Published:Updated:

மிஸ்டர் கழுகு: பொங்கல் தொகுப்பு குளறுபடி... தவறு செய்தவர்களின் பட்டியல் கேட்ட முதல்வர்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

ராஜேந்திர பாலாஜி விவகாரத்திலும் டென்ஷனில் இருக்கிறார் ஸ்டாலின். அவர்மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், நேரடியாக ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

“கையில் கரும்புடன் நுழைந்த கழுகார் உற்சாகமாக, “பொங்கல் வாழ்த்துகள்” என்று கூறிவிட்டு, நமக்கும் ஒரு கரும்புத்துண்டை கொடுத்தார். “தமிழக அரசின் பொங்கல் பரிசுப்பொருள்களில் கிடைத்த கரும்பு இது...” என்றபடி கரும்புத்துண்டை சுவைத்துக்கொண்டே உரையாடலைத் தொடங்கினார்...

“பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடந்த குளறுபடிகளால் முதல்வர் ஸ்டாலின் கடும் டென்ஷனில் இருக்கிறார். இத்தனை பொருள்கள் கொடுத்தும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டதற்குக் காரணம் என்ன என்று அதிகாரிகளிடம் கடுகடுத்திருக்கிறார். அதிகாரிகளோ, ‘முதற்கட்டமாக வழங்கிய பொருள்கள் ஓரளவு தரமாக இருந்துள்ளன. அடுத்தடுத்து வழங்கப்பட்ட பொருள்களில்தான் தரம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே எந்தெந்த மாவட்டங்களில், யார் யாரெல்லாம் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள், கரும்புக் கொள்முதலில் நடந்த கமிஷன் விவகாரம் உண்மையா, பை தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி என்றெல்லாம் விசாரித்தவர், தவறு செய்தவர்களின் பட்டியல் உடனே வேண்டும் என்று கண்கள் சிவக்க உத்தரவிட்டிருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: பொங்கல் தொகுப்பு குளறுபடி... தவறு செய்தவர்களின் பட்டியல் கேட்ட முதல்வர்!

“எத்தனை முறைதான் கண்சிவப்பார் முதல்வர்... அதிருக்கட்டும், மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளனவே... என்ன காரணமாம்?’’

“குறிப்பிட்டுச் சொல்லும்படி காரணம் இல்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். தமிழகத்தில் விமான தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கும் மையம் விழுப்புரம் பகுதியில் அமையவிருக்கிறது. இதே போன்றதொரு மையம் தெலங்கானாவிலும் அமையவிருக்கிறது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தபோது, இது பற்றியும் பேசியிருக்கிறார்கள். இந்தத் துறையில் நிறைய முதலீடுகள் வரவிருப்பதால், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த விமான போக்குவரத்துத்துறையை, தொழில்துறையை கவனிக்கும் தங்கம் தென்னரசுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. சிறுபான்மையினர் நலத்துறையிடமிருந்த அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசனுக்கும், தங்கம் தென்னரசிடமிருந்த சர்க்கரை ஆலைகள்துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடமும் நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றித் தரப்பட்டுள்ளன” என்று கழுகார் சொல்லிக்கொண்டிருந்தபோதே உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்த தகவல் செய்தி சேனலில் ஓடியது...

அதைப் பார்த்துக்கொண்டே தனது வாட்ஸ்அப்பில் வந்த தகவலை வாசித்துவிட்டு, செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்... “ராஜேந்திர பாலாஜி விவகாரத்திலும் டென்ஷனில் இருக்கிறார் ஸ்டாலின். அவர்மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், நேரடியாக ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான், அவர் ஏ-2 என்றே சேர்க்கப்பட்டுள்ளார். இதே புகாரில் ஏ-1-ஆக சேர்க்கப்பட்டவர் நல்லதம்பி. அவரை போலீஸார் கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து, ‘ஏ-2-வை மட்டும் வலைவீசித் தேடியது ஏன்... போலீஸார் ஏன் ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பவில்லை... உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் ஏன் அவசரமாக அவரைக் கைதுசெய்ய வேண்டும்... ராஜேந்திர பாலாஜியிடம் அரசு முறை பயணத்துக்காக வாங்கப்பட்ட ‘டிப்ளோமாட்டிக்’ பாஸ்போர்ட்தான் இருக்கிறது. அப்படியிருக்க, எதற்காக லுக்அவுட் நோட்டீஸ் தரப்பட்டது?’ என்றெல்லாம் நீதிபதிகள் கேள்விகளால் துளைத்தெடுக்க, அரசுத் தரப்பில் சரியான பதில் இல்லை. ‘இப்படியா காவல்துறையினர் சொதப்புவார்கள்?’ என்று காவல்துறையின் மூத்த அதிகாரியை போனில் அழைத்து வறுத்தெடுத்திருக்கிறார் முதல்வர்!’’

மிஸ்டர் கழுகு: பொங்கல் தொகுப்பு குளறுபடி... தவறு செய்தவர்களின் பட்டியல் கேட்ட முதல்வர்!

“ஓஹோ... அ.தி.மு.க தலைவர்கள் பொங்க ஆரம்பித்துவிட்டார்களே... கவனித்தீரா?”

“பொங்கலுக்குக்கூட பொங்கவில்லையென்றால் எப்படி! ‘நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுதினாலே, இந்தித் திணிப்பு என்று கூறும் தி.மு.க., தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தின் பொருள்களில் இந்தியில் பெயர் இருப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கேட்டிருக்கிறார் பன்னீர். போதாததற்கு ‘இப்படித் தரமில்லாத பொருள்களைக் கொடுத்ததற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தால்கூட மக்கள் மகிழ்ந்திருப்பார்கள்’ என்று கடந்த ஆட்சியில் தாங்கள் பணம் கொடுத்ததைக் ‘குத்தி’க்காட்டியிருக்கிறார்.”

“தேனிக்காரர் விழித்துக்கொண்டார் என்று சொல்லும்! ம்ம்... அடுத்து?”

“எடப்பாடிதானே... பொங்கலுக்குக் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததால், அது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேள்வி கேட்ட நந்தன் என்பவர்மீது வழக்கு போட்டது காவல்துறை. அதைக் கண்டித்து அவரின் மகன் குப்புசாமி தீக்குளித்து இறந்துவிட்டார். இதையடுத்து எடப்பாடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாகக் கிடைக்கிறது’ என்று பொங்கியிருக்கிறார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு, `தமிழகத்தில் எதிர்க்கட்சி நாங்கள்தான்’ என்று பா.ஜ.க சொன்னது அல்லவா... இதை முறியடிக்கவே, ‘தி.மு.க-வை கண்டிப்பது போலவும் இருக்கும்... பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுப்பது போலவும் இருக்கும்’ என்று தலைவர்கள் இருவரும் இப்படி தீவிர எதிர்ப்பு அரசியல் செய்கிறார்களாம்!”

“அதையும்தான் பார்ப்போம்... அந்தப் பெண் அமைச்சர் இப்போது ஹேப்பியாமே?”

“யாரைக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு அந்தத் தென் மாவட்ட பெண் அமைச்சர், தி.மு.க மூத்த பெண் வாரிசுத் தலைவர் பற்றிப் புகார் கூறியிருந்ததாகத் தகவல்கள் வந்தன அல்லவா... இதனால், இருவர் இடையிலும் இறுக்கம் நிலவியது. இந்த நிலையில்தான், சமீபத்தில் பெண் தலைவரின் பிறந்தநாள் அன்று அவரை தனியாகச் சந்தித்து ‘அக்கா... அக்கா’ என்று உருகியிருக்கிறார் அமைச்சர். அரை மணி நேரம் அக்காவும் தங்கையும் மனம்விட்டுப் பேசியுள்ளனர். தற்போது தங்கையுடன் பழையபடி ராசியாகிவிட்டாராம் அக்கா!”

“பிறந்தநாள் என்று சொல்லவும்தான் நினைவுக்கு வருகிறது... தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி அனுப்பிய வாழ்த்துக் கடிதம் உமக்கு வந்து சேர்ந்ததா?”

“கடிதமும் வந்தது... அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் கவனித்தோம். முன்பெல்லாம் கனிமொழி அனுப்பும் வாழ்த்துக் கடிதங்களில் கலைஞர், அண்ணா, ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்தமுறை யாருடைய படங்களையும் வாழ்த்துக் கடிதத்தில் அச்சிடாமல், வாழ்த்துகளை மட்டும் அச்சிட்டு நிர்வாகிகளுக்கு அனுப்பியிருக்கிறார்” என்ற கழுகாருக்கு சுக்குமல்லி காபியைக் கொடுத்தோம். ருசித்துப் பருகியபடியே தொடர்ந்தார் கழுகார்...

“கடந்த இதழின் கவர் ஸ்டோரியில் நீர் சொல்ல மறந்த விஷயம் ஒன்றை சோர்ஸ் ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்... தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்காக 317 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து ஆய்வுசெய்யவும், அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும் அமைச்சர் மஸ்தான் தலைமையில் குழு ஒன்றை, கடந்த அக்டோபர் மாதம் அமைத்தது தமிழக அரசு. இந்தக் குழுவின் துணைத் தலைவராக எம்.பி கலாநிதி வீராசாமி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டித்தர அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இப்படி இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அரசு உத்வேகத்துடன் செயல்பட தொடக்கத்திலேயே அரசுக்கு ஆலோசனை அளித்தவர் கனிமொழிதானாம். ஆனால், கடைசியில் அவர் பெயரைக் குழுவிலேயே சேர்க்கவில்லை!” என்று கிளம்பத் தயாரான கழுகார்,

“ஜனவரி 12 அன்று சென்னை இணையவழி தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த அயலகத் தமிழர் நாள் விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இணைய வழியில் கலந்துகொண்டார்கள். விழாவில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் உரையாற்ற ஆரம்பித்தபோது இணையம் கட்டாகி, அவர் சரியாக உரையாட முடியவில்லை. தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கே தகவல் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டதைப் பார்த்து அயலகத் தமிழர்கள் என்ன நினைத்திருப்பார்கள்” என்று சிரித்துக்கொண்டே சிறகுகளை விரித்தார்!

மிஸ்டர் கழுகு: பொங்கல் தொகுப்பு குளறுபடி... தவறு செய்தவர்களின் பட்டியல் கேட்ட முதல்வர்!

மகனுக்கு மாவட்டப் பொறுப்பா?

துரைமுருகன் தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்தாலும், அவரின் மகன் கதிர் ஆனந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். இந்த நிலையில், கதிர் ஆனந்துக்கு ஏதாவது ஓர் அணியில் மாநிலப் பொறுப்பு வழங்கலாம் என்று கட்சித் தலைமையில் பேச்சு எழுந்தபோது, “வேறு பொறுப்பு வேண்டாம்... கொடுத்தால், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுங்கள்’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டாராம் துரைமுருகன்!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கொங்கு மண்டல தி.மு.க புள்ளிகள், டெண்டர் கேட்டு சமீபத்தில் இனிஷியல் அமைச்சரைச் சந்தித்திருக்கின்றனர். அவரோ, “உங்களுக்கு டெண்டர் கொடுத்தால், அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்துவார்கள். அவர்களுக்கு டெண்டர் கொடுத்தால்தான் எந்தப் பிரச்னையும் வராது” என்று சேம் சைடு கோல் போட்டது சொந்தக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

* தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் முதல்வர் படம் தொடங்கி அமைச்சர்கள் படம் வரை அனைத்தையும் வரைகலை செய்துதருவது ஆளும் தரப்புக்கு நெருக்கமான அந்த ராஜ நிறுவனம்தான். அந்த நிறுவனத்திடம் மட்டுமே விளம்பர டிசைன் உள்ளிட்ட பணிகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமையிலிருந்து உத்தரவு வந்திருக்கிறதாம்.