Published:Updated:

மிஸ்டர் கழுகு: லண்டன் முதலீடு! - தோண்டியெடுக்கும் ‘ரா’

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் சிதம்பரத்தின் ஆட்கள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் தரப்பு கொந்தளிப்பில் இருக்கிறது

பிரீமியம் ஸ்டோரி

‘‘கூட்டணியை இறுதி செய்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்கள்...’’ - என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘முதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட்டைக் குறிப்பிடுகிறீரா?’’ என்றோம். ஆமோதித்தபடி, தான் கொண்டுவந்திருந்த சுண்டலை நமக்கு அளித்த கழுகார், ‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் கூட்டணியைத் தாண்டி வேறு சில விஷயங்களுக்கும் ஆதரவு கேட்டாராம் முதல்வர்’’ என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: லண்டன் முதலீடு! - தோண்டியெடுக்கும் ‘ரா’

‘‘இரண்டு நாள் பயணமாக ஜனவரி 18-ம் தேதி டெல்லி புறப்பட்ட எடப்பாடி, சீட் பங்கீடு குறித்து பா.ஜ.க தலைவர்களுடன் நேரடியாகப் பேசுகிறாராம். அன்றைய தினம் மாலை அமித் ஷாவைச் சந்தித்தவர் சசிகலா விடுதலை, அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு குறித்தும் பேசினார் என்கிறார்கள். இவை தவிர, கூட்டணியையும் தாண்டி, தேர்தல் நேரத்தில் அனுகூலமாகச் செய்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாம். ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழாவுக்கு மோடி, அமித் ஷாவை அழைத்து வந்து கூட்டணி பலத்தைக் காட்டவும் திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர்.”

“ம்ம்... எடப்பாடியின் தேர்தல் ஆலோசகர் சுனிலுக்கும், பன்னீர்செல்வத்தின் மகனுக்கும் ஏதோ மோதல் என்கிறார்களே?”

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

‘‘எடப்பாடிக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுப்பது, விளம்பரங்கள் செய்வது உள்ளிட்ட பணிகளை சுனில் செய்துவருகிறார். சமீபத்தில் சுனில் தரப்பைச் சந்தித்த பன்னீரின் இளைய மகன் ஜெயபிரதீப், ‘எங்க அப்பாதானே கட்சியோட ஒருங்கிணைப்பாளர்... அவரை புரொமோட் செய்ய மாட்டேங்கறீங்களே?’ என்று கொந்தளித்தாராம். அதற்கு சுனில் தரப்பு, ‘எடப்பாடிக்குத்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறோமே ஒழிய, உங்க அப்பாவை புரொமோட் செய்யறதுக்கு இல்லை’ என்று கூறிவிட்டதாம். அதன் பிறகுதான் ‘அய்வா மீடியா’ என்ற நிறுவனம் மூலமாக, பன்னீரை புரொமோட் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டனவாம். தேர்தல் நெருக்கத்தில், பன்னீரைப் பெரும் பிம்பமாகக் காட்டுவதற்கும் விளம்பரங்கள் தயாராகின்றனவாம்!’’

‘‘சரிதான்... தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவை வட்டமிடும் சர்ச்சையை கவனித்தீரா?’’

 சத்யா
சத்யா

‘‘ஆமாம். அவரது தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி விளையாட்டுத் திடலில், இறகுப் பந்து கூடாரம் அமைப்பதற்கு அடித்தளம் அமைக்க 23.75 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். இதே அரங்கத்துக்கு அடுத்தடுத்து ஐந்து முறை தனது எம்.எல்.ஏ நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார் சத்யா. இப்படி மொத்தமாக இந்த அரங்கத்துக்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் செலவு செய்யப்பட்டதாகக் கணக்கு காட்டி பணம் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கான ஆவணங்களையெல்லாம் ஆர்.டி.ஐ மூலம் பெற்றுள்ள பிரவீன்குமார் என்பவர், சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றுள்ள இந்தப் புகாரை, வழக்காகப் பதிந்து விசாரிக்குமாறு துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவிட்டிருப்பதால் விழிபிதுங்கி நிற்கிறாராம் சத்யா.’’

‘‘ம்ம்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் இடையிலான பனிப்போர் ஓயாதுபோலிருக்கிறதே!’’

‘‘இருக்காதா பின்னே... சமீபத்தில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் சிதம்பரத்தின் ஆட்கள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் தரப்பு கொந்தளிப்பில் இருக்கிறது. இது பற்றி டெல்லி மேலிடத்துக்குப் புகார் அளித்தும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம். அந்த வருத்தத்தில்தான், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டைப் பார்க்க ராகுல் காந்தி வந்தபோது, அவரை வரவேற்க சிதம்பரம் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை என்கிறார்கள். இதையெல்லாம் முன்வைத்து, ‘கே.எஸ்.அழகிரியை மாற்றியே தீர வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரம் விடாப்பிடியாக நிற்பதால், சத்தியமூர்த்தி பவன் தகிக்கிறது’’ என்ற கழுகாருக்கு, சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியைச் சுவைத்தபடி, ‘‘தி.மு.க தலைவர் ஒருவரின் ரகசியத்தை உடைக்கிறேன். பெயரைக் கேட்கக் கூடாது’’ என்றபடி தொடர்ந்தார்.

‘‘லண்டன், துபாய் நகரங்களில் 500-க்கும் அதிகமான சொகுசு கார்களை டாக்ஸிகளாக ஓடவிட்டிருக்கிறார் அந்தத் தலைவர். ஈரோட்டில் மஞ்சள் பிசினஸ், சிகரெட் ஃபேக்டரி தொழில்களோடு, வெளிநாட்டுத் தொழில்களையும் சேர்த்து கவனித்துவந்த இவரின் மகன், மக்கள் பிரதிநிதி ஆகிவிட்டதால் அடிக்கடி வெளிநாடு சென்று தொழிலை கவனிக்க முடியவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில வெளிநாட்டு ஏஜென்ட்கள், கால் டாக்ஸி வருமானத்தில் பலமாகக் கைவைத்துவிட்டார்களாம். கொதித்துப்போன அந்தத் தலைவர், லண்டனுக்கும் துபாய்க்கும் போன் செய்து வெடித்திருக்கிறார். அதற்கு, ‘உங்க பெயரைச் சொன்னவுடனே கைகட்டி நிற்க நாங்க ஒண்ணும் உடன்பிறப்புகள் இல்லை’ என்று முகத்தில் அடித்தாற்போல் பதில் சொன்னார்களாம் அந்த ஏஜென்ட்கள். பணம் பறிபோன துக்கத்திலிருக்கும் தந்தையும் மகனும் வெளியே சொல்லவும் முடியாமல், வாய்விட்டு அழவும் முடியாமல் புழுங்கித் தவிக்கிறார்களாம்.’’

‘‘யாரென்று புரிந்தது... சட்டமன்றத்துக்குள் எடப்பாடியைத் திட்டிவிட்டு, மறுநிமிடமே கோரிக்கை மனுவை நீட்டும் கில்லாடியாயிற்றே அவர்’’ என்றோம். கண்டுகொள்ளாதவராக அடுத்த செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘ஜனவரி 18-ம் தேதி புதுச்சேரியில் நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் டெல்லி வரை தகிப்பைக் கூட்டியிருக்கிறது. ‘புதுச்சேரியில் தன்னிச்சையாக முதல்வர் வேட்பாளரை தி.மு.க முன்னிறுத்தினால், தமிழகத்தில் தி.மு.க-வுடன் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று டெல்லியிடம் முறையிட்டிருக்கிறார்கள் கதர்கள். இதையெல்லாம் முன்கூட்டியே யூகித்ததால்தான், ‘காங்கிரஸ் கட்சியுடன் கமல் இணைந்து பணியாற்றினாலே வெற்றிபெற முடியும்’ என்று கார்த்தி சிதம்பரம் ட்வீட் பதிவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.’’

ஷியாம் திருமணம்...
ஷியாம் திருமணம்...

‘‘ஓஹோ... புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் திடீரெனத் திருமணம் செய்துகொண்டாரே?’’

‘‘அவரது கட்சி நிர்வாகிகளுக்கே இது அதிர்ச்சிதானாம். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழா முடிந்த பிறகு, தன் சொந்த ஊரிலுள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளை கிருஷ்ணசாமி சந்திப்பது வழக்கம். இந்த வருடப் பொங்கல் முடிந்த பிறகு சுமார் 200 நிர்வாகிகள் கிருஷ்ணசாமியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது, கிருஷ்ணசாமியின் பூர்வீக வீட்டுக்கு அருகில் ஷியாமின் திருமணத்துக்காகப் பந்தல் போடப்பட்டிருந்திருக்கிறது. நிர்வாகிகளிடம், ‘கொரோனா காலம்கிறதால யாரையும் கூப்பிடாம சிம்பிளா நடத்துறேன்’ என்று கிருஷ்ணசாமி விளக்கமளித்திருக்கிறார். ஷியாம் காதலித்து, திருமணம் செய்திருக்கும் பெண் ஒடிசாவைச் சேர்ந்தவராம்’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியை உறுதி செய்தாலும், அமைச்சர்களின் வில்லங்க விவகாரங்களைத் தோண்டுவதை மத்திய அரசு நிறுத்தவில்லையாம். ஆளும்தரப்பின் அதி முக்கிய அமைச்சர் ஒருவர், லண்டனில் பெருமளவில் முதலீடு செய்திருப்பதை, உளவுப்பிரிவான ‘ரா’ கண்டுபிடித்து, ‘நோட்’ போட்டிருக்கிறதாம். இதற்கான ஆவணங்களைச் சேகரித்துள்ள மத்திய நிதியமைச்சக அதிகாரிகள், ‘இது அந்நியச் செலாவணி முறைகேடு’ என்று ‘நோட்’ போட்டுள்ளனராம். இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தேர்தல் நேரத்தில் இதைக் கையிலெடுப்பார் என்கிறது டெல்லி வட்டாரம்’’ என்றபடி ஜூட் விட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு