Published:Updated:

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா

‘துக்ளக்’ விழாவில் ரஜினியை மேடையேற்றி பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்க ஒரு டீம் முயன்றிருக்கிறது

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

‘துக்ளக்’ விழாவில் ரஜினியை மேடையேற்றி பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்க ஒரு டீம் முயன்றிருக்கிறது

Published:Updated:
அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா

‘‘அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்தாகிவிட்டதே?’’ - கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத்தான் வருகை ரத்து என்கிறார்கள்’’ என்றபடி இஞ்சி டீயை கழுகாருக்கு அளித்தோம். டீயின் மணத்தில் லயித்தபடி, ‘‘அப்படியா... அதைத் தாண்டி சில அரசியல் கணக்குகளும் ஒளிந்திருக்கின்றன’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘தமிழகம் வரும் அமித் ஷாவைச் சந்தித்து, கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களைச் சரிக்கட்டிவிடலாம் என்று முதல்வர் பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார். குறிப்பாக, எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் கொடுக்கும் மனநிலையில் இருந்தது அ.தி.மு.க தரப்பு. ஆனால், ‘எடப்பாடியை ஏற்றிவிட வேண்டாம்’ என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலர் டெல்லிக்குத் தகவல் பாஸ் செய்திருக்கிறார்கள். இதையடுத்து, ‘தமிழகத் தேர்தல் களம் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டு தமிழகத்துக்குள் நுழையலாம். இந்த முறை எந்தச் சொதப்பலும் நடந்துவிடக் கூடாது’ என்று அமித் ஷா தரப்பில் உறுதியாக இருக்கிறார்கள். தவிர, அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களைக் கொண்டுவரவும் பிரதமர் மோடி திட்டமிடுகிறாராம். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் அமித் ஷாவின் வருகை ரத்தாகியிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

‘‘ம்ம்... குருமூர்த்திதான் அப்செட் ஆகியிருப்பார்!’’

‘‘இருக்காதா பின்னே... ‘ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் ‘துக்ளக்’ ஆண்டு விழாவில், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வேண்டுமானால் பேசுகிறேன்’ என்று குருமூர்த்தியிடம் அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், குருமூர்த்தி தரப்பு சமாதானம் அடையவில்லையாம். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அல்லது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விழாவில் கலந்துகொள்வார் என்கிறார்கள். கடந்த முறை ரஜினியைச் சந்திக்கவைக்கும் ஏற்பாடுகளை குருமூர்த்தி வசம் டெல்லி ஒப்படைத்தது. அதை அவரால் சக்சஸ் செய்ய முடியவில்லை. ‘இந்த முறை குருமூர்த்தி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றால், அதைவைத்து அவர் அரசியல் செய்துவிடுவார்’ என்று தமிழகத் தலைவர்கள் சிலர் டெல்லிக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் அமித் ஷாவின் ஆப்சென்ட்டுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்!”

‘‘சரிதான்... பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா, ‘ரஜினியிடம் ஆதரவு கேட்போம்’ என்று சொல்லியிருக்கிறாரே..?’’

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

‘‘கடைசி முயற்சியாக அந்தப் பந்தையும் வீசியிருக்கிறார்கள். விக்கெட்தான் விழவில்லை. ‘துக்ளக்’ விழாவில் ரஜினியை மேடையேற்றி பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைக்க ஒரு டீம் முயன்றிருக்கிறது. ஆனால் ரஜினி தரப்பில், ‘எந்த முடிவாக இருந்தாலும் நானே பார்த்துக்கொள்கிறேன். ‘துக்ளக்’ விழாவுக்கு வந்தாலும் என்னை மேடையில் அமரவைத்து விடாதீர்கள்’ என்று பட்டென பதில் வந்ததாம்.’’

‘‘ரஜினி எப்போதுமே புரியாத புதிர்தான். டி.டி.வி.தினகரன் முகாம் செய்திகள் ஏதேனும்?’’

‘‘பா.ஜ.க-வுடன் இணக்கமாகி, எடப்பாடியை வீழ்த்துவது என்கிற அஸ்திரத்தை எடுக்கப் பார்க்கிறார் தினகரன். பத்து மாதங்களாக அரசியல் செய்யாமல் இருந்த தினகரன், சமீப நாள்களாகக் கட்சிக்குள் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், முக்கிய நபர்களைச் சந்திப்பதுமாக பிஸியாக இருக்கிறார். எடப்பாடியை ஆதரிக்க முடியாது என்பதால், அவருக்கு பதிலாக தினகரனை முன்னிலைப்படுத்தி ஓர் அணியை உருவாக்கும் எண்ணம் பா.ஜ.க-விடம் இருக்கிறதாம். ஆனால், இதில் தனக்குச் சம்பந்தம் இல்லாததுபோல காட்டிக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி. இந்தப் புதிய அணி மூலமாக, தி.மு.க-வை வீழ்த்துவதற்கான வியூகத்துக்குத் தயாராகிறதாம் டெல்லி.’’

‘‘ஓஹோ... இதையொட்டித்தான் பன்னீர் - தினகரன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறதோ?’’

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

‘‘ஆமாம். ஏற்கெனவே கட்டடத் தொழில் செய்யும் நபர் மூலமாக பன்னீர் - தினகரன் இடையே சுமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தினகரன் தரப்பிடம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது என்கிறார்கள். எடப்பாடியை ஓரங்கட்ட, பன்னீரும் தினகரனும் கரம் கோத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.’’

‘‘ம்ம்... தினகரனின் மூன்றாவது அணியில் வேறு யாரெல்லாம் வருவார்களாம்?’’

‘‘ராமதாஸை வரவழைக்க முயற்சிகள் நடக்கின்றன. எடப்பாடியுடன் கூட்டணிவைக்க ராமதாஸ் விரும்பவில்லையாம். சமீபத்தில் அவரைச் சந்தித்த பா.ஜ.க தரப்பு, ‘நீங்க தினகரன் பக்கம் போங்க. நாங்க வெளியிலிருந்து ஒத்துழைப்பு கொடுக்குறோம். தி.மு.க-வை வீழ்த்த இதுதான் இப்போதைய வழி’ என்று சொல்லியிருக்கிறார்கள். ராமதாஸும், ‘சரி, பார்க்கலாம்’ என்று சொன்னாராம்.’’

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

‘‘சரிதான்... வைகோ பற்றி உதயநிதி தரப்பில் ஏதோ கமென்ட் அடித்ததாகப் புயல் வீசுகிறதே?”

‘‘உமக்கும் தகவல் வந்துவிட்டதா... தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க பத்து தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், ஐந்துக்கு மேல் வாய்ப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தநிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பாக செனடாப் இல்லத்தில் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது. அப்போது உதயநிதி தரப்பில், ‘அவர் கட்சியில அஞ்சு இடங்களில் போட்டியிடவே ஆளுங்க இல்லையே... தாத்தா (கருணாநிதி) சொன்னது மாதிரி அந்தக் கட்சி ‘மறுபடியும் தி.மு.க’வாகிடுச்சே’ என்று கமென்ட் வந்ததாம். இந்தக் கிண்டல் சிரிப்புச் சத்தம் வைகோவின் காதுகளுக்கும் சென்றுவிட... அப்செட்டான வைகோவை அவரின் மனைவிதான் சமாதானம் செய்தாராம்.’’

‘‘இன்னொரு விவகாரத்திலும் உதயநிதியின் பேச்சு சர்ச்சையாகிவிட்டதுபோல...”

மிஸ்டர் கழுகு: அமித் ஷா ஆப்சென்ட்... ஆடிட்டர் அப்செட்!

‘‘ஆமாம்... சேப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி, சசிகலா ஆகியோரைத் தரம் தாழ்ந்த சொற்களால் உதயநிதி விமர்சித்ததற்கு, கட்சிகளையும் தாண்டி பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘தானும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு உதயநிதி பேசுகிறார்’ என்று தினகரன் பாய்ந்திருக்கிறார். திவாகரனின் மகன் ஜெயானந்த், ‘நயன்தாராவை விமர்சித்த ராதாரவியை உங்கள் தந்தை நீக்கியதுபோல, உங்களையும் கட்சியிலிருந்து நீக்குவாரா?’ என்று கேட்டிருக்கிறார். அதோடு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார். உதயநிதி தரப்பு கப்சிப் ஆகிவிட்டது’’ என்ற கழுகாருக்கு வேர்க்கடலைகளை நீட்டினோம். கடலையைக் கொறித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘பேராவூரணி, பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் சாலை, பாதாளச் சாக்கடை பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் 494 கோடி ரூபாய்க்கு சமீபத்தில் ஆன்லைனில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை முதல்வர் தரப்புக்கு வேண்டப்பட்ட ஒருவர்தான் எடுத்திருக்கிறாராம். இதனால் கொதிப்படைந்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தரப்பு, ‘எங்க மாவட்டத்துல நடக்கிற ஒப்பந்தப் பணிகளை நீங்க எப்படி எடுக்கலாம்... இங்கே இருக்குற ஒப்பந்ததாரர்கள் என்ன செய்வாங்க?’ என்று முதல்வர் தரப்பிடம் ஏகத்துக்கும் கடுப்பானதாம். இதைத் தொடர்ந்து அந்த டெண்டரை ரத்து செய்வதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த உள்விவகாரங்களை மறைக்கும்விதமாக, ‘ஆன்லைனில் டெண்டர் எடுத்தவர்கள் சில விவரங்களைத் தாக்கல் செய்யாததால், மீண்டும் ரீ-டெண்டருக்கு ஏற்பாடு செய்கிறோம்’ என்று விளக்கமளிக்கிறது நெடுஞ்சாலைத்துறை தரப்பு.’’

‘‘ம்ம்...’’

“சி.பி.ஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மர்மமான முறையில் காணாமல்போனது அல்லவா... அது தொடர்பாக, சுரானா நிறுவனத்தில் சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி-யான பிரதீப் வி.பிலிப் தலைமையில் ஒரு டீம் விசாரணை நடத்தியுள்ளது. நிறுவனத்தின் லாக்கரை மையமாகவைத்து தடய அறிவியல் சோதனை நடந்தது. அடுத்தகட்டமாக சி.பி.ஐ-யில் கடந்த எட்டு வருடங்களில் பதவியிலிருந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு கேடர் அதிகாரிகள் சிலரும் அந்தக் காலகட்டத்தில் சி.பி.ஐ-யில் உயர் பதவியில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் ஓரிருவர் ஒய்வுபெற்றுவிட்டனர். ஆனாலும், அவர்களிடம் விசாரணை நடக்கவிருக்கிறதாம்.’’

“வருமானவரித்துறை சுறுசுறுப்படைந் திருக்கிறதுபோல் தெரிகிறது?”

‘‘மோப்பம் பிடித்துவிட்டீரா... சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி வருமான வரித்துறையின் புதிய நோட்டீஸ் ஒன்று பாயலாம்” என்று கிளம்ப எத்தனித்த கழுகார்,

“கடைசி நிமிட தகவல்... அமித் ஷா வருகை ரத்துக்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அநேகமாக தமிழகத்துக்கு புது ஆளுநர் நியமிக்கப்படலாம். எந்நேரமும் அதற்கான அறிவிப்பு வரலாம். ஜருகண்டி ஜருகண்டி கிளம்புகிறேன்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

ரஷித் சரண்டரும்... வலுக்கும் சந்தேகமும்!

கடந்த 2019, செப்டம்பர் மாதம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஒரு மாணவி, ஐந்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆறு பேர், நான்கு இடைத்தரகர்கள் என்று 16 பேரை சி.பி.சி.ஐ.டி கைது செய்தது. வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபரான கேரளாவைச் சேர்ந்த ஏஜென்ட் ரஷித் என்பவரைப் பிடிக்க கேரளாவுக்குப் பறந்தும், அவரது அரசியல் தொடர்புகளால் கைதுசெய்ய முடியாமல் திரும்பியது தனிப்படை. இந்தச் சூழலில்தான், தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தானாக வந்து ரஷித் சரணடைந்திருக்கிறார். “திடீரென ரஷித் சரணடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல உண்மைகள் வெளிவரும்’’ என்கிறது சி.பி.சி.ஐ.டி வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism