Published:Updated:

மிஸ்டர் கழுகு: கட்டி உருளும் கிச்சன் கேபினெட் பிரமுகர்கள்! - தலைவலியில் ஸ்டாலின்...

பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர்களுடன் சமீபத்தில் சந்திப்பை முடித்திருக்கிறாராம்

பிரீமியம் ஸ்டோரி

முழுநீளக் கரும்பு, வெல்ல உருண்டை பையுடன் வந்தமர்ந்த கழுகார், “வாசகர்களுக்கும் உமக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இல்லம்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்” என்றார். கழுகாருக்கு சூடாக நெய்ப் பொங்கலை நீட்டியபடி “வாழ்த்தை, பொங்கல் முடிந்துதான் கூறுவீர்களோ?” என்றோம் கிண்டலாக. “இன்று காணும் பொங்கல் அல்லவா... அதிருக்கட்டும், மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் முடிவுக்கு வராது போலிருக்கிறது!” என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“தமிழக அரசின் செய்தித்துறை சார்பாக, எடப்பாடி அரசின் துறை வாரியான சாதனைகளை ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்கிற தலைப்பில் விளம்பரமாக வெளியிடுகிறார்கள். அத்துடன்,

அ.தி.மு.க ஐடி விங் தரப்பிலும் தனி வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. இந்த விளம்பரங்களில் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று புலம்பிவந்த பன்னீர், நிதித்துறையில் தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு விளம்பரங்களைக் கொடுத்துவருகிறார். கூடவே, ‘பத்தாண்டுகளில் நூறாண்டு சாதனைகள்’ என்னும் வீடியோ விளம்பரமும் தூள்பறக்கிறது. இது எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கியிருக்கிறது.”

“ஏன்... மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?”

“இதே கேள்வியைத்தான் பன்னீர் தரப்பும் கேட்கிறது. அதற்கு பதிலடியாக, ‘எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்பதால் அவருக்கு விளம்பரம் கொடுக்கிறோம். பன்னீர் தனியாக விளம்பரம் கொடுத்தால் கட்சிக்கு நல்லதா... சசிகலா குடும்பத்தினருடன் பழைய பாசத்தை பன்னீர் புதுப்பித்துவருகிறார். அவரது நோக்கமே, சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதுதான்’ என்கிறது எடப்பாடி தரப்பு. இதனால், இப்போதே பன்னீருக்கு செக் வைக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டது எடப்பாடி முகாம்.”

“காய்நகர்த்தல்கள் ஆரம்பமாகியிருக்குமே!”

“சரியாகச் சொன்னீர்... பன்னீருக்கு தண்ணி காட்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டாராம் எடப்பாடி. ஏற்கெனவே பன்னீருக்கு வேண்டப்பட்ட பில்டர் ஒருவர் மூலம் தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பன்னீரின் திட்டத்தைத் தகர்க்க, தற்போது அந்த பில்டரைக் குறிவைத்திருக்கிறது எடப்பாடி முகாம். தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் அந்த பில்டர் நடத்திய சில அத்துமீறல்களை விலாவாரியாகக் கையிலெடுத்திருக்கிறது எடப்பாடியின் தனி டீம் ஒன்று. தவிர, கடந்த சில மாதங்களாக பில்டர் தரப்புக்கும், தலைமைச் செயலகத்தின் உயரதிகாரி ஒருவருக்கும் இடையே கடும் முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். பில்டர் தொடர்பான ஆவணங்களை அந்த உயரதிகாரி தரப்பிலிருந்தும் மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். விரைவில், அந்த பில்டரை ஆட்டம் காணவைக்கும் திட்டமும் எடப்பாடி வசம் இருக்கிறது என்றார்கள் விவரமறிந்தவர்கள்.”

“சரிதான்... ‘சசிகலா தவ வாழ்க்கை வாழ்ந்தவர்’ என்று கோகுல இந்திரா சொல்லியிருக்கிறாரே... இது சரண்டரா, தூதா?”

“பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர்களுடன் சமீபத்தில் சந்திப்பை முடித்திருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். அப்போது, ‘சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவருக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம். வரும் தேர்தலில் நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டதாம். இந்தத் தகவல் இப்போது அ.தி.மு.க வட்டாரங்களில் தீயாகப் பரவிவருகிறது. சசிகலாவின் தீவிர விசுவாசி கோகுல இந்திரா. இதன் பின்னணியில்தான் அவர் ‘தவ வாழ்க்கை’ புராணம் பாடினார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!”

“ஓஹோ...”

மிஸ்டர் கழுகு: கட்டி உருளும் கிச்சன் கேபினெட் பிரமுகர்கள்! - தலைவலியில் ஸ்டாலின்...

“ஜனவரி 9-ம் தேதி, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், `தாய்க்குலத்தை உதயநிதி இழிவுபடுத்திப் பேசினார் என்று சொன்னாலே, அது சசிகலாவைத்தான் குறிக்கும். ஆகவே, முதல்வரை இழிவுபடுத்திப் பேசிய உதயநிதிக்குக் கண்டனம் என்கிறரீதியில் மட்டும் கூட்டம் நடத்தலாம்’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த முடிவில் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதால், ‘கண்டனக் கூட்டத்தில் என்னென்ன வாசகங்களை முழங்க வேண்டும்’ என்பதையும் தலைமைக் கழகத்திலிருந்தே மாவட்டக் கழகங்களுக்கு தயார் செய்து அனுப்பியிருக்கிறார்கள். அந்த வாசகங்களில் எங்குமே சசிகலா பற்றிய குறிப்பே இல்லை.”

“தி.மு.க கிச்சன் கேபினெட்டில் சத்தம் அதிகமாகக் கேட்கிறதாமே!”

“ஓ... உங்களுக்கும் கேட்டுவிட்டதா... உண்மை

தான். இரண்டு குடும்பப் பிரமுகர்கள் இடையே பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. இருவர் தரப்பிலும் சீட் ‘கோட்டா’ விஷயத்தில் கட்டி உருளாத குறையாக அடித்துக் கொள்கிறார்களாம். சீனியர் சிலர் அட்வைஸ் செய்ததைக்கூட கண்டு

கொள்ளாமல், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று கட்சித் தலைமையை நெருக்குகிறார்களாம். தலைவலி தாங்காமல் தவிக்கிறார் ஸ்டாலின்!”

“காங்கிரஸிலும் ஏதோ கலாட்டாவாமே!”

“கலாட்டா இல்லாத காங்கிரஸ் என்றால்தானே ஆச்சர்யப்பட வேண்டும்... பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குப் போட்டியாக அவர்கள் ஏர் கலப்பைப் பேரணியைத் தொடங்கினார்கள். இதுவரை 170 சட்டமன்றத் தொகுதிகளில் பேரணியை முடித்ததாக டெல்லிக்குக் கணக்கு காட்டியிருக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். ஆனால், ‘வேல் யாத்திரைக்குக் கிடைத்த பப்ளிசிட்டிகூட ஏர் கலப்பை யாத்திரைக்குக் கிடைக்கவில்லையே...’ என்று சந்தேகப்பட்டு, ராகுல் தரப்பில் ரகசிய விசாரணை நடந்ததாம். இதில் பா.ஜ.க மட்டுமன்றி, கூட்டணிக் கட்சியான தி.மு.க-வும் சில இருட்டடிப்பு வேலைகளைச் செய்ததை அறிந்து கொதித்துப்போனாராம் ராகுல். அதனால்தான், ‘தமிழகத்தில் இனி நானே களமிறங்குகிறேன்’ என்று சொல்லி, ஜனவரி 14-ம் தேதியன்று மதுரை ஜல்லிக்கட்டு பயணத்தை உறுதி செய்தாராம் ராகுல்!’’

மிஸ்டர் கழுகு: கட்டி உருளும் கிச்சன் கேபினெட் பிரமுகர்கள்! - தலைவலியில் ஸ்டாலின்...

“ராகுல் விசிட்டில் விசேஷம் ஏதேனும்?”

“கட்சியினரை உற்சாகப்படுத்தவே வந்தார் என்கிறார்கள். கட்சியினரை உற்சாகப்படுத்தினாரோ இல்லையோ மனிதர் படு உற்சாகமாகிவிட்டார். ஜல்லிக்கட்டு மாடுகள் ஒவ்வொன்றாக சீறிவந்தபோது ராகுல் எழுந்து நின்று ஆர்வமாக பார்த்தார். ராகுல் எழுந்து நின்றதைப் பார்த்த மாடுபிடி வீரர்கள், தாங்களுக்கும் ஆர்வமாக தரையிலிருந்து மேடைக்கு எழும்பி குதித்தனர். இதைத் தடுத்த செக்யூரிட்டி ஆட்களிடம் தடுக்க வேண்டாம் என்று கூறிய ராகுல், உற்சாகமாக அவர்களைப் பார்த்து கையசைத்தார்...”

“இதைத் தாண்டி வேறு உள்விஷயங்கள் எதுவும் இல்லையா?”

“அது இல்லாமலா... உதயநிதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஏதாவது ஓர் இடத்தில் பார்க்க வேண்டும் என்பது முன்பே போடப்பட்ட திட்டமாம். ராகுல் வருகையை அறிந்தபிறகு, ‘நீங்கள் இருவரும் சந்தித்தால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக வரும் தேவையில்லாத வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். மேலும், தமிழ் மக்களின் மனதுக்கு நெருக்கமான கலாசார திருவிழாவான ஜல்லிக்கட்டில் ராகுலை சந்திப்பது, உங்கள் மீதான இமேஜையும் உயர்த்தும்’ என்று உதயநிதியின் தனி டீம் வழங்கிய அட்வைஸை அடுத்தே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது” என்ற கழுகாருக்குச் சூடாக ஏலக்காய் டீயை நீட்டினோம்.

“டீயை ரசித்துப் பருகிய கழுகார், “ஒரு ஃபாலோ அப் செய்தி சொல்கிறேன். அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் விரைவில் மத்திய அரசுப் பணிக்குச் செல்வதாக சொல்லியிருந்தேன் அல்லவா... அதில் ஒரு அப்டேட். பிரபாகருக்கு மத்திய அரசின் ஆதார் பணிகளை கவனிக்கும் பிரிவில் ஜாயின் செய்யச் சொல்லி ஆர்டர் வந்துவிட்டதாம். ஆனால், முதல்வர் எடப்பாடி, ‘பிரபாகரை நான் சொல்லும்வரை மத்திய அரசுப் பணிக்குச் செல்ல விடுவிக்க வேண்டாம். அவரது பணி நமக்குத் தேவை’ என்று சொல்லிவிட்டாராம்!”

“ம்ம்... தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடியப் போகிறது. புதிதாக யாரை நியமிக்கப் போகிறார்களாம்?”

“ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மாவின் பெயர் அடிபடுகிறது. தொடக்கத்தில் ஆளும்தரப்புக்கு நெருக்கமாக இருந்த ஹன்ஸ் ராஜ் வர்மா, சமீப காலமாக இணக்கமாக இல்லையாம். குறிப்பாக, ஊரகத் தொழில் துறையில் இரண்டு பெரிய ஒப்பந்தங்களைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தரச் சொல்லி ஆளும்தரப்பு அழுத்தம் கொடுத்ததாம். அதை மறுத்ததோடு மட்டுமல்லாமல், ஃபைலையும் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால், இதையெல்லாம் தாண்டி பழைய உறவைப் புதுப்பித்து, வளைந்துகொடுக்க ரெடி என்று ஹன்ஸ் ராஜ் தரப்பிலிருந்தே சிக்னல் கிடைக்கவே... அவரது பெயரைப் பரிசீலிக்கிறதாம் முதல்வர் அலுவலகம்.”

“சரிதான்...”

“சண்முகம் பணி ஓய்வுபெறும் நேரத்தில், சில சிக்கல்களும் அவருக்கு எழலாம் என்கிறார்கள். தமிழக அரசின் சைக்கிள் வழங்கும் திட்டத்தில், சைக்கிள் தொழிலுக்குச் சம்பந்தமில்லாத ஒருவரைவைத்து சைக்கிள் டெண்டரை வளைத்ததாகச் சர்ச்சை எழுந்தது அல்லவா... அதில் அவரைச் சிக்கவைக்கப் பார்க்கிறதாம் அவருக்கு எதிரான தரப்பு” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு