அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பூங்கொத்து கொடுத்தது தப்பாய்யா..? - சர்ச்சையில் அடையாறு ஐடி விங்!

கல்யாணராமன் - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணராமன் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க-வின் அடையாறு ஐடி விங் கும்பல் சீண்டுவது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது

“வாசகர்களுக்கும் உமக்கும் பொங்கல் வாழ்த்துகள்” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு, சர்க்கரைப் பொங்கலும் கரும்பும் கொடுத்து வரவேற்றோம். அதை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டவர், “தமிழர்களெல்லாம் சாதி, மத வேறுபாடுகளை மறந்து சமத்துவ, மதச்சார்பற்ற விழாவாகப் பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டும்” என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியவாறே உரையாடலைத் தொடங்கினார்.

“சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ‘மத்தியிலோ, மாநிலத்திலோ தி.மு.க ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போதெல்லாம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுப்பது வழக்கம்தான். இந்த நடவடிக்கையும் அதன் தொடர்ச்சிதான்’ என்கிறார்கள் அதிகாரிகள். அதேவேளையில், இதில் அரசியலும் கலந்திருக்கிறதாம். ‘பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலாக சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் முதல்வர். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு எளிதில் அனுமதி தரப்போவதில்லை. அதுவரை, அரசியல்ரீதியாக தி.மு.க-வுக்கு லாபம்தான். அனுமதி தந்தாலும், அதற்கான முழுப் பெருமையையும் தி.மு.க-வே எடுத்துக்கொள்ளும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வின் பிரசாரத்துக்கு இந்த தனித் தீர்மானம் பெரிதாகக் கைகொடுக்கும்’ என்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்.”

“ம்...”

“இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதை வரவேற்பதாகவும், `அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அதிக மகிழ்ச்சி அடைவேன்’ எனப் பேசியதும்தான் ஹைலைட். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள்தான் பா.ஜ.க மாநிலத் தலைவர் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். பா.ஜ.க தலைவர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். ஆனால், இந்த விவகாரங்கள் எதுவுமே தெரியாததுபோல நயினார் பேசியது, கமலாலயத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் கட்சியிலிருந்து விளக்கம் கோரப்படலாம் என்கிறார்கள்.”

“ஆளுநர் டெல்லிக்குப் பறந்திருக்கிறாரே?”

மிஸ்டர் கழுகு: பூங்கொத்து கொடுத்தது தப்பாய்யா..? - சர்ச்சையில் அடையாறு ஐடி விங்!

“அது முன்பே திட்டமிட்ட பயணம்தான். ஆளுநர் உரையின்போது, சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்கள் குறித்து ஏற்கெனவே உள்துறை அமைச்சருக்கு ‘நோட்’ ஒன்றை அனுப்பிவிட்டார் ஆர்.என்.ரவி. அதோடு சேர்த்து, ‘தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கிறது; போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது’ என்ற விவகாரங்களையும் சேர்த்து எடுத்துச்செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்குள் முந்திக்கொண்ட தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியோடு சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆளுநரின் ‘அத்துமீறல்கள்’ குறித்து புகார் அளித்திருக்கிறார்கள். கூடவே, ஆர்.என்.ரவியை நீக்கவும் கோரிக்கை வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பதால் உடனடியாக டெல்லிக்குச் சென்ற ஆளுநர், சட்டப்பேரவையில் தனக்கு நடந்த அவமானங்கள், மரபு மீறல்கள் குறித்துப் புகார் அளித்ததோடு, ‘தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை’ எனவும் சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.”

“கொடுத்த ‘வேலை’யைச் சரியாகச் செய்கிறார் ரவி... அதுசரி... அ.தி.மு.க - பா.ஜ.க-வுக்குள் என்ன சலசலப்பு?”

“அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க-வின் அடையாறு ஐடி விங் கும்பல் சீண்டுவது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. ‘பா.ஜ.க இல்லையென்றால் அ.தி.மு.க-வே இல்லை’ என்கிற கருத்தை சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பதிவிட்டுவருகிறது இந்தக் கும்பல். இது குறித்து எடப்பாடி தரப்பிலிருந்து பா.ஜ.க மேலிடத்துக்குப் புகார்கள் சென்ற நிலையில், சமீபத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, எடப்பாடியிடம் நேரில் விளக்கமளித்திருக்கிறார் பா.ஜ.க-வின் செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன்.”

“என்ன விளக்கமளித்தாராம்?”

“அடையாறு ஐடி விங்கின் செயல்பாடுகள் பற்றித்தான் பேச்சு இருந்திருக்கிறது. ‘அவர்கள் அண்ணாமலையை மட்டும் புரொமோட் செய்யும் வேலையில் இருக்கிறார்கள். கட்சிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் பதிவிடும் கருத்துகளையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். டெல்லி உங்கள் பக்கம்தான் அனுசரணையாக இருக்கிறது’ என்றிருக்கிறார் கல்யாணராமன்.”

“இந்த சந்திப்பே பெரும் சர்ச்சையாகியிருக்கிறதே?”

மிஸ்டர் கழுகு: பூங்கொத்து கொடுத்தது தப்பாய்யா..? - சர்ச்சையில் அடையாறு ஐடி விங்!

“ஆமாம்... ஆமாம்... எடப்பாடியைச் சமாதானம் செய்யும் நோக்கில் சந்திக்கச் சென்ற கல்யாணராமன், அவருக்குப் பூங்கொத்து கொடுத்த படத்தைவைத்து, ‘கல்யாணராமன் அ.தி.மு.க-வில் இணைந்ததற்கு வாழ்த்துகள்’ என பா.ஜ.க-வின் தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வக்குமார் ட்வீட் செய்தது அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துவிட்டது. ‘அண்ணாமலைக்கு நெருக்கமானவரான செல்வக்குமார் திட்டமிட்டுத்தான் இந்த அவதூறைக் கிளப்பியிருக்கிறார். ஒரு பூங்கொத்து கொடுத்தது குத்தமாய்யா... அதற்காக, ஒரு சீனியர் நிர்வாகிமீது இப்படி ஒரு பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு செல்வக்குமாருக்கு யார் தைரியம் தந்தது?’ என கமலாலய சீனியர்கள் கொதிக்கிறார்கள். அடையாறு ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் இந்த ட்வீட்டையும் வைரலாக்க, பிரச்னை பெரிதானதும் ட்வீட்டையே நீக்கிவிட்டார் செல்வக்குமார். இந்த விவகாரத்தையும் டெல்லி வரை புகாராகக் கொண்டு சென்றிருக்கிறாராம் எல்.முருகன்” என்ற கழுகாருக்குப் பால் பாயசம் கொடுத்தோம். ‘பொங்கல் வந்தாலும் வந்தது, இனிப்புகளாகக் கொடுத்து அசத்துகிறீரே?” என்ற கழுகார், அதைச் சுவைத்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“சமீபத்தில் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட பொங்கல் விழாவுக்கு எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமனைத் தவிர சென்னையைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ-க்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ‘ `அந்த’ அமைச்சர்தான் என்னை அழைக்கவிடாமல் செய்துவிட்டார். கடந்த முறை சொந்தத் தொகுதியில் நடந்த விழாவிலேயே என்னைப் பேசவிடாமல் செய்தார்கள். தற்போது முதல்வர் கலந்துகொள்ளும் விழாவுக்கு என்னை மட்டும் அழைக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். இதனால் தலைமையில் என்னுடைய பெயர்தானே கெட்டுப்போகும்?’ என நொந்துகொண்ட பரந்தாமன், இது குறித்து மேலிடத்தில் முறையிடும் முடிவில் இருக்கிறாராம்.”

“சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பு எழுந்திருக்கிறதே?”

“காங்கிரஸ் செயல் தலைவர் பதவியைப் பிடிக்க முன்னாள் தலைவர்களின் மகன்களுக்கிடையே மல்லுக்கட்டு நடக்கிறது. செயல் தலைவராக இருந்த வசந்தகுமார் இறந்துவிட்டார். மற்றொரு செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு ஏ.ஐ.சி.சி செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு செயல் தலைவர் பதவிகள் காலியாகியிருப்பதால், இந்தப் பதவிகளுக்கு தங்கள் மகன்களைக் கொண்டுவர முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசரும், தங்கபாலுவும் வரிந்துகட்டி வேலை செய்கிறார்களாம். வாரிசுகளைத் தவிர மேலும் பலரும் மல்லுக்கட்டுகிறார்கள். ஒருவேளை முன்னாள் தலைவர்களின் வாரிசுகளுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டால், சத்தியமூர்த்தி பவனில் அடுத்த ரகளை களைகட்டும் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.”

“அடுத்தடுத்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்திருக்கிறதே?”

மிஸ்டர் கழுகு: பூங்கொத்து கொடுத்தது தப்பாய்யா..? - சர்ச்சையில் அடையாறு ஐடி விங்!

“சிலர் பதவி உயர்வு பெற்றதால், காலியான 21 இடங்களுக்குத்தான் இந்த மாற்றம். இதில் வேடிக்கை என்னவென்றால், மயிலாப்பூர் துணை ஆணையராக அமர்த்தப்பட்ட ரோஹித் நாதன், சில நாள்களிலேயே மீண்டும் மாற்றப்பட்டு அண்ணாநகர் துணை ஆணையராக்கப் பட்டிருக்கிறார். தி.மு.க மேலிட குடும்பத்துக்கு நெருக்கமானவரான ரோஹித், முதல்வர் வீடு, அவரது கான்வாய் ரூட், முக்கியப் பிரமுகர்களின் வீடுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதற்காகவே மயிலாப்பூர் துணை ஆணையராகக் கொண்டுவரப்பட்டார். ஆனால், பணிச்சுமைதான் அதிகம்... வேறு பிரயோஜனம் இருக்காது என்பதால், அவருக்கு மயிலாப்பூரில் பணிபுரிய விருப்பமில்லையாம். எனவே, மேலிட குடும்பத்தின் சிபாரிசால், அவருக்கு அண்ணாநகர் ஏரியா தரப்பட்டிருக்கிறது. அதேபோல, தென்காசி மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட செந்தில்குமாரும், சில நாள்களிலேயே சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி-யாக பணிமாறுதலாகி வந்துவிட்டார். இவருக்குப் பசையுள்ள பதவி கிடைத்ததற்கும் மேலிட சிபாரிசுதான் காரணமாம்” என்ற கழுகார்...

“ராஜ் பவனிலிருந்து வெளியான பொங்கல் விழா அழைப்பிதழில், ‘தமிழக ஆளுநர்’ என அச்சிடப்பட்டிருந்ததும், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதிலாக இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்ததும் சர்ச்சையானது. ஆளுநருக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. ஆனால், நடந்ததே வேறு என்கிறது ராஜ் பவன் வட்டாரம். ‘ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ் வடிவமைப்பு பொறுப்புகளை, இணை இயக்குநர் (பி.ஆர்.ஓ) செல்வராஜ்தான் கவனித்துவந்தார். பொங்கல் விழா அழைப்பிதழில், `தமிழ்நாடு ஆளுநர்’ என்று இடம்பெறாததற்கும், தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறாததற்கும் ஆளுநர் பொறுப்பல்ல. செல்வராஜ்தான் அதற்குப் பொறுப்பு. அதனால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்திருக்கிறது ஆளுநர் மாளிகை” என்றபடி சிறகுகளை விரித்தார்.