்திருக்கிறாரே ஆளுநர்... அதேபோல சட்டமன்றக் கூட்டத்தொடரும் மூன்று நாள்கள்தான் என்று அறிவித்துவிட்டார்கள்” என்று சிலாகித்தோம். நமது பாராட்டைக் கண்டுகொள்ளாத கழுகார், “என் கடமையைத்தானே செய்தேன்” என்று தன்னடக்கத்துடன் உரையாடலைத் தொடங்கினார்...

‘‘சட்டமன்றத்தில் ஜனவரி 5-ம் தேதி ஆளுநர் உரை முடிந்து, மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற கொறடா கோவி.செழியன் வரவேற்புரை ஆற்றிவிட்டு, ‘யாரும் பேசுகிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். யாரும் வாய் திறக்காத நிலையில், அமைச்சர் எ.வ.வேலு மட்டும் எழுந்து சடாரென்று, ‘எனக்கொரு குறை உள்ளது’ என்றிருக்கிறார். அனைவரும் நிமிர்ந்து அமர்ந்து ஆச்சர்யமாகப் பார்க்கும்போதே, ‘கடந்த காலங்களில் ஜெயலலிதா பேரவைக்குள் இருந்தாரென்றால், சுகர் நோயாளியான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்கூட எழுந்து செல்ல மாட்டார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அவையில் இருக்கும்போதே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் அடிக்கடி எழுந்து செல்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக நடைபெறும் நேரத்தில், இப்படிச் செய்வது கொஞ்சமும் சரியில்லை. முதல்வருக்கு எவரும் மரியாதை கொடுப்பதில்லை’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். இறுதியாக மைக் பிடித்த ஸ்டாலின், ‘நான் எதைப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதை வேலுவே பேசிவிட்டார்’ என்று சொல்லி சில ஆலோசனைகளை மட்டும் வழங்கிவிட்டு, 15 நிமிடங்களில் கூட்டத்தை முடித்துவிட்டார்.’’

‘‘சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வினரின் சத்தம் ஓங்கி ஒலித்திருக்கிறதே!”

‘‘ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், தி.மு.க தரப்புக்கு அ.தி.மு.க கடும் நெருக்கடியைக் கொடுத்தது. குறிப்பாக, நீட் விவகாரத்தைவைத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு, தி.மு.க தரப்பால் பதிலடியே கொடுக்க முடியவில்லை. ‘நீட் விவகாரத்தில் மாணவர்களை எதற்காக இன்னும் ஏமாற்ற வேண்டும்? அவர்களை நீட் தேர்வு எழுதுவதற்காவது தயார் செய்வதுதானே இனி வழி... இதில் எதற்காக நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்?’ என்று கேள்விகள் கேட்டதுடன், ‘தேர்தல் நேரத்தில் நீங்கள் சொன்ன பல வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை’ என்று அவற்றைப் பட்டியலிட, ஆளும் தரப்பு திணறி விட்டது!”

மிஸ்டர் கழுகு: “முதல்வருக்கு மரியாதையே கொடுப்பதில்லை!” - ஸ்டாலின் முன்னிலையில் எகிறிய வேலு...

‘‘வேறு வழி..!’’

‘‘சட்டமன்றத்தில் நீட் விவகாரம் வெடித்த பிறகுதான், ‘அனைத்துக் கட்சி கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறும்’ என்று 110 விதியின்கீழ் முதல்வர் அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிறகு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று பிரதமரிடம் மனு அளிக்கவும் தி.மு.க தரப்பு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், தமிழக பா.ஜ.க தரப்பிலிருந்து ஏற்கெனவே மத்திய அரசுக்கு ஓலை ஒன்று சென்றுள்ளது. அதில், ‘நீட் விவகாரத்தில் தமிழக அரசின் எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்க வேண்டாம். அவர்கள் அதைவைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முடியாமல் தமிழக எம்.பி-க்கள் குழு டெல்லியில் தவிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.’’

‘‘ஆனால், அதே அமித் ஷா கனிமொழிக்கு வாழ்த்து சொன்னதைக் கவனித்தீரா?’’

‘‘ஜனவரி 5-ம் தேதி கனிமொழியின் பிறந்தநாள் அன்று அவருக்கு போனில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. கனிமொழி தரப்பிலிருந்து இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை. ஆனால், அமித் ஷா அலுவலகம் இந்தச் செய்தியை வெளியிட்டுவிட்டது. இதனால், முதல்வர் வீட்டில் இறுக்கமான சூழல் ஏற்பட்டதாம். ‘நம் எம்.பி-க்கள் அவரைச் சந்திக்க நேரம் கேட்டால் கிடைக்க வில்லை. ஆனால், கனிமொழிக்கு போனில் வாழ்த்துச் சொல்கிறார் என்றால், டெல்லியில் என்னதான் நடக்கிறது’ என்று சித்தரஞ்சன் சாலையில் கொந்தளித்துள்ளார்கள். இதையடுத்து, ‘டெல்லியில் நமக்கு நம்பகமான ஆள் வேண்டும்’ என்ற எண்ணம் முதல்வர் தரப்பில் உருவாகியிருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக ராஜ்ய சபாவில் ஐந்து இடங்கள் காலியாகவிருக்கின்றன. அதில் சபரீசனை டெல்லிக்கு அனுப்பும் யோசனையில் உள்ளது முதல்வர் தரப்பு.’’

மிஸ்டர் கழுகு: “முதல்வருக்கு மரியாதையே கொடுப்பதில்லை!” - ஸ்டாலின் முன்னிலையில் எகிறிய வேலு...

‘‘வாழ்த்துச் சொன்னதற்கே இந்தக் கொந்தளிப்பா... அது சரி, தமிழகத்தில் பிரதமர் கலந்துகொள்ளும் பா.ஜ.க பொங்கல் விழா ரத்தாகிவிட்டதே?”

‘‘மதுரை ஏர்போர்ட் அருகே ‘மோடி பொங்கல்’ நிகழ்வுக்காக பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துவந்தது பா.ஜ.க தரப்பு. ஆனால், கொரோனா தொற்று வேகம் அதிகரித்திருப்பதால், பொது நிகழ்ச்சியை நடத்தினால், விமர்சனத்துக்குள்ளாகும் என்று முடிவெடுத்த தமிழக பா.ஜ.க தலைமை, நிகழ்ச்சியை ரத்துசெய்துவிடுவதாக ஜனவரி 6-ம் தேதி மதியம் முடிவெடுத்து, டெல்லிக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதற்கு டெல்லியும் ஓகே சொல்லிவிட்டது. அதேபோல், ‘விருதுநகர் அரசு நிகழ்ச்சியையும் வீடியோ கான்ஃபரன்ஸில் நடத்தலாமா?’ என்ற ஆலோசனையில் பிரதமர் அலுவலகம் இறங்கியுள்ளது. இதனால், பிரதமரின் தமிழக வருகை சந்தேகம்தான் என்கிறார்கள்’’ என்ற கழுகாருக்குச் சூடாக மிளகுப்பால் கொடுத்தோம்... ரசித்துப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலும், அவரின் மகனும் விரைவில் தி.மு.க-வில் சேரவிருக்கிறார்களாம். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஜெ.எம்.பஷீர்தான் செய்திருக்கிறார். நிலோபர் கபில் மூலம் அந்த மாவட்ட அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சருக்கு செக் வைக்க தி.மு.க தரப்பு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். அதேசமயம், ராஜேந்திர பாலாஜியைப்போலவே இவர்மீதும் வேலை வாங்கித்தருவதாக மோசடிப் புகார்கள் இருக்கின்றன... நிலோபரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று இப்போதே போர்க்கொடி தூக்கிவருகிறார்கள் வேலூர் மாவட்ட உடன்பிறப்புகள்” என்ற கழுகார்,

‘‘ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதனால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனநிலைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். விரைவில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படலாம். ஆனால், அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக வடநாட்டைச் சேர்ந்த இரு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், ஆளும் தரப்பை அணுக முயன்றுவருகின்றன’’ என்றவாறே சிறகுகளை விரித்தார்.

மிஸ்டர் கழுகு: “முதல்வருக்கு மரியாதையே கொடுப்பதில்லை!” - ஸ்டாலின் முன்னிலையில் எகிறிய வேலு...

மருமகன் பெயரைச் சொல்லி ஆட்டம்!

தமிழக அரசின் அதிகாரப்புள்ளியாக இருக்கும் மருமகனின் பெயரைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை வளைத்துப் போடுகிறதாம் அண்ணா நகர் ‘பூ’ நிறுவனம். மக்கள் திலகம் இல்லம் அருகே ஐடி நிறுவனத்துக்கு விற்கப்பட்ட இடத்தில், மிகப் பெரும் தொகையை இடத்தின் உரிமையாளர்களுக்குத் தராமல் மருமகன் பெயரைச் சொல்லி ஏப்பம்விட்டிருக்கிறார் அந்த நிறுவன அதிபர்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னையின் ஷாப்பிங் ஏரியாவில் அமைந்துள்ள ‘நம்பர்’ பாரில் வார இறுதி நாள்களில் அரசு உயரதிகாரிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய அந்த பாரின், மேல்தளத்திலுள்ள அறைகளில் அதிகாரிகளுக்கு பலமான கவனிப்பு நடப்பதால், பாரின் உரிமையாளரான எதிர்க்கட்சிப்புள்ளி இந்த ஆட்சியிலும் நினைத்ததைச் சாதித்துக்கொள்கிறாராம்.

* ‘ஷாக்’ அமைச்சரின் உடன்பிறப்புமீது புகார்கள் வரிசைகட்டும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியைத் தனக்குப் பெற்றுத்தருமாறு அண்ணனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் அந்த உடன்பிறப்பு.

* கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டத்தில் விடப்படும் அத்தனை டெண்டர்களும் கடந்தமுறை கோலோச்சியவர்களுக்கே கொடுக்கப்பட்டுவருகிறது. புதிதாக ஒப்பந்ததாரர்களாகப் பதிவுசெய்து காத்திருக்கும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லையாம்.

டெல்லி நோட்ஸ்

* நீட் விவகாரத்தில் அமித் ஷாவிடம் கடைசி வரை அப்பாயின்ட்மென்ட் வாங்க முடியாமல் போகவே... `இத்தனை வருஷம் டெல்லியில் இருந்து என்ன செஞ்சீங்க?’ என்று ஸ்டாலின் விட்ட டோஸால் கடும் மன உளைச்சலில் டெல்லியிலேயே முடங்கிவிட்டாராம் பாலு. ஆளுநர் ரவியைக் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்தற்குக் காரணமே அந்தக் கோபம்தானாம்!

* ‘பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தைத் தமிழக அரசே மேற்கொள்ளும் என்கிற சட்டம் மார்ச் மாத சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அப்படிச் சட்டம் கொண்டுவந்தால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராக இருக்கிறாராம் பா.ஜ.க தேசிய நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி.