அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: சமூக பதற்றத்தை உருவாக்க பார்க்கிறார்... சீண்டல் ஆளுநர்... சீறிய முதல்வர்!

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியோ... ஆனால், முதல்வரான பிறகு பொதுவாகவே அவர் யாரையும் பொதுவெளியில் வசைபாடியதில்லை.

“ஓஹோ... எல்லோருக்குமே ‘கிஃப்ட்’ பார்சலா... ஒரே குதூகலம்தான்” - யாரிடமோ போனில் பேசியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். “யார் குதூகலமாக இருக்கிறார்கள்?” என நாம் கேட்க, “வேறு யார்... தி.மு.க நிர்வாகிகள்தான். பொங்கலையொட்டி மாவட்டச் செயலாளர் தொடங்கி, ஒன்றிய துணைச் செயலாளர் வரை ‘கிஃப்ட்’ பார்சலாகியிருக்கிறது” என்று செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு 5 லட்டுகள், ஒன்றியச் செயலாளர்களுக்கு 3 லட்டுகள், எம்.எல்.ஏ-க்களுக்கு மூன்றரை லட்டு என ‘கிஃப்ட்’ பார்சல் கொடுத்திருக்கிறாராம் சர்ச்சைக்குப் பெயர்போன கொங்கு அமைச்சர் ஒருவர். ஏற்கெனவே தீபாவளிக்கு ஸ்வீட் கொடுத்து தித்திக்கவைத்தவர், இந்த முறை அவைத்தலைவர், ஒன்றிய துணைச் செயலாளர் வரையில் அவரவர் பதவிக்கு ஏற்ப ‘இனிப்பு’ கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘கம்பெனி’ ஆட்கள்தான் நிர்வாகிகளை இல்லம் தேடிச் சென்று இந்த ‘இனிப்பு’களைக் கொடுத்திருக்கிறார்கள். கிஃப்ட் வாங்கிய உடன்பிறப்புகள் பலரும், ‘எங்கிருந்தோ வந்தார்... நம் மனங்களை வென்றார்’ என அமைச்சரின் புகழ்பாடுகிறார்கள்.”

“எல்லாம் ஒருவழிப் பாதையாகவே இருக்கும் கட்சியில், இப்படியெல்லாம் அதிசயம் நடந்தால் மகிழ மாட்டார்களா என்ன?”

மிஸ்டர் கழுகு: சமூக பதற்றத்தை உருவாக்க பார்க்கிறார்... சீண்டல் ஆளுநர்... சீறிய முதல்வர்!

“வாங்கியவர்களுக்குச் சந்தோஷம்தான். ஆனால், சீனியர் அமைச்சர்கள்தான் பொருமித் தள்ளுகிறார்கள். ‘இதையெல்லாம் மாவட்டச் செயலாளர்கிட்ட கொடுத்து ‘டீல்’ பண்ணச் சொல்லியிருக்கணும். இப்ப பாருங்க, என்னமோ தன் கைக்காசை எடுத்து அந்த அமைச்சர் கொடுத்த மாதிரி பெயராகிடுச்சு. ஏற்கெனவே, கொங்கு ஏரியாவுல இருக்குற நிர்வாகிகள், தங்களோட அலுவலகத்துல அந்தாளு படத்தைப் பெருசா மாட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப, தமிழ்நாடு முழுக்க கட்சி நிர்வாகிகளை அந்த அமைச்சர்தான் சந்தோஷமா வெச்சுருக்காருனு பேசுறாங்க. ஆள் குணம் தெரியாம, அவரை வளர்த்துவிடுது கட்சித் தலைமை... என்னவாகப்போகுதோ?!’ எனக் கொந்தளிக்கிறார்கள் சீனியர்கள். இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அந்த அமைச்சர், துறையிலிருந்து தனக்கு வரவேண்டிய ‘கட்டிங்’ விகிதத்தை ஏற்றியிருக்கிறாராம்.”

“கட்சியினருக்குக் கடிவாளம் போட்டுவிட்டு, முதல்வரே ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கியிருக்கிறாரே...”

“ஆமாம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியோ... ஆனால், முதல்வரான பிறகு பொதுவாகவே அவர் யாரையும் பொதுவெளியில் வசைபாடியதில்லை. அப்படிப்பட்டவரையே ஒருமையில் பேசுமளவுக்கு டென்ஷன் ஆக்கியிருக்கின்றன ஆளுநரின் செயல்பாடுகள். ‘ஆளுநர் உரையை முடித்தவுடன், ‘மெட்ரோ ரயிலில்தான் செல்வேன்’ என அடம்பிடித்த ஆளுநர், அன்றைக்கு ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தப் பார்த்தார். போலீஸ் தலையிட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்த பிறகுதான் காரில் ராஜ் பவனுக்குப் பயணமானார். திராவிடம், தமிழ்நாடு, திருவள்ளுவர், சனாதனம், மொழி என பா.ஜ.க-வுக்கு அரசியல்ரீதியாக சிக்கல் தரும் விவகாரத்தையெல்லாம், வேண்டுமென்றே ஆளுநர் பேசுகிறார். திட்டமிட்டே ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார். ஆளும் தரப்புக்கு எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்கலாம் என்று யோசனை சொல்ல ஒரு கூட்டத்தையே வைத்திருக்கிறார். இப்படிப்பட்டவரை முதல்வர் எப்படி பொறுமையாக ‘டீல்’ செய்வார்?’ எனக் கொதிக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். பொறுத்தது போதும் என ஆளுநருக்கு எதிரான அரசியலை தி.மு.க தீவிரமாகக் கையில் எடுக்கப் போவதன் வெளிப்பாடுதான் முதல்வரின் இந்தச் சீற்றம் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: சமூக பதற்றத்தை உருவாக்க பார்க்கிறார்... சீண்டல் ஆளுநர்... சீறிய முதல்வர்!

“ஆளுநரும் டெல்லியில் தி.மு.க அரசுக்கு எதிராகப் புகாரளித்திருக்கிறாராமே?”

“சட்டமன்றத்தில் நடந்த விஷயங்கள் தொடர்பாக மட்டுமே மூன்று பக்கங்களுக்கு ஓர் அறிக்கையை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவிடம் அளித்திருக்கிறாராம் ஆளுநர். அத்துடன், சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள்கள் சிக்குவது, சில சீனியர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் ‘ரிப்போர்ட்’ கொடுத்திருக்கிறாராம். பிரதமர் அலுவலகம், மத்திய உளவுத்துறை, வருமானவரி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளையும் சந்தித்திருக்கும் ஆளுநர், சில மத்திய அமைச்சர்களையும் பார்த்தாராம். டெல்லி ஆக்‌ஷன் எடுக்கிறதோ, இல்லையோ... தொடர்ந்து சர்ச்சைக் கருத்து ராக்கெட்டுகளைப் பற்றவைப்பது என ஆளுநரும் தீர்மானித்துவிட்டாராம்.”

“ஆமாம்... `அந்த’ கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதற்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு?”

“காரணத்தைக் கேட்டால் சிரிப்பீர்கள். ‘முதல்வர், கவர்னருக்கு இருப்பதுபோல மாநிலத் தலைவருக்கும் பாதுகாப்பு இருந்தால் பந்தாவாக இருக்கும். தமிழ்நாடு அரசியலில் பந்தா காட்டினால்தான் முக்கியத்துவம் பெற முடியும். உட்கட்சிப் பிரச்னையில் டெல்லியும் அவருக்கு ஆதரவாக இருப்பதைக் கட்சி சீனியர்கள் புரிந்துகொள்வார்கள்’ என பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷிடம் பேசியிருக்கிறது அந்த மாஜி காக்கி தரப்பு. அதன் பிறகுதான், அவருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவானதாம். ‘ஏற்கெனவே அவர் இஷ்டப்பட்ட நேரத்தில்தான், நிர்வாகிகள் அவரைப் பார்க்க முடியும். இஸட் பாதுகாப்பும் கொடுத்துவிட்டால் கட்சிக்காரர்கள் இனி அவரைச் சந்திக்கவே முடியாது’ என்கிறார்கள் சீனியர்கள்.”

“அவர் அனுப்பிய பொங்கல் வாழ்த்தில்கூட ஏதோ சர்ச்சையாமே?”

“பெயரைச் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். விட மாட்டீர்போல... கட்சி நிர்வாகிகளுக்குத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அனுப்பிய பொங்கல் வாழ்த்து மடலில், ‘பாரதிய ஜனதா கட்சி, தி.நகர், சென்னை’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் சர்ச்சைக்குக் காரணம். ‘ஆளுநராவது தமிழகம் எனப் பேசுகிறார். அண்ணாமலையிடமிருந்து அந்த வார்த்தைகூட வரவில்லை. அவர் தி.நகர் பா.ஜ.க-வுக்குத் தலைவரா அல்லது தமிழக பா.ஜ.க-வுக்குத் தலைவரா...’ எனக் கட்சி நிர்வாகிகளே கொந்தளிக்கிறார்கள்” என்ற கழுகார் பாகில் ஊறி வெடிக்கக் காத்திருந்த குளோப் ஜாமூனை அப்படியே விழுங்கிவிட்டு அ.தி.மு.க செய்திக்குத் தாவினார்.

“ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில், பன்னீர் தரப்பிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினமும், வழக்கறிஞர் பிரகாஷ்குமாரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ என அடைமொழியிட்டு தேர்தல் ஆணையம் அழைப்பிதழ் கடிதம் அனுப்பியிருந்ததால், எடப்பாடி தரப்பிலிருந்து யாரும் செல்லவில்லை. தனக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கவில்லையென்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே 40 தொகுதிகளிலும் களமிறங்கத் தயாராகிவிட்டாராம் எடப்பாடி” என்று கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்...

மிஸ்டர் கழுகு: சமூக பதற்றத்தை உருவாக்க பார்க்கிறார்... சீண்டல் ஆளுநர்... சீறிய முதல்வர்!

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்காக மதுரைக்குச் சென்றிருந்த உதயநிதி, தன் பெரியப்பா மு.க.அழகிரியை அவர் வீட்டில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். ‘மதுரைக்குப் போயிட்டு பெரியப்பாவப் பார்க்காம இருக்கக் கூடாது’ என முதல்வர் அறிவுறுத்தியதால்தான், மதுரையில் காலெடுத்து வைத்தவுடன் நேராக அழகிரியைச் சந்தித்தாராம் உதயநிதி. அவரை வாசல்வரை வந்து வரவேற்றிருக்கிறது அழகிரி குடும்பம். ‘என் தம்பி மகன், எனக்கும் மகன்தான். அவர் அமைச்சரானதில் எனக்கும் சந்தோஷம்’ என்றிருக்கிறார் அழகிரி. ‘ஜல்லிக்கட்டுக்குப் போவதற்கு முன்னதாகவே, மதுரையின் பெரிய காளையை அடக்கிவிட்டார் உதயநிதி’ எனப் பூரிக்கிறார்கள் உடன்பிறப்புகள்” என்றபடி ‘ஜூட்’ விட்டார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சென்னை புறநகர்ப் பகுதியில், பிரபலமான ஒரு கல்லூரி அறக்கட்டளைக்குச் சொந்தமாக 52 ஏக்கர் இடமிருக்கிறது. இந்த இடத்தை அபகரிக்க, கடந்த ஆட்சியில் வடமாவட்ட அமைச்சர் தரப்பு முயன்று, விவகாரம் அடிதடி வரை போனது. தற்போது அதே இடத்தை லீஸுக்கு எடுக்கக் காய்நகர்த்துகிறாராம் இன்றைய வெண்மை அமைச்சர் ஒருவர்.

* விரைவில் ஓய்வு பெறவிருக்கும் டி.ஜி.பி அலுவலக ஐ.பி.எஸ்-ஸுக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக ஐ.பி.எஸ்-ஸுக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்திருக்கிறது. சென்னையில் பணியாற்றும் இரண்டு துணை கமிஷனர்களை இடம் மாற்ற, கோப்புகளை நகர்த்தியிருக்கிறார் டி.ஜி.பி அலுவலக அதிகாரி. ``என் ஆட்கள்மீதே கைவைப்பதா?” என வெகுண்டெழுந்த கமிஷனர் அலுவலக அதிகாரி, ஆட்சி மேலிடம் வரை சென்று முட்டுக்கட்டை போட்டுவிட்டதே முட்டலுக்கான காரணம்.

* புருவங்களுக்கு ‘மை’ பூசும் அமைச்சரின் உதவியாளர் செய்யும் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை என்கிறார்கள். ‘கோட்டை’ நகரின் காவல் நிலையத்துக்கு வரும் பெரிய வழக்குகளில், கட்டப்பஞ்சாயத்து செய்தே வளம் கொழிக்கிறாராம் உதவியாளர்.

* மறைந்த ம.நடராஜனின் சொந்த ஊரான விளாரில் புதிதாக வீடு கட்டுகிறாராம் சசிகலா. இதற்காக, நடராஜனின் தம்பி பழனிவேல் புதிதாக இடம் வாங்கியிருப்பதாகத் தகவல்.