Published:Updated:

மிஸ்டர் கழுகு: 20 நாள்கள் இடைவெளியில் தேர்தல்! - ஆளும் தரப்பு அதிரடி முடிவு!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

அ.தி.மு.க தலைமை உள்ளாட்சித் தேர்தல் பற்றி அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்று அந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.

மிஸ்டர் கழுகு: 20 நாள்கள் இடைவெளியில் தேர்தல்! - ஆளும் தரப்பு அதிரடி முடிவு!

அ.தி.மு.க தலைமை உள்ளாட்சித் தேர்தல் பற்றி அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்று அந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

“பழைய செய்தியாக இருக்கிறது... அதில் வேறு ஏதேனும் புதிய தகவல் இருந்தால் அனுப்பவும். இல்லையென்றால் வேண்டாம்” என்று அலைபேசியில் நிருபரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “நீர் செய்திகளை நிராகரிப்பது இருக்கட்டும்... குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் சேர்க்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். விவகாரத்தை கவனித்தீர்தானே!” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

‘‘வரும் ஜனவரி 26-ம் தேதி நடக்கவிருக்கும் குடியரசு தின விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார், திருப்பூர் குமரன் உள்ளிட்டோரின் திருவுருவங்களுடன் அலங்கார ஊர்திக்கான மாதிரியை மத்திய அரசின் குழுவுக்கு தமிழக அரசு அனுப்பியிருந்தது. இதைத்தான் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. முன்னதாக வேலூர் கோட்டையை மையமாகவைத்து ஒரு மாடல் அனுப்பியதையும் நிராகரித்திருக்கிறார்கள். அதன் பிறகு, தமிழக கலாசார சின்னங்களை வைத்து அனுப்ப, அதுவும் நிராகரிக்கப்பட்டது. மூன்றாவதாக அனுப்பிய இந்த மாடலையும் நிராகரித்திருக்கிறார்கள். தமிழக அதிகாரிகளிடம் பேசிய மத்திய அரசின் குழுவினர் ‘திருப்பூர் குமரன் யார்?’ என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். முதல்வர் இந்த விஷயத்தில் ஏகத்துக்கும் கொந்தளிப்பில் இருக்கிறார். ஆனாலும், ‘எடுத்த எடுப்பிலேயே பிரச்னை செய்ய வேண்டாம்; முதலில் கடிதம் எழுதிப் பார்ப்போம். அப்போதும் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லையென்றால், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம்’ என்று முதல்வரிடம் சீனியர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசுத் தரப்போ, ‘25 மாநிலங்களின் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க முடியும்’ என்று சொன்னாலும், மாநில உரிமைகளை வலியுறுத்துபவர்களோ, ‘தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர அனைத்து மாநிலங்களும் நிராகரிக்கப் பட்டுள்ளன. கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால்தான் அந்த மாநிலத்தை மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். மொத்தமாக தென் மாநிலங்களை அவமதிக்கும் செயல் இது’ என்று பொங்குகிறார்கள்!”

‘‘இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை வைத்து நடந்த களேபரம் தெரியுமா?’’

‘‘கடந்த சில நாள்களாகவே ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குரூப்களில் ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் நாம் வகுப்புகளை எடுத்து, அது சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்தால், பள்ளி எதற்கு, ஆசிரியர், சம்பளமெல்லாம் எதற்கு என்ற கேள்வி அரசுக்கு ஏற்பட்டுவிடும். அதனால், யாரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம்’ என்றொரு பிரசாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தகவல் அரசுக்கு எட்டியதும், அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுரை சென்றுள்ளது... ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்கள் மட்டுமே பணி செய்வார்கள். அவர்களை ஒருங்கிணைத்து மையங்கள் தொடங்கும் பணியை மட்டும் ஆசிரியர்கள் செய்தால் போதும்; இந்தத் திட்டத்தால் ஆசிரியர் பணியிடங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டதாம்.’’

“ஓஹோ... தேர்தல் மேகங்கள் சூழ்வதை கவனித்தீரா?’’

‘‘ஆமாம்... ஐந்து மாநிலங்கள் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க வாய்ப்பில்லை என்பதால், தங்களுக்குச் சாதகமாக தேர்தல் தேதியை அறிவிக்க முடிவு செய்துள்ளது ஆளும் தரப்பு. ஜனவரி 22-ம் தேதி வாக்கில் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சிகளுக்குச் சுதாரிக்கும் வாய்ப்பையே கொடுக்காமல் பிப்ரவரி 15-க்குள் தேர்தலை முடித்துவிடும் திட்டம் ஒன்று ஆளும் தரப்பில் ஓடுகிறது. ஜனவரி 19 அன்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைத் தமிழகத் தேர்தல் ஆணையம் நடத்தவிருக்கும் நிலையில், அதற்கு முதல் நாள் முதல்வர் தலைமையில் மூத்த அதிகாரிகள், முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடக்கவிருக்கிறது. இதை முன்வைத்தே சூட்டோடு சூடாக ஜனவரி 17 அன்று இரவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022-க்கான ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆக மொத்தத்தில் சுமார் 20 நாள்கள் இடைவெளியில் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆளும் தரப்பு!’’

‘‘எதிர்க்கட்சிகள் இதையெல்லாம் கவனிக்காமலா இருக்கும்?”

‘‘நன்றாகக் கேட்டீர்கள்... ஆனால், அ.தி.மு.க தலைமை உள்ளாட்சித் தேர்தல் பற்றி அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்று அந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள். ‘கட்சி தன் கையைவிட்டு சென்றுவிடக் கூடாது என்கிற எண்ணத்திலேயே குறியாக இருக்கிறாராம் எடப்பாடி. தேர்தல் அறிவித்தால், யார் செலவு செய்வார்கள் என்பதும் தெரியவில்லை. இன்னும் மாவட்டவாரியாக நேர்காணலையும் நிறைவு செய்யவில்லை... இப்படிப் பல்முனை சிக்கல்களில் அ.தி.முக இருக்கும்போதே, குறுகிய காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடித்தால், அ.தி.மு.க நிலை அதோகதிதான் என்பதே அந்தக் கட்சி நிர்வாகிகளின் கவலையாக இருக்கிறது” என்ற கழுகாரிடம், “பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டாலும், உமக்கான சிறப்பு ஏற்பாடு இது...” என்றபடி சூடாக சர்க்கரைப் பொங்கலும் வடையும் கொடுத்தோம்...

மிஸ்டர் கழுகு: 20 நாள்கள் இடைவெளியில் தேர்தல்! - ஆளும் தரப்பு அதிரடி முடிவு!

“ஆஹா அற்புதம்...” என்று சுவைத்தவர், “ஸ்டாலின் ஒரு முதல்வராகத் தனது தலைப்பொங்கலைக் கொண்டாடிவிட்டார். பொங்கல் அன்று அவரது உற்சாகம் கரைபுரண்டு ஓடியதாம். தன்னிடம் வாழ்த்துப் பெற வந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், வீட்டில் பணிபுரிபவர்களுக்கும் கருணாநிதி பாணியில் ஐம்பது ரூபாய் நோட்டை பொங்கல் பரிசாகக் கொடுத்திருக்கிறார். ஜனவரி 14 அன்று மாலை குடும்பத்தினருடன் புறப்பட்டு, திருவள்ளூரிலுள்ள பண்ணை வீட்டுக்குச் சென்று பேரக் குழந்தைகளுடன் பொங்கலைக் கொண்டாடியவர், மாட்டுவண்டியில் குழந்தைகளுடன் சவாரி செய்தும், விளையாடியும் பொழுதைக் கழித்துவிட்டு மறுநாள் மாலை சென்னை திரும்பினார். அதேசமயம், பொங்கலுக்குத் தலைவரின் வாழ்த்துச் செய்தி வரும் என்று தி.மு.க நிர்வாகிகள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இம்முறை ஏனோ ஸ்டாலின் தரப்பிலிருந்து வாழ்த்துச் செய்தி யாருக்கும் செல்லவில்லையாம். இதனால் வருத்தத்தில் இருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.’’

‘‘ஆளுங்கட்சிக்கு எதிரான வீடியோ விவகாரம் ஒன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறதே... பார்த்தீரா?”

‘‘ம்ம்... பார்த்தேன். ‘அரசுப் பணியிட மாறுதல் வேண்டுமென்றால், அமைச்சர் அலுவலகத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். முன்பணமாக மூன்று லட்சம் ரூபாயும், மீதம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு செக்கும் அளிக்க வேண்டும்’ என்று தேனி தி.மு.க நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் பேசியிருக்கும் வீடியோதான் கட்சியில் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதை மறுக்கும் சூர்யா பாலமுருகனோ, ‘நான் தேனி நகராட்சித் தலைவராகிவிடுவேன் என்ற பொறாமையில்தான் அ.தி.மு.க-வினர் தூண்டுதலில் தவறான வீடியோக்களைப் பரப்புகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க-வினரோ, ‘அவர் இதேபோல பலரிடமும் அரசு வேலை வாங்கித்தருவதாகப் பணம் வாங்கியிருக்கிறார். அவருக்கு தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வனும் ஆதரவாக இருக்கிறார்’ என்று கொளுத்திப்போடுகிறார்கள் என்ற கழுகார்,

‘‘ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி அவரது சொந்த ஊரான விருதுநகர் அருகிலுள்ள திருத்தங்கலில் தங்கியிருக்கிறார். எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவரிடமும் அவர் பேசவே இல்லையாம். தனக்கு ஆதரவாகப் பெரிய அளவில் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்பதே அவரது கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். இந்த நிலையில்தான், ஜனவரி 17 அன்று பாலாஜியை முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள். ‘நீங்கள் தலைமறைவானது தவறு. அதனால்தான், போராட்டம் எதுவும் நடத்த முடியவில்லை. இனி கவலை வேண்டாம்... கட்சி உங்களுக்குத் துணையாக இருக்கும்’ என்று எடப்பாடி சார்பாக பாலாஜிக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

*வட மாவட்டத்தைச் சேர்ந்த அதிரடிப் பேச்சுக்குச் சொந்தக்காரரான அந்த முன்னாள் அமைச்சருக்குக் குறிவைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. சமீபத்தில் ஆளும் தரப்பை விமர்சித்து போனில் பேசிய ஆடியோவை ஆட்சி மேலிடத்துக்கு அனுப்ப... அதைக் கேட்டு கடுப்பான தலைமை ரெய்டுக்கு ஓகே சொல்லிவிட்டதாம்!

* தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த காமெடி நிகழ்ச்சி குறித்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு டெல்லியிருந்து அழுத்தம் வந்திருக்கிறது. ‘அந்த நிகழ்ச்சி தொடர்புடைய ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று சொல்லி, சாமாளித்திருக்கிறதாம் தொலைக்காட்சி நிர்வாகம்.

* ‘நிதியா... மொழியா?’ என்ற பிரச்னைக்கு அணில் அமைச்சர் நடத்திய கூட்டமே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அதைவைத்து அவர் நிதி பக்கம் சாய்ந்து, மொழியைக் கோபப்படுத்தியதாகத் தகவல் வெளியானதை அடுத்து அந்த அணில் அமைச்சர், மொழித் தரப்பில் பேசியிருக்கிறாராம். ‘‘எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. நான் எப்பவுமே உங்க பக்கம்தான் அக்கா!’ என்று தனது அமாவாசை அரசியலை தி.மு.க-விலும் தொடங்கிவிட்டாராம்!

மிஸ்டர் கழுகு: 20 நாள்கள் இடைவெளியில் தேர்தல்! - ஆளும் தரப்பு அதிரடி முடிவு!

டெல்லி நோட்ஸ்

*அமித் ஷாவிடம் நேரம் கேட்டு மூன்று வாரங்களுக்கும் மேலாகக் காத்திருந்த நிலையில், ஜனவரி 17 அன்று தமிழக எம்.பி-க்களைச் சந்தித்திருக்கிறார் அமித் ஷா. இந்தச் சந்திப்பின்போதும் அவரிடமிருந்து பெரிதாக பாசிட்டிவ் ரியாக்‌ஷன் எதுவும் வரவில்லை.

*2022, ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்வு விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், இதுவரை எந்தச் சர்ச்சையிலும் சிக்காத, தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் அடிபடுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism