Published:Updated:

மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? - கவலையில் தி.மு.க தலைமை!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

கடந்த வாரம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்றாண்டுகளாகக் குறைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது

டபுள் மாஸ்க், அதற்கும் மேலாக ஃபேஸ் ஷீல்டு, கையுறை என பலத்த பாதுகாப்புடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “ஒமைக்ரான் பரவலால் பீதி அடையத் தேவையில்லைதான்... அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. நமது ஊழியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கச் சொல்லும்...” என்று அறிவுறுத்தியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட் மாதம்தோறும் முதல்வரின் டேபிளுக்குச் செல்கிறது என்று ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் ஜனவரி முதல் வாரத்தில் ரிப்போர்ட் சென்றிருக்கிறது... இதில் சரியாகச் செயல்படாதவர்கள், அதிகாரிகளுடன் ஒத்துப்போகாதவர்கள், கமிஷன் புகாரில் சிக்கியவர்கள் என வகைவாரியாகப் பிரித்திருக்கிறார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் ‘சரியாகச் செயல்படவில்லை’ என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்கள்மீது புகார் அதிகம் இருக்கிறதாம். ஆனாலும், ஆறு மாதங்களுக்கு பிறகே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கிறது கோட்டை பட்சி!’’

‘‘பார் டெண்டர் விவகாரம் இன்னும் அடங்கவில்லையே!’’

‘‘ஆமாம்... டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கான டெண்டர் விண்ணப்பங்களை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலரே மாநிலம் முழுவதும் பெற்றார்கள் என்று கூறி பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா... அந்தச் சங்கத்தின் தலைவர் அன்பரசன், வேளச்சேரி தொகுதி தி.மு.க மாவட்டப் பிரதிநிதியாக இருந்தவர். இன்னும் பல பார் உரிமையாளர்களும் தி.மு.க-வினர்தான். இந்த நிலையில், அன்பரசனைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறது தலைமை. இதன் பின்னணியில் அமைச்சர் இருக்கக்கூடும் என்கிறார்கள். இதையடுத்து, தனிப்பட்ட ஒருவரின் லாபத்துக்காகச் சொந்தக் கட்சியினரையே பழிவாங்கலாமா என்று பொருமுகிறார்கள் தி.மு.க-வைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள். மேலும், 30 மாவட்டங்களில் பார் டெண்டர் திறக்கப்பட்டு, அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கிடைத்திருக்கிறதாம். ஆனால், அவர்களிடம் பார் நடத்தக் கட்டடம் இல்லாததால், கிடப்பில் போட்டுவைத்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் இன்னொரு டெண்டரும் அறிவிக்கப்படவிருக்கிறது. மது தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து மது பாட்டில்களை குடோன்களுக்கு எடுத்துச் செல்லும் லாரிகளுக்கான டெண்டர்தான் அது. இந்த டெண்டரை கடந்த ஆட்சியில் சர்ச்சையில் சிக்கிய கொங்கு மண்டல முட்டை சப்ளை நிறுவனமே எடுக்கப்போகிறதாம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்கிறார்கள்.”

‘‘தங்க முட்டையிடும் வாத்தாகிவிட்டது டாஸ்மாக்... அது சரி, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் அ.தி.மு.க வழக்கில் ‘இரட்டையர்’களுக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாமே?’’

‘‘ம்ம்... கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அந்தத் தேர்தலை எதிர்த்து அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த வாரம் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க-வில் உறுப்பினராக உள்ள 200 பேர் கே.சி.பழனிசாமியின் மனுவுக்கு ஆதரவாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்திருக்கும் நிலையில், இந்த மனுவுக்கு ஆதரவாக இன்னும் பலரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்று அ.தி.முக தலைமைக்குத் தகவல் போக... பதறிப்போனவர்கள், இதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? - கவலையில் தி.மு.க தலைமை!

‘‘கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு விவகாரத்தில் அ.தி.மு.க., நீதிமன்றத்தை நாடவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றனவே..?”

‘‘கடந்த வாரம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்றாண்டுகளாகக் குறைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து வெளிநடப்பும் செய்தது அ.தி.மு.க. இதையடுத்து அந்தக் கட்சித் தரப்பில் நடந்த ஆலோசனையில், ‘சட்ட முன்வடிவுக்கான அரசாணை வெளியிடப்பட்டதும், அதைவைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் விதிகளில் அரசு தலையிட முடியாது என்ற வாதத்தையும் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம்’ என்று முடிவெடுத்துள்ளார்கள்’’ என்ற கழுகாருக்கு சூடாக வடையையும் இஞ்சி டீயையும் கொடுத்தோம்... அவற்றைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘ஐந்து மாநிலத் தேர்தலை நடத்த முடிவெடுத்து, தலைமை தேர்தல் ஆணையம் தேதிகளையும் அறிவித்துவிட்டது. அந்தத் தேர்தல்களே அறிவிக்கப்பட்டிருக்கும்போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்கிற கவலையில் ஆழ்ந்திருக்கிறது தி.மு.க தலைமை. நீதிமன்றத்தில் கொரோனா தொற்றைக் காரணமாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா என்று ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள். அதனால், ‘தேர்தலுக்குத் தயாராக இருப்பதே நல்லது. நீதிமன்றத்தில் முதலில் மனுவைப் போட்டுவிட்டு, பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறது முதல்வர் தரப்பு.’’

“அப்பழுக்கற்ற ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு, தேர்தலை எதிர்கொள்வதில் மட்டும் ஏன் இந்தக் கவலை?”

‘‘வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இப்போது கூடுதல் கவலையாக, பொங்கல் பணம் நிறுத்தப்பட்டதும் சேர்ந்துகொண்டிருக்கிறது. பொங்கல் பணம் தரப்படும் என்றே அமைச்சர்கள் பலரும் நம்பியிருந்தார்கள். அது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது அமைச்சர்களுக்கே ஷாக்தானாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் என்று முடிவுசெய்யப்பட்டு, பணம் ஒதுக்கீடு வரை சென்றுள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் நிதியமைச்சர், ‘அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் பணம் கொடுக்க முடியாது. குறிப்பிட்ட அளவு குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பணம் வழங்குவது சாத்தியம்’ என்று சொல்ல... ‘கொடுத்தால் முழுமையாகக் கொடுங்கள். இல்லையென்றால், கொடுக்கவே வேண்டாம்’ என்று முதல்வர் தரப்பில் சொல்லிவிட்டார்களாம். அதன் பிறகே பணம் கொடுப்பது நின்றுபோய்விட்டது என்கிறார்கள்.’’

‘‘ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டுகள் தொடங்கிவிட்டனவே!”

“மோதல் இல்லாமல் ஜல்லிக்கட்டா? ‘ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளை இரண்டு நாள்களுக்கு முன்பாகவே முடித்துவிட வேண்டும்’ என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே மதுரையில் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர்களுக்கு 200 டோக்கன்களை ஒதுக்கிவிட்டார்கள். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டிகளின் அதிகாரத்தை அவரே எடுத்துக்கொண்டதாகவும், காளைகளையும் அமைச்சர் சிபாரிசு இருந்தால்தான் இறக்க முடியும் என்றும் மல்லுக்கட்டுகிறார்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? - கவலையில் தி.மு.க தலைமை!
மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? - கவலையில் தி.மு.க தலைமை!

மகளா... மருமகளா?

திண்டுக்கல் மாநகராட்சிக்கு தி.மு.க மேயர் வேட்பாளர் யார் என்பதில் ஐ.பெரியசாமி மகள் இந்திராவுக்கும், மருமகள் மெர்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறதாம். சமீபத்தில், ஐ.பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மகள் இந்திரா, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். அவருக்குப் போட்டியாக மெர்சியும் பழநி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். இந்தப் போட்டியை அமைச்சர் எப்படி முடித்துவைக்கப்போகிறார் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் திண்டுக்கல் தி.மு.க-வினர். தவிர, ஐ.பி-யின் பிறந்தநாளை முன்னிட்டு வத்தலக்குண்டில் நடத்தப்பட்ட விழாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் கூட்டம் திரட்டப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

ஜனவரி 5-ம் தேதி தமிழகத்திலுள்ள ஒரு காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலர், ‘கட்சிக்கு நிதி கேட்கிறார்கள்’ என்று தனது எல்லைக்குட்பட்ட ரேஞ்சர்களுக்கு உத்தரவிட்டதுடன், வசூலைக் கச்சிதமாக முடித்து, சேர்க்கவேண்டிய இடத்திலும் சேர்த்துவிட்டாராம்!

கோயம்பேடு கட்டட நிறுவனத்துக்கும், அண்ணாநகர் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கும் இடையிலான உரசல் உச்சமடைந்துள்ளது. கட்டட நிறுவனத்துக்கு ஆதரவாக சி.எம்.டி.ஏ-வில் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை தோண்டச் சொல்லியிருக்கிறது அண்ணாநகர் தரப்பு. இதில் பல்வேறு வில்லங்கங்கள் வெளியே வந்திருக்கின்றன. விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் ஆத்திரமடைந்த கோயம்பேடு நிறுவன தரப்பு, அண்ணாநகர் கும்பலின் ரகசிய பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறையிடம் போட்டுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

அணில் அமைச்சர்மீது ஏராளமான புகார்கள் வெடித்தாலும், சம்பிரதாயத்துக்குக்கூட தலைமை அவரைக் கண்டிக்கவில்லை. தினசரி வரும் கலெக்‌ஷனை இன்னோவா காரில் அன்றைய தினம் இரவே செட்டில் செய்துவிடுவதுதான் இதற்குக் காரணமாம்!