அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: சேரத் துடிக்கும் பா.ம.க... ‘ரூட்’ போடும் துரைமுருகன்!

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைமுருகன்

எல்லோரும் ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ய, ‘ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக’ பா.ம.க வித்தியாசமாக உருட்டியிருக்கிறது

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், வந்த வேகத்தில் கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து என்னிடமும் சில தகவல்கள் இருக்கின்றன” என்றவர்...

“ஆளுநர் உரையைப் புறக்கணித்து, ஆளுநரே வெளியேறினார் அல்லவா... வெளியே வந்ததும், ‘மெட்ரோ ரயிலில் கிண்டி போகலாமா?’ என்று தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். ஏற்கெனவே போட்ட பயணத் திட்டம்தான் அது என்றாலும், ‘சட்டப்பேரவையில் இவ்வளவு பிரச்னை ஏற்பட்ட பிறகு இதைச் செய்வது சரியாக இருக்காது. யாராவது எதிர்ப்பு கோஷம் போட்டால், தேவையில்லாத பிரச்னையாகிவிடும்’ என்று சொன்னார்களாம் பாதுகாப்பு அதிகாரிகள். அதையடுத்து கார் மூலம் ராஜ் பவனுக்குத் திரும்பிய ஆளுநர், அங்கு சென்றதும் முதல் வேலையாக, சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ரிப்போர்ட் அனுப்பினாராம். டெல்லிக்கு நேரில் சென்று விளக்கமளிக்கவும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சேரத் துடிக்கும் பா.ம.க... ‘ரூட்’ போடும் துரைமுருகன்!

“பழனிசாமி தரப்பும் பரபரப்பாக இருந்ததே?”

“அவர் கவலை அவருக்கு... ‘சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியே ஆக வேண்டும்’ என்று கடந்த முறை கூட்டத்தொடரையே புறக்கணித்தார் எடப்பாடி. ஆனால், இந்த முறையும் அவர் ஓ.பி.எஸ் அருகிலேயே உட்கார வேண்டியதாகிவிட்டது. சட்டப்பேரவை கூடுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு வந்த எடப்பாடி பழனிசாமி தனது இருக்கையில் அமர, அடுத்த சில நிமிடங்களில் உள்ளே நுழைந்த ஓ.பி.எஸ் எடப்பாடியின் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டார். இருவரும் ஒரே இருக்கையில்... முகத்தை எதிரெதிர் திசையில் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்ததைப் பார்த்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்குள் பேசி, சிரித்துக்கொண்டனர். ஆளுநரின் உரையைப் புறக்கணிக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் ஓ.பி.எஸ்-ஸுக்கு அருகில் சகஜமாக உட்காரவும் முடியாமல் நெளிந்துகொண்டிருந்தார் எடப்பாடி. ஒருவழியாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் பேசத் தொடங்கியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டென வெளியேறிவிட்டார் எடப்பாடி. ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் போடப்போகிறார்கள் என்ற சாக்கைச் சொல்லி, ஓ.பி.எஸ்-ஸும் வெளியேறிவிட்டார். பாவம், அதுவரை அருகருகே உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவியாய் தவித்துவிட்டார்கள் இருவரும்.”

“அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசினார்களாம்?”

“வழக்கம்போல நாற்காலி பற்றிய பேச்சுதான். ‘இவ்வளவு நடந்த பிறகும் அவர் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டார்களே... சீக்கிரமே இதற்கொரு முடிவுகட்ட வேண்டும்’ எனக் கொதித்திருக்கிறார் எடப்பாடி. இருக்கை பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில் சட்டப்பேரவைக் கூட்டங்களைப் புறக்கணிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேறு சில விவகாரங்களைப் பேசியிருக்கிறார்கள்.”

“என்னவாம்?”

“ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தாங்களே போட்டியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். ‘இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும். ஆனாலும் நாம் போட்டியிடுவதன் மூலம் சின்னம் நமக்கென உறுதியாகிவிடும். அப்படி ஒதுக்கவில்லையென்றால் பா.ஜ.க-வின் நிலைப்பாடும் தெரிந்துவிடும். சின்னம் ஒதுக்கினால் நண்பர்களாகத் தொடர்வோம். இல்லையென்றால், தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். நம்முடைய பலத்தையும், பா.ஜ.க-வின் நிலைப்பாட்டையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்’ எனக் கூறியிருக்கிறார் எடப்பாடி. த.மா.கா இடத்தில் அ.தி.மு.க போட்டியிட்டால், காங்கிரஸுக்கு பதில் தி.மு.க நேரடியாகக் களம் காணும் வாய்ப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.”

“இரண்டு பெரிய கட்சிகளின் கூட்டணிக்குள்ளும் கடமுடா இருப்பதுபோல் தெரிகிறதே?”

மிஸ்டர் கழுகு: சேரத் துடிக்கும் பா.ம.க... ‘ரூட்’ போடும் துரைமுருகன்!

“ஆமாம்... தி.மு.க-மீது சமீபகாலமாக அதிருப்தியில் இருக்கிறாராம் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன். அதனால்தான், சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கூட்டணிக் கட்சியினர் ஆஜராகியிருந்தபோதும், திருமா ஆப்சென்ட் ஆகியிருக்கிறார். அவர் சார்பில்கூட யாரும் வரவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வோடு கூட்டணிவைக்க முயல்கிறது பா.ம.க. அதற்கு, அமைச்சர் துரைமுருகன் ‘ரூட்’ போடுவதாகச் சொல்கிறார்கள். இதுதான் திருமாவின் அப்செட்டுக்குக் காரணமாம். ‘சினிமா உலகம் கார்ப்பரேட்மயத்துக்கு இரையாகிவருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்... நான் யாரையும் எதிர்த்து பேசவில்லை, இதைச் சொல்லவேண்டிய சமூகப் பொறுப்பு எனக்கு இருக்கிறது’ என்று சினிமா விழாவில் அவர் பேசியிருப்பது உதயநிதியைத்தான் என்கிறார்கள். அதுமட்டுமல்ல... ‘புதுக்கோட்டை தீண்டாமைச் சம்பவத்தில் அமைச்சர்கள் யாரும் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது வருத்தமாக இருக்கிறது’ என்றும் வெளிப்படையாகப் பேசிவருகிறார் திருமாவளவன்.”

“தி.மு.க கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து பா.ம.க-வும் வெளிநடப்பு செய்திருக்கிறதே?”

“ஆமாம்... எல்லோரும் ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ய, ‘ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக’ பா.ம.க வித்தியாசமாக உருட்டியிருக்கிறது. பா.ம.க சார்பில் மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் ‘சித்திரை முழு நிலவு’ விழாவுக்கும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கும் முடிவில் இருக்கிறதாம். பா.ம.க சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க அரசிடம் இணக்கமாகவே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அ.தி.மு.க-வுடன் வெளிப்படையாகவே மோதிக்கொண்டிருப் பதைப் பார்த்தால், தி.மு.க-வுடன் இணக்கமாகத் தயாராகிவிட்டதோ என்ற பதற்றம் திருமாவளவன் முகாமில் எழுந்திருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் விரிசலை ஏற்படுத்திய பா.ம.க., தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படவும் காரணமாகிவிடும்போல” என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்திகளுக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: சேரத் துடிக்கும் பா.ம.க... ‘ரூட்’ போடும் துரைமுருகன்!

“அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது கடந்த ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அமைச்சரின் பதவியே பறிபோகக்கூடும் என்பதால், வாய்தா மேல் வாய்தா வாங்கிவருவதாகச் சொல்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள். சமீபத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதுகூட அடுத்தகட்டமாக பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கச்சொல்லி அமைச்சர் தரப்பு கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகார்...

“பதிவுத்துறையில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவியில் அமரும் எண்ணத்தோடு தி.மு.க-வின் நிழலானவரைச் சமீபத்தில் சந்தித்திருக்கிறார் அவர். நிழலானவருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பவர் என்பதால், கேட்ட பதவியைக் கொடுக்க மேலிடமும் முடிவுசெய்துவிட்டதாம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்து வந்த புகார்களைக் கேட்டு மிரண்டுபோய், அந்த முடிவைப் பரிசீலனையில் வைத்துவிட்டார்களாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* விரைவில் பதவி பறிபோகும் நிலையிலிருக்கும் கட்சித் தலைவர் ஒருவர், ஏகத்துக்கும் கட்சிப் பணத்தில் விளையாடியிருக்கிறாராம். பதவி போகும் முன்பு கணக்கை நேர் செய்வதற்காக, போலி பில் தயார் செய்யும் வேலையில் இறங்கிவிட்டாராம் அவர். கட்சி அலுவலகத்துக்கு எதிரே ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்து, இதற்கென இரண்டு பேரையும் நியமித்திருக்கிறாராம் அந்தத் தலைவர்.

* இலாகா மாறியிருக்கும் கொங்கு அமைச்சரின் உறவினர் ஆட்டம் தாங்க முடியவில்லை என்கிறார்கள் கோட்டையில். புதிய இலாகாவில் பணம் கொட்டும் இடங்களைப் பற்றிய ரூட் மேப் போட்டுவருகிறாராம் அந்த உறவினர்.